கவின் மலர்
கண்ணீரில்லாமல் யாராலும் ஆயிஷாவை வாசிக்க முடியுமா? நம் குழந்தைகளை கூட்டுக்குள் அடைக்கும் கல்வி முறையின் மீதான சாட்டையடி கேள்வியாக வெளிவந்த ஆயிஷா என்கிற அந்த குறுநூல் தமிழ் வாசர்களிடையே ஏற்படுத்திய அதிர்வு இன்னமும் மறைந்துவிடவில்லை. எங்கோ ஒரு மூலையில் அந்நூலை வாசித்து தினமும் ஒருவருடைய விழிகளில் நீர் கசியவே செய்கிறது. ஆயிஷா ஒரு லட்சத்துக்கும் அதிமான பிரதிகள் விற்று எப்போதும் சந்தையில் கிடைக்கும் நூலாக உள்ளது.
அதன் ஆசிரியர் இரா. நடராசன் அந்த நூலுக்குப் பின் ஆயிஷா நடராசன் என்றே அறியப்படுகிறார். இந்த ஆண்டு குழந்தைகள் இலக்கியத்துக்கு வழங்கப்படும் பால சாகித்ய அகாடமி விருது அவருடைய ‘விஞ்ஞான விக்ரமாதித்யன்’ கதைகள்’ நூலுக்கு வழங்கப்பட்டிருக்கிறது. குழந்தைகளுக்கென ஏராளமான நூல்களை எழுதியுள்ள இரா. நடராசன் தமிழ்நாடெங்கும் உள்ள குழந்தைகள் சிறுவர் நூல்களை வாங்கிப் படிக்கிறார்க்ள் என்கிற உண்மைக்குக் கிடைத்த அங்கீகாரமே தனக்குக் கிடைத்துள்ள விருது என்கிறார்.