நன்றி -ஜெரா -(http://www.colombomirror.com/tamil/)
ஒருநாள் இடம் மாறிப்படுத்தாலே, உறக்கம் வராமல் புரளும் அதிகாரங்களே!, 25 வருட அகதி வாழ்க்கையை எப்போதாவது கற்பனைசெய்து பார்த்ததுண்டா? பற்றைக் காடுகளுக்குள், முட்புதர்களுக்குள், பாம்பு, நுளம்பு, என அத்தனை ஜீவாராசிகளோடும் சண்டையிட்டு உங்கள் குழந்தைகளை வளர்த்த அனுபவம் ஏதுமுண்டா? சிறுதும்மலுக்கும் தனியார் விடுதியில் தங்கவைக்கப்பட்டு, மருத்துவம் செய்யப்படும் உங்கள் குழந்தைகளின் மத்தியில், 25 வருட அகதிகளின் குழந்தைகள் நிரந்தரமாகிவிட்ட நோய்களோடு, அப்பாவின் கிழிந்த சாரத்தைப் போர்த்திக்கொண்டு, அம்மாசமைக்கும் கஞ்சிக்காக வரிசையில் நிற்கிறார்கள்
.மாகாணசபையின் எல்லைச் சுற்றுக்குள்ளே இருக்கும் இவர்களின் குரல் உங்களுக்குக் கேட்கவில்லையென்றால்,வடக்கின் எங்கோவொரு தொங்கல் மூலையில் முனகும் சத்தம் கேட்கவாபோகிறது?
வடமாகாண சபை கட்டடத் தொகுதி அமைந்திருக்கும் கைதடிக்கு மிக அருகில்தான் அந்தக் கிராமம் இருக்கிறது. சபையின் வாசலில் நின்று கூப்பிட்டால் குறித்த குடியிருப்புவாசிகளே, திரும்பிப் பார்க்குமளவு தூரம்தான் மக்களுக்கும் முதலமைச்சர், அமைச்சர்கள், உறுப்பினர்களுக்கிடையிலான இடைவெளி. ஆனால் தனியாக நின்று மக்கள் அழைத்தும் யாரும் திரும்பிப் பார்க்காதமைதான் அவர்களை வேதனையுறச் செய்திருக்கின்றது.
‘கைதடிபாலம் கழிஞ்சுபோக ஒரு சின்னவைரவர் சிலைவரும், அதுக்குள்ளால திரும்பிப் போனியளெண்டால்,கிராஞ்சிஎண்டொரு இடம் வரும். அங்க திக்குத் திக்கா 37 குடும்பங்கள் இருக்கு. “ஏ-09 வீதியில் இறங்கிநின்று,’இந்தப் பக்கம் ஏதோகாம்ப் இருக்காமே” என்ற வினவலுக்குப் பெரும்பாலானோர் முகவரிகாட்டிப் போய் விடுகின்றனர். இலகுவான முகவரிகள் எப்போதும் அதிகாரத்தில் இருப்பவர்களுக்குத் தெரிவதில்லை என்பதை இங்கேயும் பிரதியிட்டுக் கொள்ளலாம்.
யாரும் எதிர்பார்க்கமுடியாது, அபிவிருத்தியால் பளபளக்கும் ஏ-9 சாலையின் தொடக்க இடங்கள் இவ்வளவுகேவலமானதென்பதை. இந்தப் பெருவீதியின் கிளைத் தெருவான கிராஞ்சி வீதி இப்போதும் மனித நடமாட்டங்களுக்கு உகந்ததல்ல. ஆடு, மாடுகள் பயணிக்கும் ஒற்றையடிப் பாதை. பற்றைக் காடுகளும்,முட்களும்,மழை நேரத்தில் சகதியும் வெள்ளை உடைகளை அணிந்து செல்பவரை வம்புக்கிழுக்கும்.
அதனால்தான் அமைச்சர்கள்,அதிகாரிகள் யாரும் இந்தக் கிராமத்துக்குச் செல்வதில்லைபோலும். ஆனால் அங்குவாழும் 37 குடிகளினதும் மருத்துவ, அவசர, பாடசாலை, வணிக, ஏனைய தொழில் கருமங்களுக்கான பிரதானசாலையாக இந்த ஒற்றையடிப் பாதையே விளங்குகின்றது. வாகனங்களில் செல்வதாயின் ஏ-9 வீதியில் நிறுத்திவிட்டு இரண்டு கிலோமீற்றர்களுக்கு உள்ளே நடந்தே போகவேண்டும்.
‘அந்தப் பஞ்சிக் குணத்திலதான் எங்களிட்டயாரும் வாறதில்ல அண்ண’ என்று முகாம்வாசி ஒருவர் சொல்வது சரியாக இருக்கக்கூடும்.
தனியார் காணியில்தான் அவர்கள் குடியிருக்கின்றனர். வலி.வடக்கின் கிராமங்களிலிருந்து இடம்பெயர்ந்து வந்தகாலத்தில் தம் தற்காலிக இருக்கைக்காக ஆளற்றுக் கிடந்த அந்தக் காணியில் குடியேறிக் கொண்டார்கள். தம் தொழில் நலன் கருதியும் அது வசதியாக இருந்ததாகச் சொல்கிறார் அந்தக் கிராமத்தின் மூத்தவர். இடையறாத போர், அதற்குள்ளான இடப்பெயர்வுகளுக்குள்ளும், காலாண்டு காலத்தைக் கழித்து விட்டனர்.
ஒருநாள் இடம் மாறிப்படுத்தாலே, உறக்கம் வராமல் புரளும் அதிகாரங்களே!, 25 வருட அகதி வாழ்க்கையை எப்போதாவது கற்பனைசெய்து பார்த்ததுண்டா? பற்றைக் காடுகளுக்குள், முட்புதர்களுக்குள், பாம்பு, நுளம்பு, என அத்தனை ஜீவாராசிகளோடும் சண்டையிட்டு உங்கள் குழந்தைகளை வளர்த்த அனுபவம் ஏதுமுண்டா? சிறுதும்மலுக்கும் தனியார் விடுதியில் தங்கவைக்கப்பட்டு, மருத்துவம் செய்யப்படும் உங்கள் குழந்தைகளின் மத்தியில், 25 வருட அகதிகளின் குழந்தைகள் நிரந்தரமாகிவிட்ட நோய்களோடு, அப்பாவின் கிழிந்த சாரத்தைப் போர்த்திக்கொண்டு, அம்மாசமைக்கும் கஞ்சிக்காக வரிசையில் நிற்கிறார்கள்.
அங்குவந்து பிறந்தகுழந்தை, பெரியவனாகித் திருமணம் செய்து,அவருக்கும் பாடசாலை செல்லும் வயதில் குழந்தைகள் பிறந்து, வளர்ந்து பற்றைக் காடுகளுக்குள் விளையாடிக் கொண்டிருக்கின்றனர். விளையாடி மிகுதியுள்ள நேரங்களில் பாடசாலைக்குப் போகின்றனர்.
வீட்டுவறுமை, சலிப்பு, பாடசாலை நோக்கிய பயணத்தை நிரந்தரமாகவே நிறுத்தியும் வைத்துள்ளது.
“யாரோ வெளிநாட்டுக்காரர் வந்து பாத்திட்டு ஒரு எஞ்சினும், பிள்ளையள் படிக்கிறதுக்கான கொட்டிலும் போட்டுத்தந்தவ,” என்று சொல்லும் குடும்பப் பெண் ஒருவர், அதைத் தொடர்ந்து இயங்க வைப்பதற்கான எரிபொருள் செலவைத் தாமே ஏற்றுக் கொள்வதாகக் குறிப்பிடுகிறார்.
ஏ-9 சாலையோரம் மின்சாரம் இல்லைஎன்று சொல்லுவதெல்லாம் பெரிய பொய் என்று நீங்கள் கருதக்கூடும். ஆனால் வீடே இல்லாத அகதிகளுக்கு எதற்கு மின்சாரம் என்ற உயரிய, ஒப்பற்ற கோட்பாட்டினால் அவர்களிடம் மின்சாரம் வருவதில்லை.
வடக்கு மாகாண சபை பொறுப்பேற்றவுடன் ஒரு உறுப்பினர் தன் சகாக்கள் சகிதம் அந்தக் கிராமத்துக்குத் திக் விஜயம் செய்துள்ளதை மக்கள் நன்றியோடு நினைவு படுத்துகின்றனர். நிவாரணம் தருவதாகவும், ஏனைய வசதிகள் செய்துதருவதாகவும், எல்லா மக்களையும் சந்தித்துப் பேசுவதற்கு நாளொன்றை ஒதுக்கிவிட்டு என்னை அழையுங்கள் என்று கூறித் தொலைபேசி இலக்கத்தையும் கொடுத்து விட்டுப் போயிருக்கிறார் அந்த நல்ல மனிதர். அனைவரையும் ஒன்று திரட்டிவிட்டு உறுப்பினருக்கு அழைத்தால், “இப்ப
நான் பிசி, இன்னொரு நாளைக்கு கூப்பிடுங்கோ எண்டிட்டு போனை கட் பண்ணீட்டார்,” என்கிறார் அந்தமுகாமின் துடிப்புள்ள இளைஞர் ஒருவர்.
அதன் பின்னர் ஆளுங்கட்சியின் அமைச்சர் ஒருவர் அங்குவிஜயம் செய்தாரம். அவர் மக்களைக் கேட்டுக் கொண்டதென்னவென்றால், “நான் இந்தக் காணி உரிமையாளரோட கதைத்சு காணிய உங்களுக்கு வாங்கித் தந்து வீட்டுத்திட்டமும் செய்துதாறன். ஆனால் நீங்கள் வேறயாரிட்டயும் உதவி கேட்கப்படாது, கேட்கவும் போகக்கூடாது,” மக்களும் இந்தஅரசியல் சித்து விளையாட்டுக்குத் தலையாட்டியிருக்கின்றனர். ஆனால் அவரும் பின்னர் அது தொடர்பில் எந்த முடிவையும் அறிவிக்கவில்லை. வலி. வடக்கு நிலங்களுக்காக அங்கிருந்து இடம்பெயர்ந்து வந்தவர்கள் நடத்திய போராட்டங்கள் அமைச்சரைச் சினங்கொள்ள வைத்திருக்கக் கூடும்.
“ஆமிக்காரன் தானுங்கோ வந்து தண்ணிதந்திட்டுப்போறான். இப்பவேற யாரும் வாறதில்ல” என்று தாயொருவர் சொல்லிமுடிக்கையில், இன்னொருவர் சொல்கிறார், “எங்கள எங்கட இடத்துக்கு விட்டா இதெல்லாம் கேட்கவாபோறம்?” அவரின் கேள்வியில், அவர்களின் ஆதங்கங்களில் நியாயம் இருக்கிறது.
மாகாணசபையின் எல்லைச் சுற்றுக்குள்ளே இருக்கும் இவர்களின் குரல் உங்களுக்குக் கேட்கவில்லையென்றால்,வடக்கின் எங்கோவொரு தொங்கல் மூலையில் முனகும் சத்தம் கேட்கவாபோகிறது?
“நாவுக்கும் மனதுக்கும் உள்ளவெளி,
நான்கு விரல் இடை தூரவெளி,
சொல்லுக்கும் செயலுக்கும் காதவெளி,
சுற்றமும் சுகமும் வேறுவழி”.
http://www.colombomirror.com/tamil