ஆழியாள்
புனைவை ‘எழுதத் தொடங்கியபின், அது தன்னையே எழுதிக்கொள்ளும் அதிசயத்தைக் கண்டேன்’ என்று முன்னுரையில் கூறும் கவின் மலர், ஏற்கனெவே அரங்கக் கலைஞராக, பத்திரிகையாளராக நாடகங்கள் மூலமும், பத்தி எழுத்து, கட்டுரைகள், கவிதைகள் மூலமும் அறியப்பட்டவர்.
இப்போது ‘நீளும் கனவு’ தொகுப்பின் மூலம் அவர் புனைவுலகத்திற்குள்ளும் நுழைந்திருக்கிறார். ‘நீளும் கனவு’ தொகுப்பில் மொத்தம் எட்டுச் சிறுகதைகள் இருக்கின்றன. கவின் மலரின் பேச்சிலும், செயலிலும் இருக்கும் சமூக உறவுகள் மீதான அக்கறையே இக்கதைகளின் அடித்தளமாகவும் இருக்கிறது. பகட்டும், போலித்தனமும் இல்லாத, நகலின் நிழலற்ற எளிமையான அசல் எழுத்து கவின் மலருக்கு வாய்த்திருக்கிறது.
‘மீனுக்குட்டி’ கதையில் மீனுக்குட்டி என்ற கெட்டித்தனமான செல்ல மகளுக்கும், அவள் மேல் பாசத்தைக் கொட்டும் தகப்பனுக்குமான உறவில் பெரும் விரிசலை உருவாக்கக் கூடிய ஒரு விடயத்தை அவளது பாட்டி மீனுக்குட்டியிடம் சொல்லி விடுகிறார். அதாவது மீனுக்குட்டி ‘பொண்ணா’, ‘கருப்பா பொறந்துடுச்சேன்னு… அப்பா அழுதாரு’ என்கிற விடயம்தான் அது. தந்தை, மகள் உறவைப் பிரித்துச் சின்னாபின்னமாக்கக் கூடிய இந்தக் கதைக்கருவை பிரேமா அக்கா, அம்மா, பாட்டி, பாலு பாத்திரங்கள் ஊடாகவும் அப்பா சொல்லும் மூக்கறுத்தான் கதை, அப்பாவுக்கும் முதலாளிக்குமான ஊடாட்டம் போன்றவற்றோடும் இணைத்து கதையை அழகாக நகர்த்தியிருக்கிறார் கவின்மலர்.
‘மூன்று நிற வானவில்’ என்ற கதை ஊரில் பெரியம்மா வீட்டுக்குப் பக்கத்து வீட்டில் வளர்ந்த முரளி எனும் கெட்டிக்காரச் சிறுவனைப் பற்றியது. பல ஆண்டுகளுக்குப் பிறகு முரளியை பதின்ம வயதுக்காரனாய் சென்னையில் ‘அக்கா’ சந்திக்க வேண்டி வருகிறது. உரையாடலும், கதையோட்டமும் அவர்களுக்கிடையேயான அக்கா தம்பி உறவை – இறந்த காலத்திலும், நிகழ்காலத்திலுமாக மாற்றி மாற்றி வாசகருக்கு காட்டுகிறது. கதையின் இறுதியில் ‘நான் அழத் தொடங்கினேன்!’ என்று அக்கா உடைந்து அழுவதாக கதை முடிகிறது. வாசகராகிய நாமும் கூட நம்மை மறந்து அழத் தொடங்கும் முடிவுடனான செம்மையான கதையோட்டம்.
கவின் மலரின் எழுத்தில் உணர்ச்சியும், உயிர்ப்பும், வசீகரமும் இருக்கின்றன. மனதை அப்படியே கவ்வும் கதையோட்டமும், உரையாடல்களும் இத் தொகுப்புக்கு மெருகூட்டுகின்றன.
அவரது எழுத்தின் வசீகரத்துக்கு ‘நீளும் கனவு’ சிறுகதையில் இருந்து ஓர் உதாரணம்:
‘கனவுகளுக்குத்தான் எத்தனை விதமான கால்கள்? சில நீளமானவை. சில குட்டையானவை. சில வேகமாய் ஓடக்கூடிய கால்கள். சில அன்னநடை போடும் கால்கள். அவை எப்படியிருந்தாலும் மெலிதான ஏதோவொரு இடப்பெயர்ச்சி அல்லது அசைவு மட்டும் கனவில் உத்தரவாதமாய் இருக்கிறது.’
பகட்டும், போலித்தனமும், கள்ளத்தனமும், பிரமுகராக அலையும் இன்னோரென்னப் பட்ட தொத்து வியாதிகளும் கவின் மலரையோ அவரின் வசீகரமான அசல் எழுத்தையோ ஒருபோதும் அண்டக்கூடாது என்பதே வாசகராகிய எங்கள் கனவு.
நீளும் கனவு (சிறுகதைகள்)
ஆசிரியர்: கவின் மலர்
வெளியீடு: கயல் கவின் புக்ஸ்
பக்கங்கள்:96
விலை: 80