THANKS – ஜெனி டொலி (JENYDOLLY)
புறக்கணிப்பால் ஒடுக்கப்பட்டவர்கள்: (அமெரிக்க) உள்நாட்டு போரில் ஆண் வேடம் பூண்டு போராடிய பெண் படைவீரர்கள் – மரியா பபோவா
“பெண்கள், கிருமிகள் நிறைந்த முகாம்களில் வாழ்ந்தார்கள், கொடுமையான சிறைகூடங்களில் தவித்திருந்தார்கள், துயரமான முறையில் இறந்து போனார்கள், ஆனால் சக ஆண்களை போல தங்கள் நாட்டுக்காக, கௌரவமாக.”
வழக்கமான விவரணனங்கள் (அமெரிக்க) உள்நாட்டு போரை ஆணினது போராய் கட்டமைத்திருக்கின்றன.1860 களின் வரலாற்று பதிவுகள் கூட ஆண்கள் யாங்கிகளாகவும், ரிப்ஸாகவும் பிரிந்து போரிட்டதை தான் பேசுகின்றன. பொதுவாக ஏற்றுக் கொள்ளப்பட்ட இது போன்ற வரலாற்று பதிவுகள், மாற்றியமைக்கப்பட்ட வரலாறுகள் பெண்கள் அக்காலத்தின் அசாத்தியமான தடைகளைத் தாண்டி போர்களத்தை அடைந்த கதைகளை தவிர்த்து விடுகின்றன. (They Fought Like Demons: Women Soldiers in the Civil War (public library),DeAnne Blanton and Lauren M. Cook)
“அவர்கள் பேய்களை போல போரிட்டார்கள் (பொது நூலகம்) என்ற நூலில், வரலாற்று ஆசிரியர்கள் டிஆன் ப்ளாண்டன் மற்றும் லாரன்.எம்.குக் ஆகியோர் யூனியன் மற்றும் கான்ஃபிடரெட் படைகளின் அணிவரிசையில் ஆண்களாக வேடம் பூண்டு பணியாற்றிய 250 பெண்களின் பதிவுகளை கால வரிசைப்படுத்தி, சூழ்நிலைப் பொருத்தமும் செய்திருக்கிறார்கள். ”உள்நாட்டுப் போர் வரலாற்றில் சிறப்பாக காக்கப்பட்ட ரகசியம்” ஆன இது புரட்சிகரமானதும், தேசபற்று மிகுந்ததுமாகும். அந்தக் காலத்தில் பெற முடியாததாக இருந்த ஆண்களுக்கான சமூக அடையாளத்தை நாட்டின் குடிமக்களாக தங்கள் முழு தகுதியயை கோரி பறித்துக் கொண்டு, ஆண்களுக்கான சுதந்திரத்தை அடைய துணிந்தார்கள். ப்ளாண்டனும், குக்கும் முன்னுரையில் கீழ்வருமாறு எழுதியிருக்கிறார்கள்: ”அமெரிக்க உள்நாட்டு போரில் பெண்கள் தன்னலமற்ற செவிலிகளாகவும்,காதல் உணர்ச்சிமிக்க ஒற்றர்களாகவும்,கணவன் இல்லாத குடும்பத்தை வழிநடத்திய துணிச்சலாம பெண்காளாக மட்டுமே அறியப்பட்டார்கள். இப்படி பாரம்பரியமான பாலின பொறுப்புகளை வைத்து வடிக்கப்படும் இந்த சித்திரம் கதையை முழுமையாக சொல்பவை அல்ல. போருக்கு ஆண்கள் மட்டுமே வீறுநடை போட்டு செல்லவில்லை. பெண்களும் கையில் ஆயுதம் ஏந்து போருக்கு புறப்பட்டார்கள். கிருமிகள் அடர்ந்த முகாம்களில் பெண்கள் வாழ்ந்திருக்கிறார்கள். மோசமான சிறைகளில் அல்லல்பட்டிருக்கிறார்கள். துர்மரணங்கள் அடைந்திருக்கிறார்கள். ஆயினும் கௌரவமாக, தன் நாட்டிற்காக, சக ஆண்களைப் போல…
(தன் கணவரோடு ‘ஜாக் வில்லியம்ஸ்’ என்ற பெயரில் இராணுவத்தில் சேர்ந்த யூனியன் இராணுவ வீரர் பிரான்சஸ் லூயிசா க்ளேடன் ஆணாக தன்னைக் காட்டிக் கொள்ள சூதாட்டம், சிகார் புகைப்பது, கெட்ட வார்த்தையில் திட்டுவது ஆகியவற்றை கற்றுக் கொண்டிருந்தனர். Courtesy of the Trustees of the Boston Public Library)
(சாரா எட்மண்ட்ஸ் சீல்ய், அதிகம் பதிவு செய்யப்பட்ட இராணுவ பெண். யூனியன் படையில் இரண்டு வருடங்கள் பிராங்கிளின் தாம்ஸன் என்ற பெயரில் இருந்தவர். போர் முடிந்த அடுத்த 25 ஆண்டுகௌக்கு அந்த பெயரிலேயே இராணுவ பென்ஷன் வாங்கிக் கொண்டிருந்தவர். Courtesy of the Trustees of the Boston Public Library)
பெண்கள் ஏன் இதைச் செய்தார்கள்? சிலருக்கு, சக ஆண்களைப் போல, நாட்டின் மீதான பற்று இதைச் செய்ய தூண்டியது. மற்றவர்கள் காதலுக்காக…போர்களத்தில் இருக்கும் கணவனுக்கு, காதலனுக்கு, தகப்பனுக்கு, வருங்கால கணவனுக்கு, சகோதரனுக்கு அருகிலிருக்க. ஆயினும் பலரும் பொருளாதார காரணங்களுக்காக செய்தார்கள். படை வீரன் ஒருவர் ஒரு மாதத்திற்கு 13 டாலர்கள் சம்பாதித்தார். இந்தத் தொகை தையல் தொழிலாளியாகவோ, துணி துவைப்பவராகவோ, பணிப்பெண்ணாகவோ சம்பாதிக்ககூடிய தொகையை விட ஏறக்குறைய இரு மடங்கு அதிகமாக இருந்தது.
உள்நாட்டு போரின் போது, வாக்குரிமை இல்லாமல் இருந்த பெண்களுக்கு, வங்கிக் கணக்குகள் இருந்தது கிடையாது. அப்பொழுதும், பெண்கள் என்றால் வீட்டை பராமரித்துக் கொண்டும், தாய்மைபேற்றை அடைந்து கொண்டும் இருக்க வேண்டும் என்ற வரையறைகளுகுள் சிக்குண்டு இருந்தார்கள். பெண்களுக்கென தனியாகவோ, அரசியல் ரீதியாகவோ எந்த ஆதரவும் இருக்கவில்லை அப்போது. உண்மையில், இந்த பெண் படை வீரர்கள் – இடம் பெயர்ந்தவர்கள், உழைக்கும் வர்க்கத்தைச் சேர்ந்தவர்கள், வயலில் வேலை பார்த்த பெண்கள், வறுமை கோட்டுக்கு கீழ் வாழ்ந்த பெண்கள் என- ஒடுக்கப்பட்ட குழுக்களிலிருந்து வந்தார்கள். தங்களுக்கான பணத்தை தானே சம்பாதித்து செலவழிக்க கிடைத்த, அதுவரை கிடைத்திராத, சுதந்திரம் தனிப்பட்ட விதத்தில் என்றாலும் கூட சமூக வாய்புகளை கொடுத்ததின் மூலமும், உரிமைகளை கொடுத்ததன் மூலமும் அவர்களை அதிகாரமுள்ளவர்களாக மாற்றியது என்று ப்ளாண்டனும், குக்கும் எழுதுகிறார்கள். மேலும் எழுதுகையில்: சமூகம் பெண்கள் மீது மேலதிகமான தடைகளை விதித்தது. மேல் தட்டு வர்க்கத்திலிருந்த பெண்களும், நடுத்தர வர்கத்தில் கல்வியறிவு பெற்றிருந்த பெண்களும் ஆசிரியர்களாக, எழுத்தாளர்களாக, வீட்டு மூத்த பராமரிப்பாளர்களாக பணியாற்றியதன் மூலமு சிறிதளவேனும் சுதந்திரத்தை கண்டடைந்த போது, பாட்டாளி மற்றும் கீழ் தட்டு வர்க்க பெண்களுக்கு மண உறவுக்கு வெளியே ஏற்புடைய வெகு சில தெரிவுகளே இருந்தன.
அவர்களுக்கான வேலைகள் கூட தையல் தொழில், பாலியல் தொழில் அல்லது வீட்டு வேலை என்ற அளவிலேயே அடங்கி போனது. அப்போதைய கணக்கெடுப்புகளின்படி திருமணமாகாத பாட்டாளி வர்க்க பெண்கள் இறுதி தெரிவையே கையெடுத்தனர். 1860ஆம் ஆண்டு நியூயார்க் நகரத்தில் வீட்டு பணிப் பெண்களின் ஒரு மாத சம்பளம் 4 டாலர்களிலிருந்து 7 டாலர்களாக இருந்தது. “நல்ல” சமையல் பெண்கள் 7 அல்லது 8 டாலர்கள் சம்பாதித்தார்கள். துணி துவைப்பவர்கள் ஒரு மாதத்திற்க்கு 10 டாலர்கள் வரை சம்பாதித்திருக்கக் கூடும். அதே நேரம், யூனியன் படைகளில் பிரைவேட்டாக 3 மாதம் வேலை பார்த்தாலே 39 டாலர்கள் கிடைக்கும். அந்த காலத்தில் இளைஞர்களுக்கு கிடைத்து கொண்டிருந்த மாத வருமானமான 10 – 20 டாலர்களோடு ஒப்பிட்டு பார்க்கையில் இது மிகப் பெரும் தொகை.
(யூனியன் இராணுவ படையணி வீரர் ஆல்பர்ட் காஷியர். உண்மையில் இவர் ஜென்னி ஹாட்ஜர்ஸ். உள்நாட்டு போரில் பல சண்டைகளில் ஈடுபட்டவர். 1913ஆம் ஆண்டு, வயதான போர் வீரர்கள் தங்கும் இல்லத்தில் பெண்ணென கண்டுபிடிக்கப்பட்டு தலைப்புச் செய்தியில் இடம் பிடித்தார். Courtesy of the Trustees of the Boston Public Library)
பெண்கள் என்று கண்டுபிடிக்க பட்ட உடனேயே இந்த பெண் படைவீரர்கள் “பிறவி விநோதங்கள்”, “பாலியல் பொருத்தப்பாடு இல்லாதது” அல்லது “பெண் என்பதற்கான உறுதியான சான்று” என்ற குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் படையிலிருந்து அனுப்பப்பட்டாலும், இவர்களில் பெரும்பான்மையினர் கொஞ்ச காலத்திற்காவது சந்தேகத்துக்கு ஆளாகாமல் இருந்து விடுவார்கள். பாலினத்தை உறுதி செய்ய ஒரே வழியான நிர்வாணத்திற்க்கு அந்த (விக்டோரியன்) சமூகத்தில் முற்றிலும இடமில்லையென்பதாலும், குளிப்பதே அபூர்வமென்பதாலும், உடைகளுடன் உறங்குவதே வழக்கமாக கொண்டிருந்ததாலும் இப்பெண்களை அடையாளம் காண முடியாமல் போனது. (ஆனால், இன்றைக்கு இராணுவத்திற்குள் நடக்கும் பாலியல் வன்முறை பற்றிய விஷயங்கள் வெளிவரத் தொடங்கியுல்ள நிலையில், இனம் கண்டுகொள்ளப்பட்ட இந்த பெண்கள் விஷயத்தில் என்ன நடந்திருக்கும் என்று எண்ண வேண்டியிருக்கிறது.)”
அப்போதைய இராணுவ உடைகள் தொள தொள- வென இருந்ததாலேயே சில பெண்களால் அவர்களது கர்ப்பத்தை கூட பிள்ளை பெறும் கடைசி நிமிடம் வரை படையணியின் ஆண்களிடமிருந்து மறைத்துவிட்டு இறுதியாக பிள்ளை பெறும் தருணத்தில் அவர்களை அதிர்ச்சிக்குள்ளாக்க முடிந்தது. இன்னும் சிலர், போர் முடிந்ததன் பிறகும் ஆண்களாகவே உடையணிவதை தொடர்ந்தனர். இது பாலின அடையாளம் தொடர்பான கேள்விகளை எழுப்பியது. அது இந்தப் புத்தகத்தின் விவாதிக்கப்படவில்லை. இதில் சுவாரஸ்யமான விஷயமே பெண்களுக்கு இந்த யோசனை தோன்றியது எப்படி என்பது தான். இப்பெண்களின் இந்த முடிவுக்கான கலாச்சார பாதிப்பு விக்டோரியன் இலக்கியத்தில் வரும் எதிர் பாலின உடையணியும் கதாநாயகிகளிடமிருந்தும், 17ஆம் நூற்றாண்டின் கவிதைகளிலும், நாவல்களிலும் கொண்டாடப்பட்ட இராணுவத்திலிருந்த பெண்கள் மற்றும் பெண் மாலுமிகளிடமிருந்தும் வந்திருக்கலாம் என்பது ப்ளாண்டனின் கருத்து.