கிளிநொச்சியில் மூன்று கிராமங்களைச் சேர்ந்த 50 தமிழ் பெண்களுக்கு போஷாக்கு இன்மையை காரணம்காட்டி கட்டாயக்கருத்தடை மேற்கொள்ளப்பட்டுள்ளது.கட்டாய கருத்தடை தொடர்பில் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு உரிய விசாரணைகளை மேற்கொள்ள வேண்டும் என யாழ்.சிவில் சமூகப் பிரதிநிதிகளும் ஊடகவியலாளர்களும் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் ஆணையாளர்களில் ஒருவரான முன்னாள் பொலிஸ் மா அதிபர் ஆர்.ஆனந்தராஜாவிடம் வேண்டுகோள் விடுத்துள்ளனர். சிவில் சமூகப் பிரதிநிதிகளுடன் நேற்று யாழ்.கிறின் கிராஸ் ஹோட்டலில் இடம்பெற்ற சந்திப்பின் போதே இந்த வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.
இந்தச் சந்திப்பில் பெண்களுக்கு எதிரான வன்முறைகள் மற்றும் சிறுவர் துஷ்பிரயோகம் பொலிஸ் நிலையங்களில் இடம்பெறும் மொழி உரிமை மீறப்படும் சம்பவங்கள், மீள்குடியேற்றம் தடைப்படுவதற்கான காரணங்கள், இராணுவத்தினரின் அடக்கு முறைகள், உள்ளிட்ட பல விடயங்கள் தொடர்பாக கலந்துரையாடப்பட்டன.
வடக்கில் திட்டமிட்ட இனவிருத்தியை அழிக்கும் நோக்குடன் இந்தக் கட்டாயக் கருத்தடை மேற்கொள்ளப்படுகின்றது என்ற குற்றச்சாட்டை மனித உரிமை ஆhவலர்கள் முன் வைத்துள்ளனர். இதே வேளை பெண்களின் உரிமைகளுக்காக குரல் கொடுக்கும் அமைப்புகளும் சிவில் சமூகப் பிரதிநிதிகளும் இந்த கட்டாய கருத்தடையை தடுக்க சம்பந்தப்பட்டோர் எடுத்த நடவடிக்கைகள் போதுமானதாகவில்லை எனவும் குற்றம் சாட்டியுள்ளனர்.
கிளிநொச்சி மாவட்டத்தின் கிராமங்களான வேரவில் கிராஞ்சி வலைப்பாடு கிராமங்களில் 52 பெணகளுக்கு கருத்தடை மெற்கொண்டது உண்மையே அனால் கட்டாயத்தின் பெயரில் மேற்கொள்ளப்படவில்லை. என்று வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் திருமதி யூட் அண்மையில் தெரிவித்திருந்தார் ஆனால் அவர் கூறிய கருத்து பொய்யானது என்பது தற்போது நிரூபணமாகியுள்ளது.