நன்றி-அ.கேதீஸ்வரன் , ஆகாயம்.கொம்
கை.சுல்பிகா ஈழத்து எழுத்துலகில் மிக வேகமாக அறியப்பட்டு வரும் இளம் படைப்பாளியாவார். இவருடைய எழுத்துலகம் புதிய கற்பனை வடிவத்தையும் அனுபவத்தையும் ஒருங்கிணைத்து வாசகரை வேறு ஓர் வாசகத்தளத்திற்கு அழைத்துச் செல்கிறது. இவருடைய விரைவான வளர்ச்சிக்கு எது காரணம் எனக் கேட்டபோது தன்னுடைய படைப்புகள் பலமும் பலவீனமும் கொண்டிருப்பதே அதன் பலமெனக் கூறும் சுலபிகா வாசகரைச் சோம்பேறிகளாக்காது அவர்களை இயங்க வைக்கவேண்டும். அப்படியானால் நாம் எம்மைப் புதிப்பித்துக்கொண்டே இருக்கவேண்டும்.
சாத்தியம் சாத்தியமற்றது என்பதற்கு இடமில்லாமல் எல்லாவற்றையும் எழுதுகிறேன். எழுதிய எல்லாவற்றிற்கும் அப்பால் சென்றுகொண்டேயிருக்கிறேன். முக்கியமாக என்னுடைய எந்தப்படைப்பு பாராட்டுப்பெறுகிறதோ உடனடியாக நான் அந்தப் படைப்புப் பற்றிய மனநிலையிலிருந்து விடுபட்டுவிடுவேன். இது கூட என்னுடைய பலமாகவும் பலவீனமாகவும் வளர்ச்சிக்குக் காரணமாகவும் இருக்கலாம் என உணர்கிறேன் எனக் குறிப்பிடுகிறார்.
சுல்பிகா இரண்டாயிரம் ஆண்டுகளுக்குப் பின்னரே அதிகமும் கவனத்தைக் கோருகிறார். இதுவரையில் இருபத்தைந்துக்கும் மேற்பட்ட சிறுகதைகளையும் இரண்டு நாவல்களையும் ஒரு கவிதைத்தொகுப்பையும் கொணர்ந்துள்ளார். இவற்றில் எலிச்சாபம் எனும் நாவல் அவருக்கு இலக்கியப் பரப்பில் தனித்த அடையாளத்தை வழங்கியிருக்கிறது. இந் நாவலில் சிறுவனான சந்தானமும் அவனது நாய்க்குட்டியும் தோட்ட வெளிகளில் எலிகளை வேட்டையாடுதலை மிகச் சுவாரசியமாக எழுதியிருப்பார் சுல்பிகா. எலிப்பொந்துகளை சிறு மண்வெட்டியால் சந்தானம் வெட்டிக்கொண்டுபோக பொந்து நீண்டுகொண்டே போகும். சில இடங்களில் எலியின் படுக்கையறையும் அதில் எலிக்குஞ்சுகளும் காணப்படும். தொடர்ந்து பொந்தை வெட்டும் போது பெரிய எலிகள் மேற்பொந்து வழியாக வெளியில் ஓட அவற்றைச் சந்தானத்தினுடைய நாய்க்குட்டி விரட்டிப் பிடித்து வந்து அவனிடம் கொடுத்துவிடும். தோட்டத்தில் பிடித்த எலிகள்தான் சந்தானம் வீட்டில் அன்றையதினம் கறிசமைக்கப்படும். எலிகள் இல்லாமல் சந்தானம் வீட்டிற்குப் போனால் சந்தானத்தின் தாய் அடி பின்னியெடுத்து விடுகிறார். அதனால் என்ன பாடுபட்டாவது சந்தானம் எலிகளைப் பிடித்து விடுவான். இப்படித்தான் ஒரு நாள் மேலோட்டையால் ஓடிய எலியை சந்தானம் தனது கைகளால் பொத்தியபோது எலி அவன் கையில் கடித்து விடுகிறது. அதை அவன் ஒரு பொருட்டாக எடுத்துக் கொள்ளவில்லை. ஆனால் தனக்கு எலி கடித்தது பற்றி பலபேரிடம் கூறுகிறான். எலி கடித்தால் மனிதர்கள் வெள்ளைத்தோலர்கள் ஆகிவிடுவர். என்றும் பின்னாட்களில் பெரிய துன்பங்களைச் சந்திப்பார்கள் என்றும் அது போல எலிகள் சாபம் போட்டால் சாகும் வரையும் சாபம் போகாது என்றெல்லாம் அவர்கள் சந்தானத்திற்குக் கூறிவைக்கிறார்கள்.
சந்தானம் வளர்ந்து பெரியவனான பின்பு அவன் உண்மையாகவே வாழ்க்கையில் பல்வேறு துன்பங்களை எதிர் கொள்கிறான். ஒவ்வொரு தடவையும் தனக்கு எலிகளின் சாபத்தால்தான் இந்த நிலையென்று நினைத்து வருந்துகிறான். அளவுக்கு அதிகமான போதையில் ஒரு நாள் நடுறோட்டில் வாகனத்தில் அடிபட்டுச் செத்துப் போகிறான் சந்தானம். சாகும் போது சந்தானத்திற்கு மனைவி, பிள்ளைகள், பேரப்பிள்ளைகள் என எல்லோரும் இருந்தார்கள். ஆனால் சந்தானம் சாவதற்குச் சில நிமிடங்களுக்கு முன்கூட தன்னை எலிகளின் சாபம் தான் இப்படியாட்டுகிறது. தான் செய்த பாவத்திற்கு என்ன விமோட்சம் இருக்கப்போகிறது என்று உளறிக்கொண்டு இருந்ததாக அவனைக் கடைசியாகக் கண்டவர்கள் கூறியுள்ளார்கள். சந்தானத்திற்கு எவ்வித நோயும் கிடையாது எல்லாம் ஒரு வித மனப்பிறழ்வுதான் காரணம் என்பதை சுல்பிகா மிக அழகாக நாவலில் வெளிப்படுத்தியிருப்பார்.
சுல்பிகாவின் கற்பனை, மொழியாற்றல், சொல்முறை, பாத்திரங்களைக் கட்டமைக்கும் நேர்த்தி, சமூக அசைவுகளை சரியாக உள்வாங்கி அதைப் படைப்பில் இயங்கவைத்தல் இப்படி அனைத்தும் சேர்ந்து இவருடைய படைப்பாற்றலை வியக்கவைக்கிறது. இப்படியான ஒரு கூட்டுழைப்பின் வடிவம்தான் எலிச்சாபம் நாவலாகும். எலிச்சாபம் நாவல் பற்றிய சிறந்த மதிப்பிடலை இலக்கியச் சுயாதீனஆய்வாளர் ராகவன் பேரிதல் சஞ்சிகையில் எழுதியிருந்தார். ராகவன் எலிச்சாபம் நாவல் மிக முக்கியமானதோர் படைப்பாக இனம்காண்கிறார்.
சுல்பிகா புனைவெழுத்தின் மிகவோங்கி. இதனைத் தன் எழுத்துகளினு+டாகவே இயம்பி வருகிறார். அவர் எழுதிய ஆண்களின் தீவு சிறுகதையும் வழமையான போக்கிலிருந்து மாறுபட்டு வெளிப்படுகிறது. “ஆண்களின் தீவு சிறுகதையும் அதைப்பற்றிய பதிவுகளும் இணையத்திலிருந்து தரையிரக்கம் செய்யப்பட்டவை மேற்படி கணைப்பு இணையத்திற்கு நன்றி.
வெள்ளப் படுக்கை. பெரும் வெள்ளப் படுக்கை. பரந்தவெளியில் வெயில் பட்டு மினுக்கத்துடன் தெரியும் மணல் அலைபோல இது வெள்ளை நீர். சிறு சிறு அசைவு. ஆனால் கண்ணெட்டும் து+ரம் வரைக்கும் அதே அசைவு, அதே வெள்ளை. மேலே பரந்தவெளியும் கீழே நீரும் தொடும் ஓர் இடத்தில் உதவியின் பார்வை நிலைத்திருந்தது. உதவி மேலே பார்த்தது எங்கும் வெளிஞ்.. கீழே நீர். தன்னுடைய முதுகைக் கூசிக்கொண்டு காற்றுக் கடந்த அந்தக்கணத்தில் உதவி தன் களைப்பை முற்றிலும் மறந்தது. கையில் வைத்திருந்த நீர் வழிப்பை ஓங்கி நீரில் அடித்து தன் அதீத மகிழ்ச்சியைத் தனக்குள் பகிர்ந்து கொண்டது. உதவிக்கு மகிழ்ச்சி தாழவில்லை. ஏதாவது செய்ய வேண்டும் என்பதுபோல் அவ்விடம் இருந்தது. உதவி படகின் நுனியில் ஏறி இரண்டு காதுகளையும் பொத்திக்கொண்டு மிருகங்கள் போலவும் பறவைகள் போலவும் பல்வேறு ஓசைகளில் கத்தியதுஞ்.பட்சம் அடங்கவில்லை. ஏதேதோ வாயில் வந்த வார்த்தைகளையெல்லாம் இன்னும் பலமடங்கு சத்தமாகப் பேசியது. எல்லாம் நல்ல வார்த்தைகளல்ல சில அவற்றில் கெட்ட வார்த்தைகளும் இருந்தன. தன்னுடன் இன்னுமொருவர் பயணம் செய்வதையே உதவி மறந்து பேசிக்கொண்டிருந்தது. ஆனால் சொற்களல்ல மனநிலைதான் உதவிக்குச் சந்தோசத்தைக் கொடுத்தது. படகு வேகம் குறைந்து நின்றுவிடும் நிலைக்கே சென்றுவிட்டது. படகு ஓடாமல் நின்றால் மீண்டும் அதை இயங்கவைப்பது எவ்வளவு கடினம் என்பது உதவிக்குத் தெரியும். படகின் வேகத்தை விரைவாக்க உதவி நீர் வழிப்பை அசைக்கத் தொடங்கியது. படகு கொஞ்சம் கொஞ்சமாக வேகம் பிடித்தது.
சில துளிகள்ஞ். துளிகள்ஞ்..துளிகள்ஞ்..பல துளிகள் எனப் பெருகிப் புகையாய்க் கொட்டியது மேலிருந்து மழை நீர். படகின் நடுவே மல்லாந்து படுத்திருந்த கமுகக்கனி நீர்த்திவலைகளை ரசித்தபடி ஈரலிப்பில் ஆனந்தமயமாகக் கிடந்தார். மேலிருந்து கொட்டும் நீர் காற்றோடு சேர்ந்து மூர்க்கம் கொள்ளத் தொடங்கியது. இன்னும் சற்று நேரத்தில் நிலமை மோசமடையலாம் என்பதை உணர்ந்த உதவி கமுகக்கனியை அருகில் அழைத்து நாங்கள் போகவேண்டிய இடத்தை அடைவதற்கு இன்னும் சில மணிநேரங்கள் ஆகும். நிலமை மோசமானால் அதை உறுதியாகச் சொல்ல முடியாது. நீங்கள் எதற்கும் தயாராக இருக்கின்றீர்களா? எனக்கேட்டது. கமுகக்கனி முகத்தில் ஒரு அலட்சியத்தோடு நிமிர்ந்து உதவியைப் பார்த்தார். சாதாரண விடயத்தை ஏன் பெரிதாக்குகிறாய் உதவிஞ்? நீ உன் வேலைகளைப் பார். மனதில் பயம் எழுந்தால் ஏதாவது பாட்டைப் பாடு. எனக்கு ஒன்றும் சொல்லாதே. நான் நினைக்கிறேன் உனக்கு உன் தொழிலில் முழுக்கவனம் இல்லை. சிந்தனைகளுக்கு அடிமையாகிறாய். தளர்வுதான் நம்பிக்கையின் எதிரி. நாம் தளர்வடையும் போது அருகில் எந்தப் பொருள் இருந்தாலும் அதை எமது உதவியாளராக்க வேண்டும். உனக்கு உதவியாக இங்கு ஏராளமான பொருட்களோடு ஒரு மனிதனும் இருக்கிறேன். ஆகவே நீ உறுதியாக இரு என்றார் கமுகக்கனி.
பலத்த சத்தத்தோடு மூன்று நான்கு தடவைகள் சிரித்தது. அப்படிச் சிரித்துவிட்டு கமுகக்கனியைப் பார்த்தது. உங்களை நினைத்தால் எனக்கு இப்படிச் சிரிக்கத்தான் முடிகிறது. ஆனால் சந்தோசத்தில் அல்ல கோவத்தில். ஏனென்றால் உங்களுடன் நான் இரண்டு நாட்கள் இந்தப் படகில் பயணம் செய்கிறேன். நீங்களோ இந்த நீர்ப்படகில் பயணியாகத்தான் என்னுடன் வருகிறீர்கள். நான் இந்த நீரையும் காற்றையும் கருமுகிலையும் கொட்டும் மழைநீரையும் இறங்கும் நெருப்பையும் பல ஆண்டுகளாக அநுபவித்து இங்கேயே வாழ்கிறேன். அப்படியிருக்கும்போது நான் கூறும் எதையும் நீங்கள் அக்கறைகொள்வதில்லை. எங்கள் நல்லநேரம் எந்தத் தீங்கும் ஏற்படாமல் தப்பிப் போய்க்கொண்டிருக்கிறோம். இந்த நிலமை தொடரும் என்று நீங்கள் நினைப்பது தவறு. அது மட்டுமல்ல நாங்கள் போகவிருக்கும் இடம் மிகப் பயங்கரமானது. அங்கே நீங்கள் தான் செல்ல வேண்டும். என்னையும் உங்களுடன் வரும்படி நிர்ப்பந்திப்பது தவறு. எனக்கு இதில் எந்த உடன்பாடுமில்லை. உதவி பேசிக்கொண்டிருக்கும்போதே படகு மேலும் கீழும் மோசமாக ஆடி படார் என்று எங்கோ ஓர் மூலையில் முறிந்த சத்தம் கேட்டது. கமுகக்கனி எழுந்து சென்று சத்தம் வந்த இடத்தைப் பார்த்தார். பின்பு உதவியை அழைத்து என்ன நடந்தது என்று பார்க்கச் சொன்னார். உதவி வாய்க்குள் ஏதோ முணுமுணுத்துக்கொண்டே வந்தது. முறிந்த மரத்துண்டொன்றை எடுத்து கமுகக்கனியின் கையில் கொடுத்துவிட்டு இதை நீங்கள் உங்கள் தோழனாக வைத்துக்கொள்ளுங்கள் என்று சிரித்தது. உதவியின் சிரிப்பிலிருந்து அங்கு பெரிதாக ஒன்றும் நடக்கவில்லை என்பதை கமுகக்கனி புரிந்துகொண்டார்.
நீண்ட நேரமாக இருவரும் பேசிக்கொள்ளவில்லை. இந்த இடைவெளியில் அதிக து+ரத்தைக் கடந்திருந்தார்கள். படிப்படியாக நீர் கொந்தளிப்பையிழந்திருந்தது. கொட்டும் மழைநீரும் குறைந்திருந்தது. நீங்கள் செல்ல வேண்டிய தீவு அதோ தெரிகிறது பாருங்கள் என்று உதவி ஒரு இருளைக் காட்டியது. கமுகக்கனி படகின் முன் பகுதிக்குச் சென்று நெற்றிமீது கையை வைத்துப் பார்த்தார் அது ஒரு இருளாகவே தென்பட்டது. அவருக்கு மனதில் ஒரு விதக் கிளர்ச்சி எழத்தொடங்கிவிட்டது. திரும்பி உதவியைப்பார்த்து எப்போதாவது தீவின் உள்ளே சென்று வந்திருக்கிறாயா? உண்மையைச் சொல் என்று கேட்டார். அதற்கு உதவி நான் எத்தனை முறை உங்களிடம் கூறிவிட்டேன் தீவின் கரையைத் தாண்டி உள்ளே சென்றதில்லையென்று ஆனால் நீங்கள் நம்புகிறீர்கள் இல்லை என வேறு எங்கோ பார்த்துக்கொண்டு கூறியது. நீ கோவிப்பதில் அர்த்தமில்லை உதவி. அங்கு வசிப்பவர்களைப் பற்றி நான் ஓரளவிற்கு அறிந்து வைத்திருக்கிறேன். அவர்கள் மிகவும் ஆபத்தானவர்கள் என்று எல்லோரும் நம்புகிறார்கள் ஆனால் எவருமே அவர்களைச் சென்று பார்த்ததும் இல்லை. தீவர்களுடன் தொடர்பை ஏற்படுத்தியதுமில்லை.
கூறியதை வைத்துக்கொண்டு தாங்களாகவே தீவர்களைப் பற்றிய ஒரு விம்பத்தை மனதில் ஏற்படுத்தி வைத்திருக்கிறார்கள் ஆனால் நான் சொல்கிறேன் இந்தத் தீவர்கள் வேறு மாதிரியானவர்களாகத் தான் கட்டாயம் இருப்பார்கள். ஒரு வேளை எல்லோரும் நினைப்பது போல் தீவர்கள் ஆபத்தானவர்களாக வாழ்ந்து வந்தாலும் அவர்களை எம்மைப் போன்ற சாதாரணமானவர்களாக என்னால் மாற்றமுடியும். ஓரளவிற்கு நீ இவர்களின் தீவிற்கு அருகில் சென்று வந்திருக்கிறாய் அப்படியிருக்கும் போது தீவர்கள் உன் கண்ணில் படாமலா இருந்திருப்பார்கள்? அல்லது உன்னை அவர்கள் பார்க்காமல் இருந்திருப்பார்களா? நீயும் மற்றவர்களைப் போன்று முட்டாள்தனமாகப் பேசக்கூடாது. தீவர்கள் பொல்லாதவர்கள் என்றால் உன்னைக் கொன்றிருப்பார்களே? இதிலிருந்து நீ ஒரு முடிவுக்கு வரமுடியாதா? கமுகக்கனி கொஞ்சம் உணர்ச்சிவசப்பட்டுக் காணப்பட்டார். ஏதோ பேச வாயெடுத்த உதவி பிறகு மௌனமானதை கமுகக்கனி அவதானித்து விட்டு தயவு செய்து எதையும் மறைக்காதே என்னைப் பொறுத்தவரையில் தீவர்களைப்பற்றி உனக்கு ஒன்றுமே தெரியாதென்பதை நீ சொல்லும் பொய் என்றுதான் நான் நினைக்கிறேன் எனக் கூறினார். உதவி சினத்துடன் காணப்பட்டது. என்னைத் தொந்தரவு செய்யவேண்டாம். நீங்கள் ஆசைப்படுவது போல நானும் தீவிற்குள் வருகிறேன் எனக்கும் உங்களுடன் சேர்ந்துதான் மரணம் என்றால் விதியை யாரால் மாற்றமுடியும்? உதவியின் பேச்சு அதன் மனநிலையைத் தெளிவாக கமுகக்கனிக்கு உணர்த்தியது. மீண்டும் இரண்டுபேருக்குமிடையில் நீண்ட மௌனம் ஏற்பட்டுவிட்டது.
கமுகக்கனி ஒரு பையிலிருந்த உலர்ந்த உணவுருண்டைகளை எடுத்து சாப்பிடத்தொடங்கினார். உதவியையும் சைகையால் அழைத்தார். சற்று நேரம் கழித்துவந்து பையை எடுத்துக்கொண்டு போனது உதவி. அதற்குப் பிறகுதான் கமுகக்கனிக்கு ஓரளவு ஆறுதலானது மனம். கமுகக்கனி ஒரு குவளை நீரை எடுத்து அதில் அரைவாசியை அருந்திவிட்டு நீரின் சுவை மாறிவிட்டதாகச் சொல்லி மிகுதியைக் கொப்பளித்துத் துப்பினார். துப்பும்போது தற்செயலாக உதவியைப் பார்த்தார். உதவி உடைகள் அனைத்தையும் கழட்டிப் படகில் வைத்துவிட்டுப் படகின் வெளிப்புற ஓரமாக நீரை நோக்கி இறங்கிக்கொண்டிருந்தது. கமுகக்கனி ஒன்றும் புரியாதவராக ஏன் உதவி இப்படிச் செய்கிறாய் எனக்கேட்டார்? உதவி இவருடைய பேச்சை அலட்சியப் படுத்திக்கொண்டே நீரிற்குள் முங்கி முங்கி எழும்பியது. கமுகக்கனி இரண்டு கைகளையும் படகின் ஓரமாக ஊன்றியபடி உதவி செய்வதை வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தார். அவருக்கும் உதவியைப் போலச் செய்வதற்கு ஆர்வமாக இருந்தது. ஆனால் அவர் அப்படிச் செய்யவில்லை.
படகு தீவை நெருங்கியது. து+ரத்திலிருந்து பார்த்தபோது இருளாகத் தெரிந்ததெல்லாம் இப்போது மிகத் தெளிவாகத் தெரிந்தது.அடர்ந்து உயர்ந்த மரக்கூட்டங்கள் ஆங்காங்கே வெளிகள் மணற் குவியல்கள், இவைகளுக்கு அப்பால் முகிலைத்தொடும் மலைகள் எனத் தீவு பச்சைப் பசேல் என்றிருந்தது. படகு தீவின் ஓரமாகச் சென்றுகொண்டிருந்தது. படகை எங்கே நிறுத்தலாம் என்பதை ஆராய்ந்துகொண்டே உதவி படகை ஓட்டிக்கொண்டிருந்தது. யாராவது மனிதர்கள் கண்ணில் தென்படுகிறார்களா என்பதைத் தேடினார் கமுகக்கனி. யாரும் கண்ணில் தென்படவில்லை. உதவியைத் தொடர்ந்து கமுகக்கனியும் படகிலிருந்து இறங்கி முழங்கால் அளவு நீரில் நடந்தார். சற்று நேரத்தில் கரையை அடைந்து விட்டார்கள்.
கமுகக்கனியும் உதவியும் தீவின் உள்ளே நடந்து கொண்டேயிருந்தார்கள். மனித நடமாட்டங்கள் எவற்றையும் அவர்களால் காணமுடியவில்லை. அன்றைய நாள் அலுப்பும் சோர்வும் நிறைந்ததாக முடிந்தது. கமுகக்கனி உதவியிடம் ஒரு ஆலோசனை கூறினார். உதவி நாங்கள் இருவரும் இப்படி அலைவதைவிட ஓரிடத்தில் அமைதியாக இருப்போம். வேண்டுமானால் இரண்டு மூன்று நாட்கள் அப்படியே செய்யலாம். நிச்சயமாக அதற்குப் பலன் கிடைக்கும். தீவர்கள் கண்ணில் படாமல் இந்தச் சின்னத் தீவில் நடமாடமுடியாது. இந்த யோசனையை உதவி ஏற்றுக்கொண்டது. ஆனால் கமுகக்கனியின் இயலாமைதான் இந்த முடிவுக்குக் காரணம் என்பதை உதவி தன் பார்வையால் கமுகக்கனிக்கு உணர்த்தியது. அவருக்கு அது புரிந்தாலும் வலுக்கட்டாயமாக முகத்தில் கம்பீரத்தை வைத்துக்கொண்டிருந்தார். அவருடைய முகத்தில் பட்ட மரத்தில் முளைத்த பாசிபோல இயல்பற்றிருந்தது கம்பீரம். அன்று இரவு ஒரு பாதுகாப்பிற்காகவும் குளிரிலிருந்து விடுபடுவதற்காகவும் உதவி தீயை மூட்டி அதனருகே படுத்திருந்தது. ஆனால் கமுகக்கனி தீயின் அருகே செல்லாமல் சற்றுத்தூரத்திலிருந்தார். யாராவது தீவர்கள் ஒளியை நோக்கி வரக்கூடும் என்னும் ஆர்வமும் மனப்பயத்தின் ஒரு காரணமாகவும் அவர் இதைச் செய்தார். உதவி எந்தப் பதற்றமும் இல்லாமல் இருப்பது வியப்பாகவும் ஆத்திரமாகவும் இருந்தபோதும் அவர் வெளிக்காட்டவில்லை.
அடுத்து வந்த இரண்டு நாட்களும் மிக முக்கியமானவை.இரண்டு பேரும் சில உயர்ந்த மர உச்சியில் ஏறி அங்கிருந்து பார்வையெட்டிய தூரம் வரையும் தேடினார்கள். ஒரு மலையின் அடியைச் சுற்றியும் அதன் உச்சிவரை ஏறியும் தேடினார்கள். ஒரு அழகிய நீரோட்டத்தின் தொடக்கத்திலிருந்து அதன் முடிவுவரை சென்று மீண்டார்கள். வரும் வழியில் உதவியோடு நீரோட்டத்தின் அழகையும் அதில் வாழும் விசித்திரமான மீன்களையும் பற்றித் தன்னை மறந்து பேசிக்கொண்டே வந்தார். பரந்த புல்வெளியில் கூட்டம் கூட்டமாக ஓடிச் செல்லும் மிருகங்களைக் கண்ணிமைக்காமல் பார்த்துக்கொண்டிருந்தார். காற்றில் மிதக்கும் மணற்கூடு பெருகிப் பெருகி மேலெழுந்து சுழியாகிப் பின் அலையானதைக் கண்ட கமுகக்கனி அதை நோக்கிக் கையைக் காட்டிக்கொண்டே ஓடினார். பெயரறியாத ஒரு மிருகம் மிக அருகில் வந்து கமுகக்கனியை மணந்தது. கமுகக்கனி மெல்லப் பின் வாங்கினார். உதவி அதன் அருகில் சென்று முதுகைத் தடவியது. மிருகம் அந்த இடத்திலேயே படுத்து விட்டது. வேறு இடத்திற்குப் போவதற்கு உதவி கமுகக்கனியை அழைத்தபோது. கமுகக்கனி திட்டவட்டமாக மறுத்தார். தானும் அந்த மிருகத்தின் அருகில் அமர்ந்து ஏதோ பேசத்தொடங்கினார். உதவி சினந்தது. சில சுடு சொற்களையும் பேசியது. உதவியில் ஏற்பட்ட மாறுதலைக் கமுகக்கனி புரிந்து கொண்டார். இப்படியே இன்னும் ஓரிரு நாட்கள் எல்லா இடமும் அலைந்து திரிந்தார்கள். ஆனால் தீவில் மனிதர்களைத் தேடுவதற்கு அலைந்தார்களா? தீவின் அழகையும் அதன் உயிர்ப்பையும் ரசிப்பதற்கு நாட்களைக் கழித்தார்களா என்பது கமுகக்கனிக்கு மட்டுமே புரிந்த உண்மையாக இருந்தது.
இறுதிநாளன்று கமுகக்கனி உதவியைப் பார்த்து இன்றுடன் நான் புறப்படப்போகிறேன். இனியும் இங்கு மனிதர்கள் தென்படுவார்கள் என்பதில் எனக்கு நம்பிக்கையில்லை எனக்கூறினார். இவர் கூறும்போது முகத்தில் ஏமாற்ற உணர்வு தென்படுகிறதா என்பதை உதவி உற்றுப்பார்த்தது. ஆனால் உதவிக்கு அது சரியாகத் தெரியவில்லை காரணம் கமுகக்கனிக்கு அந்தத் தீவில் மனிதர்கள் இருக்கக்கூடாது என்னும் விருப்பமே மேலோங்கியிருந்தது. இறுதிக் கணத்தில் அதற்காக அவர் மன்றாடவும் தெடங்கிவிட்டார். கமுகக்கனியின் மன்றாட்டத்திற்கு இனி எந்தப் பலனும் கிடைக்கப் போவதில்லை என்பதை உணர்ந்து சிரித்தவாறே உதவி மீண்டும் கமுகக்கனியைப் படகில் ஏற்றிக்கொண்டு நீர்வழிப்பின் வேகத்தைக்கூட்டியது. படகு நீரிலும் உதவி காற்றிலும் கமுகக்கனி தீவின் நினைவிலும் மிதந்தார்கள்.