யோகா கௌமி)-(பிரம்மராட்சசி-நன்றி- தனிமம்.)
நீண்ட நாட்களின் பின் பள்ளித்தோழி ஒருத்தி தொடர்பை ஏற்படுத்தியிருந்தாள். பரஸ்பரம் பரிமாறிக்கொண்ட பழைய அன்பு குறைந்து போய் “நீங்கள்“ என்ற பன்மை எங்கள் நட்புக்கான இடைவெளியை அதிகரித்திருந்தது. பெண்களின் நட்பு என்பது கண்ணீர் போல. காணும்போது உணர்ச்சி வெளிப்பாடாய்க் கொந்தளித்துக்கொள்ளும். பின்பு வழமைக்குத் திரும்பி இயல்பு நிலைக்கு வந்துவிடும்.
நீங்கள் எப்பிடி இருக்கிறீங்க என்றதில ஆரம்பிச்சு நீ என்ற ஒருமைக்கு வரும்போது விடைபெறும் நேரமும் வந்துவிடும். தொலைபேசி இலக்கங்கள் சேமித்து வைப்பதற்கு மட்டுமே. இனி அவள் வெளிநாட்டுப் பிரஜாவுரிமைக்குரியவள் என்பதையும் குடும்பத் தலைவி ஆகப்போவதையும் சட்டென்று நினைவுபடுத்தி ஜோடியாய் ஒரு புகைப்படமும் அனுப்பிவைத்தாள். நான் சிரித்துக் கொண்டே சுவரோரம் ஒரு பல்லியாய் ஒட்டிக்கொண்ட வெறுமை நிறைந்த ஒரு புகைப்படத்தை அனுப்பி வைத்து மேலதிகமாய் நான் இன்னும் படித்துக்கொண்டுதான் இருப்பதையும் சொல்லிவைத்தேன்.
சேமித்துக்கொண்டேன் அவள் இலக்கங்களையும். இப்படித்தான் தொலைந்த பல நண்பிகளின் இலக்கங்கள் காலப்போக்கில் பாவனையற்றுப் போய்விடும் என்று நினைத்துக்கொண்டே.
இன்றிருக்கும் நண்பிகளும் நாளை என்னை ”நீங்கள்” என்றழைக்கும் நேரம் தொலைவில் இல்லை என்று நினைத்துக்கொண்டேன். ஏனென்றால் நான் பெண்.