-பெண்கள் செய்தி மடல் –
எந்த வெப்பத்தாலும் உறுஞ்சப்படாத பெண்களின் துயர் நிறைந்த ஆடைகள் கொடிகளில் தொங்க விடப்பட்டுக் கொண்டிருந்தன. கசங்கி கிழிந்த ஆடைகள் அடுப்படிக்கு முதலில் வரும் பின் நிறம்மாறி குப்பைத் தொட்டிக்குச் சென்றுவிடும். எனினும் இப்பெண்கள் வன்முறைக்கு உள்ளாகும் போது கிழிந்த தமது ஆடைகளை இன்றுவரை தங்களுடன் வைத்துள்ளார்கள் என்றால் தூக்கியெறிய முடியாத நிலையில் தூக்கிப்போடும் வல்லமை அற்றவர்களாய் இவர்கள் வாழ்க்கையில் அச்சம்பவம் ஒட்டிக் கிடப்பதே காரணமாகும்.
இவ்வாறு வீட்டு மூலைக் கொடிக்குள் ஓசையற்றுக் தொங்கும் துயரை பேச வைக்க வெளியே கொடி அமைத்தோம்.கொடியின் குரலாய் ஒன்றிரண்டு உதடுகள் அசைந்தாலும் அசையாத உதடுகளின் உணர்வின் ஓசைகள் பயங்கர இரைச்சலாய் சமூகத்தை உலுக்கி எடுத்துக்கொண்டிருந்தன.