காத்தமுத்து
இலங்கையின் வட கிழக்குப் பகுதியில் இடம்பெற்ற நேரடி தமிழ் இன அழிப்பு சம்பவங்கள் இன்று சர்வதேச ரீதியில் பேசுபொருளாக மாறி சர்வதேச அரசியல் மற்றும் மனித உரிமை அரங்கில் ஒலித்துக் கொண்டிருக்கிறது.இலங்கையில் தமிழர்கள் அதிகம் செறிந்து வாழும் மத்திய மலைநாட்டின் மலையகப் பகுதிகளிலும் தமிழ் இன அழிப்புகள் தொடர்ந்த வண்ணமுள்ளன.
ஆனால் இவை மறைமுகமாக இடம்பெற்று வருகின்றன. மத்திய அரசாங்கத்தின் உதவி ஒத்துழைப்புடன் இந்த இன அழிப்பு இடம்பெற்று வருகின்றமை அதிர்ச்சிக்குரியதாகும்.
மலையகத்தில் கட்டாய கருத்தடை மூலம் இந்த இன அழிப்பு மேற்கொள்ளப்படுகிறது. இந்தக் கட்டாய கருக்கலைப்பு குறித்து மலைய சிவில் அமைப்புக்கள் பல தடவைகள் வலியுறுத்தி வருகின்ற போதும் அதனை அரசியல் தலைவர்கள் கண்டுகொள்வதாக இல்லை.
குறிப்பாக கல்வி அறிவு அற்ற தோட்டப் புறங்களில் இந்த கட்டாய கருத்தடை அதி வேகமாக இடம்பெற்று வருகிறது. இரண்டு பிள்ளைகள் பெற்ற பெண் ஏதோ ஒரு காரணத்தைக் காட்டி கருத்தடைக்கு உட்படுத்தப்படுகிறார்.
இந்த கட்டாய கருக்கலைப்பை உறுதி செய்யும் வகையிலான சம்பவமொன்று அண்மையில் நுவரெலியா மாவட்டத்தின் கந்தப்பளை – கோட்லொட்ஜ் தோட்டத்தில் பதிவாகியுள்ளது.
குளோபல் தமிழ் செய்திகளின் புலனாய்வு செய்தியாளரின் புலனாய்வுபடி….
கந்தப்பளை கோட்லோட்ஜ் தோட்டத்தில் கடந்த செப்டெம்பர் மாதம் 30ம் திகதி தோட்ட நலன்புரி உத்தியோகத்தாரால் அறிவித்தல் ஒன்று விடுக்கப்பட்டுள்ளது. அதாவது ஒக்டோபர் 1ம் திகதி நுவரெலியாவில் இருந்து டெங்கு பரிசோதனைக்கு உடல் நல வைத்திய அதிகாரி வருகிறார் அதனால் அனைவரும் தவறாது சமூகமளிக்க வேண்டும். குறிப்பாக 18 வயதிற்கும் மேற்பட்ட பெண்கள் கட்டாயம் சமூகமளிக்க வேண்டும் என்பதே அந்த அறிவிப்பாகும்.
அதன்படி. ஒக்டோபர் முதலாம் திகதி கோட்லொட்ஜ் தோட்ட சுகாதார நிலையத்திற்கு நுவரெலியாவில் இருந்து உடல் நல வைத்திய அதிகாரிஇ தோட்ட நலன்புரி உத்தியோகத்தர்இ குடும்ப நல மருத்துவ மாது ஆகியோர் சென்றுள்ளனர்.
காலையில் இருந்து நடைபெற்ற இந்த மருத்துவ சிகிச்சையில் பலருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் கந்தப்பளை கோட்லோஜ் தோட்டத்தைச் சேர்ந்த கோட்டை புஸ்பராணி என்ற இரண்டு பிள்ளைகளின் தாயும் சிகிச்சைக்கு சென்றிருந்தார்.
அங்கு குறித்த பெண்ணுக்கு கட்டாய கருத்தடை செய்யப்பட்டுள்ளது. குறித்த பெண் மாதவிடாய் காலத்தில் இருந்துள்ள போதும் அதனையும் கருத்திற் கொள்ளாது கருத்தடை செய்யப்பட்டுள்ளது. மாலை 3 மணிக்கும் 4 மணிக்கும் இடைப்பட்ட காலத்தில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. அதன் பின் வீடு திரும்பிய புஸ்பராணிக்கு விடாது இரத்தக் கசிவு ஏற்பட்டுள்ளது. வந்த அனைவருக்கும் சிறுநீர் பரிசோதனையின் பின் சிகிச்சை செய்யப்பட்டுள்ளது. ஆனால் புஸ்பராணிக்கு சிறுநீர் பரிசோதனை செய்யப்படவில்லை.
அதிக இரத்த ஓட்டம் காரணமாக புஸ்பராணி தனது கணவர் மற்றும் உறவினர்களால் அன்றைய தினம் மாலை நுவரெலியா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார்.
வைத்தியசாலைக்கு கொண்டு செல்லும் வழியில் அவர் நினைவிழந்து மயக்கமடைந்துள்ளார்.
நுவரெலியா வைத்தியசாலையில் அவருக்கு உரிய சிகிச்சை அளிக்கப்பட்ட பின் இரவே அவர் கண் விழித்துள்ளார். கடந்த 5ம் திகதியே குறித்த பெண் வீடு திரும்பியுள்ளார். இந்த சம்பவத்தை அடுத்து கொதிப்படைந்த குறித்த பெண்ணின் கணவர் முதலில் அஞ்சிய போதும் பின்னர் கந்தப்பளை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்தார்.
தனது மனைவிக்கு நேர்ந்த அசாதாரண நிலைக்கு நியாயம் வேண்டி கணவர் நீதிமன்றம் செல்ல முயற்சித்தார். எனினும் கந்தப்பளை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி நேற்றைய தினம் புஸ்பராணி மற்றும் அவரது கணவரை அழைத்து பலவாறு மிரட்டல் விடுத்து நீதிமன்றம் செல்லாது சமரசமாக செல்லுமாறு கோரியுள்ளனர். மேலும் தோட்டத் தலைவர்கள் மூலமும் இவ்விருவரும் அச்சுறுத்தப்பட்டு உள்ளனர்.
எனவே இந்த விடயம் குறித்து உரிய நடவடிக்கை எடுக்க மலையக அரசியல்வாதிகள் எவரும் இதுவரை முன்வரவில்லை. இது குறித்து பல அரசியல் தலைவர்களுக்கும் அறிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக மலையக மக்கள் முன்னணியின் அரசியல்துறை தலைவர்இ பாராளுமன்ற உறுப்பினருமான வி.இராதாகிருஸ்ணனின் பிறந்த ஊர் கந்தப்பளை – கோட்லோட்ஜ் என்பது குறிப்பிடத்தக்கது.
இவ்வாறு மலையகத்தில் வெளிச்சத்திற்கு வராமல் பல கருத்தடைச் சம்பவவங்கள் இடம்பெற்று வருகின்றன. கடந்த முறை இலங்கையில் மேற்கொள்ளப்பட்ட சனத்தொகை கணக்கெடுப்பில் மலையக மக்களின் சனத்தொகையில் வீழ்ச்சி ஏற்பட்டமைக்கு இந்த கட்டாயத் கருத் தடையும் ஒரு மறைமுக காரணம் என்பது தற்போது வெளிச்சத்திற்கு வந்த வண்ணமுள்ளது. இது தொடர்ந்தால் வட கிழக்கிற்கு ஏற்பட்ட நிலை மலையகத்திலும் ஏற்படும் என்பதில் ஐயமில்லை என்ற அபாய செய்தி காத்திருக்கிறது.