நன்றி – டெய்லிமிரர்
வடமாகாண சபை அமைச்சரவையில் அனந்திக்குக்கு அங்கத்துவம் வழங்கவேண்டும்’ என்று பெண்கள் அமைப்புக்கள் தமிழ் தேசியக் கூட்டமைப்பை வலியுறுத்தியுள்ளன. இது தொடர்பாக யாழ்.மாவட்ட பெண்கள் சமாசம், விழுது ஆற்றல் மேம்பாட்டு மையம், மட்டக்களப்பு மாவட்ட பெண்கள் சமாசம், திருகோணமலை மாவட்ட பெண்கள் வலையமைப்பு, புத்தளம் மாவட்ட சூரியன் பெண்கள் கூட்டமைப்பு,திருகோணமலை மாவட்ட அரசியற்கட்சி பெண் உறுப்பினர்களின் குழு, பெண்கள் செயற்பாட்டு வலையமைப்பு, மன்னார் மாதர் அபிவிருத்தி ஒன்றியம் ஆகிய பெண்கள் அமைப்புக்கள் கூட்டாக இணைந்து மகஜர் ஒன்றையும் கையளித்துள்ளனர்.
தமிழ் தேசியக் கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் கட்சிகளின் தலைவர்களுக்கு இடையிலான கூட்டம் நேற்று ஞாயிற்றுக்கிழமை யாழில் நடைபெற்றது. இக்கூட்டத்தின் நிறைவில் நாடாளுமன்ற உறுப்பினரும் கூட்டமைப்பின் ஊடகப்பேச்சாளருமான சுரேஸ் பிரேமச்சந்திரனிடம் இந்த மகஜர் கையளிக்கப்பட்டது.
இம் மகஜரில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,
‘நடந்து முடிந்த வட மாகாண சபைத் தேர்தலில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு சார்பாகப் போட்டியிட்ட அனந்தி சசிதரன்; யாழ்.மாவட்ட பெண்களின் ஏகோபித்த ஆதரவுடன் முதலமைச்சர் வேட்பாளருக்கு அடுத்தபடியாக மிகவும் அதிகமான விருப்பு வாக்குகளைப் பெற்று வெற்றிபெற்றார்.
இந்த வெற்றி அனந்தியினுடையது மட்டுமல்ல. மாறாகஇ பெண்ணொருவருக்கு அரசியல் பிரதிநிதித்துவம் கிடைக்க வேண்டும் என்கின்ற இலட்சியத்துடன் செயற்பட்ட சகல பெண்களினதும் வெற்றியாக நாம் கருதுகின்றோம்.
அனந்திக்கு அனுபவம் போதாதது
அனந்தி பெற்ற விருப்பு வாக்குகள் 87870. அனந்திக்கு அடுத்ததாக வெற்றி பெற்றவர் பெற்றவரின் விருப்பு வாக்குகள் 39715 மட்டுமேயாகும். இந்த நிலையில்; அதிகப்படியான வாக்குகள் பெற்றும்கூட; அனந்திக்கு வடமாகாண சபையின் அமைச்சரவையில் உரிய இடம் வழங்கப்படுவதற்கு பல தடைகள் ஏற்படுத்தப்படுவதாக அறிகின்றோம்.
அனந்திக்கு அனுபவம் போதாது என்றும்; மாவட்ட ரீதியாக அமைச்சுக்கள் பிரித்தளிக்கப்பட வேண்டும் என்றும்; பல காரணங்கள் முன்வைக்கப்படுவதை கேள்வியுறுகிறோம். எமது தேர்தல் பாரம்பரியங்களின்படி அதிகப்படியான வாக்குகள் பெற்றவருக்கே அமைச்சரவை கொடுக்கப்பட வேண்டும் என்பது முடிந்த முடிபு. ஆனால் இங்கோஇ வாக்குகள் பெற்றும் கூட உரிய பதவிக்கு அல்லாடும் நிலைக்குத்தான் பெண்கள் தள்ளப்படுகின்றனர் என்று உணருகின்றோம்.
போரின் தாக்கத்ததை அனுபவித்துகொண்டிருக்கும் பெண்
வட மாகாணத்தின் சனத்தொகையின் 60 வீதத்திற்கு அதிகமானோர் பெண்கள் என்பது உலகறிந்த விடயமாகும். யுத்தத்திற்குப் பிற்பட்ட வடக்கில் பெண்களது அரசியல்இ சமூக; பொருளாதார மற்றும் கலாசார உரிமைகளைக் கட்டியெழுப்பவும்இ தற்போது அதிகரித்துள்ள பெண்கள் மற்றும் சிறுமிகளுக்கெதிரான வன்முறைகளைத் தடுப்பதற்கும்இ யுத்தத்தினால் பாதிப்படைந்துள்ள பெண்தலைமைத்துவக் குடும்பங்களின் மேம்பாட்டிற்கும், போரினால் பாதிக்கப்பட்ட. அதனது தாக்கத்தை இன்றுவரை அனுபவித்துக் கொண்டிருக்கின்ற பெண் என்ற ரீதியில் அனந்தியின் பிரதிநிதித்துவம் பெண்கள் சமூகத்திற்கு இன்றியமையாத ஒன்றாகும்.
மக்களின் பிரதிநிதித்துவத்தினை உறுதி செய்வதன் மூலம் அவர்களின் தேவைகளைக் கவனித்தல், சம வாய்ப்புக்களை வழங்குதல், நல்லாளுகை போன்ற கொள்கைகளின் அடிப்படையில் ஆட்சிக்கு வந்த தமிழ் தேசியக் கூட்டமைப்பு வட மாகாணசபையின் நிறைவேற்றுக் குழுவில் பெண்களின் பிரதிநிதித்துவத்தினை உதாசீனம் செய்ய முடியாது.
அனந்தி பெரும் எண்ணிக்கைகளில் வாக்குகள் பெற்றிருப்பது ஏனைய காரணிகளைப் பிள்தள்ளக்கூடிய அனுகூலத்தினைக் கூட்டமைப்பிற்குக் கொடுக்கின்றது. தாம் ஆணாதிக்கக்கொள்கையை ஆதரிப்பவர்கள் அல்லர் என்று மக்களிடம் நிறுவவேண்டிய கடமை அதற்கு இருக்கின்றது.
அனந்தி வட மாகாண சபையில் இதுவரை பெண்களின் ஒரே குரலாக ஒலித்திருக்கின்றார். அது மட்டுமல்லாது யுத்தத்தினால் சின்னாபின்னப்படுத்தப்பட்ட எமது சமூகத்தின் முக்கிய பிரச்சினையான காணாமற்போனோரின் நிலை பற்றித் தனது உயிரையும் துச்சமாக மதித்து இலங்கை அரசாங்கத்துடன் போராடும் ஒரு பெண்ணாகவும் விளங்குகிறார்.
இனிவருங்காலங்களில், போரில் தமது அன்புச் செல்வங்களைப் பறிகொடுத்தோருக்கான இடைக்கால நீதி வழங்கப்படவேண்டி ஏற்படும் சந்தர்ப்பங்களில் அனந்தி போன்றவர்களின் பிரசன்னம்தான் அங்கு மிகப் பிரதானமாகத் தொழிற்படப் போகின்றது.
மாகாணசபையில் முதல் பெண் அமைச்சர்
எல்லாவற்றிற்கும் மேலாகஇ முதன்முறையாக ஒரு மாகாண சபையின் அமைச்சரவையில் பெண்களின் பிரதிநிதித்துவம் வரக்கூடிய சாத்தியக்கூறுகள் தோன்றும் சந்தர்ப்பத்தில் அதனை நிராகரிப்பது பெண்கள் சமூகத்தினையே அவமதிப்பதற்குச் சமனாகும் என்று நாங்கள் கருதுகின்றோம்.
எனவேஇ வட மாகாண சபையின் அமைச்சரவையில் அனந்தி இடம்பெற வேண்டும் என்னும் கோரிக்கை வட மாகாணப் பெண்கள் அனைவரினதும் நியாய பூர்வமான குரலாக ஒலிக்கின்றது. எமது அரசியல் தலைவர்கள் இக்கோரிக்கைக்கு செவி சாய்த்து நியாயம் வழங்குவார்கள் என்று நம்புகின்றோம்’; எனறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மகஜரினை பெற்றுக்கொண்ட நாடாளுமன்ற உறுப்பினர்இ பெண்களை கௌரவிக்கும் வகையில் எமது அடுத்த போனஸ் ஆசனத்தை பெண் ஒருவருக்கு வழங்கியிருக்கின்றேர்ம் என்றும் இந்த கோரிக்கை தொடர்பில் கட்சித் தலைமைகளின் கவனத்திற்கு கொண்டு வருவதாகவும் தெரிவித்தார்.