உதிரத்தைப் பாலாக்கும் தாயின்
உயிர் துடிக்காததை அறியாது - அவள்
மடியின் ஈரத்தை உதிரமென உணராது
ஈரத்தில் அவ்வுயிர்ச்சூடும் ஆறுவதையும் அறியாது
உதிரம் பாலாகும் விந்தையறியாக் குழந்தை
முலை சுரக்கும் பால் அருந்தத் தடவி வாய் வைத்து
பாலென உதிரம் பருகி...
அலறலெனக்கூற முடியா அவலக்குரல்களும்
திக்கறியாக் காலோசைகளும் கேட்டுப் புன்னகைத்து
இடியையும் மௌனிக்கும் பேராயுதச்
சத்தத்தில் கண்ணயரநதது - அன்று
யாரோ ஒரு தாய் - யாரோ ஒரு குழந்தை
யாருடையவர் யாருக்கென்று தெரியாக் கணக்கெடுப்பில்
குலுக்கி மீளடுக்கப்பட்ட சீட்டுக் கட்டுகளுள்
மீண்டும் அது
முள் கம்பி கிழித்துக்
கந்தலாய் வந்து திரும்பும்
காற்றின் தாலாட்டில் தனைமறந்;து
இரும்புக் குழல்களின்
சூடு தணிக்கத் திராணியற்ற மழையின் சகதி மணமும்
அது காயின் புழுதி மணமும் முகர்ந்து
கண்ணறியாக் கடுங்காவல் உடனிருக்க
தாயின் குருதி மணம் விரலொட்டி இனுமிருக்க
அது சூப்பிக்
கண்ணயரும் - இன்று
-கமலா வாசுகி (இலங்கை)
புரட்டாதி 2009