சௌந்தரி(அவுஸ்திரேலியா)
கடிதம் எழுதுவதால் தகவல்கள் மட்டும் பரிமாறிக் கொள்ளப்படுவதில்லை. கடிதம் என்கின்ற இலக்கிய மொழியினூடாக ஆழமான மனித உணர்வுகளும் சேர்ந்து பயணிக்கின்றன. கடிதம் என்பது மிகவும் அழகான ஓர் தொடர்பாடல் முறை. கடிதம் எழுதுவதன் மூலம் எமது மொழியின் வளம் மேலும் செம்மைப் படுத்தப்படுகின்றது. புதிய புதிய சொற்றொடர்களை பயன்படுத்தி அழகான வாக்கியங்களை உருவாக்கி தரமான கடிதங்களை எழுத பழகிக் கொண்டோமென்றால் கதை கட்டுரை நாவல் என்று எமது சிந்தனையும் விரிவடையும்.
ஆனால் இன்று கடிதம் எழுதும் பழக்கம் மருவி வருகின்றது. மனித ஆசைகளை ஆதங்கங்களை அழுகையை ஆளுமையை பகிர்ந்து கொண்ட ஓர் ஊடகத்தின் முக்கியத்துவம் குறைந்து வருகின்றது. கடிதத் தொடர்பாடல் மூலம் உருவாகும் உணர்வு ரீதியான தொடர்பு இன்று காணாமல் போய்விட்டது. தொழில்நுட்ப முன்னேற்றம் எமது வாழ்கை முறையை சுலபமாக்கியிருப்பது ஒரு விதத்தில் சந்தோசமாக இருந்தாலும் அன்றாடம் பரிமாறிக்கொண்ட ஆத்மார்த்தமான உணர்வுகளை மழுங்கடிக்கப் பண்ணியது வேதனையான விடயமாகும்.
முன்பெல்லாம் பக்கம் பக்கமாக கடிதம் எழுதுவேன். இப்போது எனது தாய்க்கு கடிதம் எழுதவேண்டும் என்று நினைத்தாலே எதை எழுதுவது என்ற யோசனை. தொலைபேசியில் இரண்டு வார்த்தைகளைப் பேசுவது சுலபமாகத் தெரிகின்றது. அதுவும் வேலையில் இருந்து வீடு திரும்புகின்றபோது காருக்குள் இருந்து மொபைல் தொலைபேசியில் அழைப்பெடுத்து கதைத்தால் நேரத்தை மிச்சம் பிடிக்கலாம் என்று பெருமையாக நினைக்கத் தோன்றுகின்றது.
அவசரமான உலகத்தில் வாழ்வதால் எத்தனை அரிய விடயங்களை இழந்து கொண்டிருக்கின்றோம். எங்கு பார்த்தாலும் அவசரம். ஆலயத்திற்கு சென்றாலென்ன மருத்துவமனைக்கு சென்றாலென்ன விழாக்கள் மற்றும் சிறப்பு நிகழ்வுகளுக்கு சென்றாலென்ன எதிலும் எப்போதும் அவசரம்தான் பொங்கி வழிகின்றது. சிறியவர்கள் பெரியவர்கள் என்ற பேதமின்றி எல்லோரும் அவசரமென்ற பிடிக்குள் சிக்கிக் கொண்டிருக்கின்றோம்.
ருசித்து சுவைக்க வேண்டிய வாழ்க்கையை நஞ்சை விழுங்குவது போன்று மென்றி விழுங்கிக் கொண்டிருக்கின்றோம். ஏன் இந்த மாற்றம் எதை அடைவதற்காக இத்தனை இழப்புகள். இழப்புக்களென்று தெரிந்தும் அவற்றை ஏற்றுக்கொண்டு சலனமற்றிருக்கின்றோம்
பக்கம் பக்கமாக கடிதம் எழுதிய காலம் மாறி வாழ்த்து அட்டைகளை கைபடத் திறந்து குதூகலித்த காலம் மாறி குறும் செய்திகளும் தொலைபேசிக் குறிப்புகளுமாக வாழ்க்கை ஓடிக் கொண்டிருக்கின்றது. பொறுமையாக கடிதமெழுதி அழகான கையெழுத்தில் முகவரி எழுதி முத்திரை ஒட்டி பக்குவமாக அஞ்சல் செய்யும் நிலைமை இன்று காணாமலே போய்விட்டது.
காகிதத்தில் எழுதிய வார்த்தைகளை அனுபவிக்கின்ற சுகம் இப்போது பாவனையில் இருக்கின்ற மின் அஞ்சல் மூலமாக கிடைக்கின்றதா? முன்பெல்லாம் பிறந்தநாள் திருமணநாள் பொங்கல் தீபாவளி போன்ற தினங்களுக்கு நண்பர்கள் உறவினர்களிடமிருந்து வாழ்த்து அட்டைகள் வீடுவந்து சேரும். அவற்றிற்கு நாம் கொடுத்த முக்கியத்துவம் மதிப்பு என்பனவற்றை வார்த்தைகளால் சொல்லி முடியுமா?
இன்று நாம் எதற்கும் முக்கியத்துவம் தருவதில்லை. நேசம் பாசம் நட்பு காதல் என்று எதைப்பற்றியும் அலட்டிக் கொள்வதில்லை. எல்லாமே நிலையற்றது என்ற உணர்வு சிந்தனையில் பதிந்துவிட்டதோ என்னவோ கண்டதே காட்சி கொண்டதே கோலம் என்ற வகையில்தான் வாழ்க்கை ஓடுகின்றது.
உறவுகளோடு தொடர்பு கொள்வதற்குக்கூட காரணத்தைத் தேடுகின்றோம். தேவை ஏற்படாத பட்சத்தில் யாரும் யாரையும் பார்க்கவோ பேசவோ விரும்புவதில்லை. இந்த பக்கம் வந்தேன் உங்களையும் ஒருக்கால் எட்டிப் பார்த்துவிட்டுப் போவோம் என்று உரிமையோடு கூறிக்கொண்டு யாரும் யார் வீட்டிற்கும் செல்வது கிடையாது. தான் உண்டு தன் வேலையுண்டு என்ற சிந்தனையில் ஒருவரையொருவர் நினைத்துக் கூடப் பார்க்காது அவரவர் தத்தமது வாழ்க்கையை வாழ்ந்து கொண்டிருக்கும் ஓர் இயந்திரத்தனமாக நாம் மாறிவிட்டோம்.
எத்தனை வகையான கடிதங்கள். தாய் தனது பிள்ளைகளுக்கு எழுதும் கடிதம் பாசத்தை வெளிப்படுத்துவதாகவும் தந்தை தனது மகனுக்கு அறிவுரைகளை எழுதிக் குவிப்பதாகவும் நண்பர்கள் அந்தரங்க விடயங்களை உரிமையோடு பரிமாறிக்கொள்வது போன்றும் காதலர்கள் கடிதங்கள் மூலமாக தமது இச்சைகளைஇ வாக்குறுதிகளைஇ பொய்களைஇ பெருமைகளை பரிமாறிக்கொள்வதாகவும் எத்தனை எத்தனை வகையான கடிதங்கள்.
அன்புள்ள என்று ஆரம்பித்து நீ நலமா நான் நலம் என்று தொடர்ந்து இலக்கண இலக்கியத்துடன் கடிதங்கள் எழுதப்படவேண்டும் என்று தமிழிலும் ஆங்கிலத்திலும் சிறுவயதில் எங்களுக்கு சொல்லிக் கொடுத்தார்கள். இப்போது நான் காகிதத்தில் கடிதம் எழுதுவதேயில்லை. கணணியில் நேரடியாகவே தமிழில் எதை எழுதவேண்டுமோ அதை எழுதிவிடுவேன். பேனாவினால் காகிதத்தில் எழுதாமல்விட்டு எனது எழுத்துக்கள்கூட ஒழுங்காக வருவதில்லை. எத்தனை வருடங்களாகி விட்டன அன்பான ஓர் கடிதம் எழுதி.
புலம்பெயர்ந்தபோது கொடூரமான கெடுபிடிகளுக்கு மத்தியிலும் அலுமாரியின் மேல்தட்டிலும் கட்டிலுக்கு அடியிலும் ஒளித்து வைத்த சில கடிதங்களையும் வாழ்த்து அட்டைகளையும் புகைப்படங்களையும் கவனமாக என்னோடு எடுத்துக்கொண்டு வந்தேன். நேரம் கிடைக்கும் போதெல்லாம் அவற்றைத் திரும்பவும் எடுத்து வாசிக்கின்றபோது மனதுக்கு ஆறுதலாக இருக்கும். அவற்றை வாசிப்பதன் மூலம் அன்பைத் தெரிவித்தவர்களின் வாசத்தை மீண்டும் சுவாசிக்கக் கூடியதாக இருந்தது. இன்று அந்தக் கடிதங்களும் என்னோடு இல்லை நிகழ்கால இறுக்கங்களை தளர்த்துவதற்கு அந்த நினைவுகளும் என்னோடு இல்லை. காலம் எப்படி மாறிப்போய்விட்டது.
சிறுவயதில் எனது மாமாமார் என்னை அடிக்கின்றபோது அவர்களைத் திட்டித்தீர்க்கும் வகையில் கடிதம் கடிதமாக எழுதுவேன். அதன்பின்பு அவற்றை கட்டில் மெத்தைக்கு கீழ் வைத்துவிடுவேன். பின்பு நீண்ட நாட்களுக்குப்பின் அவற்றை மீண்டும் எடுத்து வாசித்து சிரித்துக் கொள்வேன்.
நீங்கள் முன்பு எழுதிய கடிதங்கள் உங்கள் கைவசம் இருந்தால் அவற்றை மீண்டும் தூசிதட்டி வாசித்துப்பாருங்கள். பல சுவாரசியமான விடயங்களை அவை உங்களோடு பேசும். நீங்கள் அனுபவித்த அழகான நாட்களை மீண்டும் உங்கள் மனதில் மலரச் செய்யும்.
தொடர்பாடல்கள் மிகவும் துரிதமாகவும் பல்வேறு வடிவங்களிலும் எளிதாகவும் கிடைக்கின்றபோது கடிதம் எழுதுகின்ற தேவை குறைந்துவிட்டது. என்னைப் பொறுத்தவரையில் கடிதம் எழுதுவது அறவே நின்றுவிட்டது என்றே கூறலாம்.
இன்று என்ன சமையல் அம்மா என்று ஈழத்தில் இருக்கும் எனது தயாருடன் நினைத்த மாத்திரத்தில் பேசக்கூடியதாக இருக்கின்றபோது கடிதம் ஏன் எழுதவேண்டும் என்ற எண்ணம் ஏற்படுகின்றது.
பொதுவாக வெளிநாட்டில் இருந்து மகளிடம் இருந்து வருகின்ற கடிதம் ஒரு தாய்க்கு தனது மகளாகவே தோன்றும். அந்த கடிதங்களை வருடுகின்றபோது வாசிக்கின்றபோது தனது மகளின் தலையை கோருவது போன்ற உணர்வை ஓர் தாய்க்கு கொடுக்கும்.
கடந்த சில வருடங்களுக்கு முன்புகூட எனது தாயார் எனக்கு தனது கைபட கடிதம் எழுதுவார். நானும் ஆசையோடு அவருக்கு பதில் எழுதுவேன். இப்போது வீட்டில் தொலைபேசி இணைப்பு வந்துவிட்ட காரணத்தால் கடிதப் பரிமாற்றம் நின்றுபோய்விட்டது. இரண்டு நாட்களுக்கு ஒரு தடவை அழைப்பெடுத்து பேசிக்கொள்வேன். நேரடியாக சில விடயத்தை சொல்லமுடியாமல் இருக்கும். அவை என்றுமே சொல்லப்படாதவையாகவே இருந்து அழிந்துவிடும்.
எனக்கு அழுகின்ற மனிதர்களைப் பிடிக்காது. அம்மாவோ இரு பிள்ளைகளும் தன்னோடு இல்லை என்ற ஏக்கத்தில் வாழ்ந்து கொண்டிருக்கின்றாஇ அவருக்கு தனது மனக்குறைகளையெல்லாம் சொல்லி ஆறவேண்டும் போல் தோன்றும் ஆனாலும் கொஞ்ச நேரம் பேசப்போகும் தொலைபேசியில் அவற்றை சொல்லிவிடமுடியாது என்று நினைப்பதாலோ என்னவோ எல்லாவற்றையும் மனசுக்குள்ளேயே வைத்து மேலோட்டமாக பேசுவா. அம்மா சும்மா இருக்கிற நேரத்தில் எனக்கு கடிதம் எழுதுங்கோ என்று கேட்டாலும் எழுதமாட்டாஇ ஏன் என்று புரியவில்லை.
இப்படியாக மனிதர்கள் தேக்கி வைத்திருக்கும் அன்பும் பாசமும் பகிரப்படாமலே தொலைந்து போய்விடப்போகின்றதே என்ற ஏக்கம் கால ஓட்டத்தோடு அதிகரித்துக் கொண்டே போகின்றது.
கடிதம் எழுதுவதற்கு ஒரு தனியான மனநிலை தேவை என்று சிலர் சொல்வார்கள். என்னைப் பொறுத்த வரையில் சில மணிநேரங்கள் எனக்கு கிடைக்குமென்றால் அழகான ஒரு கடிதம் என்னால் எழுதமுடியும். அந்த நேரத்தில் உள்ள மனநிலையைப் பொறுத்து அக் கடிதத்தின் வடிவம் உருவம் எடுக்கும். அநேகமாக புலம்பெயர்ந்தபின்பு கடிதம் எழுதுகின்றபோது ஏக்கம்தான் அதிகமாக பிரதிபலிக்கும்.
காதல் கடிதங்களை வாசித்து அனுபவித்தவர்கள் அந்த கடிதங்கள் மூலம் பரிமாறிக்கொண்ட ஸ்பரிச உணர்வுகளை வார்தைகளால் வகைப்படுத்திவிடமுடியாது. நான் அதிகமாக எழுதியது காதல் கடிதங்களேஇ அழகான காதல் கடிதங்கள்இ நேரம் போவது தெரியாமலே எழுதிக் கொண்டிருப்பேன். அன்பும் பாசமும் கலந்த எனது கடிதங்களை வாசித்தால் எனக்கே என்மீது காதல் அதிகமாகும். வெறும் புகழ்ச்சிக்காகவோ உண்மைக்கு புறம்பாகவோ எதையும் எழுதுவதில்லை. அந்த நேரத்தில் நான் எதை அனுபவிக்கின்றேனோ அதை எழுதுவேன். எழுதிய காலத்தில் அவை உண்மையானவை. பின்பு கால ஓட்டத்தில் நான் நினைத்தவை கணித்தவை பொய்யாகியதும் உண்டு. ஆனால் அதற்காக நான் வருத்தப்பட்டதில்லை. சந்தர்ப்பங்களை சந்திக்கும்வரை யாரையும் முழுமையாக புரிந்து கொள்ளமுடியாதல்லவா.
எனது தந்தையார் பாடசாலை அதிபராக இருந்தார் அதனால் அவருக்கு தவறாமல் ஒவ்வொரு நாளும் கடிதங்கள் வந்த வண்ணமே இருக்கும். வீட்டில் எனக்கு எந்த வேலையும் ஒதுக்கப்படவுமில்லை யாரும் என்னை வேலை செய்யும்படி கேட்பதுமில்லை ஆனால் நானாக தேர்ந்தெடுத்த வேலை தபால்காரன் மணியடித்ததும் ஓடிச்சென்று கடிதங்களை பெற்றுக்கொள்வது. மணிச்சத்தம் கேட்டால் யாரும் வீட்டு வாசலுக்கு செல்லமாட்டார்கள். நான் வாசலுக்கு சென்று கடிதம் வாங்கும் வரை தபால்காரனும் மணியடித்துக் கொண்டேயிருப்பார். சுநபளைவநச Pழளவ ல் வரும் கடிதங்களுக்கு கையெழுத்திட்டு அவற்றைப் பெற்றுக்கொள்வது என்பது பெரியவிடயமாகத் தோன்றும்.
பின்பு ஆளும் வளர்ந்து வயசும் வளர்ந்து ஆசைகளும் வளர எனக்காக வரும் கடிதங்களுக்காக காத்திருக்கின்ற நிலையேற்பட்டது. எனக்கு வரும் கடிதங்களை சுலபமாக மற்றவர்கள் கைகளுக்கு செல்லாது என்னால் காப்பாற்றிக் கொள்ளமுடிந்தது. வருகின்ற கடிதங்களை பலமுறை திரும்பத் திரும்ப வாசிப்பது சில நாட்கள் கடிதம் வராமல் போனால் ஏமாற்றத்தை தாங்கமுடியாமல் தவிப்பது மறுநாள் காலை தபால்காரன் மணியடிக்கும் வரை ஏதோவொன்றை இழந்ததுபோல் இருப்பது இவற்றை இப்போது நினைக்கையில் எல்லாமே கடந்தகாலத்தின் அழகிய சுவடுகளாகவே தோன்றுகின்றன.
அப்பாவின் மேசையில் கடிதங்களை வைப்பதெற்கென்று அழகான ஒரு சிறிய பெட்டி இருக்கும். அவற்றுக்குள் சில கடிதங்கள் திறக்கப்படாமலே இருக்கும். அப்பாவிற்கு வரும் கடிதங்கள் அநேகமாக வேலை சம்பந்தமான கடிதங்கள் என்று எல்லோருக்கும் தெரியும் அதனால் அதை திறந்து அதற்குள் என்ன இருக்கின்றது என்று பார்க்கவேண்டும் என்று யாரும் நினைப்பதில்லை. சில கடிதங்களை பார்த்தவுடன் அப்பாவுக்கும் தெரிந்துவிடும் எங்கிருந்து வருகின்றதென்று அவரும் அவற்றை வாசிப்பதற்கு முயற்சி எடுக்கமாட்டார். அவை சில வேளைகளில் நிறம்; வெளிறி எழுத்து மங்கி காய்ந்து கொண்டிருக்கும் அதை நினைக்கும் போது இப்போது எனது தாபால் பெட்டிக்குள் தூங்கிக் கொண்டிருக்கும் மின்சாரம் தண்ணீர் தொலைபேசி மற்றும் இதர பில்லுகள்தான் ஞாபகத்துக்கு வருகின்றது.
இப்போதெல்லாம் நான் கடிதங்களை எதிர்பார்ப்பதேயில்லை. வருகின்ற கடிதங்கள் கூட கட்டணங்களை ஞாபகப்படுத்துவதாகவும் தமது பொருட்களை விற்பதற்கான வியாபார விளம்பரங்களாகவும்தான் இருக்கின்றன.
கடிதம் எழுதும் போது அழுது கொண்டு எழுதுவதும் பிடிக்கும். அப்படியாக எழுதி முடித்ததும் பெரிய ஆறுதலாகவிருக்கும். திரும்பவும் அந்த கடிதத்தை வாசித்தேன் என்றால் அனுப்ப மனம் வராது கிழித்துவிடுவேன். சில வேளைகளில் வாசித்துப் பார்க்காமல் அப்படியே அனுப்பிவிட்டு பின்பு கவலைப்படுவேன். இப்படியாக எழுதிவிட்டேனே இதன் விளைவுகள் எப்படி இருக்கப்போகின்றனவோ என்று வேதனைப்;படுவேன்.
சொல்வதற்கு ஏகப்பட்ட விடயங்கள் இருக்கின்றன. ஒன்று மட்டும் உண்மை கடிதம் தரும் அந்தரங்க உணர்வை நாம் இன்று இழந்துவிட்டோம். இப்போதெல்லாம் தொலைபேசி மூலம் உறவுகள் என்ன செய்து கொண்டிருக்கின்றார்கள் என்பதை அறிந்து கொண்டு எங்கள் வேலையில் கவனத்தை செலுத்துகின்றோம். பிரிவுத் துயரோ அதன் மூலம் ஏற்படுகின்ற ஏக்கமோ இன்று இல்லவேயில்லை. இ மெயிலின் மூலம் உடனுக்குடன் தொடர்பு கொள்கின்றோம். சிறிது தாமதம் ஏற்பட்டால் உடனே தொலைபேசியில் அழைப்பெடுத்து விசாரித்துக் கொள்கின்றோம். அதுவுமில்லை என்றால் உடனே குறுஞ்செய்தி பேஸ்புக் ருவிட்டர் என்று எத்தனையோ.
இன்றெல்லாம் யாரும் யாருக்காகவும் காத்திருக்கவே தேவையில்லை. காத்திருப்பே இல்லாதபோது எதற்காக கவலைப்படவேண்டும். ஒருவருக்காக கவலைப்படுவது அவரைக் காணாமல் ஏக்கம் கொள்வது பிரிவையெண்ணி கண்ணீர் விடுவது எல்லாமே ஒரு உணர்வு பூர்வமான செய்கைகள் அல்லவா? அவற்றை மீண்டும் அனுபவிக்கவேண்டும் என்ற ஏக்கம் இப்போது மிஞ்சியிருப்பதும் உண்மையல்லவா?
எமக்கு விருப்பானவர்களை பிரிந்து தனியாக இருக்கும் போதுதானே அவர்களைப்பற்றி அதிகமாக நினைத்து அவர்களது அருமையை உணர்ந்து கொள்ளமுடியும். ஆனால் அந்த பிரிவுக்கான சந்தர்ப்பமே இப்போது கிடைப்பதில்லையே. 5 நிமிடத்திற்கு ஒரு தடவை தொலைபேசியில் அழைப்பெடுத்து என்ன செய்கிறாய் எங்கேயிருக்கிறாய் என்று கேட்கின்றபோது இது என்ன பொலீஸ் வேலையா எதற்காக இப்படிக் கண்காணிக்கின்றோம் என்று எரிச்சல்படத் தோன்றுகின்றது.
முன்பெல்லாம் நெருங்கிய உறவினர்கள் ஊர்விட்டு ஊர் போகும் போது அவரோடு ரயில் நிலையங்களுக்கோ பஸ்தரிப்பு இடங்களுக்கோ சென்று அவரை வழியனுப்பி கண்ணீரோடு திரும்பும் எத்தனையோ நிகழ்வுகள் ஏற்பட்டதுண்டு. இப்போது காரிலேயே கொண்டு சென்று விமான நிலையத்தில் இறக்கிவிட்டு காருக்குள் இருந்தபடியே ர்யஎந ய ளுயகந வுசip என்ற வாழ்த்திவிட்டு அப்படியே ரு வுரசn எடுத்து வீடு நோக்கி சென்று கொண்டிருப்பேன். சில நிமிடங்களின்பின் அழைப்பெடுத்து எல்லாம் சரியா என்று கேள்விவேறு. தொழில் நுட்பத்துடன் சேர்ந்து நாமும் நன்றாக வளர்ந்துவிட்டோம். நெருக்கமும் உறவும் கசப்பும் வெறுப்பும் விரோதமும் பகைமையும் எல்லாமும் குறைவாகவும் நிறைவாகவும் வளர்ந்துவிட்டன.
இப்போதெல்லாம் மனிதர்கள் தமது சகமனிதர்களின் உறவுகளை நேசத்தை பாசத்தை புறக்கணிப்பதால் அவர்கள் வெறுமைக்குள் வாழ்வதை காணக்கூடியதாகவிருக்கின்றது. அதுமட்டுமல்ல இன்றைய காலத்தில் பிரிவு ஏக்கம் போன்ற உணர்வுகளை அனுபவிக்காத காரணத்தாலோ என்னவோ தொடர்ந்து சேர்ந்திருப்பது போன்ற உணர்வும் தொடர்ந்து சந்தித்துக் கொள்வது போன்ற உணர்வும் அதிகரிப்பதினால் மிக விரைவில் உறவுகளிற்கிடையில் சலிப்புத் தட்டுகின்ற தன்மையும் ஏற்படுகின்றது.
முன்பு என்னோடு நிறைய நண்பர்கள் இருந்தார்கள். அவர்களுக்கு நிறைய கடிதங்கள் எழுதியிருக்கின்றேன். அதுமட்டுமல்ல பேனா நண்பர்களும் இருந்தார்கள். எனது கையெழுத்தும் நன்றாக இருந்ததாலோ என்னவோ பக்கத்துவீட்டுத் தாத்தா தனக்கு கடிதம் எழுதித்தரும்படி என்னை அடிக்கடி கூப்பிடுவார். கடிதத்தின் மீது முத்திரை ஒட்டும் போது முத்திரைக்கு எச்சில் போட்டு ஒட்டக்கூடாது என்று தாத்தா கூறுவார். முத்திரைக்கு பின்னால் தடவியிருக்கும் பிசின் போன்ற பசை உடல்நலத்திற்கு கெடுதல் விளைவிக்குமென்றும் தண்ணீரில் தடவி ஒட்டும்படியும் கூறுவார். அதை நான் செவிமடுத்ததாக எனக்கு ஞாபகமில்லை.
இன்று எல்லாம் கடிதங்கள் என்பது வெறும் விண்ணப்பங்களாகவும் வேலை சார்ந்தவையாகவும் தேவை கருதியும் மாறிவிட்டன. கடிதம் எழுதும் கலையானது எமது தலைமுறைபோடு இல்லாதொழிந்து அடுத்த தலைமுறைக்கு வெறும் காட்சிப்பொருளாக மாறிவிடும் என்ற நிலையை எண்ணும்போது வருத்தமாக இருக்கின்றது
சில கடிதங்களை ஒருதடவை படித்து செய்தியை அறிந்துவிட்டு பின்பு நேரம் கிடைக்கும் போது ஆறுதலாக இருந்து மீண்டும் வாசித்து இரைமீட்பது என்பது மனநிறைவையும் அளவில்லா ஆனந்தத்தையும் அள்ளித்தரும். வரிவரியாக அழகான கையெழுத்துக்களில் உள்ளத்தில் உள்ளதையெல்லாம் வார்த்தைகளாக கொட்டி எழுதிய காலங்கள் கரையேறிப்போய்விட்டன. இப்போது உயிரற்ற நான்கு வார்த்தைகளை மின் அஞ்சலில் எழுதிவிட்டு வுயமந ஊயசந டீலந என்று முடித்துவிடுகின்றோம்.
முகம் தெரிய விரும்பாத புரிந்துணர்வுடைய பரந்த சிந்தனையுடைய ஒரு நண்பருடன் என் மனதில் இருக்கின்ற எல்லாவற்றையும் கடிதமூலம் எழுதவேண்டும் அவரது பதில் எனக்குள் இருக்கின்ற ஏக்கங்களை ஏதாவது ஒரு வகையில் நிரப்புகின்றதா என்று பார்க்கவேண்டும் என்று அடிக்கடி நினைப்பதுண்டு. ஆனால் அதற்கான சந்தர்ப்பம் சரியாக இன்னும் அமையவில்லை.
முன்பெல்லாம் எனது தந்தையார் வீட்டிற்குள் நுழையும்போதே எனக்கு ஏதாவது கடிதம் வந்ததா என்று கேட்டவண்ணமே வருவார். இப்போது எந்த எதிர்பார்ப்புமே இருப்பதில்லை.
நாட்கள் ஓடிக்கொண்டிருக்கின்றது. எனக்கும் ஓர் கடிதம் வரவேண்டும் அவற்றை இரண்டு மூன்று தடவை வாசித்து மகிழவேண்டும். நானும் எனது அழகிய கையெழுத்தில் அந்தக் கடிதத்திற்கு பதில் அனுப்பவேண்டும் என்பது எனது சின்ன சின்ன ஆசைகளில் ஒன்று