நொறுங்கும் மதச்சட்டங்கள்!! புதிய தடங்களில் நீதியின் பயணம்!!

 -ஓவியா

‘பொய்யும் வழுவும் தோன்றிய பின்னர் அய்யர் யாத்தனர் கரணம் என்பர்’ என்பது திருமணம் தோன்றிய வரலாற்றின் துவக்க நாட்களைக் குறிக்கிற தொல்காப்பியப் பாடல்.  ஓர் ஆணும் பெண்ணும் பழகிய பின் அதனை மறுத்து பிரிந்து விடுவதை அல்லது அதில் யாராவது ஒருவர் ஏமாற்றப்படுவதைத் தடுப்பதற்கான சடங்காக தோன்றிய திருமணம் பல்வேறு மதங்களாலும், சாதிகளாலும் வேறுபட்ட சடங்குகளும் அடையாளங்களும் கொண்டதாக சமூகத்தில் மாறி விட்டது. ஒரு கட்டத்தில் அந்த சடங்குகள் இல்லாமல் அதனை நிறைவேற்றுவதற்காக பூசாரி வகுப்பும், புனிதப்படுத்தும் மந்திரங்களும் இல்லாமல் ஒரு திருமணம் ‘திருமணமாக’ அங்கீகரிக்கப் படாது என்ற நிலை ஏற்பட்டு விட்டது.  மதம், சாதி, சடங்குகள் இவற்றைத் தாண்டி ஒரு திருமணம் நடக்க முடியாது அவ்வாறான திருமணமன்றி ஓர் ஆணும் பெண்ணும் இணைந்து வாழ முடியாது என்ற நிலை வெகுகாலமாக நிலை பட்டு விட்டது. 

இப்படி மதச் சடங்குகளுக்குள்ளும், புரோகித தலைமைக்குள்ளும் சிறைப்பட்ட தமிழர்களின் வாழ்க்கையை மீட்கும் விதமாகத்தான் நமது தலைவர் பெரியார், சுயமாரியாதைத் திருணத்தை அறிமுகப் படுத்தினார். சுயமரியாதைத் திருமணம் 1967 ல் அறிஞர் அண்ணாவால் சட்டமாக்கப் படும் வரையிலும் 1928 லிருந்து சுயமாரியாதைத் திருமணம் செய்து கொண்ட எண்ணற்ற கருஞ்சட்டைத் தொண்டர்கள் சட்ட அங்கீகாரமில்லாத வாழ்க்கையைத்தான் ஏற்றுக் கொண்டிருந்தார்கள். சமூகத்தில் வைப்பாட்டி நிலையில் அந்தப் பெண் வீராங்கனைகளும், தங்கள் சொத்துரிமை மற்றும் வாரிசுரிமையக் கோர முடியாமல் அந்த கருஞ்சட்டை வீரர்களும் தங்கள் வாழ்க்கையை போராட்டக் களமாக மாற்றிக் கொண்டு வாழ்ந்ததார்கள்.  ‘சுயமரியாதைத் திருமண சட்டம்’ இந்த நிலைக்கு முற்றுப்புள்ளி வைத்தது.  இதன்பின் வெகு காலம் கழித்து அகில இந்திய அளவில் சிறப்பு திருமண சட்டம் நிறைவேற்றப் பட்டது.  இந்தத் திருமணச் சட்டத்தின் மூலமாகவே மத மறுப்பு திருமணங்கள் செல்லுபடியாகும் நிலை வந்தது.  இவ்வாறாக, ‘சாதி’ ‘தாலி’ மறுப்பு திருமணங்களுக்கான (வேறுபட்ட சாதியினர் கலப்பு மணம் புரிதல்) அங்கீகாரத்தை சுயமரியாதைத் திருமணச் சட்டமும், மத மறுப்பு திருமணத்திற்கான அங்கீகாரத்தை (வேறுபட்ட மதத்திலுள்ளோர் திருமணம் செய்தல்) சிறப்பு திருமணச் சட்டமும் வழங்கின.

இந்த புதிய சட்டங்களைத் தொடர்ந்து பல புரட்சிகரமான தீர்ப்புகளை நீதிமன்றங்கள் வழங்கலாயின.  குறிப்பாக 2000த்திற்குப் பிறகு வந்த பல தீர்ப்புகள் அடிப்படையில் ஓர் ஆணும் பெண்ணும் விரும்பி இணைந்து வாழும் உரிமையை அங்கீகரிக்கத் துவங்கின. மதங்களும் அவற்றின் அடிப்படையிலான திருமண சட்டங்களும் கூறுகின்ற முறைமைகளைப் புறந்தள்ளி விரும்பியவர்கள் இணைந்து வாழ்தல் என்ற  ‘லிவீஸ்வீஸீரீ ஜிஷீரீமீtலீமீக்ஷீ’ வாழ்க்கையை நீதிமன்றத் தீர்ப்புகள் அங்கீகரிக்கத் துவங்கின.  குஷ்பு மீது தொரடரப்பட்ட வழக்கொன்றில் ‘சேர்ந்து வாழ்தல், வாழ்வின் உரிமை’ என்று நீதிமன்றம் கூறியது.  ஒவ்வொரு முறை இப்படிப்பட்ட தீர்ப்புகள் வெளிவரும்போது மதவாதி கள் மருண்டு போகிறார்கள்,  அவர்கள் நிற்கும் நிலம் அவர்கள் காலடியில் நழுவிச் செல்வதைக் கண்டு துள்ளிக் குதித்து அலறுகிறார்கள்.   அவர்கள் ஒன்றைப் புரிந்து கொள்ள வேண்டும்.  இந்த தீர்ப்புகள் நீதிமன்றத்தின் வாயிலாக வெளியிடப் படுகின்றன. ஆனால் இவை இந்தக் காலம் எழுதும் வரலாற்று தீர்ப்புகள்.  மதவாதிகளின் வரலாறு முடிவை நோக்கி நகர்கிறது.  அதற்கு அவர்கள் கண்டனம் தெரிவிக்கலாம்.  தடை செய்து விட முடியாது.

இந்த வரிசையில் இப்போது சென்னை உயர்நீதிமன்றத்தில், ‘நீதிபதி கர்ணன்’ ஒரு தீர்ப்பு வழங்கியிருக்கிறார்.  அய்ந்து வருடங்கள் ஒரு பெண்ணோடு (ஆயிஷா) வாழ்ந்து இரண்டு குழந்தைகள் இருக்கின்ற நிலையில் அந்த ஆண் (ஓசிர் ஹாசன்) பிரிந்து சென்றிருக்கிறார்.  தனக்கும், தன் குழந்தைகளுக்கும் நீதி கேட்டு சென்ற ‘ஆயிசாவால்’ தங்கள் திருமண நிகழ்வுக்கான சான்று எதனையும் தர இயலவில்லை.  குழந்தைகள் பள்ளி பதிவேடுகளில் இவர்கள் இருவரும் தாய் தந்தையர் என குறிப்பிடப் பட்டிருக்கிறது.  இந்த நிலையில் நீதிபதி கர்ணன், அவர்கள் வாழ்க்கையையே சாட்சியாக எடுத்துக் கொண்டு திருமண சட்டங்களின் அடிப்படையில் ஓசிர் ஹாசன் ஆயிசாவுக்குக் கணவன் என்ற நிலையில் கட்டுப் பட்டவர் என்று தீர்ப்பு கூறியிருக்கிறார்.  அந்தத் தீர்ப்பை நியாயப்படுத்தும் வகையில் தொடர்ந்து எழுதுகையில், ‘ஓர் ஆணும், பெண்ணும் உடலுறவு கொண்டாலே அது திருமணம்தான்’ என்று கூறுகிறார்.  அதன் அடுத்த பக்கமாக, ‘உடலுறவு இல்லாவிட்டால் அது திருமணம் இல்லை’ என்றும் சொல்கிறார்.
இந்தத் தீர்ப்பு வழக்கம் போல் மதவாதிகளின் கண்டனத்திற்கு ஆளாகியிருக்கிறது.  அதே நேரம் முற்போக்கு முகாமிலிருந்தும் எச்சரிக்கை உணர்வுடன் சில விமர்சனங்கள் இந்தத் தீர்ப்பின் மீது தெரிவிக்கப் பட்டிருக்கின்றன.  இந்த இரண்டு பக்கங்கள் குறித்தும் இந்தக் கட்டுரையில் பார்ப்போம்.

முதலாவதாக எவ்வாறு ‘அரசியல் மதத்திலிருந்து பிரிக்கப்பட்டது’ உலக வரலாற்றை முன்னோக்கி நகர்த்தியதோ அது போல் திருமணமும் மதத்திலிருந்து பிரிக்கப்படுவது மிகச் சரியான வரலாற்று நிகழ்வாகும்.  அந்த அடிப்படையில், ஓர் ஆணும் பெண்ணும் இணைந்து வாழ எந்த மத முறைமைகளும், சடங்குகளும் தேவையில்லை என்று கூறிய இந்தத் தீர்ப்பு புரட்சிகரமானதுதான்.  அதனை எதிர்க்கின்ற மதவாதிகள் இந்த வழக்கில் என்ன தீர்ப்பு கூற விரும்புகிறார்கள் என்பது முக்கியமான கேள்வியாகும்.  இது குறித்து ஊடக விவாதமொன்றில் தொலை பேசித் தொடர்பில் வந்த ஓர் இஸ்லாமிய அமைப்பு தலைவர் இதனை விபச்சாரம் என்று வகைப்படுத்துகிறார்.  ‘இணைந்து வாழ்தல்  ‘லிவீஸ்வீஸீரீ ஜிஷீரீமீtலீமீக்ஷீ’   என்ற முறையையும் விபச்சாரம் என்றுதான் அவர் கூறுகிறார்.  ஓர் ஆணும் பெண்ணும் அய்ந்து வருடங்கள் ஊரறிய இணைந்து வாழ்ந்து இரண்டு பிள்ளைகள் பெற்ற வாழ்க்கை, அவர்கள் திருமணம் எந்தவொரு மதச்சடங்கின் அடிப்படையிலும் நடைபெற்றிருக்கவில்லை என்ற காரணத்தினால் விபச்சாரமாகி விடுமா?
இதில் இன்னொரு நகைமுரணையும் கவனிக்க வேண்டும்.  தனது மதக் கோட்பாட்டின் படி நடைபெறாத ஓர் இந்துத் திருமணத்தையும், கிறித்துவத் திருமணத்தையும் ஓர் இஸ்லாமியர் ‘விபச்சாரம்’ என்று கூறுவதில்லை. தனது மதக் கோட்பாட்டின் படி நடைபெறாத ஓர் இஸ்லாமியத் திருமணத்தையும், கிறித்துவத் திருமணத்தையும், ஓர் இந்து ‘விபச்சாரம்’ என்று கூறுவதில்லை. தனது மதக் கோட்பாட்டின் படி நடைபெறாத ஓர் இந்துத் திருமணத்தையும், இஸ்லாமியத் திருமணத்தையும், ஓர் கிறித்துவர் ‘விபச்சாரம்’ என்று கூறுவதில்லை. 

ஆனால் எந்த மதக்கோட்பாட்டையும் ஏற்றுக் கொள்ளாமல் தங்கள் மனச்சாட்சியையும் தங்களுக்கான மனிதர்களின் நட்பையும் மட்டும் ஆதாரமாக வைத்து வாழ்கின்ற வாழ்க்கையை இவர்கள் ‘விபச்சாரம்’ என்று வகைப்படுத்துகிறார்கள்.  இதே இஸ்லாமிய நெறிப்படி ஓர் ஆண் நான்கு பெண்களை திருமணம் செய்து கொண்டு வாழ்ந்தால் அதனை விபச்சாரம் என்று இதில் எந்த மதத்தவரும் கருதுவதில்லை.  இந்த மூன்று மதவாதிகளின் இந்த  கூட்டு அராஜகத்தை இன்னும் எவ்வளவு நாட்கள் மனித சமூகம் பொறுத்துக் கொள்ள வேண்டும் என்று தெரியவில்லை.  மாற்று மதங்களைக் கூட சகித்துக் கொள்கிறோம். ஆனால் மதமற்ற ஒரு வெளி உருவாகக் கூடாது என்கிறார்கள் இவர்கள்.  ஆக இவர்கள் ஒற்றுமையாக இல்லாமலிருந்து போடுகின்ற சண்டைகளிலும் அழிவைத்தான் நிகழ்த்துகிறார்கள்.  ஒற்றுமையாக இருந்தாலும் அழிவுக்காகதான் ஒன்று படுவேன் என்கிறார்கள்.  இவர்களை என்ன செய்ய?   கடவுள் என்ற ஒன்று இல்லை என்று நிருபிக்கப் பட்டு விட்டாலும் கூட மனிதன் வாழ மதம் என்ற அமைப்பு தேவை என்று சில நண்பர்கள் வாதிடுகிறார்கள்.  ஆனால் மதம் என்ற அமைப்பே இயற்கையான மனிதத் தன்மைக்கும் அன்புக்கும் எதிராக அல்லது மாற்றானதுதான் என்பதைத்தான் இது போன்ற தருணங்கள் நமக்கு எடுத்துச் சொல்கின்றன. 

எனவே இவர்களின் எதிர்ப்பிலிருந்தே இந்தத் தீர்ப்பு நாம் வரவேற்க வேண்டிய தீர்ப்பு என்ற முடிவுக்கு நாம் எளிமையாக வந்து விடலாம்.  இந்த இடத்தில் இந்தக் கட்டுரையையும் முடித்து விடலாம்.  ஆனால் நீதிபதி கர்ணன் அவர்களின் வாக்கிய அமைப்புகளில் சில உண்மைகளை நாம் எச்சரிக்கையுடன் எடுத்து வைக்க வேண்டியிருக்கிறது.
ஒரு பெண்ணும், ஆணும் ஈர்ப்பும் அன்பும் கொண்டு பழகிக் களித்திருக்க எந்த சடங்கையும் நியதியையும் இயற்கை இன்று வரை வகுக்கவில்லை.  ஆனால் பிறப்பு வழி வருகின்ற இரத்த உறவும் ஆண் பெண் உடலுறவுச் சேர்க்கையும் மனித சமூகத்தின் அமைப்புகளைக் கட்டமைப்பதில் அடிப்படையான பங்கை வகித்து வந்திருக்கின்றன.  இதில் பிறப்பு வழி வருகின்ற இரத்த உறவை பின்னுக்குத் தள்ளி, ஆண் பெண் உடலுறவை அடிப்படையாகக் கொண்ட திருமண பந்தங்களை முன்னுக்குக் கொண்டு வந்து நிறுத்திய வரலாறுதான் மனித சமூகத்தில் ஆணாதிக்கம் தோன்றிய, மதம் தோன்றிய, சாதி தோன்றிய வரலாறாக விரிகிறது.  இயற்கையில் ஆண், பெண் உடலுறவு என்பது வாழ்வின் ஓர் அம்சமாக இருக்கிறது.  ஆனால் நமது சமூகக் கட்டமைப்பில் (சொத்தை நிர்வாகம் செய்து வகைப்படுத்தி ஆள்வதற்கான ஓர் அமைப்பு) அடிப்படை அலகாகத் திகழும் குடும்ப வாழ்வின் அடிமானமாக அந்த உறவு ஆக்கப் பட்டிருக்கிறது. இந்த அடிப்படையில் மதங்களை எதிர்த்து நீதி நடத்தும் பெரும் பயணத்தின் இறுதியில் ‘சொத்தின் மீதான வாரிசுரிமை’ என்பதற்கும் ‘ஆண் பெண் சேர்க்கைக்கும்’ கட்டப் பட்டிருக்கும் இந்தத் தாலி அறுத்தெறியப் பட வேண்டும்.

இந்தத் தொலைநோக்குக் கண் கொண்டு நோக்கும் போது கர்ணன் வார்த்தைகள், ஆண் பெண் சேர்க்கைக்கு அதீத அழுத்தம் கொடுத்து விடுமோ என்று நாம் அஞ்ச வேண்டியிருக்கிறது.  மனித வாழ்க்கை அற்புதமானது.  அது வெறும் ஆண் பெண் « சர்க்கை மட்டுமல்ல.  எல்லா உடலுறவுகளும் திருமணமாகுமா என்பதை விட திருமணமாக வேண்டிய தேவையில்லை என்பதே முக்கியமானது.

பொதுவாக இந்தத் தீர்ப்புகள் இரண்டு தளங்களிலிருந்து வெளிப்படுகின்றன.  பெரும்பாலும் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு நீதி வழங்கும் வகையில்.  கர்ணன் தீர்ப்பு கூறியிருக்கும் வழக்கும் அத்தகையதுதான்.  மற்றொன்று வாழ்க்கைத் தேர்வு மற்றும் சுதந்திரம் என்ற அடிப்படையில்.  நீதிபதி கர்ணன் இதில் பெண்ணுக்கான பாதுகாப்பு என்ற கோணத்தில் மட்டும் அணுகியிருக்கிறார்.  அதன் அடுத்த பக்கமான வாழ்க்கைத் தேர்வு, மற்றும் சுதந்திரம் என்ற தளத்தில் அவர் அணுகவில்லை என்பதுடன் அதில் அவருக்கான பார்வை என்ன என்பதும் வெளிப்படவில்லை.  வழக்கை தொடர்ந்து தந்திருக்கும் கருத்துக்களில் அவர் பெண்களுக்கான பாதுகாப்பையும் நமது கலாச்சாரத்தையும் காப்பதற்காகவே அந்தத் தீர்ப்பினை தந்ததாக தெரிவித்திருக்கிறார்.  இந்த இடம்தான் முற்போக்காளர்களையும் இந்தத் தீர்ப்பை கொஞ்சம் கவனத்துடன் பார்க்க வைத்திருக்கிறது.

இன்றைய சூழலில் பெண்களின் பாதுகாப்பு என்பது சட்டத்தால் உறுதி செய்யப் பட வேண்டிய நிலை அதிகமாக இருக்கிறது.  எனவே நீதிபதி கர்ணன் போன்ற நீதிபதிகளும் அவர்களது தீர்ப்புகளும் தேவையாக இருக்கின்றன.  அந்த அடிப்படையிலும், மதங்களுக்கு எதிரான தீர்ப்பு என்ற அடிப்படையிலும் இந்தத் தீர்ப்பு மிகவும் வரவேற்க தக்கதாக இருக்கின்றது.  அதே வேளையில் இந்த நிலை ‘கலாச்சாரக் காவலர்’ என்ற நோக்கில் எடுக்கப் படாமல், மனித வாழ்வின் சுதந்திரம் என்ற நோக்கிலிருந்து எடுக்கப் படும்போது மட்டுமே ‘அந்த மொழி’ புதிய சமூகத்தின் பிறப்பை உச்சரிப்பதாக இருக்கும் என்பதையும் உணர்த்த வேண்டியிருக்கிறது.  இல்லாவிட்டால் இருக்கின்ற ஒரு சிக்கலைத் தீர்த்து இன்னொரு சிக்கலுக்கு வழி சமைப்பதாக இருந்து விடும்.

மனிதர்கள் யார் யாரோடு சேர்ந்து வாழ்வது என்பதை மதங்களும், சாதிகளும், சட்டங்களும் தீர்மானிப்பது மனிதர்களின் பிறப்புரிமைக்கு விரோதமானது.  உலகம் இந்த விழிப்புணர்வை மெல்ல மெல்ல பெற்று வருகிறது.  இங்கிலாந்தில் கிட்டத்தட்ட முப்பது இலட்சம் மக்கள் திருமணமின்றி இணைந்து வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.  இருப்பினும் அவர்கள் நாட்டு சட்டம் இன்னும் இதனை அங்கீகரிக்கவில்லை.  சுவீடன், கனடா, ஆஸ்திலேலியா போன்ற நாடுகள் சட்டபூர்வமாக இந்த வாழ்க்கை முறையை அங்கீகரித்திருக்கின்றன.  சவுதி அரேபியா, இந்தோனேசியா ஆகிய நாடுகள் இந்த வாழ்க்கை முறையை தடை செய்திருக்கின்றன,  2008 ல் இந்திய சட்ட அமைச்சராக இருந்த பரத்வாஜ் இந்தியாவில்  லிவீஸ்வீஸீரீ ஜிஷீரீமீtலீமீக்ஷீ முறையை அங்கீகரிக்க தேவைப்படும்போது சட்டம் கொண்டு வரப்படும் என்று கூறியிருக்கிறார்.  இந்தியாவிலும் திருமணமின்றி வாழ்ந்து கொண்டிருக்கும் நண்பர்கள் என்னவிதமான புதிய சட்ட அமைப்பு தங்களுக்கு தேவைப்படுகிறது என்பதை எடுத்துக் கூறலாம்,

மதத்தை எதிர்த்து நிற்கும் தோழர்கள் மிகத் தெளிவாக ஒன்றை உணர வே ¢ணடும்.  மதம், சாதி, சொத்துரிமை என்ற அமைப்புகள் நிலை கொண்டிருப்பது திருமணத்தில்தான்.   எனவே திருமணத்தை மத, சாதிய அமைப்புகளிடமிருந்து விடுவிப்பதே சம நீதி சம உடமைச் சமூக அமைப்புக்கு முன் நிபந்தனையாக இருக்கும்.   ( அரசிடம் அரசு ஊழியர்களின் வாரிசுகளுக்கு அரசு வேலை வாங்கித் தரும் தீவிர போராட்டங்களை முன்னெடுத்துக் கொண்டிருக்கும்  பொது உடமைக் கட்சிகளின் தொழிற்சங்கவாதிகள் கொஞ்சம் கவனிக்கவும்))  அந்த அடிப்படையில் அரசியல் மட்டுமல்ல திருமணமும் மதத்தின் பிடியிலிருந்து விடுவிக்கப் பட வேண்டியதுதான்.  அதற்கான ஒவ்வொரு அசைவுயும் நாம் ஆதரிப்போம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *