சுகிர்தராணியின்; நினைவுகளாலும், நிகழ்வுகளாலும் உணர்வுபூர்வமாகவும் எழுதப்பட்ட கவிதைகளால் பூரணம் பெற்றிருக்கிறது தீண்டப்படாத முத்தம் தன்னைப் பாதித்த, தனது நினைவுகளில் அழியாச் சுவடுகளாகத் தேங்கியிருக்கும் கணங்களில் பலவற்றைக் கவிதைகளாக்கியிருக்கிறார் இத் தொகுப்பிலுள்ள கவிதைகளனைத்துமே நேரடியாக அக்கணங்களுக்குள் நம்மை இழுத்துச் செல்பவை. அந்தக் கணங்களில் கவிஞர் உணர்ந்தவற்றை நாமும் உணரச் செய்பவை. காதல்,காமம்,பெண்கள் தம் சுயத்தில் வாழ்தல் பற்றிய முக்கியத்துவத்தையும் சுட்டிக்காட்டுகிறார்.
தனக்கேயுரித்தான பெண் மொழியில் இவரது கவிதைகள் வெளிப்பட்டிருக்கின்றன. தீண்டப்படாத முத்தம் பெண்கள் அனுபவிக்கும் துயரங்களைச் சொல்கிறது. காலங்காலமாக அதிகாரமிக்கவர்கள் காட்டும் வழியில் பெண் பயணிக்க வேண்டியவளாகிறாள். அவ் வழியில் ஏற்படும் இடர்களை அவள் பொறுத்துக்கொள்ள வேண்டும். அவளாக வேறு வழி தேடிக் கொள்வாளாயின் சமூகத்தை இழிவுபடுத்துபவளென பல வேறு பெயர்களால் முத்திரை குத்தப்பட்டு விடுகிறாள் .தீண்டப்படாத முத்தம் அதற்கு சாட்சியாக நிற்கின்றது.
சுகிர்தராணியின் சொற்செழுமையும் அவரது நினைவுகளையும் உணர்வுகளையும் வாசிப்பவர்களும் தெளிவாக உணரும்படி கையாளப்பட்டிருக்கின்றன. சமுதாயத்தின் பல்வேறுபட்ட விம்பங்களைப் பற்றி இத் தொகுப்பிலுள்ள தன் கவிதைகளில் அழகாக வெளிப்படுத்தியிருக்கிறார்
ஆண்களின் உலகில் பெண்களின் நடவடிக்கைகள் எல்லாம் கூட ஆண்களாலேயே தீர்மானிக்கப் படுகின்றன. அவளது சுயம் தகர்த்து அதில் தன் ஆளுமையை விருத்தி செய்ய முயற்சிக்கின்ற ஆண்களுக்கு இக்கவிதை; தொகுதி ஓரு சாட்டையடி.
ஒரு துளி இசையும் ஒரு பாம்புசட்டையும்
அவள்
அந்த இசைக்கருவியை
இரு கைகளாலும் பற்றியிருக்கிறாள்
முலைமுதிரா இளம்பெண்ணின்
செழிப்பான கனவைப் போல
பருத்திக்கும் நீண்ட மூங்கிலது
உடலின் துளை களைப் பதுக்கிக்கொண்டு
ஓர் உயிர்பிரியும் இசையை
வழியவிடக் காத்திருக்கிறது
காமப்பழத்தின் விதைகளையும்
கொண்டாடாட்டத்தின் தானியங்களையும்
வலியூறிய இறகுகளையும்
தன்னுள் தளும்பியபடி சரிந்திருக்கின்றது
விரகம் மீதூறும்
மெல்லி முத்தத்தைச் சுவைப்பது போல
உதடுகுவித்து அவளதை இசைக்கிறாள்
காமத்திலும் காயத்திலும் புரண்ட இசை
கோடையின் சுழலாய் மேலும்புகிறது
அவள் இசைக்க இசைக்க
உடலெங்கும் தாழைக்காட்டின் வாசனை
உயிர் எப்போதோ உருகியிருந்தது
அவள் வாசித்து முடிந்ததும்
அவ்வறையில் எஞ்சியிருந்தன
ஒருதுளி இசையும் ஒரு பாம்புச்சட்டையும்