சந்தியா இஸ்மாயில்
விழுது ஆற்றல் மேம்பாட்டு மையத்தினால் ஓழங்கு செய்யப்பட்ட 70 அணிகளைச் சேர்ந்த கணவனையிழந்த அல்லது காணாமல் போனோர்களின் உறவினர்கள் கலந்து கொண்ட மாநாடு இன்று மட்டக்களப்பில் நடைபெற்றது. இதில் யாழ்ப்பாணம், மட்டக்களப்பு, திருகோணமலை, புத்தளம் மற்றும் வன்னியைச் சேர்ந்த 100 க்கும் மேற்பட்ட பெண்கள் இந்த மாநாட்டில் கலந்து கொண்டனர்.
வடக்கில் உள்ள இராணுவத்தினரின் எண்ணிக்கை குறைத்து, தமது பாதுகாப்பை உறுதிப்படுத்தி, பெண்களுக்கு தொழில் பயிற்சிகளை வழங்கி, கணவனை இழந்த குடும்பங்களை பாதுகாக்கும் பெண்களுக்கு தைரியத்தை வழங்குமாறு போரில் பாதிக்கப்பட்ட பெண்கள் அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்ததுடன் காணாமற்போனோருக்காக நட்டஈடு வழங்கவேண்டும் என்றும் அத்துடன் காணாமல் போனோருக்கான சான்றிதழ் அதாவது மரணச் சான்றிதழ் போன்றேவழங்கப்பட வேண்டும் என்றும் அச்hசன்றிதழை வைத்தாவது தாங்கள் அரச கருமங்களை மேற்கொள்ளலாம் என்றும் கோரிக்கை விடுத்துள்ளனர். அத்துடன் போரில் காணாமல் போன கணவன் உட்பட உறவினர்களுக்கு என்ன நடந்தது என்பதை வெளிப்படுத்துமாறு இறந்த மற்றும் காணாமல் போனவர்களின் உறவினர்களுக்கும் என்ன நடந்தது என கூற வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
போர் நடைபெற்ற பிரதேசங்களை சேர்ந்த பிள்ளைகளுக்கு கல்வி கற்கும் நிலை இல்லாமல் போயுள்ளது. வறுமை காரணமாக பல பிள்ளைகள் பாடசாலைகளை விட்டு விலகும் நிலைமை ஏற்பட்டுள்ளது. இந்த நிலைமையை கவனத்தில் கொண்டு இந்த பிள்ளைகளின் கல்விக்காக கொடுப்பனவு ஒன்றை வழங்க வேண்டும் எனவும் இப் பெண்கள் அரசாங்கத்திடம் கோரிக்கை விடுக்கின்றனர்.
வடக்கில் மேற்கொள்ளப்பட்டு வரும் இராணுவயமயம் காரணமாக தமது பாதுகாப்பு தொடர்பில் அச்சத்துடன் இருப்பதாக கூறும் இந்த பெண்கள் அச்சத்தை அதிகரிப்பதைவிட பாதுகாப்பை உறுதிப்படுத்துமாறும் ;பெண்களுக்கு தொழிற் பயிற்சிகளை வழங்கும் வேலைத்திட்டத்தை ஆரம்பிக்குமாறு அரசாங்கத்திடமும் அரசசார்பற்ற நிறுவனங்களிடமும் இந்த பெண்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
போர் காரணமாக காணி உறுதிகள் உட்பட முக்கியமான ஆவணங்கள் காணாமல் போய்விட்டன. இதனால் வீடுகளை மீண்டும் நிர்மாணிக்க தேவையான நிதி உதவி போன்ற பலவற்றை பெற முடியாத கஷ்ட நிலை ஏற்பட்டுள்ளது.இந்த ஆவணங்களை மீண்டும் பெற்றுக் கொடுப்பது குறித்து அரசாங்கம் கவனம் செலுத்த வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டுள்ளனர்.