உருத்திரா எழுதிய ஆண்கோணி கவிதை நூலுக்கு எழுத்தாளார் மைய ஊக்குவிப்பு தமிழியல் விருதுகள்2014 கிடைத்துள்ளது. கவிதைக்காக தெரிவு செய்யப்பட்ட இரண்டுநூல்களில் “ஆண்கோணி”யும் ஒன்று. ஏற்கனவே சிறந்த கவிதை இலக்கியத்திற்கான சாகித்திய விருதினை ஆண்கோணி பெற்றுக் கொண்டது என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.மட்டக்களப்பு மண்டூரை பிறப்பிடமாக கொண்ட கவிஞை உருத்திரா (ஆசிரியை) பல கவிதை கட்டுரைகளை எழுதி வருகின்ற படைப்பாளி என்பது குறிப்பிடத்தக்கது.
உருத்திராவின் ‘ஆண் கோணி ‘ கவிதைத் தொகுப்பு அறிமுக நிகழ்வுகள் மண்டூரிலும் மற்றும் பல இடங்களிலும் அறிமுக நிகழ்வுகள் இடம் பெற்று வருகின்றன. அவருக்கு எமது வாழ்த்துக்கள்
‘கதவுகளின் கதைகள்’
——————————————–
எனக்கான நூறு பொற் கதவுகள் திறந்திருக்க,
அறைந்து சாத்தப் பட்ட உனது கதவுகளைத்
தட்டிக் கொண்டிருக்கிறேன்.
வெண்கலத்திலான உனது தாய்ப் பூட்டில்
இணையத் தெரியாத கோடித் திறப்புகள்
நீர்ப் பாம்பென சுருண்டு சுருண்டு திரும்புகின்றன .
ஈராக்கால் அறுந்த உனது கதவுகளிலிருந்து உதிர்கின்றன,
மரமாகி நின்ற காலத்தின் கதைகள்.
வேற்றுச் சருகினை எங்கிருந்தோ எடுத்து வீசும்
காற்றில் கரைகிறது
மரங்களின் பூர்வீக ஒப்பாரிகள் .
வேரிழந்த நிலமிழந்த பெருங் கொடிகள்
தச்சனின் சட்டகங்கள் தாண்டிப் படர்கின்றன
வற்றிய நதிகளின் சுவடுகள் நோக்கி.
நீரருந்தும் அன்னங்கள் அலகிழந்து தவிக்கின்றன
காதல் மிகு யானைகள் தந்தங்கள் தடவி
முத்தமிட்ட படி அலைகின்றன
இருப்பிழந்த காடுகளின் நினைவில்.
கூடிழந்த
கோடிக் குருவிகளின் எச்சங்கள்
உன் கதவுகளுக்குப் பூச்சிட்டுக் கொள்ள
வர்ணங்களிலிருந்து வழிப் போக்கர்கள் வருகிறார்கள் .
யாரோ கை விட்டுச் சென்ற மெல்லிளம் பாடல்
நதியிழந்த ஊரின் துயரால் ஓதப் படுகிறது ;கதவுகளில்
இங்ஙனம்
உன் வரவேற்பு அறையில்
இழப்பை அலங்கரித்திருக்க
உனக்கு எங்கனம்
இன்னமும் இருக்கின்றன அன்பின் வரிகள் ?