எஸ்.பாயிஸாஅலி
.கருமை
அகல மேசையின்நடுவிலே
பின்புறம் சிவப்புரசம் பூசப்பட்ட வட்டவட்டக் குழிவாடிகளும்
மெல்லிய குண்டூசிகளுமாய் தொடங்கிற்று
ஒளியியல் தொடர்பான அச்செயற்பாடு.
குற்றுவதும் பிடுங்குவதும்
இடமாற்றி மாற்றி ஆடிகளை நடுவதுமாய்
நட்சத்திரங்களுக்குள் நானுமொன்றாய்……….
பஞ்சுமேகங்களுக்குள் விரைகிற இன்னுமொரு துண்டுமேகமாய்
மாறிப்போகும் பொழுது அது.
ஆடியில் தற்செயலாய் ஒட்டிப்பிரிந்த பெருவிரலின்
பெருப்பிக்கப்பட்டநகவிடுக்கினில்
அப்பிக் கிடந்தஅழுக்கின் கருமை
விழிகளை சட்டென உலுக்கிட
தொப்பென வீழ்கையில்…….
நடுக்கங்களோடுதான் ஞாபகங்கொள்கிறேன்
அவசரஅவசரமாய் சமைக்கக்கழுவிய கறிச்சட்டியை…….
இது வானமல்ல என்பதை…..கூடவே…. நான் யாரென்பதை.
2.பட்டுப்போன்ற சொற்கள்
மரத்துப்போன விழிகளுக்குள் உயிரூற்றினாய்.
இறுகிய செவித்துளைகளை
பட்டுப்போன்ற சொற்களால் துடைத்து விட்டாய்.
தூக்கம் தொலைந்த பொழுதொன்றில்
உன் தோள்களையே
குளிர்ந்த இலைகள் செறிந்த கிளையாக்கினாய்.
இருண்ட காற்றுப் புகாத சிறுஅறைக்குள்
உன் அன்பின் வரிகள்
காற்றாய் கதிராய் பரவிற்று.
இன்னும்,
மண்ணுக்குள் வேரென இறுகித் தொலைந்த
பாதங்களைப் பூஞ்சிறகுகளாய் மாற்றினாய்.
அன்பின் மிகையோடு
அச்சிறு கூழாங்கல்
ஒரு பறவையாகி சிறகசைக்கத் தொடங்குகையில்
அது முட்டிமோதிச் சிதையட்டுமென்றா
கரடுமுரடான சுவரொன்றினை வானளவுக்குமாய்
எழுப்பிவிட முனைகிறாய்,