‘பீ’. படிக்கும்போதும், பேசும்போதும், கேட்கும்போதும் ஒரு அருவறுப்பு வருகிறதா? நம் உடலில் இருக்கும் ஒரு பொருள்தான் இது. அதனை முன்வைத்து எத்தனை அரசியல், எத்தனை சமூக கட்டமைப்பு, எத்தனை சாதியம் எத்தனை அடக்குமுறை இருக்கிறதென்று யோச்சித்துப் பார்த்திருப்போமா? அத்தனை இருக்கிறது. மலத்தை அள்ளும் மனிதர்களையும் கூட மலமாகப் பார்க்கும் இந்த சமூகத்தில், அதனை வைத்து கட்டமைக்கப்படும் பிம்பங்களும் அருவறுப்பானவைதான். எத்தனை முற்போக்கு முகமூடிகள் போட்டாலும், நம்மில் எத்தனை பேர் பீ அள்ளும் தொழிலாளர்களை முகச்சுழிவில்லாமல் பார்க்கிறோம்? ஆம் அது நாற்றம்தான். நமது நாற்றம். நமது நாற்றத்தைப் போக்க அவன் நாறவேண்டும்.
நம்மை சுத்தமாக்கிக் கொள்ள அவன் அழுக்காக வேண்டும். நாம் அழகாக இருக்க அவன் அசிங்கமாக வேண்டும். ஆனால், அவனை நாம் மூக்கைப் பிடித்துக் கொண்டு, அருவறுப்பாகத்தான் பார்ப்போம். இதன் பின் இருக்கும் ஆழமான சாதியக் கூறுகளும், பல வலிகள் நிறைந்தவை. ஆச்சாரமானவர்கள் என்று கூறிக்கொண்டு இத்தொழிலாளர்களை கேவலமாக பார்ப்பவர்கள் எதற்காக வீட்டில் கக்கூஸ் வைத்திருக்கிறார்கள்? அது ஆச்சாரமான இடமா? நீங்கள் கழியும் போதுஇ மூக்கைப் பிடித்துக்கொண்டுஇ அருவறுத்துக்கொண்டா கழிகிறீர்கள்? இல்லையே… பேப்பர் படித்துக்கொண்டும்,மொபைல்களை நோண்டிக்கொண்டும்தானே அதையும் செய்கிறீர்கள்.
ஆனால் அசுத்தப்படுத்திய நீங்கள் சுத்தமானவர்கள். சுத்தப்படுத்தும் அவன் அசுத்தமானவன். சாதி,நிறம், தொழில், வர்க்கம் என அத்தனையும் இதில் அடங்கியிருக்கிறது. முக்கியமாக பொதுப்புத்தி. இந்த பத்தியில் கூட, அவன் இவன் என்று ஆண்தன்மை மட்டும் குறிக்கும் பொதுப்புத்தி மேலோங்கி இருக்கிறதா என்ற சந்தேகம் எனக்கும் இருக்கிறது. இந்த அத்தனை கேள்விகளையும் முகத்தில் அறைந்து கேட்கிறது ஒரு ஆவணப்படம். கேட்டாலே முகத்தை சுழிக்கும் ‘பீ’ என்னும் தலைப்பிலேயே, மலம் அள்ளும் ஒரு பெண்மணியின் பின் செல்லும் ஒரு ஆவணப்படத்தை எடுத்திருக்கிறார் இயக்குனர் அமுதன். தமிழ்ச்சூழலின் மிக மிக முக்கியமான ஆவணப்படமான இந்த ‘பீ’ பற்றி இயக்குனர் அமுதனுடன் நடத்திய நீண்ட நேர்காணலின் முதல் பகுதி இங்கே….
நேர்காணல் – ‘பீ’ ஆவணப்படத்தை முன்வைத்து இயக்குனர் சுP அமுதனுடன் ஒரு நேர்காணல்