புதிய மாதவியின் ‘ பெண் வழிபாடு’ ஜெயந்தி சங்கர் கதைகள்-

பா.செயப்பிரகாசம்

எழுத்தாளர், நாடக ஆசிரியர், சிறுகதையாளர், நெடுங்கதையாசிரியர், கவிஞர் ஆகிய பன்முகப் படைப்பாளி ’ ஜெயந்தன் படைப்பிலக்கிய விருதுகள்” வழங்கும் நிகழ்வு 02-08- 2014 ல் சென்னையில் நடைபெற்றது. அவருடைய முதலாமாண்டு நினைவு நிகழ்வுக்கு கிடைத்த வாய்ப்பு போலவே, 2014 ஆம் ஆண்டு சிறுகதைகளுக்கான தேர்வைச் செய்யப் பணிக்கப் பட்ட போது- அவை ’பெண் வழிபாடு’ , ஜெயந்திசங்கர் சிறுகதைகள் ’என பெண்ணெழுத்தாக அமைந்துபோய் விட்டன.விருதுத் தேர்வு பற்றிய பதிவு இது.

 

Short Stories Full

தற்செயல் நிகழ்வுதான் அது. ஜெயந்தன் இலக்கியப் பரிசுப்போட்டிகான சிறுகதைத் தொகுப்புகள் என்முன் குவிக்கப் பட்டன.குவியலிலிருந்து விருதுக்கான நூல்கள் என இரு (பெண்) எழுத்தாளர்களின் படைப்புகள் தேர்வு இயல்பான ஒன்றாக அமைந்தது.

ஆண்களுக்குச் சம்மாய், சில இடங்களில் அதனினும் கூடுதலாய் கணினித் துறையில் பெண் வந்து விட்டாள்.நவீன தொழில்நுட்ப நிலையங்களுள் பெண் நிறைந்து நிற்கிறாள்.காரணம் அவள் பெற்றுக் கொள்ள, தன்னை தகுதிப் படுத்திக் கொள்ளக் கிடைத்த கல்வி .

ஆணுக்குப் பெண் நிகரென்று முரசு கொட்டத் தொடங்கிய வேளை, முரசைக் கைப்பற்றி முடக்கி வைக்கும் காரியக்காரர்களும் ஆங்காங்கு அவ்வப்போது ஆடிக் கொண்டிருந்தார்கள். இதை “ நொர நாட்டியம் பண்றான்” என்பார்கள்.பலதுறைகளில் பெண்களின் பங்களிப்பு பெருகினாலும், ஒரே ஒரு துறை மட்டும் காலியாக இருக்கிறது.அது அரசியல் துறை . ஊராட்சி முதல் நாடாட்சி வரை ஆண்களுக்கு சமமாய் பெண் பங்களிப்பு இல்லை. ஆண் நீக்கமற நிறைந்த அரசியல் நாடாக உள்ளது.

எழுதுலகம் அவ்வாறு இல்லை. இங்கு குறிப்பாய் தமிழ் எழுத்துக்காரர்கள் பற்றியே பேசுகிறேன்.ஏட்டையும் பெண்கள் தொடுவது தீமை என்றெண்ணிய விந்தைமனிதர் ஒடுங்கி விட்டார். அங்கங்கு சில புகைச்சல், எரிச்சல் எழும்பிய போதும் இலக்கியத்தில் பெண்சக்தி மெலோங்கி விட்டது.இலக்கியத் தளத்தில் இனி பெண் ஆற்றலை எவரும் தடுத்து நிறுத்த இயலாது என்ற நிலைதான் இங்கு புதிய மாதவி,ஜெயந்தி சங்கர் இருவரும் ஒரே பாலியலாக இருப்பதற்குக் காரணம்.இருவரும் ஒருபாலினர் என்பது மட்டுமல்ல, அதனினும் கூடுதலாய் அவர்கள் மனிதர்களாக இருக்கிறார்கள் என்பது.

“வாழ்க்கை இப்படித்தான் இருக்கிறது என்று காட்டிவிட்டு கடந்து போகிறவர்கள் அல்ல, எங்களின் அடுத்த தலைமுறை எழுத்தாளிகள் : சரி, சரியில்லாதவைகள் பற்றிய சிந்தனைகளை வாசிப்பு மனத்தில் விதைக்கிறார்கள் “ என்று இவ்விரு படைப்பாளிகளையும் முன்னிட்டு எண்ணுகையில் மகிழ்ச்சியாக இருக்கிறது.

தேடலில் நான் கண்டடைந்தது ஒன்று திமுதிமுவெனக் குமுறும் முரசறைவு – அவர் புதிய மாதவி.

மற்றொன்று கணீர் கணீர் என வரும் மணியடிப்பு – இவர் ஜெயந்தி சங்கர்.

ஒரு திசை நோக்கிய பயணம் எனினும் தனித்தனி எடுத்துரைப்பு மொழியில் நடக்கிறார்கள்.

பெண்விடுதலை எழுத்துப் பயணம் தொடங்கி இருபது ஆண்டுகள்தாம்:அதன்முன் தமிழ் கூறு நல்லுலகம் ஆன்வழிக் கதைகளின் பாதையாக இருந்தது. பெண் எழுத்தாளிகள் இருந்தார்கள். அவை பெண்மொழி பேசியன அல்ல:முற்கால அரசியல் வரலாற்றைக் கூர்ந்து பார்த்தால் பெண்ணெழுச்சி கருதிய உரையாடல்கள் அபரிதமாக வெளிப்பட்டுக் கொண்டிருந்தன.பாரதி, பெரியார் என எழுத்தில், களப் பணியில் எண்ணற்ற பிரகிருதிகள் வெளிப்பட்ட போது , அந்த தாக்கத்தை உட்கொண்டு படைப்பாக்கம் அநேகம் வந்திருக்கவேண்டும். ஆனால் காணக் கிடைத்தது அபூர்வமாக இருந்தது. எழுதப் பிரவேசித்த பெண்களும் ,பெரும்பான்மை உயர்சாதியாக இருந்தார்கள். அதன் காரணமாய் ஆண்வழிச் சிந்தனைக் கதைகளை வழங்கினார்கள்.

எழுத்துக் களத்தில் பெண் தன் கையை ஊன்றி, தானே கரணமடித்து தனக்கான வார்த்தையைத் தானே தொடுத்துக் கொண்டாள்-தொண்ணூறுகளின் பின் நிகழ்ந்தது இவ் அதிசயம்: சாதாரண மக்கள் கூட்டத்தினுள்ளிருந்து ஒரு சாதாரணன், தானே சாமியாடி தமக்கான வரத்தை தாமே வழங்கிக் கொண்ட அதிசயம்போலத் தான் நடந்தேறியது .

பெண்ணுயிரின் வாதனையை, வீறிடும் குரலை,பம்மலும் பரிதவிப்புமாய்கொண்டு செல்லும் சில மொழி நடை: அழுகையும் ஆக்ரோஷமுமாய் எடுத்துச் செல்லும் சில மொழி நடை. நேர்படப் பேசி , கைநீட்டி உணர்த்தலும் வீச்சு மொழியும் புதிய மாதவியினுடையது.

பழஞ்ச் செய்யுள் ,காவியம்,கவிதை,கட்டுரை, புராண இதிகாசம் முதல் இன்றைய நவீன எழுத்துக்கள், ஊடகங்கள் வரை அம்மா பற்றிய பிம்பங்களை வாரி வழங்கியுள்ளன..தமிழ்த் திரைப் படம் 50 ஆண்டுகள் இந்தச் சரக்கை வைத்தே ஓடியிருக்கிறது.அரசியல் தலைவர்கள், நடிகர்கள்,பிரபலங்கள் போன்றோர் ’ தாயில்லாமல் நானில்லை’ என அதீத பிம்ப உருவாக்கத்தோடு வருகிறார்கள்.

தி.ஜானகிராமனின் ‘ அம்மா வந்தாள்.’

,அம்பையின் ’ அம்மா ஒரு கொலை செய்தாள்’-

இரு படைப்புக்களும் அம்மாவின் கட்டமைக்கப் பட்ட பிம்பத்தை தமிழில் முதன் முதலாய் உடைத்து வீசின.இப்போது புதிய மாதவி ! அம்மாவைப் பெண்ணாகப் பார்க்கிற புதியமாதவி. எந்த ஒரு பெண்ணும் என்ன வாழ்ந்தாளோ, அவ்வாறு தான் அம்மாவும் வாழ்ந்திருக்க வேண்டும்.இக்கோணத்தில் உண்மையைப் பிளந்து முன்வைக்கிறது ‘அம்மாவின் காதலர்கள்’

ஆண்களுக்கு மட்டும் வருகிறது பிள்ளைப் பருவக் காதல்.பிள்ளைப் பருவம் முதல் பேரிளம் பெண் வரையிலான காதலை ஆண்களுக்கு மட்டும் பேச முடிகிறது. தன் பிள்ளைப் பருவக் காதல் பற்றியோ, பேரிளம் ஆண் வரையிலான விருப்பம் பற்றியோ பெண் பேசியதாக இல்லை: பேசும் தகுதியும் வழங்கப் பட்டதில்லை.பாவாடை தாவணியாக,பதின்ம வயதாக, காதலிளம் கன்னியாக, பல பருவங்களிலும் பல்வகை உணர்ச்சிகள்,விருப்பங்கள், தேவைகளின் உயிரியாக பெண் என்பதை ஆணியல் நோக்கு ஒருக்காலும் ஏற்றதில்லை.

தன்னுணர்வின்றி நீர் பிரிகையிலும் மலம் வெளியேறிக் கொண்டிருக்கையிலும் முந்திய கால நினைவுகளில் மூழ்கிக் கிடக்கிறாள் பாட்டி..காலங்களை கடந்து பாட்டியின் பார்வை எங்கேயோ பயணம் செய்து கொண்டிருக்கிறது. சென்னையிலிருந்து வந்திருக்கும் வாத்தியார் மகனைப் பார்க்க பாட்டி மாடிப்படி ஏறியிருக்கிறாள்.ஏற முடியாமல் கீழே விழுந்த பின்னும் வாத்தியார் மகனைப் பார்க்க வேண்டுமென்று கத்தியழ ஆரம்பித்தாள்.

“ என் வயித்திலே பிறந்திருக்க வேண்டிய ராசாவை நான் பாக்கனும்னு” சொல்லியழுகிறாள்.

சூட்சுமம் புரிகிறது.கிணற்றில் போட்ட கல் போல் கிடந்த காதல் நினைவு, தள்ளாடும் வயதிலும் மேலெழுந்து வரும் சூட்சுமம் அது.

“அப்படியே ஆதரவாக அவள் தலையைத் தடவி விட்டேன். வேகமாக ஏறியிறங்கும் அவள் மூச்சுக் காற்று என் மடியைச் சூடாக்கியது. என் கர்ப்பக் கதவுகள் கண் விழித்து அவள் கண்ணீரைச் சுமந்து கொண்டன. பாட்டியின் வயதில் எனக்கும் இந்த மாதிரி நினைவுகள் திரும்பினால் என்னவெல்லாம் சொல்லக் கூடுமென்று நினைத்துக் கொண்டேன்”

(பாட்டி என்ன செய்து விட்டாள்- பக்=57,58)

பாதிக்கப்பட்ட ஜீவனின் குரலை ஒலிக்கையில் ங-ப் போல் வளை, நயம்பட மொழி, நனிநாகரிம் பேசு என்றெல்லாம் கோடுபோட்டு எழுத இயலாது.அப்படியெல்லாம் எழுதுகோல் தூக்கி வருதல் சாத்தியமில்லை..எங்கள் வட்டாரத்தில் ஒரு சொல்லாடல் வரும்” ஒன்னைய அடிக்காத விளக்குமாரு வீட்டில இருக்கலாமா “. ஆதிக்கத்தை எதிர்த்துத் திரளும் எழுத்தில் இந்த வகை நியாயப் பாடுதான் கேட்கும். புதிய மாதவியின் உச்சரிப்பு உறைப்பாய் விழுகிறது – உதைக்கிற மாதிரி.

ஆஸ்கார் விருது பெற்ற நடிகை கீதாஞ்சலி சென்னை வருகை: ஊடகங்கள் பட்டாசு வெடிக்கின்றன. கதை சட்டென முறிக்கப்பட்டு வெவ்வேறு காட்சிகளாய் மாற்றி மாற்றி நடக்கிறது. மிகப் பிரபலமடைந்து உச்சிக்குப் போன கீதாஞ்சலியால், உச்சியிலே நிரந்தரமாய் தங்கியிருக்க முடியவில்லை. சிம்மாசனம் சாய்மானம் கொள்கிறது.வயது சிம்மாசனத்தைச் சாய்க்கிறது. நடிகை உடலால் அளக்கப் படுவது திரையுலக விதி. நடந்தவையை என்ன என பிள்ளைகளிடம் தந்தை விவரிக்கிறார்.

” அவ சினிமாவை ரொம்ப நேசிச்சா. நடிக்காமல் வீட்டில் சும்மா இருக்க முடியாது என்ற நிலை வந்ததால்தான் நான் அவளை மீண்டும் சினிமாவுக்கு நடிக்க அனுப்பினேன்.இதற்குள் அவளுடைய இடத்துக்கு நிறைய புதுமுகங்கள் வந்து விட்டார்கள்ஞ் இன்று அவள் தன் நிகழ்காலத்தை இழந்து விட்டாள்.கடந்த காலத்தில் மட்டும் வாழ்ந்து கொண்டிருக்கிறாள். கடந்த கால நினைவுகள் அவளைக் கொஞ்சம் கொஞ்சமாய்த் தின்றது. அதில் அப்பா, மகன், மகள் யாருமே இல்லை “

யதார்த்தத்தை ஏற்க இயலாத மனம் குப்புறக் கவிழ்ந்து தூள் தூளான போது தெறிக்கும் வலி இங்கு அனுதாபத்துடன் சொல்லப்படுகிறது.

பேதை,பெதும்பை,மங்கை, மடந்தை,அரிவை, தெரிவை,பேரிளம்பெண்- பருவம் பருவமாய் பெண் பாலியல் வல்லுறவுக்கு ஆளாகிறாள். ஆண்சிந்திப்பில் இன்று நேற்றல்ல,முந்திய பாரம்பரிய நோய் இது .அரசர் உலா வருகையில் அத்தனைப் பருவப் பெண்டிரும் மயங்குவதாய்,முயங்குவதாய், காமப்பொய்கையில் குளிப்பதாய் ‘உலா”க்கள் உலவின.இன்று சனநாயகம் உருவாக்கியுள்ள வெளியில் இந்த வகை குரூர மனங்களின் நடமாட்டம் தாராளமாய் உலா வருகிறது.இந்தச் செயல்பாட்டை புது உத்தி முறையில்,புது எடுத்துரைப்பில் தருகிறது “பெண் வழிபாடு”. தொகுப்பின் முதல் கதை முதலாவது இடத்தில் நிற்கிறது.

நிலஉடமை முறையில் முன்னர் நிகழ்ந்த கொடூரங்கள் மேல், முதலாளியத்தின் உச்சமான உலகமயம் உண்டுபண்னியிருக்கும் கொடூரப் பார்வைகளும் அடுக்கி வைக்கப் படுகின்றன. இத்தப் பெரிய சிதைவுகளுக்குள் பெண் எங்கிருக்கிறாள் எனத் தேடும் மானுட குலச் சிந்தனைகள், குரல்கள் எழத் தொடங்கியுள்ளன.பதைபதைப்பாய், அதேவேளை தீர்மானகரமாய், உறைத்து ஒலிக்கிறது புதிய மாதவியின் குரல்.

பிரச்சினையின் உள்ளியங்கும் வெப்பம் அதற்கொரு வடிவத்தையும் இயல்பாக அளிக்கிறது.இதையும் தாண்டி இன்னும் இன்னும் புதிய வடிவ நேர்த்தியில் புதிய மாதவி செயல் பட இயலும்.

தனது காலத்தின் கொதி நிலையில் குமிழ்ப் புடைப்பாய் நிற்கும் ஒரு பிரச்சினையை ,உரையாடலுக்குக் கொண்டு வாராத எந்த எழுத்தும் வெள்ளையானது அல்ல:எந்தவடிவ வெளிப்பாடும் நிகழ்காலத்தின் வெள்ளை அறிக்கையாய் வெளிப்படல் அவசியமானது, கொதிநிலையைக் கைப்பிடித்து அள்ளுகையில் தன் கையையும் சுடும் என்பதை இந்தவகை எழுத்துக்காரர்கள் உணர்ந்துள்ளார்கள். தத்தமது செயல்பாடு பற்றிய சுயவிமர்சனத்துக்கு அது வித்திடுகிறது.’ மகளிர் தினம்’ போன்ற படைப்புக்கள் எழுத்துலகவாசி தன்பகடி செய்து கொள்கிற வெளிப்பாடு . .பெண்ணியச் செயற்பாட்டளர்கள் தம்மை நோக்கிய விமர்சனத்தோடு முன்னேற்றம் கொள்ள உணர்வதற்கும் உணர்த்துவதற்கும் தேவைப்படுகிற கதை..

விமர்சனம், சுயவிமசனத்தின் விசுவரூபம் இவரது எழுத்து.

பெண் வாழ்வதற்காகப் போரடுகிறாள்: போராடுவதற்காய் வாழ்கிறாள்.தன்னை மனுஷியாக வைத்துக் கொள்ள அவள் இவ்வாறுதான் வாழ்ந்தாக வேண்டும் என தொடர்ந்து ஒலித்துக் கொண்டேயிருக்கிறது இவரின் குரல்.

Short Stories Full

 

சிங்கப்பூர்- ஒரு நகர நாடு. பல்லின மக்கள் குடியேறிய புதுக் குடியேற்ற நாடு. ஒவ்வொரு இன மக்களது பூர்விகம், புவியியல், பண்பாடு, உளவியல் வேறுவேறானவை.நாடு என்ற உருவாக்கத்தின் பின் வேற்றுமைகளின் இணைவில் பொதுமை உருவாகிறது.இதனூடாக பன்மையைப் பேணுகிற ஒரு அரசும் அங்கு உருவாகியிருக்கிறது.நாட்டுக்கு நாடு அரசியல், சமூக ,பண்பாட்டு ஆணைகள் ,விதிகள் வேறுபடுகின்றன போலவே சிங்கப்பூர்என்ற புது உருவாக்க நாட்டின் விதிகளும் வேறுபடுகின்றன.

முதலாளிய சமுதாயம்+அதன் விதிகள்= சிங்கப்பூர்

என கணித வடிவில் நாட்டின் கட்டுமாணத்தை வரையறை செய்து கொள்ளலாம்.முதலாளிய பண்பாட்டு விதிகள் மீது கட்டி எழுப்பப் பட்ட மனித மனம், அதுபற்றி போதிய அறிதலற்ற தமிழ்ச் சமூக மனத்தின் மேல் நடத்திக் காட்டிய ஆக்கிரமிப்புத் தான் “ ஈரம் ” கதை.அது சட்டங்களுக்குமுன்னுரிமை தந்து ,மனித நேயத்துக்கு சமாதி கட்டுகிறது. ஈரமற்ற சட்டங்களின் வறண்ட பூமிகள் இந்நாடுகள் என்று தமிழின வலியைப் பேசுகிறது படைப்பு.

தமிழ்ப் பண்பாட்டுக்குள் வாராத வித்தியாசம் வித்தியாசமான கலாச்சரத்துக்குள் வாழ படைப்பாளி விதிக்கப்பட்டிருக்கிறார்.தமிழ் வாழ்வுக்குள் , மரபுக்குள் , பார்வைக்குள் அடங்க மறுக்கிற பல்வகையினத்தின் உறவு,உணர்வு, பழக்க வழக்கம், மனவோட்டம் அனைத்தையும் அவதானிக்கும் இடம் அவருக்கு..பதின்ம வயதிலுள்ள இரு மகன்களைப் பெற்றுள்ள இவர், கல்விச்சாலைப் பணியாற்றாத சூழலில் ”முகப் புத்தகமும் சில அகப் பக்கங்களும்” போன்ற படைப்புகளைத் தர இயலுகிறது.வேறுபட்ட பல்லினச் சமுதாயங்களின் மனப்பக்கத்தை, வேறுபட்ட வயதுகள் நிலையிலும் கைப்பற்ற முடிகிறது எனில் அந்த தனித்துவம் தான் இவர். சிங்கப்பூரை வாசிக்க ஜெயந்தி சங்கரை வாசிக்க வேண்டும்.

அவரவர் சுயானுபவத்திலிருந்து கதைஎழுத்து உருவாகும்.சுயானுபவ மூலத்திலிருந்து உண்டாகும் எழுத்து அசல் தங்கம்: தன் வாழ்வுக்கு அப்பாற்பட்டவையாய் எழுதப்படும் அனைத்தும்” தட்டாசாரி வீட்டுக் குப்பை தான்”. குப்பையைக் கிளறி உமியளவு உலோகம் கிடைத்து விடாதா என்று தேட வேண்டியிருக்கும்.

முதலில் ஒரு கருத்துருவாக்கத்துக்குள் நின்று கொள்கிறார் ஜெயந்திசங்கர். அனுபவங்களை , இருப்பதை அப்படியே எடுத்துக் கொடுத்திடாமல் தனது கருத்துகளோடு பொருத்திக் கொள்கிறார்.

இந்த விடயத்தில் படைப்பாக்கத்தை – தன் கதைகள், தனக்கான கதைகள் என ஒரு வசதிக்காக இரு வகையாகப் பிரித்துக் கொள்ள முடியும். நிலைப்பாடு, நோக்கு , கண்ணோட்டம் ஆகியன ஒரு படைப்பாக்கத்தின் அடிப்படைகள் என்றாலும், தன்குடும்பம்,பாலியல், சாதி, மதம், குழு, கட்சி போன்ற எண்ணிக்கையில்லாத் தன்னிலைகளுக்குள்( suதீழீமீநீtவீஸ்மீs) இயங்குவதால், இதன் ஒருதுளி, அல்லது மொத்தமும் தவிர்க்க இயலாமல் தன் கதைகளில் முகம் காட்டிவிடும். இந்த தன்னிலை கடந்தும் எழுதப் படுகிறவை தனக்கான படைப்புகள். தன்கதைகளில் எல்லாமும் கலவையாய் தென்படும்: தனக்கான கதைகளில் தெளிவான சமூக அக்கறை, சமூக நீதி காட்டப்படும்.

ஓடிப்போனவள் போன்ற கதை தன் கதையல்ல:தனக்கான கதை.

எங்கொ எப்போதோ கேட்டது, பார்த்தது, பார்த்த ஒருமுகம்,கேட்ட உரையாடல் – எல்லாவற்றையும் நினைவுப் பைக்குள் பத்திரப் படுத்திக்கொண்டு, லாவண்யத்துடன் எடுத்துத் தருகிற லாவகம் தனீ வல்லமை.இத்தொகுப்பில் இப்படியேயான அதிகமான கதைகள், அவருடைய சுய வாழ்வுக்கு அப்பாலான, அதேபொழுதில் சுயானுபவமாய்க் கிரகிக்கப் பட்டவை வெற்றி ஈட்டியிருக்கின்கிறன.

மனுஷி-

பெண் ஒருபொருட்டில்லை: அவள் புழு, பூச்சி போன்றதொரு ஜீவராசி என நினைக்கிறான் கனவன்.ஆனால் உடல் தேவைக்கு இரவில் அவள் தேவைப்படுகிறாள். அவளின் இயலாமை காரணமாய் மறுப்பு வெளிப்படுகையில்” அப்ப நான் தேவைக்கெல்லாம் வெளியில போகவா?” எனக் கிறீச்சிடுகிறது கணவன் என்னும் பிராணி. ஆண் தட்டுக்கெட்டு அலைவதற்கெல்லாம் கிழிந்த சொளகை பொல்லம் பொத்துவது போல் பொல்லம் பொத்திக் காத்த காலமில்லை இது; அவளும் அப்படியில்லை.மனுஷி பேசினாள்;

“எனக்கும் இத்தனை வருஷமா நட்பும் கம்பேனியன்ஷிப்பும் தேவையாயிருக்கும் போது, நான் வெளியில் தேடனும்னு நினைக்கலையே. அதைத் தான் சொல்ல வந்தேன்.”

மளமளவென்று தெளிவாகப் பேசினாள் மனுஷி.தான் உபயொகிக்கப் பட்டு வந்ததில் -தனக்குள் இருந்த சுயமரியாதையைக் கொஞ்சம் கொஞ்சமாக வருடக் கணக்கில் கொன்று வந்திருப்பதை உணரத் துவங்கிய அந்த மனுஷி தான் பேசியவள்.

இப்போது இந்தக் கதையில் காட்டப் படுகிற கணவன் போல்,” அந்தப் பெண்ணுக்கு யோசிக்கத் தெரியும் என்ற உண்மையை மட்டும் என்னால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை “ என எண்னுகிற ஆண்களால் நிறைந்துள்ளது தமிழ்ச் சமூகம்.
சிங்கப்பூரைத் தெரிந்து கொள்ள ஜெயந்திசங்கரை வாசிக்க வேண்டும் என்பது மட்டுமல்ல: தமிழ்ச் சமூகத்தின் சித்திரத்தை தெரிந்து கொள்ள,அதில் ஆணின் அசைவுகளை அறிந்து கொள்ள , குடும்ப வாழ்வுக்குள்ளும் அதற்கு வெளியிலும் நிமுண்டும் பெண்ணின் மீறலைக் கிரகிக்க இவரை வாசிக்க வேண்டும் எனக் கருதுகிறேன்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *