– தேவா (ஜேர்மனி)
|
இப்படி ஒரு கொடுமை எவருக்குமே நடக்கக்கூடாது. ஆனால் பாலியல் வன்முறை இன்னும் சிறைக்கூடங்களிலும்,திறந்தவெளிகளிலும் அடக்குமுறையாளர்களால் சாதாரணவிடயமாக கருதப்பட்டு தொடர்ந்து நிகழ்த்தப்பட்டு வருகிறது. இதுதான் ஒவ்வொருவரையும் ஆத்திரம் கொள்ளவைக்கிறது. அதிகார இயந்திர கருவிகளாய் ராணுவம் இருப்பதால்,அது தமிழ்மக்களுக்கு எதுவும் செய்யலாம் என்கிற வாதத்தை இவ்வாறான கொடுமைச்செயல்கள் மூலம் உங்கள் நெஞ்சங்களில் ஓங்கி அறைந்துசொல்கிறது.
போர் ஓய்ந்துவிட்டதாய் சொல்லிக்கொள்ளும் இந்த காலகட்டத்திலும் இவ்வாறான கொடுமை நிகழ்ந்திருக்கின்றது. அவ்வாறெனில் உண்மையில் ராணுவத்தின் கோரபற்கள் இன்னமும் அகல திறந்திருக்கின்றன என்றுதான் அர்த்தமாகிறது! ஒரு பெண்சிறுமியை ஒரு மிருகத்தைப்போல தன் உடல் பசிக்கு தின்றிருக்கும் அகோரத்தை நாம் உணருகிறோம். இது ஆண் அதிகாரத்தின் கர்வ வெளிப்பாடே என்று போகிற போக்கில் சொல்ல முடியாது. ஏனெனில் இது சம்பவம் இல்லை. ராணுவ உடைக்குள் புகுத்தப்பட்டிருக்கும் சலுகையின் வெற்றி.அரசாங்கம் வரையற்ற அதிகாரத்தை ராணுவத்துக்கு கொடுத்திருப்பதால் அந்த சுதந்திரத்தை பயன்படுத்தி எந்தகொடுமையையும் செய்யலாம் என்பதோடு மட்டுல்லாது ஒரு சிறுபான்மை இனத்துக்குமேல் அரசு எதுவும் செய்யும் என்ற நிலைப்பாட்டை பற்றியும் புரிந்துகொள்ளலாம். அரசியல்அதிகாரத்தை பயன்படுத்தி யாரையும் எதுவும் செய்யமுடியும் என்ற தொனி தெளிவாக கேட்கிறது.
ஓரு தமிழ்பெண்ணை,சிறுமியை,குழந்தையை அதிகாரத்தின் பேரால் என்ன சித்திரவதை வேண்டுமானாலும் செய்யலாம்.(வருடக்கணக்காக தமிழ்மக்களை சந்தேகத்தின் பேரில் சிறைவைத்திருக்கிறது சித்திரவதை செய்கிறது) கேட்கஆளில்லை. அல்லது கேட்கமுடியாது. என்கிற மமதை இலங்கை அரசிடம்- அதன் ராணுவத்திடம் இருக்கிறது. இந்த கொடுமையை சில தனிப்பட்ட நபர்களின் உடல் இச்சையாக பார்த்தால், இதற்கு முந்தி போர்க்காலங்களில் நடந்த பாலியல் வன்முறை கொடுமைகள்,கொலைகளும் அதே இச்சைபாற்பட்டனவா எனக்கூறமுடியுமா?
ஓரு சில முட்டாள்களின் தவறால் ஜனநாயக மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசை குறைகூறலாமா? போன்ற முணுமுணுப்புகள் கேட்கின்றன. இதே ஜனநாயக நாட்டில் ராணுவத்துக்கு சகல சலுகைகளும்(போரின் பேரால்! அது முடிந்துவிட்டதென்று சொல்லிக்கொள்ளக்கூடிய நிலை இருப்பதாக கூறிக்கொண்டே)இன்னும் தரப்பட்டிருக்கின்றது என்பதற்கு இந்த 9வயதுச் சிறுமிக்கு நிகழ்ந்த கொடுமையே சாட்சி.
பெண்ணை, சிறுமியை, சிறுவனை, குழந்தையை பெற்றோரோ,உறவுகளோ,உடல்வன்முறைப்படுத்தும் கயவர்களிடமிருந்து ஒவ்வொரு நிமிடமும் கண்விழித்து காப்பாற்றமுடியாது. இது நடைமுறையில் சாத்தியமே இல்லை. பாடசாலைக்கு செல்லும் சிறுவர்கள் பாதுகாப்பாக வீடு திரும்பமுடிவதில்லை. இளம்பெண்கள் தனியாக நடமாடமுடிவதில்லை. பயந்து அடங்கி,ஒடுங்கி வாழவேண்டிய நிலைமை தொடர்ந்து கொண்டே இருக்கிறது. மனிதவாழ்வுக்;கான சுதந்திரம். உரிமை அங்கு இன்னும் இல்லை. இது அப்பட்டமாக தெரிகிறது. சுதந்திரம் யாருக்கு கிடைத்திருக்கிறது? இதுவிடயத்தில் சம்பந்தப்பட்ட ராணுவகூலிகளின் மேல் (இவன்கள் வீரன்களா?) நடவடிக்கை, கைது, என செய்திகள் வருகின்றன. இவன்கள் மேல் வழக்கு தொடரப் படவேண்டும்.சரியான தீர்ப்பு வழங்கப்படவேண்டும். ராணுவத்துக்குரிய அதிகாரங்கள் மீளப்பெறவேண்டும். அரசோடு உராய்ந்து கொண்டிருப்பவர்களும் பதில் சொல்ல வேண்டும்
இனிமேலாவது எமது குழந்தைகள் தாயகத்தில் நிம்மதியாக வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள் என்கிற ஆறுதல்வார்த்தை காதில் கேட்குமா?