(‘நிழல்’ ஜூலை 2014 இதழில் வெளி வந்த கட்டுரை இது.)
முபின் சாதிகா (இந்தியா)
1960க்குப் பின் அதிகமான ஈரானிய பெண்ணிய படங்கள் எடுக்கப்பட்டன. ஷா ஆட்சிக்கு எதிராகத் தோன்றிய இஸ்லாமிய புரட்சி, பெண்களுக்கு எதிரான தடைகளை விதித்தாலும் தொட்ர்ந்து பல பெண் இயக்குநர்கள் படங்களை எடுத்துக் கொண்டிருந்தார்கள். அதில் சமீரா மக்மல்பஃப், ரஷான் பெனி-எதிஹாத் போன்றவர்கள் முக்கியமானவர்கள். அந்த வரிசையில் தாஹ்மினே மிலானி எடுத்திருக்கும் ‘ஹிட்டன் ஹாஃப்’ என்ற இந்த படம் 2002ல் ஆசிய பசிபிக் பட விழாவில் சிறந்த திரைக்கதைக்கான பரிசையும் 2001ல் கெய்ரோ சர்வதேச பட விழாவில் சிறந்த கலைப்பங்காற்றிய படம் என்ற பரிசையும் வென்றிருக்கிறது. இந்த படத்தின் கதை அம்சம் இடதுசாரி கருத்துகளை லேசாக ஆதரித்திருந்ததற்காக இந்த படத்தின் இயக்குநர் இஸ்லாமிய புரட்சி நீதிமன்றத்தால் இரு வாரங்கள் சிறையில் அடைக்கப்பட்டார். அவர் மீது ஈரானை விட்டு வெளியேற முடியாத தடையும் இருந்திருக்கிறது. இஸ்லாமிய அடிப்படைவாதம் மற்றும் சுதந்திரம் அற்ற சூழலில் படங்கள் எடுப்பதில் இருக்கும் பிரச்னைகளை ஈரானிய பெண் இயக்குநர்கள் தொடர்ந்து சந்தித்து வருகிறார்கள்.
பெரும்பாலும் பெர்ஷிய மொழியில் இந்த படங்கள் எடுக்கப்படுகின்றன.’ஹிட்டன் ஹாஃப்’ படமும் பெர்ஷிய மொழியில் எடுக்கப்பட்டிருக்கிறது. திரையில் படிந்திருக்கும் ஈரானிய பெண் என்ற நோக்குடன் இது போன்ற படங்களை பார்க்கலாம். ஈரானிய சமூக உருவாக்கத்தில் திரைப்படங்களின் சார்பை அறிய இந்த படங்கள் உதவுகின்றன. இஸ்லாமிய அடிப்படைவாதம்காரணமாக ஏற்படும் நெருக்கடியை இந்த படங்கள் எதிர்கொள்ளும் விதம் பற்றி அறியவும் இவை ஆதாரமாகின்றன. ஈரானிய பெண்கள் எடுக்கும் திரைப்படங்கள் இஸ்லாமிய அடிப்படைவாதிகளின் அணுகுமுறையில் மாற்றத்தை மேலான தளத்தில் ஏற்படுத்துகின்றன. இந்தத் திரைப்படங்கள் நிச்சயம் பெண்ணிய குரலை மறைமுகமாக பதிவு செய்வதில் பெரும் முயற்சி எடுக்கின்றன. கட்டுப்பாடுகளின் நிழலில் விடுதலைக்கான சிறு மூச்சை மிக மெலிதாக விடுகின்ற படங்கள் இவை. அரசும் அரசு சார்ந்த இயந்திரங்களும் விடுக்கும் மிரட்டல்களுக்கு இடையில் பெண் மொழியைப் பதிவு செய்வதில் போராடும் கலை வடிவங்களாக இந்தப் படங்கள் பரிணமித்திருக்கின்றன.
பெண்மைய கதை
ஒரு நீதிபதியின் மனைவி ப்ரிஷ்தே. இரு குழந்தைகளுடன் இருக்கும் குடும்பம். மரண தண்டனை விதிக்கப்பட்ட ஒரு பெண்ணின் மீதான விசாரணைக்கு தலைநகர் செல்லப் போகிறார் நீதிபதி. அப்போது அவர் மனைவி, ஒரு சஞ்சலத்தில் இருக்கிறாள். காரணம் புரியாமல் ஊருக்குக் கிளம்பும் கணவனின் பெட்டியில் அவள் தன் கடந்த காலத்தைப் பற்றி எழுதிய ஓர் ஆவணம் கிடைக்கிறது. அதைப் படிக்கும் போது மனைவியின் கடந்தகாலம் திரையில் விரிகிறது. பதினெட்டு வயதான ப்ரிஷ்தே கல்லூரியில் படித்துக் கொண்டிருக்கிறாள். ஷா ஆட்சிக்கு எதிரான கலவரங்கள் நடந்துகொண்டிருக்கும் காலகட்டம் அது. ப்ரிஷ்தே இடதுசாரி இயக்கத்தில் சேர்கிறாள். இஸ்லாமிய அடிப்படைவாதிகள் இடதுசாரி இயக்கத்தின் மீது தாக்குதல் தொடுக்கிறார்கள். ப்ரிஷ்தே அறிவிப்பு ஓலைகளை விநியோகிக்கிறாள். பல கூட்டங்களில் பங்கெடுக்கிறாள்.
ப்ரிஷ்தேவின் தோழிகளும் இதில் பங்கெடுக்கிறார்கள். ப்ரிஷ்தேவின் குடும்பம் வறுமையானது. தந்தை நோய்வாய்ப்பட்டவர். இவள் படிப்பு குடும்பத்திற்கு உதவும் என்ற நிலைமை இருக்கிறது. ப்ரிஷ்தேவின் தோழிகளை இஸ்லாமிய அடிப்படைவாதிகள் சிறை பிடித்துச் செல்கிறார்கள். இவளுக்கும் அச்சுறுத்தல் இருக்கிறது. இந்த நிலையில் ப்ரிஷ்தே ஓர் அறிவுஜீவியை சந்திக்கிறாள். இவளை ஒரு கும்பல் துரத்தும் போது அந்த அறிவுஜீவியின் இடத்தில் இவள் சரண் அடைகிறாள். அப்போது அவரிடம் பழக்கம் ஏற்படுகிறது. ப்ரிஷ்தே தன் கவிதைகளை அவரிடம் காட்டுகிறாள். முழக்கம் மற்றும் வெற்று கோஷங்கள் மட்டுமே கவிதைகள் ஆகா என்று அவர் சுட்டிக்காட்டுகிறார். அதன் பின் அவர் இவளை ஓரு மாலை சந்திப்புக்கு அழைத்துச் செல்கிறார். திரும்பி வரும்போது காவல்துறை இவளைப் பிடிக்கக் காத்திருக்கிறது. உடனே தன் வாகனத்தில் இவளை அழைத்துச் செல்கிறார்.
இவளை உடனடியாக இங்கிலாந்து செல்லுமாறு அறிவுறுத்துகிறார். இவளும் ஓரளவு உடன்பட்டு அடுத்த நாள் வருவதாகக் கூறி தன் தோழியின் இருப்பிடம் செல்கிறாள். அங்கிருந்து தன் பிறந்ததின சான்றை எடுத்துக் கொண்டு அறிவுஜீவியுடன் தொலைபேசியில் பேச முயல்கிறாள். அப்போது அங்கிருக்கும் அவருடைய உதவியாளர் அவளை அடுத்த நாள் வரச் சொல்கிறார். ஆனால் இவள் பேசியதை அறிவுஜீவியிடம் மறைத்துவிடுகிறார். ப்ரிஷ்தே அடுத்த நாள் அங்கு செல்கிறாள். அந்த உதவியாளர்,அறிவுஜீவிக்கு ஏற்கனவே திருமணம் ஆகி ப்ரிஷ்தேவின் வயதில் ஒரு மகன் இருக்கும் விஷயத்தைச் சொல்கிறார். அதைக் கேட்டு ப்ரிஷ்தே உடைந்து அழுகிறாள். மேலும் அந்த அறிவுஜீவியின் மனைவியைச் சந்திக்க அவர் அழைத்துச் செல்கிறார்.
அவருடைய மனைவி பேச்சுக் கோளாறால் சற்று பாதிப்படைந்தவர். அவர் இவளைப் பார்த்து தன் கணவர் பற்றிய செய்திகளைக் கூறுகிறார். பல பெண்கள் தன் கணவரைப் பார்க்க வந்தாலும் தன் கணவர் ப்ரிஷ்தேவிடம் காட்டிய நெருக்கத்தை யாரிடமும் காட்டவில்லை என்றும் இவளை இங்கிலாந்துக்கு அனுப்பிவிட்டு தானும் உடன் வந்து அவளுடன் வாழ முடிவெடுத்திருப்பதாகவும் அதற்குக் காரணம் இருப்பதாகவும் சொல்கிறார். திருமணத்திற்கு முன் அறிவுஜீவி தன்னுடைய தூரத்து சகோதரி மீது தன் கணவர் காதல்வயப்பட்டதாகவும் அவள் புரட்சி இயக்கங்களில் சேர்ந்து இயங்கியதாகவும் ஒரு கூட்டத்திற்கு சென்றிருந்த போது அவள் காணாமல் போய்விட்டதாகவும் அவர் கூறுகிறார். அதன் பின் அறிவுஜீவி இவரை மணந்துகொண்டதாகவும் அந்த பெண் வாழ்ந்த இடத்தில் இருப்பதற்காக இந்த செயலை செய்திருக்கலாம் என்றும் ஆனால் தன்னை ஒரு கணமும் அவர் காதலிக்கவில்லை என்றும் தெரிவிக்கிறார். அத்துடன் அவருடைய முன்னாள காதலியின் படத்தையும் அவர் காட்டுகிறார்.
அந்த பெண் அச்சு அசலாக ப்ரிஷ்தே போலவே இருக்கிறாள். அதைப் பார்த்து இவள் அதிர்ச்சி அடைகிறாள். அந்த கணத்தில் அறிவுஜீவி மீதிருந்த வெறுப்பு மறைந்துவிட்டதாகவும் அவரை சரியாக புரிந்துகொண்டதாகவும் கூறுகிறாள். அறிவுஜீவியின் மனைவி ப்ரிஷ்தே இனி தன் கணவரை சந்திக்கக்கூடாது என்றும் கூறுகிறார். அதன்பின் ஒரு முறை அந்த அறிவுஜீவியை ப்ரிஷ்தே சந்திக்கிறாள். தன்னை இனி பின் தொடரக்கூடாது என்று கூறிவிட்டுச் செல்கிறாள். கல்லூரிகள் மூடிவிட்டதால் படிக்கவும் முடியாமல் ஒரு வயது முதிர்ந்த பெண்ணிடம் வேலைக்குச் சேர்கிறாள். அந்தப் பெண்ணை ப்ரிஷ்தே நன்றாகக் கவனிப்பதைப் பார்த்து அமெரிக்காவிலிருந்து திரும்பும் அவருடைய மகனான அந்த நீதிபதி இவளை மணந்துகொள்கிறார். அமைதியான குடும்பமாக இருக்கிறது.
இவளை தூய்மையான நல்ல பெண்ணாக நீதிபதி நினைத்திருக்கிறார். அந்த சமயத்தில் ஒரு தோழியின் தாய் மரணமடைகிறார். அந்த வீட்டிற்கு இவள் செல்கிறாள். அங்கு அந்த அறிவுஜீவி வருகிறார். இவளிடம் வந்து பேசும் போது இவளுடைய குடும்பம் பற்றி விசாரித்துவிட்டு புகார் கூறும் தரப்பை மட்டும் கேட்டுவிட்டு அவள் முடிவெடுத்துவிட்டதாகவும் பாதிக்கப்பட்ட தரப்பிடம் கேட்காமலேயே நீதி வழங்கிவிட்டதாகவும் கூறிச் செல்கிறார். அதிலிருந்து மனக்குழப்பத்தில் ஆழ்ந்து இந்த விஷயத்தை தன் கணவனிடம் கூற நினைக்கிறாள். மேலும் அவர் விசாரிக்கும் அந்தப் பெண்ணின் மீதான குற்றத்தை தீர விசாரித்து நீதி வழங்குமாறு கோருகிறாள். இதைப் படித்துவிட்டு அந்த பெண்ணின் மீது விசாரணைக்குச் செல்லும் நீதிபதி அவளிடம் மென்மையான போக்கைக் கையாள்கிறார். மீண்டும் ப்ரிஷ்தே போல் பாதிக்கப்பட்ட ஒரு பெண்ணின் கதை தொடங்குகிறது.
பெண்மை நோக்கு
பெண் பாத்திரங்கள் ஆக்கிரமித்திருக்கும் ‘ஹிட்டன் ஹாஃப்’ படத்தில் ஒரு பெண்ணைச் சுற்றி திரை மொழி பின்னப்படுகிறது. அவள் பார்வையில் சொல்லப்படும் படமாக இருக்கிறது. அவள் நம்பும் விரும்பும் வெறுக்கும் திசையில் படம் பயணிக்கிறது. அவளின் பிம்பத்தை அவளுடைய கணவனும் காதலனும் பிரதிபலிக்கிறார்கள். அவள் நோக்கில் அதை எடுத்துக் கொள்கிறாள். அவள் பற்றிய வர்ணனையும் அவளின் இயல்பும் பெண்ணிய புரட்சிக்கான அடிப்படையாக திரையிலிருந்து பிரித்தெடுத்துக் கொள்ளலாம். இடதுசாரி கொள்கைகள் அவளின் உலகை விரித்தாலும் பெண்மை குணாம்சங்கள் சமூகவயமான கதியிலிருந்து பிறழாமல் வைத்திருக்கின்றன. அவைதான் தூய்மை, உண்மை போன்ற மதிப்புகளை அவள் மீது ஏற்றுகின்றன. முக்கோணாக் காதல் கதையை வெற்று ஆபாசத்துடன் கட்டமைக்காமல் நியாயம் சார்ந்து நிறுவப்பட பெண்மை நோக்கு காரணமாக இருக்கிறது.
அழகின் பூரணமாக, அறிவின் உச்சமாக, அன்பின் ஆழமாக பெண்மை நோக்கப்படுகிறது. பெண்மைக்கு இயல்பானதாக உள்ளதாகக் கொள்ளப்படும் ஆழமான படித்தான அம்சம் இப்படி வியாபிக்கிறது. பெண் வர்ணிப்பாக பெண்மை இருப்பதும் பெண்ணாக இருத்தலின் ஒழுங்கமைவும் சிதறாமல் பேணப்பட்டு பேசப்பட்டிருக்கின்றன. பெண் விரும்பும் பெண்மை என சுயவிருப்பை பரப்பும் திரை வெளியை இந்தப் படம் முன்வைக்கிறது. பெண்மை பெண்ணால் நிர்வகிக்கப்பட்டாலும் பாலின ஆக்கம் ஆண்மையை முன்வைத்தே நிகழ்த்தப்படும் என்பது ஒரு மறைமுக செய்தி. கலாச்சார நடைமுறைச் சார்ந்த பாதைகள் சரியாக பின்பற்றப்படவேண்டும் என்ற கட்டுப்பாட்டை நினைவுகொள்கிறது திரைப்பிரதி. பெண் தன்னை பார்த்துக் கொள்வதும் பார்க்கவைப்பதும் சட்ட கிரமத்தில் நடப்பதாகவே காட்டுகிறது இந்த படத்தின் பிரதி. ஒரே மாதிரியான வார்ப்பில் உருவான பெண் என்று கொள்ளா முடியாமலும் எல்லையைத் தாண்ட முடியாத புரட்சிப் பாத்திரம் என்று சொல்ல முடியாமலும் இடையில் நிறைகின்ற பெண் பிரதிமை இந்தப் படத்தில் காட்சியாகிறது. பண்பாட்டு வேர்களின் அடிப்படைகளை கேள்விக்குட்படுத்தாமல் உடனடி மாற்றம் சாத்தியமில்லை என்பதை குறிப்பிட்டுச் சொல்லிவிடுகிறது ‘ஹிட்டன் ஹாஃப்’ படம்.
பெண்ணியத்தின் எதிர்சினிமா
பெண்ணியத்தை முன் எடுத்துச் செல்ல ஒரு மொழிதல் தேவைப்பட்டிருக்கிறது இந்தப் படத்தில். பெண்ணுக்கு எதிரான சிந்தனைகளை, போக்குகளை, இயக்கங்களை சுட்டிக்காட்டும் இடத்தில் அந்த மொழிதல் செயல்பட்டிருக்கிறது. புரட்சி இயக்கத்தில் இந்தப் படத்தின் மையப் பாத்திரம் சேரும் போது ஓர் ஆதரவு கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பு படைக்கப்பட்டிருக்கும் பெண்ணுக்குள்ளும், பார்க்கும் பெண்ணுக்குள்ளும் நிகழ்கிறது. அறிவுஜீவியின் மீதான காதல் ஆண்-பெண் உறவின் வேறொரு பரிமாணமாக இருக்கக்கூடிய தளத்தை அடைகிறது. ஆனால் அது வெறும் முக்கோணக் காதல் கதையாக சுருங்கிவிடுவது படத்தின் முக்கிய பெண் பாத்திரம் அழுவதில் நிறைவுபெறுகிறது. மனைவி என்ற சமூக பாத்திரத்தில் இயங்கும் போது எந்த மீறலும் இல்லாத மிதமான இயக்கமாக இருக்கிறது.
அறிவுஜீவியின் மனைவி பாத்திரம் பதறாமல் கணவரின் காதலை முறிப்பதில் மட்டும் தெளிவு தெரிகிறது. மீண்டும் அறிவுஜீவியுடன் காதல் கூடிவிடுமோ என்ற அவஸ்தையில் முக்கிய பாத்திரமான பிரிஷ்தே ஊடாடுவதில் குடும்பத்தின் கட்டுக்கோப்பு சிதறிவிடும் என்ற அச்சம் சலனமாக வெளிப்படுகிறது. ஈரானிய பெண் என்ற வரையறையிலிருந்து விலகாமல் இந்தப் படத்தின் பெண்ணை திரையிலிருந்து பிரித்தெடுக்க முடியாது. ஈரானிய பெண் திரைப்பிரதிமையும் ஈரானிய பெண் பார்வையாளரும் இணையும் புள்ளி ஆணிய மேலாண்மைக்கு எதிரானதுதான். ஆனால் அதை வலிமையாக முன் வைக்காமல் லேசாக மென்மையாக அடங்கிய குரலில் சொல்கிறது இந்தப் படம். கணவனைக் கண்காணித்தல் மற்றும் கணவனைத் தவிர வேறு ஆணைக் கண்டபோது தடுமாறாமல் இருத்தல் என்பதில் மனைவி என்ற பாத்திரம் திரையில் நிலைநிறுத்தப்படுகிறது.
நம்பிக்கைத் துரோகம் செய்யத் தயங்காத பாதுகாப்பின்மையுடன் கூடிய கணவன் பாத்திரம் இயல்பாக்கப்படுகிறது. ஆண்-பெண் என்ற பாத்திரத் தன்மையாக இருப்பது அறிவுஜீவியான ஆண்-பெண் பாலினமாக ஆகுதலாக உருமாறுகிறது. கண்காணிப்பு, துரோகம், தடுமாற்றம் போன்ற குணாம்சங்களாக பெயரிடப்படுதலால் பாலின வேறுபாடும் அதனால் ஏற்படும் நெருக்கடிகளும் புரிந்துகொள்ளப்படுகின்றன. மனைவியாகுதல் கணவனாகுதல் என்பதிலிருந்து நீங்கி பெண்ணாகுதல், ஆணாகுதல் என்பதாக எச்சமாகும் இடங்களில் பெண்ணிய சிந்தனையின் சாரம் சாத்தியப்படுகிறது. குடும்பம் இருக்கும் அறிவுஜீவியை அறியாமல் காதலித்துவிடுவதும் அதிலிருந்து விடுபடவேண்டியதிருப்பதும் அது தவறான புரிதலாக மாறிவிடுவதுமான ஒரு சுழல்தான் பாதிப்பை ஏற்படுத்துகிறது.
கலாச்சார கதையாடல்
அறிவுஜீவி, பிரிஷ்தேயைக் காதலிப்பதில் இருக்கும் நியாயம் அந்த பாத்திரத்தின் முன்னாள் காதலியும் பிரிஷ்தே போன்ற தோற்றம் கொண்டவளாக இருப்பதில் காட்டப்படுகிறது. மனைவிக்கு துரோகம் செய்யத் துணிவது கூட இதனால்தான். இதனால்தான் பிரிஸ்தேயின் மன்னிப்பும் சாத்தியப்படுகிறது. தோற்றத்தில் ஒன்றுபடுதல் என்பதற்கான பின்னணி தர்க்கப்பூர்வமானது. பெண் பிம்பம் மாயத்தன்மையுள்ள கோடுகளால் திரையில் உருவாகிறது. பெண் வெறும் மனிதச் சுவடு அல்ல, இன்ப நுகர் சாயல் கொண்ட அசைவு. அதனால் அதை துல்லியமான வரையறைகளால் நகர்த்தவேண்டியிருக்கிறது. புரட்சியின் பாற்பட்ட போக்குடன் மையப் பெண் பாத்திரம் இருக்கையில் அதன் காதலுக்கான ஓர் ஸ்தானம் தேவைப்படுகிறது. அதை நிறைவு செய்வதுதான் அந்த தோற்ற ஒற்றுமை எனும் கதையாடல். தோற்றத்திற்கான நேசம் என்று குறுகிவிடும் பொருளைத் தேர்வதற்குக் காரணம், பெண்மை என்பதை வேறு பொருளில் வெளிப்படுத்த ஏற்படுத்தப்பட்ட சூழல் தடையே.
குடும்பத்திற்கு வெளியே உருவாகும் உறவாக அது மாறும் பட்சத்தில் பெண்மை பலவீனமாகத் தள்ளாடும் என்ற காரணத்தால்தான் இப்படி தோற்ற ஒற்றுமை கொண்டு அது சமன்படுத்தப்படுகிறது. ஒரே தோற்ற ஒற்றுமை என்பது சாத்தியம் இல்லை. ஆனால் தோற்றத்தில் ஒற்றுமை போன்ற மனநிலை சாத்தியம். அப்படிப்பட்ட ஒன்றுதான் இங்கும் இருப்பதாகக் கொண்டாலும் அறிவுஜீவியின் மீறல் என்பது தோற்ற ஒற்றுமைச் சார்ந்தது, அது மன்னிக்கத்தக்கது, ஏற்கத்தக்கது என்ற விதிகளைக் கூறி பெண் மையப் பாத்திரத்தின் வழி நியாயம் வழங்கப்படுகிறது. அதன் மூலமாக பெண் மையப் பாத்திரத்தின் புனிதத்துவம் காப்பாற்றப்படுகிறது. தகுதியான நேசமாக அது இருக்கவேண்டும் என்ற பெண் இயல்பின் சமூகவயமான அந்தஸ்த்து தேடல் அதற்கு அடிப்படையாக இருக்கிறது.
புரட்சியின் பெருவிருப்பில் இருக்கும் பாத்திரத்தைப் படைத்துவிட்டு அதற்கு ஒரு தகுதியற்ற நேசத்தை உருவாக்குவது பொருத்தம் இல்லாமல் தோன்றும் என்ற கதையாடல்தான் இங்கு தோற்ற ஒற்றுமை என்ற அம்சத்திற்கு பின்னணியாக உள்ளது. புரட்சியின் விருப்பத்தில் கட்டியமைக்கப்பட்ட பெண்மை என்ற பிம்பம் ஏற்படுத்தும் சலனம் அல்லது பாதிப்பு சரியாக சென்று சேர ஒரு படித்தான பெண்மையைப் படைப்பதில் நிறைவேறாது என்பதால் ஒரு சிறிய முடிச்சு தேவைப்படுகிறது. அந்த தேவையை எதிர்ப்பியக்கமற்ற பொருளைத் தரும் தோற்ற ஒற்றுமை என்ற கதையாடல் நிறைவு செய்கிறது.
பெண் தன்னிலை
‘ஹிட்டன் ஹாஃப்’ படத்தில் பிரிஷ்தே என்ற மையப் பாத்திரம்,அறிவுஜீவியின் மனைவி மற்றும் சில பெண் பாத்திரங்கள் என்ற வகையில் பெண் முதன்மை என்ற இலகுவான கதையாடல் கட்டமைக்கப்படுகிறது. பெண் தன்னிலை உருப்பெறும் தன்மையை பார்த்தால் பெண்மை என்ற பொது சமூக தளத்தின் இயல்புறுத்தம் உள்வாங்கப்பட்டிப்பது தெரிகிறது. அதில் பெண்மையை விரும்புதல் என்ற இயக்கம் முக்கியத்துவம் பெறுகிறது. பெண் தன்னிலை,அறிவுஜீவி என்ற ஆண் தன்னிலையை விரும்புதல் என்பதில் பிரதிபலிக்கிறது. விரும்பாமல் இருத்தலிலும் வெளிப்படுகிறது. ஆனால் கணவனை விரும்புதலாக அது மாற்றமடைகிறது. ஆண் தன்னிலை விருப்பம் என்ற மயக்கத்திற்கு உட்படுதல் உடையும் போது கண்ணீர் வருகிறது. அந்த இழப்பு படம் முடிந்த பிறகும் தொடர்கிறது. அந்த மயக்கத்திலிருந்து விடுபடுவதில் நேர்ந்த பிழை பற்றிய வருத்தமாக அது நிற்கிறது. பெண் தன்னிலைக்கான போக்கு ஆண் விருப்பில் நிறைவு பெறுகிறது என்பதிலிருந்து விடுபட முடியாத திரையம்சம்தான் இங்கும் இருக்கிறது. ஆனால் அது பற்றிய ஓர் விழிப்புணர்வைத் தரக்கூடிய சாத்தியங்களும் உள்ளடங்கி இருக்கின்றன என்பது இந்த படத்தின் வேறுபாட்டுக்குக் காரணமாக உள்ளது.
இந்தத் திரைமொழியிலும் பெண்மைக்கான மற்றமையாக ஆண்மைதான் இருக்கிறது. அதைத் தேர்வதற்கான காரண காரியங்கள் பற்றிய ஒரு கதையாடல் இருக்கிறது. பெண் தன்னிலை உற்பத்தியாகும் பாலின அடையாளம் சார் இருப்பு மரபார்ந்த நிலைத்தன்மையில் ஆட்பட்டு கவனமுறுவதாகக் கொள்ளலாம். அதை உடைத்து கேள்வி கேட்கும் ஞானம் வாய்க்கப்பெற்றாலும் ஈரானிய அரசியல் சூழல் அதை அனுமதிக்காது என்ற அச்சம் கட்டுப்படுத்துவதாக உள்ளது. பிரிஷ்தே மற்றும் பிற பெண்கள் தங்கள் விருப்பங்களை, வேட்கைகளை வெளிப்படுத்துபவர்களாக இருப்பதும் கூட வெறும் பேச்சாக பதிவாகிறது. அறிவுஜீவியுடனான காதல் நிறைவேறாததாக இருப்பதில் பெண் தன்னிலையின் விருப்பு ஓங்கி ஒலிக்கிறது. அது ஒரு குறியீட்டு தளத்தில் பிரதிபலிப்பதாகவும் இருக்கிறது.
கணவனின் முழுமைக்கு,நிறைவுக்கு, திருப்திக்கு, பதிலியாக அறிவுஜீவியுடனான காதலின் பூர்த்தியாகாத, நிறைவின்மையாகாத, அதிருப்தி இருக்கிறது. கணவனுடனான உறவில் பிறழ்வு ஏற்படாவிட்டாலும் சுயதேர்வாக அறிவுஜீவியுடனான தொடர்பு இருப்பது நுட்பமாக பதிவாகிவிடுகிறது. அறிவுஜீவியுடனான காதல் ஒரு மனக்கோட்டை. அது தொலைவில் இருந்து உறுத்திக்கொண்டும், இன்பம் அளித்துக் கொண்டும்தான் உள்ளது. ஆனால் அதை நெருங்க முடியாது என்பதுதான் பெண் விருப்பின் நிறைவின்மை. அதைத் தொட்டிக்காட்டியிருக்கிறது இந்தப் படம்.
பாலியல் வேறுபாடு
கணவனிடம் தன் கடந்த காலத்தையும் நிகழ் காலத்தையும் பதிவு செய்வதுதான் முழு திரைப்படமாக உள்ளது. காலத்தின் வழியே வந்தடைய வேண்டிய செய்தி, கணவனின் வரலாற்று நேர்மையில் மனைவியின் நெகிழ்தல்களுக்கான இடத்தை குறிப்பிடுதலாக உள்ளது. கணவன் நேர்க்கோடான தன்மையில் இருந்தால் மனைவி அநேர்க்கோடான தன்மையில் இருந்ததையும் அது தொடரக்கூடிய சாத்தியத்தை நிறுத்தியிருப்பதையும் காட்டுவதாக உள்ளது. அறிவுஜீவி-மனைவி உறவில் அது நேரெதிராக இருப்பதையும் வெளிப்படுத்துகிறது. குடும்பத்தின் மறுவரையறை கோருவதன் உள்ளடங்கிய போராட்டமாகவும் இந்த பாலியல் வேறுபாடுகளைக் கருதிக் கொள்ளமுடியும். அறிவுஜீவியின் இயக்கம், பிரிஷ்தேயின் இயக்கம்,அறிவுஜீவியின் மனைவியின் இயக்கம், பிரிஷ்தேயின் கணவனின் இயக்கம் எல்லாம் ஓரே போக்கில் ஓடுகின்றன.
இதில் சற்று பிறழ்வு ஏற்பட இருந்ததை சுட்டிக்காட்டுவதில் அடுக்கப்பட்ட பிம்பமாக இந்தப் படம் உள்ளது. அறிவுஜீவி என்ற புள்ளியில் பாலியல் வேட்கை தொடங்கி அதே புள்ளியில் முடிகிறது. பிரிஷ்தே அதில் ஊடாடும் மற்றொரு புள்ளி. பிரிஷ்தேயின் இயக்கம், இயக்கமற்ற தன்மை என்பது அறிவுஜீவியின் இயக்கம், இயக்கமற்ற தன்மையுடன் வேறுபட்டு இயங்குகிறது. கலகம் ஏற்படுத்திவிடும் என்ற எச்சரிக்கையுடன் இயங்குகிறது. அதனால் இந்த வேறுபாடு உண்டாகிறது. ஈரானின் பெண் உரு என்பதை விட ‘ஹிட்டன் ஹாஃப்’ படத்தின் பெண் பிம்பம் அதன் கால, நில எல்லையில் வேறுபட்டு இயங்கும் பான்மையை திரைப்பிரதி கொண்டிருக்கிறது என்று சொல்லலாம். இஸ்லாமிய சட்டகத்திலிருந்து விடுபட்டு மார்க்ஸிய கொள்கைகளை புனைந்து அகிலத்தின் குடும்பத்தை அசையாமல் வைத்திருக்கும் பெண் பிரதிமை என்ற வரையறையை தரும் வகையில் உள்ளது.
கடந்த காலமும் நிகழ்காலமும் தூய்மை என்ற விழுமியத்தை நெகிழச் செய்வதற்கு புதிய பொருள் எழுதும் வகையில் பிரிஷ்தேயின் வாழ்வு அமைகிறது. உடல் ரீதியான தூய்மைக்கான மறு விளக்கமாக இந்த தூய்மை சுருங்கிவிடுகிறது. உள்ளக்கிடக்கையின் பரவல்களை அங்கீகரிக்கவேண்டிய இருத்தலை கணவனுக்குக் கொடுத்துச் செல்வதாக பெண்மையை கட்டமைக்கிறது இந்தப் பாலியல் வேறுபாடு. பிரிஷ்தேவிடம் இருந்த உண்மையின் சிதைவாகவும் இதைக் கொள்ளலாம். மறுஆக்கமாகவும் கொள்ளலாம். பிரிஷ்தே காதலை,பாலியல் விழைவை மறைத்தது உண்மையின் வேறு ஒரு வடிவம். அதை வெளிப்படுத்துகையில் உண்மையான பாலியல் வேறுபாட்டுக்கான இடம் கிடைக்கிறது.
உளவியலின் அரசியல்
உள்ளடக்கம், அது உணர்த்தும் உணர்வு, அது ஏற்படுத்தும் பாதிப்பு என்ற வகையில் இந்த படம் பெண்ணின் காதலும் அது தோல்வி அடையும் நிலையும் என்பது பற்றியதும் தோல்விக்குக் காரணமான உணர்வெழுச்சியும் அதனால் ஏற்படுத்தும் தவறான முடிவும் என்ற ஒரு வலைப்பின்னலை முன்வைக்கிறது. பெண் மைய அடையாளமும் பெண் மைய தகுதியும் விடுதலைக்கான ஓர் உந்துதலை முன்வைக்கின்றன. பெண் காட்சிமயப் படுத்தப்படிருப்பது புதிய வகையான சிந்தனைக்குள் புகுத்துவதற்காகவும் இந்த பெண் பிம்பத்தைப் பார்ப்பதற்கான பார்வையை மாற்றுவதற்காகவும் இந்த பெண் ஏற்படுத்தும் பாதிப்பு மாற்று உணர்வை நுட்பமாக உருவாக்குவதற்காகவும் என்று கொள்ளமுடியும். அறிவுஜீவியின் வேட்கையின் மையமாக பிரிஷ்தே இருப்பதும் பிரிஷ்தேவுக்கு அது போன்ற இடம் மறுக்கப்படுவதும் சமூக உளவியலின் பிரிவினையே. ஆண்மைய சமூகத்தின் வழி உருவான பிளவை வெளிப்படுத்துவதே.
அறிவுஜீவியின் மனைவியின் ஒரே நம்பிக்கை கணவரை தன் கட்டுப்பாட்டில் வைப்பது. பெண் என்ற நிலையைத் தாண்டி அல்லது பெண்ணுக்கு என்று உரித்தான பண்பாக மனைவியின் பண்பை பேணுவதைத் தவிர வேறு உணர்வுநிலைகள் சாத்தியமில்லை என்பதையும் படம் வெளிப்படுத்திவிடுகிறது. பிரிஷ்தேயும் அறிவுஜீவியின் மனைவியும் பெண்ணென்ற உயிரியாக இருப்பதைத் தவிர தாயாக, சகோதரியாக பல பாத்திரங்களை ஏற்பவர்களாவும் இருக்கிறார்கள். ஆனால் அவர்கள் தங்கள் உயிர்சார் உணர்வுநிலைகளை சமூகப் போக்கின் ஓட்டத்தில் கலந்துவிட்டவர்களாக காட்சிப்படுபவர்கள். பெண்ணாகுதல் என்பதாக இதை எல்லாம் சமூகம் பெயரிட்டுவிட்டதால் இவற்றைத் தவிர்த்த தனி அடையாளம், தனி வாழ்வுக்கான உளப் போராட்டம் படத்தின் அடுக்குகளில் சிக்கியிருக்கிறது. இஸ்லாமிய சட்டங்களின் கடும் நெருக்கடிக்குள்ளிருந்து இந்தப் போராட்டம் நடத்தப்பட வேண்டியிருப்பதை ‘ஹிட்டன் ஹாஃப்’ படம் சுட்டிக்காட்டுகிறது.
ஈரானிய படங்களில் பொதுவான அம்சம் மென்மையாக எதிர்ப்புகளை பதியவைப்பது. இந்தப் படத்திலும் அது போன்ற அம்சம் காணக்கிடைக்கிறது. இந்தப் படங்கள் உலக அளவிலான பாராட்டுகளைப் பெறுகின்றன. ஈரானிய அரசு மற்றும் இஸ்லாமிய அடிப்படைவாத அமைப்புகளிடமிருந்து பல எதிர்ப்புகளை மீறி படைப்பாக்கத்தை கொண்டுவர வேண்டிய கட்டாயத்தில் ஈரானிய இயக்குநர்கள் இருக்கிறார்கள். எதார்த்தவத சினிமாவுக்கான பெரிய சந்தையாக ஈரானிய படங்கள் இருக்கின்றன. நுட்பமான உணர்வுச் சித்திரங்களாக இந்தப் படங்கள் இருக்கின்றன.
‘ஹிட்டன் ஹாஃப்’ படமும் அதற்கு விதிவிலக்கல்ல. தாஹ்மினே மிலானி இந்தப் படத்தில் வைத்திருக்கும் மௌனம் ஈரானின் சமூகத்தில் பெண்ணின் மௌனமாக ஒலிக்கிறது. இந்த திரைமொழியை துல்லியமாகக் கேட்டு படத்தின் முழுமையான பரிமாணத்தை உணரத்தருவதாக படைப்பாக்கம் விளங்குகிறது. ‘ஹிட்டன் ஹாஃப்’ படம் பெண்ணை மையமிட்ட கதையாடலை உருவாக்கிக் காட்சிப்படுத்துகிறது. பெண் நோக்கை முதன்மைப்படுத்தி நகர்த்திய படமாக இது உள்ளது. ஈரானிய சமூகத்தில் மட்டுமல்லாமல் சர்வதேச சமூகத்தின் பொருளாம்சத்தை முன் வைத்து எடுக்கப்பட்ட படமாக இருந்தது. இந்தப் படத்தின் பெண் பாத்திரங்கள் சிந்திக்கும் முறைமை புரட்சிக்கான அடிப்படையை ஏற்படுத்துவதாக உள்ளது. அரசியல் வகைமைக்குள் பெண்படும்பாட்டை தெளிவாக எடுத்துக்காட்டுகிறது இந்தப் படம். மௌனத்தின் மொழியை திரையில் வரைந்த சித்திரமாகக் காட்டியிருக்கிறது ‘ஹிட்டன் ஹாஃப்’ படம்.
உதவிய கட்டுரைகள் மற்றும் நூல்கள்:
1.Feminist Film Theory- Anneke Smelik
2.Visual Pleasure and Narrative Cinema(1975)-Laura Maulvey
3.Affectivity, Becoming, and the Cinematic Event:Gilles Deleuze and the Futures of Feminist Film Theory-Amy Herzog