-புதியமாதவி, மும்பை.
வீரமும் காதலும் தமிழ்ச் சமூகத்தின் அடையாளமாக இருந்ததாக சங்க இலக்கிய ஆய்வுகள் சொல்லுகின்றன. நம் காவியங்களும் கதைகளும் வெற்றி பெற்றவர்களை தலைவன் தலைவியாகக் கொண்டு படைக்கப்பட்டவை. நம் வரலாறுகளோ இன்றுவரை வெற்றி பெற்றவரின் பார்வையிலேயே எழுதப்பட்டிருக்கின்றன.இரு உலக மகா யுத்தங்களுக்குப் பின்னரும் இன்று நடந்துக் கொண்டிருக்கும் உலகமயமாதலின் ஆயுத வியாபாரங்களுக்காக நடக்கும் வல்லரசுகளின் போர்முகமும் படைப்பிலக்கியத்தில் குறிப்பிடத் தகுந்த சில மாற்றங்களை உருவாக்கி இருக்கிறது. இதுவரை வெற்றி பெற்றவர்களின் பார்வையில் பேசப்பட்ட வரலாற்றைத் தோலுரித்து அந்த வெற்றியின் முகத்தில் தாண்டவமாடும் கொடூர உணர்வை, குறுக்குப் புத்தியை, ஏமாற்றுவித்தையை வெளிக்கொண்டு வருகின்றன.
எல்லாவற்றுக்கும் மேலாக வெற்றி பெற்றவனே தோல்வி அடைகிறான் , போரில் வெற்றி பெற்று திரும்பிய போர்வீரர்களில் ஐந்தில் ஒரு பங்கினர் மன உளைச்சலுக்கு ஆளாகி தற்கொலை செய்து கொண்டார்கள் என்கிறது போருக்குப் பின் நடந்த ஆய்வு. போர் அயல்நாட்டுடன் நடந்தால் ஏற்படும் பாதிப்பை விட அதிகம் பாதிப்பு ஏற்படுவது உள்நாட்டு யுத்தங்களில் எனலாம். அம்மாதிரியான சூழலில் வாழ்விடமே புதைகுழியாகி விடுகிறது. தன் நாட்டின் அரசாங்கமே குற்றவாளி ஆகிவிடுகிறது. வாழ்தலுக்காக தூர தேசங்களுக்குச் செல்லும் நிலை மாற தங்கள் இருத்தலுக்காக மட்டுமே புகலிடம் தேடும் கொடுமையான
நிலைமை ஏற்படுகிறது.
1980க்குப் பின் இலங்கையில் வாழ்ந்த தமிழர்களின் நிலை தங்கள் இருத்தலுக்கான இருப்பிடம் தேடி அலைந்த நிலைதான். இக்காலக்கட்டத்தில் வெளிவந்த பெண்களின் படைப்புகள் “சொல்லாத சேதி” முதல் அண்மையில் நான் வாசித்த “சாகசக்காரி பற்றியவை” வரை போர்ச்சூழலில் வாழும் பெண்ணின் நிலைப்பாட்டை வெவ்வேறு அனுபவ மொழிகளின் ஊடாக பதிவு செய்திருக்கின்றன.
அன்பையும் நேசத்தையும் கற்றுக்கொடுத்தவர்கள் அருகில் இல்லை. புகலிட வாழ்க்கையில் தனிமை நீண்டு கொண்டே இருக்கிறது. “பழகிய இடங்களில் மட்டுமே வாழத் தெரிந்த விலங்குகளைப் போல தெரியாத வெளிகள் அச்சுறுத்துகின்றன” (பக் 45) என்று இயல்பாக தன் சூழலை வெளிப்படுத்துகிறது இவர் கவிதை
போரின் விளைவுகள் குறித்தும் அதன் பாதிப்புகளால் ஏற்படும் உளவியல் பிரச்சனைகள் குறித்தும் இன்று உளவியல் ஆய்வாளர்கள் “போருக்குப் பிந்தைய மனப் பிறழ்வு” என்று அடையாளம் காட்டுகிறார்கள். புறக்காரணிகளால் தனிமனிதனுக்கு ஏற்படும் உளவியல் பிரச்சனை.
“பிறழ்வுற்ற இப் பிரபஞ்சத்திலிருந்து
எவ்விதம் நீ மட்டும் உயிர்ப்புடன் இருப்பாய்?”
என்ற கேள்வியை முன் வைக்கிறது.
மனநோயின் கூறுகளுடன் உன்னைப் பார்ப்பதை
விமர்சிப்பதை அதில் உன்னை இணைப்பதை
எப் பிரிவிலும் அனுமடிக்க முடியாது –
என்று உறுதியாக சொல்லும் கவிஞர் தன் அடுத்த வரிகளில்
அவனை, அவன் நிலையை சமூகத்தின் குறியீடு என்று சொல்லும்
போது கவிதை தன் சுய அனுபவத்திலிருந்து விரிந்து
போர்ச்சமூகத்தின் முகமாய் அடையாளமாய் தன்னை
நிலை நிறுத்திக் கொள்கிறது.
” நீ என்பது உடைவின் குறியீடு
போரின் குறியீடு, சமூகத்தின் குறியீடு.
நானின் குறியீடு”
அத்துடன் கவிதை முடியும் போது ஆண் – பெண் உறவின் அடையாளமான காதல் தாங்கள் இணைந்து வாழ்வதன் அடையாளமாக
இல்லை என்பதையும் உரத்தக் குரலில் பிரகடனம் செய்கிறது.
“புறக்கணிக்க முடியாத புள்ளியில் நானும் நீயும்
இணைந்திருக்கிறோம், காதலால் அல்ல,
பிறழ்விலிருந்து எழுதுங்கள் முறிவின் முதற் குறிப்பை”
(பக் 43) என்று.
ஆணும் பெண்ணும் இணைந்திருப்பதற்கான காரணங்களில் முதன்மையான காதலையும் போர்ச்சூழல் மாற்றி இருப்பதை மிக நுணுக்கமாக பதிவு செய்திருக்கிறது இக்கவிதை எனலாம்.
போராட என்னை அழைக்காதே’
நானொரு தாய்
எனது புதல்வர்களையும் கேட்காதே
இரக்கமற்ற தாய்நிலமே
கொல்லப்பட்ட என் புதல்வர்களின் இரத்தம்
இன்னமும் காயவில்லை…
இன்னுமா தாய்நிலம்
புதல்வர்களைக் கேட்கிறது?
என்று தாய்நிலமே தன் பிள்ளைகளுக்கு எமனாகிவிட்ட முரணை தன் கவிதையில் கொண்டு வந்த கவிஞர் அவ்வை குரலின் தொடர்ச்சியாக தான்யாவின் குரலும் போர் தின்ற தன் புதல்வர்களின் தாயாக மாறி
“காவெடுத்தவர்கள் நினைக்கப்போவதில்லை
ஒரு பயித்தியக்காரியைப் போல
தனக்கான குழியை வெட்டியபடி
காத்திருக்கும் பெற்றோர்களை”
படம் பிடிக்கிறது.
பகிர்ந்து கொள்ள முடியாத வாழ்விலும் சுயம் முறிவுக்குத் தயார் நிலையில் இருந்தாலும் மனம் சொட்டும் மழையிலும் தனிமையின் சாரலிலும் அவன் நினைவில் மோதுகிறது என்று காதலாகி உருகி நிற்கிறது. பிறிதொரு கணம்,
“காதலும் காமமும்
உடலோடு நிற்க
மனங்களுள் ஊடுருவ முடியாமல் நாங்கள்” (பக் 27)
பொய்யான வாழ்க்கைக்காக வருத்தப்படுகிறது. இறுதியாக இதற்கெல்லாம் காரணம் என்று,
“அதிகார சமனற்ற வாழ்வை
ஏற்றுக்கொண்டு
நினைவில் முட்டி
மோதித் தெறிக்கும்
இயலாமையின் கனத்தோடு
நாட்கள் நகரும்”
காரணத்தைக் கண்டடைகிறது.
தான்யாவின் கவிதைகள் எதிர்காலத்தில் சாகசங்கள் நிகழ்த்தும், பிற கவிஞர்களின் பாதிப்புகளை விலக்கி, தன்னையும் தன் சுயம் சார்ந்தப் புள்ளியையும் சமூகச் சூழலில் கண்டடைந்தால். –வாழ்த்துக்கள்.
நூல்” சாகசக்காரி பற்றியவை, ( கவிதைகள்)
கவிஞர் : தான்யா, கனடா.
வடலி வெளியீடு.
பக் 64, விலை: ரூ 50/ மட்டும்.