“பெண்”வழிபாடு

இறை. ச. இராசேந்திரன்
09.04.2014

 கடந்த 09..3.14 ஞாயிற்றுக்கிழமை பம்பாய்த் தமிழ்ச்சங்கத்தில் நடந்த மாணவர் மன்ற நிகழ்ச்சி நிறையுற்று சிற்றுண்டி சாப்பிட்டுக் கொண்டு நானும் மும்பைத் திராவிடர் கழகத் தலைவர் பெ. கணேசனும் பேசிக் கொண்டிருந்தபோது உடன் பிறந்தாள் புதியமாதவி அவர்கள் என்னிடம் ஒரு புத்தகத்தைக் கொடுத்து ‘‘இது புதுசா வெளிவந்துருக்கும் என்னோட புத்தகம். இதைப் படித்து எனக்கு கருத்தினைச் சொல்லுங்கள்.’’ என்று தந்தார்கள் அதுவரைக்கும் வெட்டவெளியில் ஊத்தாம்பெட்டியாய் பறந்து திரிந்த எனது மனம் நீராய் இறுகி கனக்க ஆரம்பித்தது. ஒரு படைப்பைப் படித்துவிட்டு கருத்துச் சொல்வது சிக்கலான ஒன்று. அதை சரியாக எத்தனை விழுக்காடு உள்வாங்கி உணர்ந்து கொண்டோம் என்பதை பொறுத்தும் ஒருவரின் பட்டறிவைப் பொறுத்துமே அமைகிறது.

இருபதைந்து ஆண்டுகளுக்கு முன்னால் ‘ஒரு புளியமரத்தின் கதை’ படித்த பாதிப்பில் சுந்தரராமசாமி அவர்களை சென்று பார்த்தேன். அவர்களிடம் ஆறாவயல் பெரியய்யா எழுதிய ‘நடுகை’ கவிதை நூலினைக் கொடுத்தேன். அந்த நூலை சற்றுப் புறட்டிப் பார்த்து விட்டு ‘‘இவர் சிறந்த கவிதை நூல்களை வாசித்திருக்கிறார்’’ என்று சொன்னார்கள். புதியமாதவியின் ‘பெண்வழிபாடு’ சிறுகதைத் தொகுப்பை வாசித்தவுடன் எனக்கும் அதே சொற்கள் தான் மனதில்ஓடியது. புதியமாதவி நிறைய வாசிக்கிறார்கள் என்று தெரிந்து கொண்டேன். ஒரு எழுத்தாளருக்கு தொடர் வாசிப்பே உயிரோட்டமான தழைச்சத்து.

பெண்வழிபாடு என்ற புத்தகத்தின் உள்ளே சென்று கருத்துச் சொல்லுமுன் அந்த நூலின் அட்டைப்படத்தைத் தந்த படைப்பாளி வாசுகி அவர்களை வெகுவாகப் பாராட்ட வேண்டும் என்று தோன்றுகிறது. பேரண்டம் வெடித்து நெருப்பாய் சிதறி நீராய் குளிர்ந்து உயிரினங்களாய் மிளிர்வது வரைக்கும் பெண்ணே என்பது ஒரு படிமம். பெண் தன்விடுதலைக்காக உருவாக்கிய ஆயுதங்களை எல்லாம் மதங்கள் தங்கள் வழிபாட்டு சின்னங்களாய் முடைமாற்ற செய்யும் படிமமாய்.. இன்னும் பலப்பலப் படிமங்கள். அது என்ன அல்குல்லா அல்லது ஆணாதிக்கத்தைஅறுத்தெறியும் அக்கராயுதமா? அல்லது இன்னும் வேண்டும், வேண்டும் என்று இனபெருக்க பசிக்காக திக்கெல்லாம் அலையும் அக்டோபஸ்சா? அல்லது இந்த சமுக தழையில் இருந்தும் வேதனையில் இருந்தும் தவளையாய் துள்ளிக் குதித்தோடி யோனியை துறக்க நினைக்கும் ஒரு பெண்ணின் நிலையா???? நான் கடந்த ஒரு கிழமையாக இரவு படுக்கப் போகும்முன்பு அந்த ஓவியத்தைப் பார்த்து என்னென்ன பொருளை எந்தெந்த வண்ணத்தில் குழைத்து ஒழித்துவைத்திருக் கிறார்கள் என்று பார்த்து உள்வாங்கிய பின்னே படுக்கிறேன். அரைத் தூக்கத்திலும் அந்த ஓவியத்தின் வண்ணக்கரைசல் என் மனக்குகையில் புகுந்து அங்கு தொங்கிக் கொண்டிருக்கும்
வவ்வால்களை துரத்திக் கொண்டிருக்கின்றன.

‘பெண்வழிபாடு’ சிறுகதைத் தொகுப்பில் மிக நேர்த்தியாய்   இயல்பாய்  அமைந்த சிறுகதை என்று ‘பாட்டி என்ன சொல்லிவிட்டாள்’ கதையைச் சொல்லலாம். ஆயிரம் ஆயிரம் புடவியின் கொள்ளளவு கொண்டது மனம். அதனுள் என்ன என்ன கமுக்கம், கசடு ஒழிந்திருக்கிறது என்பதும் படிந்திருக்கிறது என்பதும் பிறர் அறிய வாளிணிப்பே இல்லை. குமுக கட்டுமானம் அந்த அளவிற்கு மாந்தர்களை ஒழுக்கம் என்னும் தனிமைக் கல்லறைக்க ள்  வைத்து அதற்குமேல் பண்பாடு என்னும் பசுமைப் புரட்சியை செய்துவருகிறது. பாட்டியின் மன பாதாளத்தில் மூச்சுத்திணறி,  மூச்சுத்திணறிமுட்டித் தவித்த அந்த சொற்றொடர் காவல் தளர்ந்த பின் தப்பித்து வந்த சிறையாளி. கோடான கோடி மனங்களில் இதைப்போன்ற வார்த்தைகள் உதடு தாண்டாமல் ஒடுக்கப்பட்டுக் கிடக்கின்றன. உள் மன உச்சரிப்பிலேயே வாழ்ந்து மடிந்த வார்த்தைகள்  எத்தனை? எத்தனை? கடல் அலைகளைப்போல் அவை மீண்டும், மீண்டும் பிறந்துகொண்டே இருக்கின்றன.

ஒவ்வொரு பருவத்திலும் பெண்க்கு ஏற்படும் பாலியல் தொல்லை குறித்த கதை ‘பெண்வழிபாடு’ எந்தெந்த தளத்திற்கு பெண் போனாலும் அந்தந்த தளத்தில் அந்த தளம்குறித்த நுணுக்கத்தோடு பெண் பாலியல் சுரண்டலுக்கு ஆளாகிறாள் . களை பறிப்பவளானாலும் சரி, கணிப்பொறியாளர் ஆனாலும் , அடுப்படியில் வேகிறவளானாலும் சரி, ஆளுனரானாலு சரி உரசலையும் இடித்தலையும் கண்டு கொள்ளாமல் இருந்தால் சம்பள உயர்வு பதவி உயர்வு. இல்லை என்றால் திமிர்பிடித்தவள்  என்று ஒதுக்கப்படுகிறாள் 

கிராமங்களில் அறுப்படிப்பு வேலையும் பெண்களுக்கு நேர்ந்த பாலியல் சுரண்டல் இப்பொழுது படித்தப் பெண்களுக்கும் நேர்கிறது. கதிர்கட்டைத் தூக்கி விட்டுவிட்டு கண்ணை மறைக்கும் கதிரை விலக்குவதாய்   பெண்ணின் மார்பைத் தொட்ட ஆண்களை அறிந்திருக்கிறேன். ‘‘மேடம் நீங்க வேலைக்கு வந்த பெறகுதான் நம்ம கம்பனி நல்லா மேல வந்திருக்கு. அதனால இந்த தீபாவளிக்கு உங்களுக்குதான் முதல் போனஸ் முதல் மிட்டாய் ’’ என்று இனிப்பை வாயில் ஊட்டி ஒரு சின்னப் பெண்ணின் இதழின் மென்மையையும், கன்னத்தின் மென்மையையும் மனதிற்குள்  பெருக்கி கள் குடித்த குரங்காய்  பல்லிளித்த குட்டி முதலாளியையும் அறிந்திருக்கிறேன்.முழங்காலிட்டு ஜெபம் செய் யும் பெண்ணிடம் ‘‘ஆண்டவரே இந்த மகளுக்காய் மனமிரங்கும் உமது பரிசுத்த கரங்களால் தொடும்’’ என்று சொல்லும் பொழுது அவளில் தலையில் கைவைத்து முகத்தை தன் அங்கிக்கு அருகில் கொண்டுவந்த ஓநாய் களை அறிந்திருக்கிறேன். எப்பொழுதும் நீர் பள்ளத்தை நோக்கியே ஓடுகிறது. அதற்கு கங்கையும் கூவமும் நெறிவிலக்கல்ல.
.

…அப்படியே கைகளை முன்பக்கம் நகர்த்துவதும் யாரும் பார்க்காத போது விரல்களால் கிள்ளுவதும் …. அத்தானின் கைகள்  துப்பட்டாவை விலக்கி அவள் கழுத்துப் பகுதியை தடவி கீழிறங்கியது… போன்ற செயல்களைவிடவும் ‘‘இன்னைக்கி பூரா வசூல் பண்ணிவிட்டேன்’’ என்னும் வார்த்தைகள்  ஆண்களின் வெகு நுட்பமான வலைப்பின்னல்ள் .இதைப்போன்ற வலைப்பின்னலிலம் பொறிகளிலும் மாட்டிக்கொள்ளும் பெண்கள் ஏராளம் துள்ளுக்கட்டையிலும் தூண்டியலிலும் வலையிலும் மாட்டிக்கொள்ளாமல் குளத்தைக் கலக்கும் விலாங்குகள் நீர்குமிழுக்குள் சிக்கிக் கொள்ளும் மாயம் 

ஆனால் முடிவு சரியா? பத்திரிகையும். தொலைக்காட்சியும் அவர்களை தவறி விழுந்தவர்கள்என்று எப்படிச் சொல்லும்? நோயில் செத்தாலே நூறு கதை கட்டும் சமூகம் இதை எப்படி விபத்தென்று எப்படி சொல்லும்? ஒரு நாளுக்கு கூட ஒரு நாள் ஒரு ஆμம் பெண்μம் பேசினலே ‘‘புருசன் வேலைக்குப் போனவுடனே இந்தக் கூத்துதான் நடக்குது கொஞ்ச நாளா…’’ என போகிற போக்கில் ஒருத்தியை நடத்தைக் கெட்டவளா பழிக்கிற இந்த குமுகத்தில் இதை விபத்தென்று எப்படிச் சொல்வார்கள்  முடிவு சரியானதே; ஆனால் கடைசி 5 வரிகளை மட்டும் வேறுமாதிரி சிந்தித்திருந்தால் இந்தக் கதையும் ஒரு நல்ல சிறுகதையாக அமைந்திருக்கும்.

அடுத்த நல்ல கதை ‘எஸ்தரும் கருப்பண்ண சாமியும்’ காமம் என்னும் பூங்காற்று மனதின் வெளியெங்கும் சூடேற்றி உடலை கண்திறக்கா எரிமலையாய்  கட்டவிழா பெரும்புயலாய்  குமுறச்செய்யும், திரளச்செய்யும். இரு மனங்களின் காதலை சேரவிடாத அளவிற்கு குமுகம் வெட்டி வைத்திருக்கும் அகழிகள்  கொஞ்சநஞ்சமல்ல. நரம்பில் பட்ட அடி வர்மமாய்  மாறி உடலைக் குன்றச் செய்யும். காதல் காமமாய்  முற்றி மனதில் முட்டி உயிரில் ஏற்பட்ட வர்மம். அதற்கான மருந்தும் மருத்துவமு கிடைக்காதவரை அது தீரா நோய்தான். இருவருக்கும் நடுவில் மதங்கள்  நெருப்பு
ஆறாய்  நஞ்சுக்கடலாய்  விரிந்துக் கிடக்கிறது. காதலில் ஓரறிவி பருவமது. தவ்வவும், பறக்கவும்
அறியா நிலை.

காலநிலை மறந்து கருப்பண்ண சாமி மணியோசை பேரண்டம் முற்றும் ஊடுருவி ஒலித்துக்கொண்டே இருக்கும். கன்னி மாதா கைக்குழந்தையோடு தனித்தே நிற்பாள்   காலம் இறந்த பின்னும்இந்தக் காய்ச்சல் விடுவதில்லை. உளவியல் தடம் கொண்ட கதை. மதங்களின் மர்ம தளத்தில் வைத்த கண்ணி வெடி இச்சிறுகதை.

இந்தத் தொகுப்பில் மற்ற ஒன்பது கதைகளும் சாதாரண கதைகைகளாகவே படுகிறது.புதியமாதவி நீங்கள் புதிய புதிய யுத்தியை கையாளுவதை பாராட்டுகிறேன். அதற்காக ஏன் இந்த ஆர்ய மாயைக்குள் சிக்கித் திக்கிழந்து தவிக்கிறீர்களோ? எவ்வளவு தெளியோடு உளவியல் சிக்கலை நாடிபிடித்து நோயுணர்ந்த நீங்கள்  ஏன் இந்த ஆர்ய சடலத்தை ஆய்வு செய்யவேண்டும்? மகாபாரதமும், இராமாயணமும் நமது தொன்மங்களோ, காப்பியங்களோ இல்லை. அதை எடுத்தாள்வதோ பெண்விடுதலைக்கு அங்கிருந்து எந்த மருந்தையும் புடம்போட்டு எடுத்துவிடவோ முடியாது. ஏனென்றால் அவ்விரு தொல்மங்களும் மானுடவியலின் கல்லறைத் தோட்டங்கள் . அங்கே போய்  எந்தப் பெண் விடுதலை மகவுக்கும் தாலாட்டுப் பாடிவிட முடியாது. இன்றைய திரைப்படங்களில், இலக்கியங்களில் என்று எதை எடுத்துக்கொண்டாலும் தமிழை இழிவு படுத்துவதும், பழந்தமிழ் இலக்கியங்களை எடுத்தாளாமல் ஒதுக்குவதுமே இன்றைய தமிழ் எழுத்தாளர்களுக்கு நவினத்துவம் ஆகிவிட்டது. ஒரே பெண்ணோடு வாழும் ஒழுக்கம் உடையவனென்றால் இராமனையே முன்னிறுத்துவதும், கற்புக்கென்றால் சீதை என்பதும்,வில்லுக்கென்றால் விசயன் என்பதும், வள்ளல் என்றால் கர்ணனைச் சொல்வதுமே புத்திலக்கிய வாதிகளின் மெனக்கெடு ஆகிவிட்டது.

அண்ணன் தம்பிக்கூட சண்டை போட்டவனெல்லாம் வில்லாதி வில்லனாகி விட்டான்.அர்ச்சுனனை வில்லுக்கு விசயன் என்கிறார்களே அவன் தன் வில்திறமையால் கடல் கடந்து எத்தனை தேசங்களை வென்று ஒரு குடையின் கீழ் கொண்டுவந்தான்? கர்ணனை வள்ளல் என்கிறார்களே அவனே சோற்றுக்கு வேலை பார்த்த படைத்தலைவன். அவன் யாருக்கு எதை அள்ளிக் கொடுத்திருப்பான்? இந்த மாதிரி வேதப்புளுகை எல்லாம் நாம் ஏன் தெரு தெருவாய்  வீடுவீடாய்  கொண்டு சேர்க்க வேண்டும். அப்படி என்ன தலை எழுத்து நமக்கு? புதியமாதவி உங்கள்  பணி தொடர வாழ்த்துகிறேன். தமிழ் வாழ எழுதுங்கள் . தமிழர் வாழஎழுதுங்கள் . கூடியவாறு பிறமொழிச் சொல்லைத் தவிர்த்து எழுதுங்கள்


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *