அ. வெண்ணிலா
வாழ்வின் மிகப்பெரிய துயரமே நம் வலிமை நம் பலவீனமாக மாறிவிடுவதே. பெண்ணின் பலமாக இருந்த அவளின் இனப் பெருக்கச் சக்தியே, நாகரீகச் சமூகத்தில் அவளை அடிமைப்படுத்தும் கருவியாகவும் மாறிப்போனது. புனிதமாக நினைத்துப் போற்றப்பட்ட அவள் உடலே அடிமைப்படுத்துவதற்கான காரணமாகவும் ஆகிப் போனது. எந்தக் காரணத்திற்காக பெண் கொண்டாடப்பட்டாளோ அந்தக் காரணத்திற்காகவே கீழ்மைப்படுத்தப் பட்டாள். பெண் உடலின் புதிர்த் தன்மையே அவளைப் புறந்தள்ளவும் காரணமாயிற்று.
சாகித்திய அகாதெமி ஏற்பாடு செய்திருந்த ஒரு கவிதை வாசிப்பு நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக சமீபத்தில் அஸ்ஸாம் மாநிலம் குவஹாத்திக்குச் சென்றிருந்தேன். இந்திய மொழிகளில் ஏறக்குறைய 20 மாநில மொழிகளில் இருந்து படைப்பாளிகள் அழைக்கப்பட்டிருந்தார்கள். குவஹாத்தி என்றவுடன் மறுயோசனை இல்லாமல் நான் ஒப்புக்கொண்டதற்குக் காரணம் இருந்தது. நீண்ட நாட்களாக நான் பார்க்க நினைத்துக் கொண்டிருந்த காமாக்கியாள் கோயில் அங்குதான் இருந்தது.
விமான நிலையத்தில் இறங்கியவுடன் நான் தங்க வேண்டிய அறைக்கு ஒரு வாடகைக் காரில் சென்று கொண்டிருந்தேன். அப்பொழுதே அந்த ஓட்டுனரிடம் காமாக்கியாள் கோயில் இருக்குமிடத்தைப் பற்றிக் கேட்டபொழுது அது நாம் போகும் வழியில்தான் இருக்கிறது என்று கூறினார். உடனே எனக்கு கை கால்கள் பரபரக்கத் தொடங்கிவிட்டன. அவரிடம் கோயிலைப் பார்த்துவிட்டு வரும்வரை காத்திருக்க முடியுமா என்று கேட்டுவிட்டு அதற்கான கூடுதல் தொகையையும் பேசி இறுதி செய்து கொண்டு மனம் இறக்கைக் கட்டிப் பறக்க நான் இருக்கையில் சாய்ந்து உட்கார்ந்து கொண்டேன்.
அன்று மாலை நடக்கவிருந்த மொழிபெயர்ப்பு விருதுகள் தொடங்கி அதற்கடுத்த இரண்டு நாட்களும் தொடர்ந்து நிகழ்ச்சிகள் இருந்தன. இடையில் வரமுடியுமா என்று உறுதியாகத் தெரியாத சூழலில் இந்த வாய்ப்பை சரியாகப் பயன்படுத்திக் கொண்ட சாமர்த்தியப் பெருமிதமும் லேசாக எனக்குள் வந்தது. அதற்குள் வாடகைக் கார் நீலாசலம் என்ற நீலாஞ்சல் மலைமேல் ஏறத் துவங்கியிருந்தது. ஒரு சிறு பரவசம் மனதிற்குள் உட்கார்ந்து கொண்டது. அஸ்ஸாமின் தலைநகரான திஸ்பூர் என்ற பெயரைவிட குவஹாத்தி என்ற பெயரே அஸ்ஸாமின் தலைநகர் என்ற பழைய நினைவின் மிச்சம் எனக்குள் இருந்தது. ஆனால் குவஹாத்தி ஒரு மாவட்டத்தின் பெயர் கூட அல்ல. காமரூபம் மாவட்டத்தில்தான் குவஹாத்தி இருக்கிறது. காமரூபம் என்ற பழைமையான பெயரை நிச்சயம் நாம் வரலாற்றுப் பாடத்தில் கடந்திருப்போம். காமரூபம் மாவட்டத்தில்தான் காமாக்கியாள் கோயிலும் அமைந்துள்ளது.
இந்துக்களின் புராண நம்பிக்கைப்படி இந்த மலை சிவனும் சக்தியும் கூடிக் களித்த மலை. காமகிரி மலையில்தான் இறைவி, தன்னுடைய சிற்றின்ப நுகர்ச்சிக்காக சிவனுடன் சேர மறைவாய் சந்திப்பது வழக்கமாம். இறைவனுடன் இன்ப வாழ்வு வாழ்ந்த இறைவி இறந்த பின்னர் இறைவன் பெருந்துயருற்று அவளின் உடலை சுமந்து உலகமெங்கும் திரிந்தாராம். அப்போது சக்தியின் உடலிலிருந்து பிரிந்த உறுப்புகள் உலகின் பல இடங்களில் விழுந்தனவாம். அவள் இன்ப நுகர்ச்சிப் பெற்ற இந்த காமகிரி மலையில் அவளுடைய யோனி வந்து விழுந்ததாம். அதனால் அம்மலை நீலநிறமாகத் தோன்றுகிறதாம். நீலாசலம் என்ற பெயரையும் பெற்றது என்கின்றனர். சக்தியின் காமம் நடந்த இடமே அவளின் இடுகாடாகவும் உள்ளது பெருந்துயரமே.
திருமாலுடன் இணைத்தும், தாந்திரிக வல்லுனரான வசிட்டர் மற்றும் நரகாசூரனுடன் இணைத்தும் நிறைய புராணக் கதைகள் சொல்லப்படுகின்றன. சாக்த தத்துவத்துடனும் பஞ்ச தத்துவங்களுடன் இணைத்தும் இந்த மலைக்கு நிறைய தத்துவங்கள் உள்ளன. 51 சக்தி பீடங்களில் ஒன்றாகவும் இந்த கோயில் உள்ளது.இந்த கோயிலில் சக்திக்கு என்று உருவம் ஒன்றும் இல்லை. கோயிலின் மூலஸ்தானத்தில் உருவ வழிபாடு கிடையாது. இக்கோயிலின் அடியில் உள்ள பாறையில் சிறு சந்து ஒன்று உள்ளது. அந்த சந்து பார்ப்பதற்கு பெண்ணின் பிறப்புறுப்பின் அமைப்பைப் பெற்றுள்ளது. இதையே சக்தியின் யோனி என்று மக்கள் வழிபடுகின்றனர். அச்சந்திலிருந்து எப்போதும் லேசாக நீர்க்கசிந்த வண்ணம் உள்ளது. இயற்கையாய் அமைந்த அவ்வூற்றிலிருந்து வரும் நீரையே தொட்டு வழிபடுகிறார்கள் மக்கள். ஆஷாட மாதத்தில் நான்கு நாட்கள் ஊற்றிலிருந்து சிகப்பு நிறத்தில் நீர் வெளிவருமாம். அதனால் அந்த நாட்களில் இறைவி மாத விலக்காவதாகக் கொண்டு அப்போது கோயில் கதவுகளை அடைத்துவிடுகிறார்கள். நான்காவது நாளில் கதவுகள் திறக்கப்பட்டு பெருஞ்சிறப்பான விழா நடக்குமாம். நவராத்திரி நேரத்தின்போது நடைபெறும் துர்க்கை பூஜையும் வெகு விசேசமாக இருக்குமாம்.
காமாக்கியா கோயில் அசாமிற்கே உரிய தேன் கூடு வடிவத்தில் கட்டப்பட்டுள்ளது. கருவறை முழுக்க கருங்கற்கள் பாவப்பட்டுள்ளன. கிழக்கிந்தியத்தின் இந்த சிற்பக் கலை வங்க, அசாமிய முறைகளைச் சேர்ந்ததாகும். சக்தியின் யோனி வழிபாடு ஆதி வழிபாட்டுடன் தொடர்புடையதாக இருந்திருக்க வேண்டும். ஆனால் காமாக்கியாளுக்கான இக்கோயில் கி.பி.1565 ஆம் ஆண்டு கட்டப்பட்டிருக்கலாம் என்கின்றனர். அப்பொழுது காமாக்கியாளுக்கு 140 பேரின் தலைகள் செம்புத் தட்டில் வைக்கப்பட்டு அவளுக்கு காணிக்கையாகப் படைக்கப்பட்டதாம். போகி என்றொரு இனத்தில் உள்ளவர்கள் இறைவிக்காகத் தங்களைத் தாங்களே பலியிட்டுக் கொள்வார்களாம். பிரிட்டிஷாரின் ஆட்சியில் கி.பி.1812 ஆம் ஆண்டு இக்கோயிலில் நடைபெற்று வந்த நரபலி தடை செய்யப்பட்டுள்ளது.
இக்கோயிலின் இறைவியோடு சிவப்பு நிறம் மிக ஆழமாக தொடர்புப் படுத்தப்பட்டுள்ளது. கோயிலுக்குச் செல்லும் வழிமுழுக்க சிவந்த ஒற்றைச் செம்பருத்திப் பூக்களே கடைகளில் தொங்க விடப்பட்டிருந்தன. செம்பருத்திப் பூவையே அங்கு அம்மனுக்குச் சாத்துவதற்கும் பூசைக்கும் பயன்படுத்துகிறார்கள். எல்லோர் நெற்றியிலும் செந்தூரம். செந்துணியும் அங்கு அம்மனின் பூசையோடு தொடர்புப் படுத்தப்பட்டிருந்தது.
சிவப்பு ஆழ்ந்த அன்பின் உட்பொருள். அம்மனின் ஆழ்ந்த அன்பு தவழ்ந்த மலையில் அன்பின் குறீயீடுகளாக அனைத்துப் பொருட்களும் சிவப்பில் மிளிர்கின்றன. மலை உச்சியில் இருந்துப் பார்க்கும்போது தூரத்தில் பிரம்மபுத்திரா நதி பெருக்கெடுத்து ஓடிக் கொண்டிருந்தது. நீலாசலத்தில் இருக்கும்போது அந்த இடத்தின் இரண்டு முக்கியத்துவங்கள் நினைவுக்கு வந்தன. இந்து மதத்தில் ஆண்மைய வழிபாட்டை மையப்படுத்திய லிங்க வழிபாடே எங்கெங்கும் நிறைந்திருக்கும். நீலாசலம் பெண்மைய வழிபாடு முதன்மைப்படுத்தப்பட்டுள்ள இடம். இந்தியா முழுக்க உள்ள நதிகளுக்கு பெண்களின் பெயரே சூட்டப்பட்டுள்ளது. ஒரே விதிவிலக்கு பிரம்மபுத்திரா. ஆணின் பெயரில் அழைக்கப்படும் ஒரே நதி. (சோன் என்றொரு சிற்றாரும் உள்ளது) பெண்மைய வழிபாடு உள்ள இடத்தில் கரைபுரண்டோடும் ஆண் நதி. ஆர்ப்பரித்து ஓடிக் கொண்டிருந்த பிரம்மபுத்திராவைப் பார்த்துக் கொண்டே இருந்தேன்.
பெண்ணே உலக உயிர்களின் மூலம். இங்கு வழிபடப்படும் இறைவி மறு உற்பத்தியின் வடிவம். உலக உயிர்ப் பெருக்கத்தின் ஆதி வடிவம். நான் அறிந்த வரை இந்தியாவில் வழிபாட்டில் உள்ள உற்பத்திக் கடவுளின் வடிவம். எனவேதான் இந்தக் கொண்டாட்டம் எனக்குள்.
நீலாசலம் மலை எப்படி இறைவி சக்திக்குக் கொண்டாட்டத்தின் இடமாகவும் அவளின் இடுகாடாகவும் உள்ளதோ அவ்விதமே பெண்களுக்கு மாத விலக்கும். மாத விலக்கின் மூலமே பெண்ணுக்கு உயிர் உற்பத்தி சுழற்சிக்கான வரம் கிடைக்கிறது. அந்த மாத விலக்கு சுழற்சியின் மூலமே அவள் தீண்டப்படக்கூடாதவளாகவும் ஒதுக்கப்படுகிறாள். பெண்ணுக்குக் கிடைத்துள்ள மாபெரும் சக்தியும் அதுதான். சாபமும் அதுதான். வரலாற்றுக்கு முந்தைய காலத்தில் பெண்ணுடலில் பெருக்கெடுத்த இந்த மாதாந்திர ரத்த ஒழுக்கைப் பார்த்து அதன் காரணம் கண்டறிய முடியாமல் ஆண்களும் பெண்களும் திகைத்துள்ளனர். குழந்தைப் பிறப்பிற்கும் இந்த ரத்தப் பெருக்கிற்கும் தொடர்பிருக்கிறது என்பதைப் புரிந்து கொள்ளும் காலத்திற்கு முன் அது கடவுள் அல்லது சாத்தானின் வேலை என்று பயந்து ஒதுங்கியிருக்கிறார்கள். ஆண்கள் ஒதுங்கிப் போக முடியும். பெண்கள்? புரியாத தங்களின் உடலை வைத்துக் கொண்டு பெண்கள் பெரும் அவதிக்குள்ளாயினர். பயம் தெளிந்தவுடன் புரிதலுக்கான வழி பிறந்துவிடும் அல்லவா? அப்படித்தான் பெண்கள் மந்திர தந்திர செயல் என்பதைப் போல் மாயம் காட்டிய தன் உடலை நிதானமாக கவனித்துப் புரிந்து கொள்ளத் தொடங்கினார்கள்.
விளைவு?
மனித குலத்திற்கே இயற்கையைப் பற்றிய புரிதல் உண்டாகத் தொடங்கியது. பெண் தன்னுடலில் நிகழும் மாத விலக்கு சுழற்சியை கணக்கு வைத்துக் கொண்டு இயற்கையையும் கவனிக்கத் தொடங்கினாள். 28 நாட்களுக்கு ஒருமுறை தன் உடலில் நடக்கும் சுழற்சியைப் போலவே நிலவும் தேய்ந்து பெருத்து வருவதைக் கண்டறிந்தாள். பௌர்ணமி, அமாவாசை, காலநிலை மாற்றங்கள், பருவ கால மாற்றம் போன்ற இயற்கையின் ஒழுங்கு குலையாத சுழற்சியை பெண் உடலை கவனித்ததில் இருந்தே கண்டறியப்பட்டிருப்பதாக பல மொழிகளின் புராணக் கதைகள் சொல்கின்றன.
இன்னும் சொல்லப்போனால் குழந்தைப் பிறப்பிற்கு தாங்களும் காரணம் என்பதை ஆண்கள் மனித குலம் தோன்றிய வெகுகாலத்திற்குப் பிறகே தெரிந்து கொண்டார்களாம். அதுவரை பெண்ணிடம் இருக்கும் ஒரு மாய சக்தியின் மூலமே குழந்தைகள் உற்பத்தி ஆவதாக நினைத்துக் கொண்டிருந்திருக்கிறார்கள். எனவே இயற்கையில் நடந்த தானிய உற்பத்தியின் அளவைப் பெருக்க பெண்ணின் மாத விலக்கு ரத்தத்தை எடுத்து தங்களின் நிலங்களில் தெளித்திருக்கிறார்கள். இதன் மூலம் உற்பத்திப் பெருகும் என்பது எகிப்து உள்ளிட்ட பல நாடுகளில் ஆதிச் சமூகத்தில் இருந்த நம்பிக்கையாக இருந்திருக்கிறது.
இயற்கையின் பேரற்புதமாக, இயற்கைக்கு அடுத்து உருவாக்கும் திறன் பெற்ற பெண்கள் தங்களின் கொடையாக நினைத்தது அந்த கருப்பையைத்தான். கருப்பையின் மூலமே பெண் ஆதிக்கம் நிரம்பியவளாக, தன் குலத்தை நினைத்தபடி பெருக்கிக் கொள்ளும் சக்தி படைத்தவளாக இருக்க முடிந்திருக்கிறது. தன்னுடைய அடையாளத்தின் மூலமே தன்னுடைய இனக்குழுவிற்கு அடையாளம் கொடுக்க முடிந்தது. தன் பிள்ளைக்குத் தந்தை யார் என்று சொல்லக் கூடிய நபராகவும், தான் நினைத்தால் தந்தையை மாற்றிவிடக் கூடிய அதிகாரம் நிரம்பியவளாகவும் பெண் இருந்ததால் இனக்குழுவே அவளுக்குக் கட்டுப்பட்டிருந்தது.
வாழ்வின் மிகப்பெரிய துயரமே நம் வலிமை நம் பலவீனமாக மாறிவிடுவதே. பெண்ணின் பலமாக இருந்த அவளின் இனப் பெருக்கச் சக்தியே, நாகரீகச் சமூகத்தில் அவளை அடிமைப்படுத்தும் கருவியாகவும் மாறிப்போனது. புனிதமாக நினைத்துப் போற்றப்பட்ட அவள் உடலே அடிமைப்படுத்துவதற்கான காரணமாகவும் ஆகிப் போனது. எந்தக் காரணத்திற்காக பெண் கொண்டாடப்பட்டாளோ அந்தக் காரணத்திற்காகவே கீழ்மைப்படுத்தப் பட்டாள். பெண் உடலின் புதிர்த் தன்மையே அவளைப் புறந்தள்ளவும் காரணமாயிற்று.
உடலின் காரணமாக இரண்டு விதங்களில் பெண் கீழ்மையைச் சந்திக்க நேர்ந்தது. பெண் உடல் புனிதமானது என்ற இடத்தில் இருந்து பெண் உடல் அசுத்தமானது, அவள் உடலில் மாதந்தோறும் வரும் ரத்தம் தீட்டு. அந்த நேரங்களில் பெண் தொடுவதற்கு ஏற்றவளல்ல. அவள் விலக்கி வைக்கப்பட வேண்டியவள். எந்தப் புனிதச் செயல்களிலும் அந்த நேரங்களில் பெண் ஈடுபடக்கூடாது என்ற பல்வேறு கட்டுப்பாடுகள் உலகம் முழுக்கத் தோன்றின. இன, மத வேறுபாடு அற்று எல்லா மண்ணிலும் தீண்டாமையைச் சந்தித்தாள். ஆழ்ந்துப் பார்த்தால் உலகிலேயே தீண்டாமையைச் சந்தித்த மனித குலப் பிரதிநிதி பெண்தான்.
உடலின்மீது சுமத்தப்பட்ட இந்த கடுமையான கட்டுப்பாடுகளின் மூலம் பெண் பலவீனமானவளாக, அவளுடைய உடல் தூய்மையற்ற ஒன்றாக மாற்றப்பட்டது. பெண் உடலின் தூய்மையைக் காக்க பல்வேறு சடங்குகளும் மத சம்பிராதாயங்களும் ஏற்பட்டன. இவற்றின்மூலம் பெண் மெல்ல மெல்ல தன் சக்தியை மறந்து தன் கருப்பை தனக்கொரு சுமை என்ற புரிதலுக்குத் தள்ளப்பட்டாள்.
பெண் உடல் பற்றிய தவறான புரிதலால் பெண்ணுக்கு ஏற்பட்ட தனிப்பட்ட இழப்புகளைவிட சமூகத் தளத்தில் அவள் அடைந்த இறக்கமே மிக அதிகம். பெண் தன் உடலின் வழியாகவே அத்தனை பாவச் செயல்களையும் செய்ய முடியும். பெண் உடல் சாத்தான் குடி கொள்ளும் இடம். அந்த உடலை சாத்தான்களிடம் இருந்த காக்க வேண்டியது ஆண்களாகிய தங்களின் கடமை என்று பல சமூகங்களில் ஆண்களுக்குப் புரிதல் இருந்தது. பெண்ணின் பிள்ளை பெறும் சக்தியையும் அவளின் உடல் வளர்ச்சியையும் தங்களின் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவந்து விட்டால் பெண்ணை தீய சக்திகளிடமிருந்து காப்பாற்றி விட முடியும் என்று ஆண்கள் தீவிரமாக நம்பியதின் விளைவே பெண் உடல் மீதான கொடுமைகள் நிரம்பிய கட்டுப்பாடுகள்.
ஆப்பிரிக்காவில் சட்ட ரீதியாக சென்ற நூற்றாண்டு வரையில் இருந்த ஒரு நடைமுறையை உதாரணமாகச் சொல்லலாம். 5,6 வயது பெண் குழந்தைகளின் பிறப்புறுப்புகளை சிறுநீர் போக சிறு துளையை விட்டு, மீதி இடத்தை எந்த மருத்துவ முறையுமற்று காட்டு முள்ளால் தைத்து விடுவது. சீழ் பிடித்து, காயமாகி அந்த புண் மெல்ல ஆறி அந்தப் பெண் உயிர் பிழைத்து வாழ்ந்தால் அவளுக்கு மாத விலக்கு சுழற்சி நேரத்திலும், திருமண நேரத்திலும் சிறுசிறு தையல்களை பிரித்து விட்டு அந்த பெண்ணை தன் உடலையே ஒரு சித்ரவதைக் கூடம் போல் சுமந்து கொண்டு நடமாடச் செய்வது என்ற காட்டுமிராண்டித்தனமான நடைமுறை. இம்முறை எதற்கு என்றால் பெண்ணை அவளுடைய பாலியல் இச்சையில் இருந்து காக்கவே.
இப்படி உலகம் முழுக்க பெண்கள் தங்களின் உடலின் பொருட்டு அனுபவித்துள்ள வேதனைகளைப் படித்தால் ஆண்டுக்கணக்கில் நம்மால் தூங்க முடியாது. பெண் உடல் அனுபவித்த வலிகளை படித்தே துடிக்கும் இதயத்தோடு பல இரவுகளை கடத்தியிருந்த எனக்கு, பெண் உறுப்பு வழிபடப்படும் ஓர் இடத்தைப் பார்ப்பது என்பது பெரும் பேறுதானே? தாய்வழிச் சமூகத்தின் பொற்காலத்திற்குள் நுழைந்துவந்த பூரிப்புடன் ஊர் திரும்பினேன்.பெண்ணை நேசிக்கும் எல்லாருக்கும் அந்த பூரிப்பு இருக்கத்தானே செய்யும்?
thanks to A. vennila and –https://www.facebook.com/profile.php?id=100006624606464&fref=ts