-மஞ்சுள வெடிவர்தென -தமிழில் -ஃபஹீமா ஐஹான்-
வாருங்கள் எல்லைகளைக் கடந்து கொண்டு
தந்ததாதுவை வணங்கி…
மார்ச் மாத மத்தியில் பௌர்ணமியினுடே
சிங்கக் கொடி அசைந்தாடுகிறது
சந்திரனிலிருந்து கிரணங்கள் அல்ல சிங்கத்தின் உரோமமே வீழ்கிறது.
உள்ளங்களில் அருளுரைகளும் பௌத்த சுலோகமும்
எதிரொலிக்கின்றன
வாருங்கள் எல்லைகளைக் கடந்து கொண்டு
தெற்கிற்கு
ஏ ஒன்பது வீதி திறந்துள்ளது
மனிதக் கேடயத்திலிருந்து மீட்கப்பட்ட மனிதர்களே
முல்லைத்தீவு வனத்தின் அக்கரையில் காட்டப்படும்
சந்திரனின் சிங்க உரோமத்தின் ஒளியில்
சந்திரனைக் கூட இரு கூராக்கக் கூடியதாய்
நிலவில் அசைந்தாடும் வாளைக் கண்டீர்களா…
வனத்தை ஊடறுத்து வரும்வேளை
கையில் கசங்கும் கார்த்திகைப் பூவை
கையால் துடைத்து விலக்குங்கள்
காலில் இடறும் கார்த்திகை கிழங்கை
கையில் எடுத்து வாருங்கள்
வுசந்தம் வன்னிக்கு வரும் வேளை
கண்டியில் கோடைகாலமாகும்
மழை வராமற் போகும்
வாருங்கள் எல்லைகளைக் கடந்து கொண்டு
தந்த தாதுவை வணங்கிட…
புத்தரின் திருமுகத்திலிருந்த தந்த தாது
உங்களுக்கு அபயமளிக்கும்
சந்திரனில் அசைந்தாடும் சிங்கத்தின் பல்வரிசை
உள்ளத்திற்கு மோட்சம் தரும்