நன்றி பிரேமாரேவதி
வ. கீதா
இஸ்ரேலிய அரசும் இராணுவமும் காஸாவை சின்னாப்பின்னமாக்கி வருவதை பார்த்து வேதனையும், துயரமும் அடைந்தும் செயலற்று போயிருக்கும் உலகின் மனசாட்சி நம் ஒவ்வொருவருக்கும் மன அழுத்தத்தை ஏற்படுத்துவதாக உள்ளது. காஸாவின் மக்களோ அச்சத்தால் பீடிக்கப்படுள்ள போதிலும், இழப்புகளை கணக்கிடக்கூட முடியாதவர்களாக ஆக்கப்படடவர்களாக உள்ள நிலையிலும் அத்தனை மாண்புடன் தம்மீது தொடுக்கப்படுள்ள போரை எதிர்கொண்டு வருகின்றனர். வீர ஆவேச பேச்சு இல்லை. புலம்பல் இல்லை. அழுத்தமான கோபம், இது ஒன்றும் எங்களுக்கு புதிதல்ல, எத்தனை முறை இப்படி எங்களை அழிக்கப் பார்த்திருக்கிறீர்கள் என்றரீதியில் சன்னமான ஆனால் வலுவான குரலில் அவர்கள் எழுப்பும் வினா.
மறைந்த பாலஸ்தீனக் கவிஞன் மஹ்மூத் தார்விஷின் 2007 கவிதை வரிகள் சுட்டும் சித்திரமாகதான் காஸா இப்போதும் உள்ளது.
“ஏனெனில் காஸாவில் காலம் பட்சபாதமற்றதல்ல.
மக்களை அமைதியாக சிந்திக்கத் தூண்டுவதல்ல மாறாக கொந்தளிப்பை,
நிஜத்துடன் அவர்கள் முட்டிமோதுவதை தூண்டுவதாகும்.
காஸாவின் காலம் குழந்தைகளை கைப்பிடித்து அழைத்து குழந்தைப்
பருவத்திலிருந்து வயோதிகத்துக்குக் கூட்டிச் செல்வதல்ல.
மாறாக,
அவர்கள் பகைவனை முதன்முதலில் எதிர்கொள்ளும் போது அவர்களை வயது வந்தவர்களாக்கி விடும் காலமாகும்.
காஸாவின் காலம் பொழுது போக்குவதற்கானதல்ல –
எரியும் நடுப்பகலை எதிர்கொள்வதற்கான காலம் அது.
ஏனெனில் காஸாவின் மதிப்பீடுகள் வேறானவை, வேறானவை, வேறானவையே.
தம்மை சூழ்ந்துள்ளவர்களுக்கு எதிராக சூழப்பட்டவர்கள் எந்த அளவுக்கு எதிர்ப்பை காட்டுகின்றனர் என்பதில்தான் அவர்களின் மதிப்பு அடங்கியுள்ளது. அங்குள்ள ஒரே போட்டி இதுதான். இந்த குரூரமான, ஆனால் மாண்பான மதிப்பீடு காஸாவுக்கு நன்கு தெரிந்த, அதற்கு பழக்கமான ஒன்று. புத்தகங்கள், அவசரஅவசரமாக கூட்டப்பட்ட பள்ளிக் கருத்தரங்குகள், ஓலிவாங்கியின் மூலம் முழங்கும் பரப்புரைகள், பாடல்கள் ஆகியவற்றிலிருந்து காஸா இதைக் கற்று கொள்ளவில்லை. அனுபவத்தினூடாக, விளம்பரத்துக்காகவும் காட்சிப் பெருமைக்காகவும் செய்யப்படாத உழைப்பின் மூலமாக காஸா இதைக் கற்றுகொண்டுள்ளது.
காஸாவுக்குத் தொண்டை இல்லை. அதன் தேகத்தின் துளைகள் தான் பேசுகின்றன – வியர்வை, இரத்தம் ஆகியவற்றின் மொழியில். இதனால்தான் பகைவன் அதை வெறுக்கிறான், சாகடிக்க வேண்டும் என்றிருக்கிறான், அதற்கெதிராக குற்றம் புரியும் அளவுக்கு அதை கண்டு அச்சப்படுகிறான்இ அதை கடலில், பாலைவனத்தில், இரத்தத்தில் மூழ்கடித்துவிட முயற்சி செய்கிறான். இதனால்தான் அதன் உறவினர்களும் நண்பர்களும் காஸாவை காதலிக்கின்றனர், செல்லமாக, அசூயையுடன், ஏன் சில நேரங்களில் பயத்துடனும் கூட. ஏனெனில் காஸாதான் எல்லோருக்குமான பாடம், மூர்க்கத்தனமாக கற்பிக்கப்படும் பாடம், நண்பர்களுக்கும் பகைவர்களுக்கும் ஒருங்கே ஒளிரும் ஆதர்சம்.
…
பகைவர்கள் காஸாவை வெற்றிக் கொள்ளலாம் (பொங்கு கடல் ஒரு தீவை வெல்லக்கூடும்…
அதன் மரங்களை அவர்கள் வெட்டி வீழ்த்தக்கூடும்).
அவர்கள் அதன் எலும்புகளை நொறுக்கக்கூடும்.
அதன் குழந்தைகள், பெண்கள் ஆகியோரின் உடல்களுக்குள் அவர்கள் டாங்கிகளை பொருத்தக்கூடும். அதை கடலில்இ மண்ணில், இரத்தத்தில் தூக்கி எறியக்கூடும்.
ஆனால் அது பொய்களைச் திரும்ப திரும்பச் சொல்லி படையெடுத்து வருவோருக்கு இசைவு தராது.
அது தொடர்ந்து வெடித்துக் கொண்டேயிருக்கும்.
அது மரணமுமல்ல, தற்கொலையுமல்ல. தனக்கு வாழத் தகுதியுண்டு என்பதற்கான அறிவிப்பு. அது தொடர்ந்து வெடித்துக் கொண்டேயிருக்கும்.
அது மரணமுமல்ல, தற்கொலையுமல்ல. தனக்கு வாழத் தகுதியுண்டு என்பதற்கான அறிவிப்பு.
காஸாவில் வாழும் பாலஸ்தீன எழுத்தாளர்கள், மருத்துவர்கள், கலைஞர்கள், நிர்வாகிகள் ஆகியோர் இரண்டு நாட்களுக்கு முன் வெளியிட்ட அறிக்கை ஒன்றில் இப்படிக் குறிப்பிட்டிருந்தனர்.
“எங்களுடைய முதன்மையான அக்கறை எங்கள் சமுதாயங்களைச் சேர்ந்த மக்களின் பாதுகாப்பும் சுகாதாரமும் மட்டுமல்ல. அவர்கள் வாழும் வாழ்க்கையின் தரம் குறித்தும் நாங்கள் அக்கறை கொண்டுள்ளளோம். அவர்கள் சுதந்திரமாகவும், எந்தவொரு சட்டவழிமுறையும் பின்பற்றப்படாமல் தாம் சிறையில் அடைக்கப்படலாம் என்ற அச்சமின்றியும், பயன்தரும் வேலை செய்து தங்களுடைய குடும்பங்களை காப்பாற்ற முடியும் என்ற நம்பிக்கையுடனும் வாழ வேண்டும், அவர்களுடைய உறவினர்களை காணவும் மேல்படிப்பு படிக்கவும் தடையின்றி பயணம் மேற்கொள்ளும் வகையில் அவர்கள் வாழ்வு அமைய வேண்டும். இவை அடிப்படையான மனித விருப்பங்கள். ஆனால் பாலஸ்தீனர்களுக்கோ 47 ஆண்டுகளாக இவை வரம்பிடப்பட்டுள்ளன. அதுவும் 2007 முதல் காஸாவாழ் பாலஸ்தீனர்களுக்கு இவை மிக அதிகமாக மறுக்கப்பட்டுள்ளன. சாதாரண மனிதனால் சகித்துக் கொள்ளக்கூடியவற்றின் எல்லைகளை கடந்த நிலையில் நாங்கள் உள்ளோம், சொல்லப் போனால், அந்த எல்லைகளுக்கப்பால் தள்ளப்பட்டுள்ளோம்.
மரணவாழ்க்கை
ஊடகங்களும், அனைத்து தரப்பு அரசியல்வாதிகளும் ஹமாஸ் அமைப்புதான் காஸாவின் குடிமக்களை ஊரை விட்டுப் போக விடாது பிடித்து நிறுத்தி வைத்துள்ளது, அவர்களை மனித கவசங்களாகப் பயன்படுத்தி வருகிறது என்று குற்றம் சாட்டியுள்ளனர். ஆனால் இது உண்மையல்ல. அனைத்து தற்காலிக பாதுகாப்பு தலங்களும் முகாம்களும் நிரம்பி வழிகின்றன. இஸ்ரேலிய இராணுவேமா கண்மண் தெரியாமல் குண்டுகளை பொழிந்து கொண்டிருக்கிறது. உண்மையில் காஸாவில் பாதுகாப்பான இடம் என்று ஏதுமில்லை.
காஸாவில் வசிக்கும் யாரையும் கலந்தாலோசிக்காமல் இஸ்ரேலும் எகிப்தும் போர் நிறுத்த அறிவிப்பை ஹமாஸ் ஏற்க வேண்டும் என்று கூறியதை அந்த அமைப்பு ஏற்கவில்லை – காஸாவின் பெரும்பான்மை மக்களின் விருப்பமும் இதுவாகத்தன் இருந்தது. ஏற்கனவே உள்ள நிலைமைக்கு திரும்பச் செல்வதை ஏற்க முடியாது என்ற பெரும்பான்மை மக்களின் கருத்தை நாங்களும் உறுதி செய்கிறோம்.
ஏற்கனவே உள்ள நிலைமை இதுது£ன் – யார் காஸாவை விட்டு வெளியே செல்லலாம் யார் செல்லக்கூடாது என்பதை இஸ்ரேல்தான் தீர்மானித்து வருகிறது. என்ன மாதிரியான உணவுப் பொருட்களும் பிற அத்தியாவசியப் பொருட்களும் ஊருக்குள் வரலாம் (கட்டுமானப் பொருட்கள் கொண்டு வரப்படுவதை இஸ்ரேல் அனுமதிப்பதில்லை) என்பதையும் அதுதான் நிர்ணயம் செய்கிறது. அது போல காஸாவிலிருந்து எந்த பொருளும் ஏற்றுமதிச் செய்யப்படுவதை அது தடுக்கிறுதுஇ இதனால் காஸாவின் பொருளாதாரம் சுருங்கி ஒன்றுமில்லாமல் போஹயள்ளது. ஒட்டுமொத்த அரபு நாடுகளையும் எடுத்துக் கொண்டால் காஸாவில்தான் மேலதிகமான வறுமையும் வேலையின்மையும் நிலவுகிறது.
மேற்கண்ட நிலைமைக்குத் திரும்பச் செல்லுதல் என்பது மரண வாழ்க்கைக்குத் திரும்புவதாகும்.”
உலக ஊடகங்கள் காஸாவில் நடைபெற்று வரும் போரின் பாதிப்புகளை குறித்து செய்திகளை வெளியிடுகையில் அம்மக்களின் கையறு நிலையை பற்றி பக்கம்பக்கமாக எழுதுகின்றன. குறிப்பாக பெண்கள், குழந்தைகள் கொல்லப்படுவதை சுட்டிக்காட்டி காஸாவில் நடைபெறும் போர் முடிவுக்குக் கொண்டுவரப்பட வேண்டம் என்று கூறி வருகின்றன. அமைதி அவசியம்தான் ஆனால் அது நீதியற்ற, நீதிக்கு வழி செய்யாத அமைதியாக இருக்கக்கூடாது என்று பாலஸ்தீனர்களும் அவர்களது ஆதரவாளர்களும் பதிலுரைத்து வருகின்றனர். பாலஸ்தீனப் பெண்ணியவாதிகள் “பெண்களுக்கும் குழந்தைகளுக்கும்” பாதிப்பு என்று மேற்கத்திய ஊடகங்கள் கூறி வரும் கருத்துக்கு பின்னால் ஒளிந்து கொண்டிருக்கும் அரசியலை விமர்சனம் செய்துள்ளனர். பெண்களும் குழந்தைகளும் செத்தால் அது போரின் கோர விளைவு, பாலஸ்தீன ஆண்கள், ஏன் இளைஞர்கள், விடலையர்கள் செத்தாலோ அத விபரீதமல்ல. காரணம், அவர்கள் பாவப்பட்ட மக்களல்ல, மாறாக அவர்கள் தீவிரவாதிகள், இஸ்ரேலைக் அழித்தொழிக்க திட்டமிடும் எதிரிகள் – இவ்வாறு, ஆண்களை அரசியல் வெறியர்களாகவும் பெண்களை பாவப்பட்ட ஜென்மங்களாகவும் சித்தரித்து, பாலஸ்தீனியர்கள் முன்வைக்கும் அரசியல் நியாயத்தை அங்கீகரிக்க மறுத்து செயல்படும் அரசியலின் நுணுக்கங்களை இப்பெண்கள் கோடிட்டுக் காட்டியுள்ளனர். ‘பெண்களுக்கு பாதிப்பு’ ஏற்படக்கூடாது என்பதற்ககாகதான் நாங்கள் போர் புரிகிறோம் என்று கொஞ்சம் கூட வெட்கமில்லாமல் பொய்க்கூறி தனது ஆப்கானிஸ்தான் போரை அமெரிக்கா நியாயப்படுத்தியதுடன் இத ஒப்பிட்டு, அதே நியாயமும் சொல்லாடல்களும் தற்சமயம் காஸாவில் நடக்கும் விஷயங்களுக்கு பொருத்தப்பாடுடைய வகையில் திரித்து கூறப்பட்டு வருவதையும் இவர்கள் விமர்சித்துள்ளனர்.
காஸாவில் துயரத்துக்கிடையே விவேகமான, மாண்பான அறநிலைப்பாட்டை எடுக்கக்கூடியவர்கள் இருக்க, இஸ்ரேலிலுள்ள ஏறக்குறைய எல்லா அரசியல் அமைப்புகளும், பல இடதுசாரி அமைப்புகள் உட்பட, இஸ்ரேலின் தாக்குதலுக்கு ஆதரவு தெரிவித்து வருகின்றன. ஹமாஸ் தொடுத்த ஏவுகணைத்தாக்குதலால் தான் இஸ்ரேல் போர் தொடுக்க வேண்டியிருந்தது, அதன் இருப்புக்கு அபாயம் விளைவிக்கக் கூடிய செயலை அதனால் எப்படிப் பொறுத்துக் கொண்டிருக்க முடியும் என்று நிரூபிக்கப்படாத நிகழ்வைக் காரணம் காட்டி இவை போரை நியாயப்படுத்தி வருகின்றன. அதாவது ‘இஸ்ரேலின் இருப்புக்கு ஆபத்து’ என்ற வாதம் பிற நேரங்களில் நிலையிழக்காமல் செயல்படக்கூடிய அரசியல் அமைப்புகளைக் கூட நிலைத் தடுமாற செய்துள்ளதையே இது சுட்டிக் காட்டுகிறது.
ஒரு சில தீவிர இடதுசாரி அமைப்புகள் மட்டும் தொடர்ந்து இஸ்ரேலின் நடவடிக்கையை வன்மையாக கண்டித்து வருகின்றன. இவற்றில் பெரும்பாலானவை இஸ்ரேலில் சிறுபான்மையினராகக் கருதப்படும் குறிப்பிட்ட யூத சமுதாயங்களைச் சேர்ந்தவர்களினால் தோற்றுவிக்கப்பட்ட அமைப்புகள். 1940களிலும் 1950களிலும் இஸ்ரேல் பாலஸ்தீனர்களை அவர்களின் மண்ணிலிருந்த தூக்கி எறிந்ததற்கு பதிலடி கொடுக்கும் முகமாக பல அரபு நாடுகளின் அரசுகள் (ஆப்பிரிக்க கண்டத்திலுள்ள டுனீசியா, மொராக்கோ, லிபியா, எகிப்து போன்ற நாடுகளிள் அரசுகள் உட்பட) அவர்கள் மண்ணில் காலங்ககாலமாக வாழ்ந்து வந்த யூதர்களை வெளியேற்றின. இவ்வாறு வெளியேற்றம் செய்யப்பட்டவர்களில் பலர் இஸ்ரேலுக்கு குடிபெயர்ந்தனர். சிலர் ஐரோப்பாவுக்கு சென்றனர். அரபு-யூதர்கள் என்று அழைக்கப்படும் இவர்கள் ‘மிஸ்ராஹி’ யூதர்கள் என்றும் அறியப்படுகின்றனர். ஐரோப்பாவிலிருந்து குடிப் பெயர்ந்த யூதர்களுக்கும் இவர்களுக்கும் நிறைய வேறுபாடுகள் உள்ளன – குறிப்பாக, மொழி, பழக்கவழக்கங்கள், அவர்கள் பின்பற்றக்கூடிய சடங்குகள் ஆகியவற்றில் வேறுபாடுகள் உள்ளன. தற்காலத்தில் இந்த இரு யூதப் பிரிவினருக்குமிடையே கொடுக்கல் வாங்கல் உறவுகளும் மணவுறவுகளும் ஏற்பட்டுள்ள போதிலும் மிஸ்ராஹிகள் தாங்கள் இரண்டாம் நிலை குடிமக்களாக நடத்தப்படுவதாகவும் இன அடிப்படையில் ஒதுக்கப்படுவதாகவும் கூறி வருகின்றனர். இவர்கள் மத்தியிலிருந்து எழும்பியுள்ள இடதுசாரிக் குழுக்கள்தான் காஸாவில் இஸ்ரேல் தொடுத்துள்ள கொடூரத்தை கண்டனம் செய்துவருகின்றனஇ அதற்காக யூத வலதுசாரிகளின் தாக்குதலுக்கும் ஆளாகியுள்ளன.
ஜூலை 2 அன்று,அதாவது காஸாவில் இஸ்ரேல் குண்டு பொழிய ஆரம்பித்ததற்கு முன்பாக, பாலஸ்தீன இளைஞன் முகமத் அபு கெதிர் என்பவர் யூத வெறியர்களால் அவமானப்படுத்தப்பட்டு மிகக் குரூரமாக கொல்லப்பட்ட போது பல இடதுசாரி அமைப்புகள் (இன்று காஸாவில் நடக்கும் தாக்குதலை ஆதிரிக்கும் அமைப்புகள் உட்பட) அந்த செயலைக் கண்டித்தன. மிஸ்ராஹிகள் அதிக எண்ணிக்கையில் அங்கம் வகிக்கும் மேற்சொன்ன அமைப்பின் கண்டன அறிக்கையில் இடம்பெற்ற வரிககளை மெழிப் பெயர்த்து தந்துள்ளோம். இஸ்ரேலிய மக்களின் மனசாட்சி முழுமையாக செத்துப் போகவில்லை என்பதற்கு இந்த வாசகங்கள்தான் சாட்சி.
“நமது கரங்கள் இரத்தம் சிந்தியவை, எனவே, நினைத்துக்கூடப் பார்க்க முடியாத இழப்பை சந்தித்துள்ள முகமத் அபு கெதிரின் குடும்பத்தாருக்கும் பாலஸ்தீன மக்களுக்கும் ‘நாங்களும் உங்களுடன் சேர்ந்து துக்கப்படுகிறோம், வேதனைபடுகிறோம்’ என்பதை தெரிவித்துக் கொள்ள விரும்புகிறோம். இந்த அரசின் ஆக்கிரமிப்புக் கொள்கையை நாங்கள் எதிர்க்கிறோம். இஸ்ரேலிய சமுதாயத்தில் காணப்படும் வன்மம், இனவெறி, வன்முறைக்கும் தூண்டும் காழ்ப்புணர்வு என்பன போன்றவற்றையும் நாங்கள் எதிர்க்கிறோம். எங்களுடைய யூதத் தன்மையை இத்தகைய கொள்கைகளுடன் அடையாளப்படுத்திக் கொள்ளவும் நாங்கக் மறுக்கிறோம். – எங்களுடைய யூத மனநிலை திரிபோலி, அலெப்போ நகரங்களில் வாழ்ந்த சான்றோரான ஹெஸிகையா ஷப்தாய் அவர்களின் இந்த சொற்களில் சுட்டப்படும் மனநிலையன்றி வேறல்ல- “உன்மீது அன்பு செலுத்துவதை போல அன் அயலான் மீதும் அன்புக்காட்டு” (லெவிடிகஸ் 19.18). இந்த வாசகத்தில் குறிப்பிடப்பட்டுள்ள அன்பானது ஒரு யுதனோ ஒரு இஸ்ரேலியோ மற்ளொரு யூதனிடத்தும் மற்றொரு இஸ்ரேலியிடத்தும் ஒருவர் காட்ட வேண்டிய அன்பை குறிப்பது மட்டுமல்ல – யூதர்கள் அல்லாத நமது அயலவர்களை நேசிப்பதையும் இது குறிக்கிறது. அவர்களிடம் அன்பு செலுத்தி உடன் வாழ வேண்டும் என்றும் அவர்களுடைய சேமநலங்களை கருத்தில் கொண்டு செயல்பட வேண்டும் என்றும் இந்த வாசகம் நமக்குக் கட்டளையிடுகிறது. நமது பொது புத்தி மட்டுமின்றி நமது புனித நூலான டோராவும் இதைதான் கூறுகிறது. நமது அரசின் செயல்கள் எவ்வாறாக உள்ள போதிலும், நமது அதிகாரபூர்வமான பிரதிநிதிகள் என்ன கூறினாலும், நல்ல வழிமுறைகளை எடுத்துரைக்கும் நமது புனித நூல் சுட்டும் வழியில் ஒழுகுவதுதான் சரி என்று அந்த நூலே நமக்கு கட்டளையிட்டுள்ளது.”
மிக மோசமான வன்மத்தை ஏவி விட்டு அதற்கு பொருந்தாத, பொய்யான நியாயத்தை இஸ்ரேல் கற்பித்து வரும் இவ்வேளையில் இந்த வரிகளை அந்நாட்டு குடிமக்கள் எழுதுவதும் கூட இன்று தேச துரோகமாகக் கருதப்படலாம்