சந்திரலேகாகிங்ஸி இலங்கை மலையகம்
சவால்களுக்கு முகங்கொடுத்தல் என்பது மிகவும் சுருக்கமான இலங்கையின் தேசியகல்வி இலக்குகளில் ஒன்றாக காணப்படுகின்றது. மாற்றங்களுக்கு இணங்கி அவற்றை முகாமை செய்யக் கூடியவகையிலும் துரித மாற்றங்கள், சிக்கல்கள் மற்றும் எதிர்பாராத சூழ்நிலைகளை சமாளிப்பதற்கான இயலுமையை விருத்திசெய்யக் கூடியவகையில் தனிநபர்களை வலுவூட்ட வேண்டிய தேவை என்பது சமூகத்தின் காணப்படுவதும் அவற்றை நிறைவுசெய்யக் கூடியகல்வி அமைப்புமுறை எமக்குதேவை என்பதும் இக் கூற்றுகளிலிருந்து நாம் அறியமுடிகின்றது.
பொதுவாகவே சவால்களை எதிர்கொள்ள வேண்டிய தேவை ஆண் அல்லது பெண் இருபாலாருக்கும் இருக்கின்ற பொழுதிலும் ஒரு ஒடுக்கப்படுகின்ற இனம் சரியாக இனங்காணப்படாத, சரியாக முன்னெடுப்புகளை, எத்தனிப்புகளை உந்தமுடியாத சூழ்நிலையில் பெண்களுக்கான சவால்கள் என்பதுமிகஅதிகமாகவேகாணப்படுகின்றது. அதுவும் பெண் தலைமைத்துவத்துக்கான சவால்கள் விருத்தியடைந்த அமைப்பு முறையில்லாத சமூகங்களில் கல்வி, சமூக, பொருளாதார, அரசியல் காரணிகளோடுதொடர்பு பட்டதாகவே அமைகின்றது.
தலைமைத்துவ என்பது ‘ஆள்’ தன்மை புலப்படுத்தும் ஆளுமையினூடாக தெளிவடையும் புலப்பாடாகும். ஆளுமை என்பதில் பால்நிலை காணமுடியாத‘ஆள் தன்மை’ கொண்டதாக அமைதல் மிகவும் அவசியமாகும்.
அவ்வாறே தலைமைத்துவமென்பதும் பால்நிலை பேசாத பண்புகளை கொண்டிருப்பதும் எதிர்கால மானுட விருத்திக்கு வித்திடக் கூடியஅம்சமாகும். சமூகதளங்களில் தலைமைத்துவம் பற்றிபேசும் பொழுதும், எழுதும் பொழுதும் அது‘ஆண்’ மையப்படுத்தப்பட்டதான கருத்து இன்றும் நிலவி வருவது பெண் ஒடுக்குமுறையின் அடையாளமாகவே கொள்ள முடிகின்றது. இது ‘ஆண்’மையப்படுத்தப்பட்டதந்தைவழி‘ஆண்’ சமூகஅடையாளம் இன்றும் நமக்குள் ஊறிவிட்டிருப்பதற்கு அடையாளமாகும். ஆனால் தலைமைத்துவம் என்பதுகல்வி அல்லது அரசியல் அல்லது பொருளாதார சமூகதளங்களின் அமைப்புகளில் பால் நிலைசாராத ‘ஆள்’ நிலை கொண்டதாக மாற்றியமைக்கப் படுவதற்கான சவால்களை எதிர்கொள்ள வேண்டியதாக காணப்படுகின்றது.
பொதுவாக பெண் தலைமைத்துவங்களை ஏற்றுக் கொள்ள முடியாத நிலைப்பாடு என்பது மேலைத்தேய சமூக அமைப்புகளை விட கீழைத்தேய குறிப்பாக ஆசிய, தென் ஆசிய நாடுகள் சார்ந்த சமூக அமைப்புகளில் அதிகமாககாணப்படுகின்றது. அதே வேளை அவற்றை வென்றெடுக்க வேண்டிய தேவையும், அறிவார்ந்த நோக்கும் பெண்களுக்கு அவசியப்படுவதும் பெண்;கல்விக்குள் அவை சரியான கருத்தியலாக புகுத்தவேண்டியதும் பெண் ஒடுக்குமுறையை வென்றெடுக்கும் நிலைப்பாட்டைதோற்றுவிக்கக் கூடியகாரணியாகும்.
சிக்கல்கள், எதிர்பாராத நிலைமைகள் சமாளித்தல் என்பதுதகவல், நிகழ்வுகள், மாற்றங்கள் என்பவற்றை உள்வாங்குவதும் அவற்றை சரியான முறைமையோடு எதிர்கால சந்ததிக்கு வழங்குவதும் அவற்றுக்கூடாக சமூக அபிவிருத்தி, மனிதகுல அபிவிருத்தியும் ஏற்படுத்துவதாகும். பெண் தலைமைத்துவ சலால்களும் கூட இதற்கு விதிவிலக்கல்ல. பெண் என்பவருக்கு தலைமைத்துவ சவால்களை வென்றெடுக்கவும் தகவல், மாற்றங்கள், நிகழ்வுகள் பற்றியதான அறிவியல் கொண்ட கருத்தியல்களை பெற்றுக் கொள்வதும்,வழங்குவதும் பெண் ஒடுக்குமுறையை எதிர்க்க உதவுவதாக அமையும்.
சிந்தனைகளால் ஏற்படுகின்ற மாற்றங்கள்,ஆயுதங்களால் ஏற்படுகின்ற மாற்றங்களை விட வலிமையுடையனவாக அநேக சரித்திரங்களை நாம் கடந்தகாலங்களில் பெற்றுவந்துள்ளோம். எனவே பேசப்படுகின்ற பெண் தலைமைத்துவங்கள் எந்தசமூகத்திலேயும் அடிப்படை சிந்தனை மாற்றத்தில் அக்கறை கொண்டதாகவும் அவற்றுக்கூடாக வெல்லக்கூடிய சூழ்நிலைகளை உருவாக்குவதாகவும், அமைவதற்கான பெண் சூழ்நிலைகள் உருவாக்கப்படல் வேண்டும். மாற்றங்களில் சரியான விசையை புரிந்துக் கொள்வதும் அவற்றுக்கான முன்னெடுப்புகளை முறையாக செயற்படுத்துவதிலும் பெண் தலைமைத்துவங்கள் தம்மைவலுப்படுத்திக் கொள்ளவேண்டியதும் அவசியமாகும்.
உலகின் நிகழ்வுகள் பொதுவாக ஒரு இயங்கு நிலைசக்தியுடன் படிப்படியாக வளர்ச்சிக்குட்டபட்டதாக காணப்படுகின்றது. சமூக அமைப்பில் ஏற்றுக் கொள்ள முடியாதபெண் தலைமைத்துவ சவால்களின் இயங்குநிலையும் அவ்வாறானதாகவே கருதப்படுகின்றது. அவற்றைஎதிர்கொள்ளவேண்டியதான செயற்பாடுகளும் கூட ஒருகிரமமான இயங்குநிலையுடன் தொடர்பு கொண்டதாகவே அமையும். எனவே படிப்படியாக கல்வி,பொருளாதார,அரசியல்,சமூகஅமைப்புமாற்றங்களுக் கூடாகவே அவைமாற்றப்பட வேண்டியதான நிலைப்பாடு காணப்படுகின்றது. அதற்கு அரசியலை விட பெண்களுக்கு கொடுக்கப் படுகின்றதான ஆழமான, அகலமான கல்விக் கூடாக ஏற்படுத்தும் சிந்தனை மாற்றமே அடிப்படையாக காணப்படும். இவை அரசியல் பொருளாதாரங்களில் ஏற்படுகின்ற சடுதியான மாற்றங்களைவிட பலமானதாக அமையும்.
பொதுவாகவே இலங்கை போன்ற தென் ஆசிய நாடுகளில் அமைப்புமுறைகளில் பெண்களுக்கான சம அந்தஸ்து, சமவாய்ப்பு, சமத்துவம், சமநீதி என்பன அடிப்படையான மாற்றங்களுக்கு உட்படும் பொழுதேஅதுபெண்களுக்கான தலைமைத்துவங்களை ஏற்றுக் கொள்ளும் மனப்பக்குவத்தை விஸ்தரிக்கும். அதிலும் இலங்கையில் இன, மத, பிரதேசரீதியிலும் இந்த தலைமைத்துவங்களின் சவால்கள் மாறுபடுவதினையும் கூட காணமுடிகின்றது. தலைமைத்துவத்தினை ஏற்றுக் கொள்வதில் இன,மத,பிரதேசநிலைப்பாடுகள் தமக்குள் கொண்டுள்ள அரசியல், பொருளாதாரம், மதக்கலாச்சாரங்கள் சார்ந்த கருத்தமைவுகளும் தாக்கத்தினை செலுத்துவதினை காணமுடிகின்றது.
பெண்ணுக்கான அடையாளம், புரிதல், ஏற்றுக் கொள்ளல் என்பன சரியான நிலைப்பாட்டில் சமூகத்தில் அழுத்தப்படும் பொழுதுபெண் தலைமைத்துவங்களும் ஏற்றுக் கொள்ளப்படுவதாகவும், ஈர்க்கப்படுவதாகவும் அமையும். உலக சமூகத்தில் கௌரவமான இடத்தைகொடுத்தல் என்பதுநவீனஅறிவுக்கு உகந்தவகையில் சுதந்திரமான உலகநோக்கில் உருவாக்குவதும் கல்வியில் இன்னோர் இலக்காக இருக்கும் சமூகத்தில் சுதேசிய, தேசிய அறிவை விமர்சனரீதியில் மதிப்பீடு செய்து நவீன அறிவியலுக்கு ஏற்ற சுதந்திரம் கொண்ட மானுடத்தினை உருவாக்குதல் என்பது சுதந்திரம் கொண்ட பெண் விடுதலையினையும் உருவாக்குவதிலேயும் தங்கியுள்ளது.
விருத்தியடைந்த சமூக அமைப்பு என்பது பண்புடைய மானுடத்தின் வெற்றி என்பது ஆண் அல்லது பெண் சார்ந்த அறிவுலகின் சகலதுறைகளையும் உள்ளடக்கியதாகும். பெண் தலைமைத்துவத்தின் சவால்களை முன்னெடுக்கும் வலிமையை முழு உலகும் உணரும் நிலையில் உலக மானுட தலைமைத்துவம் உலகைவெல்லும். இயந்திரங்களை விட உலகை மானுடம் வெல்லவேண்டியகாலம் இதுவாகும்.