யாழினி யோகேஸ்வரன்(இலங்கை)
தவக்கால ஆரம்பம் இன்று
தனிமைப்படுத்தப்படுகிறது- தாய்நிலம்
உண்டி பசித்து
உடல் மெலிந்து
உணவுக்காய் போராடும்
தவக்காலம் இது
கண்கள் இருட்டி
விழிநீர் சொரிந்து
பார்வை அற்று
உறக்கம் தொலைத்த
தவக்காலம் இது
தேகச் சதைகள் வற்றிய போதும்
தோல் சுருங்கி ஒடுங்கிய போதும்
உணர்வை மட்டும் மேலீடாய் கொண்டு
தவித்திருக்கும்
தவக்காலம் இது
உடல் பைகள் அத்தனையிலும்
ஈரமில்லைஇஒரு சொட்டு
இரத்தமுமில்லை
வெறுவிலியாய் கையேந்தி
இரந்து கேட்கும்
தவக்காலம் இது
அறையப்பட்ட கன்னங்களோடும்
அழுந்தப் பதிந்த கரங்களோடும்
வலி சுமந்து
வலுவிழந்து
தவறி மீண்டு வர முடியா
தவக்காலம் இது
தவக்கால முடிவிதுவாய்……
முடியப்பட்ட இமுடிக்கப்பட்ட
முடிவிது.
வல்லூறுகள் மென்று ஏப்பமிட்ட
ஊனெல்லாம் ஒருசேர
மண்ணோடே மக்கிப் போக
ஆத்மா மட்டும் அந்தரத்தில்
அடிமையில்லா வாழ்வோடு………
தவக்காலம்
இங்கே,
இப்போது,
ஆத்மாவுக்கு மட்டுமானதாய்
முழுமைப்படுத்தப்படுகின்றது.