பிரியாந்தி
ஊற்றுக்குத் திரும்பமுடியாத நதி – நீ
உப்பு நாட்களின் இரகசியத் துயரம் – நான்
நின் நதியெங்கும் துக்கித்த என் கண்கள்
உன் கரையெங்கும் உருகிய என் மௌனம்
இருந்தும்
என் பயண வழிநெடுகச் சொல்வதற்கோ
கதைகளேதுமில்லை உன்னிடம்
அன்பே
வழிதவறியவை உனது நாவாய்கள்
நிறையிருட்டில் சுடர்வதோ
துரோகம் ஜ்வாலிக்கும் அந்த
ஒற்றை நட்சத்திரம்
ஆகச்சிறந்த பிரிவொன்றின் சாம்பரை
அள்ளியெறிகிறது காலம்
அன்பு
ஒரு தந்திரம்
வாழ்க்கை
ஒரு வனாந்திரம்
காலங்களிற்கு வெளியே ஆடும் ஊஞ்சலில்
அமர்ந்திருக்கின்றேன் நான்.
( துரோகத்தைப் புரிதலென்பது மகத்தான ஒரு கலை )
2014 கானல் நாள்