பாயிஸா அலி கவிதைகள் பற்றிய இரசனைக் குறிப்பு

 வெலிகம ரிம்ஸா முஹம்மத்
 

1987 இல் தினகரன் சிறுவர் பகுதியில் அன்பு எனும் சிறுவர் கவிதையோடு தொடங்கி இன்று வரை எழுத்துப் பணிகளில் தன்னை அர்ப்பணித்து வரும் திருமதி பாயிஸா அலி அவர்கள் பயிற்றப்பட்ட விஞ்ஞான ஆசிரியர் ஆவார். இலங்கையில் முஸ்லிம் பெண் எழுத்தாளர்களில் முக்கியமான ஒருவர். கவிதைகள், சிறுகதைகள், சிறுவர் படைப்புக்கள், நூல் விமர்சனங்கள் போன்ற துறைகளிலும் கால் பதித்துள்ள இவர் சிகரம் தொடவா, தங்க மீன் குஞ்சுகள் ஆகிய சிறுவர் இலக்கிய நூல்களை ஏற்கனவே வெளியிட்டுள்ளார்.

 இவரது கவிதைத் தொகுதி கிண்ணியா நெட்டினால் வெளியீடு செய்யப்பட்டுள்ளது. 45 கவிதைகளை உள்ளடக்கியதாக 90 பக்கங்கில் அழகிய அட்டைப் படத்துடன் வெளிவந்துள்ள இந்தக் கவிதைத் தொகுதியானது தேசிய நூலபிவிருத்தி சபையின் அனுசரணையுடன் அச்சிடப்பட்டுள்ளது.
இந்த நூலுக்கு அழகொளிரும் கவிதைகள் என்ற தலைப்பிட்டு காத்திரமானதொரு முன்னுரையை அஷ்ரஃப் சிஹாப்தீன் அவர்கள் வழங்கியுள்ளார். 
ஒரு கவிதை அது சொல்லப்படும் மொழி விதம் பொருள் ஆகியவற்றால் அழகும் உயிரும் பெறுகிறது. அவற்றை வாசிக்கும் போதெல்லாம் நமது உள்ளம் ஏதோ ஒரு உணர்வுத் தாக்கத்துக்கு உள்ளாகிறது. தேர்ந்தெடுக்கப்பட்ட சொற்களால் செதுக்கப்படும் ஒரு கவிதை நம்மை கிளர்ச்சியூட்டுகிறது. மகிழ்விக்கிறது. ஓர் இளம் பெண்ணின் நளினத்தை, ஒரு குழந்தையின் சிரிப்பை, ஒரு மலரின் மெண்மையை, ஒரு வாளின் கூர்மையை, இரத்தத் துளி ஒன்றின் கனதியை, கண்ணீர்த்துளி ஒன்றின் கவிதையை, வியர்வைத் துளி ஒன்றின் உழைப்பை நம்மீது படரவிட்டு பாடாய்ப் படுத்துகிறது. நவீன கவிதைகளில் அழகொளிரும் எழுத்துப் போக்கை சகோதரி பாயிஸா அலியின் கவிதைகளில் நான் பார்க்கிறேன். அவர் பேசும் கவிதை மொழி என்னை அசத்திவிட்டிருக்கிறது இன்று வெளிவரும் நவீன கவிதைகளில் இதுவரை நான் கண்டிராத அழகு அது என்று அஷ்ரஃப் சிஹாப்தீன் அவர்கள் தனதுரையில் குறிப்பிட்டுள்ளார். 
நூலாசிரியர் பாயிஸா அலி அவர்கள் தனதுரையில் பின்வருமாறு குறிப்பிடுகின்றார். ‘குடும்பம் வீட்டு வேலை பாடசாலை பத்திரிகைப் பணி எனப் பரபரப்பாக இயங்குகிற என் போன்றதோர் இல்லத்தரசிக்கு எல்லாம் கவிதை என்பது ஒரு பகற்கனவாகவோ இல்லை திணரடிக்கும் பாரச் சுமையாகவோ தான் அமைந்துவிடுகிறது. ஆனாலும் கூட வாசிப்பும் தேடலும் சார்ந்த ஒரு தளத்திலேயே பிறந்து வளர்ந்து வாழ்ந்தும் வருவதானால் தானோ என்னவோ ஓய்வெனக் கிடைக்கும் சொற்ப நேரத்தையும் எழுத்து சார்ந்தே இயங்கிடத் தோன்றுகிறது. எனினும் இவ்வாறான மிகக் குறுகிய கணங்களுக்குள்ளே மிகப் பெரிய படைப்பாளியாக வெல்லாம் மாறிவிட முடியாதெனும் யதார்த்தம் உணர்ந்து சில கனங்களே உணர்வுகளுக்குள் உரைந்து கரையும் அக புற அனுபவங்களின் வெளிப்பாடாய் விரியும் சின்னச் சின்னப் பதிவுகளை இங்கே தொகுத்திருக்கிறேன்’
கவிதை என்றாலே காதல் என்றாயிருந்தது. பிறகு ஒரு காலத்தில் யுத்தம் பற்றியே கவிதைகளில் பேசப்பட்டது. பாயிஸா அலியின் கவிதைகளில் அழகியல் சார்ந்த விடயங்கள் மிகையாக பேசப்பட்டுள்ளமை மனதுக்கு ரம்மியமாக இருக்கின்றது. வண்ணாத்தி, அணில் பிள்ளை, சிட்டுக்குருவி, கால் முளைத்த வெண் பஞ்சு மேகங்கள், தும்பி, பசுஞ் சோலை போன்ற சின்னச்சின்ன அழகியல் வசனங்களால் வாசகரை கட்டிப் போடுகின்றார். கனவுப் பூக்களும் கண்ணாடிக் கண்களும் (பக்கம் 20) என்ற கவிதையின் முதல் ஒரு சில வரிகளிலேயே அதை நாம் உணரலாம்.  
அது 
கனவுப் பூக்கள் மகரம் சிந்திய
கார்காலம்.
இலட்சியத் தேடல்களைத் 
தேசியக் கொடியாய் உயர்த்தி
நூலேந்திய வேளையிலே
ஈரத் தென்றலாய் கேசம் தழுவினாய்
விசாலித்த வான் பரப்பில்
உதிர்ந்து வீழும் விண்கற்களிடையே 
ஒற்றைச் சூரியனாய் ஜொலித்தாய்.
 
பொதுவாக யாருக்கும் தோன்றாத விடயங்கள் கூட நூலாசிரியரின் பார்வையில் கவிதையாக உருக்கொள்வது வியப்புத்தான். அயல்வீட்டு பீர்க்கங்கொடியையும், உம்மம்மாவின் பீர்க்கங்காய் பால்கறியையும் இணைத்து எப்படியொரு கவிதையை யாத்திருக்கின்றார் என்று ரசியுங்கள்.  அயல்வீட்டுப் பீர்க்கங்கொடி (பக்கம் 22)
அந்தரத்தில் நடனமிடும்
பச்சைத் தேவதையாயும்
அணில் பிள்ளைகள் ஆடிமகிழும்
ஊஞ்சலாயும் 
பூ பிஞ்சுகளை அள்ளிச் சுமந்தவாறே
மெலிந்த தத்துக் கரங்கள் வீசியபடி
பிரிசுவர் தாண்டியும் மிகமென்மையாய்
நடைபயிலுது அயல்வீட்டுப் பீர்க்கங்கொடி.
 
நாவூறச் செய்கிறது
சின்ன வெங்காயமும் குடுகும் தாளித்த மணம்
கூரைக்கு மேலாயும் வழிந்தோட
வற்றாளையும் வெள்ளிறாலும்
சேர்த்தாக்கிய 
உம்மம்மாவின் பீர்க்கங்காய் பால்க்கறிதான்
 
தனது தொடர் பயணத்தின்போது தினமும் காண்கின்ற சிறு சிறு விடயங்கள் கூட பாயிஸா அலி அவர்களின் கண்களில் பட்டுத் தெறித்துவிடுகின்றன. இலைக்குள் மறைந்து காணப்படுகின்ற ஒரு பூவைக்கூட அவரது கண்கள் அல்லது கவிதை மனம் விட்டு வைக்கவில்லை. மற்றவர்களின் வளர்ச்சியைக் காட்டாதிருக்க சிலர் தம்மை மாத்திரம் வெளிக்காட்டிக் கொள்வார்கள்.  சிலரோ எத்தகைய பெருமையும் இன்றி தம்பாட்டில் வாழ்ந்து பிறருக்கு உதவி செய்வார்கள். ஒளி விசிறும் சிறு பூ… (பக்கம் 32) என்ற கவிதை, வாழ்வின் அத்தகையதொரு தாற்பரியத்தை உணர்த்துவதற்காகத்தான்  எழுதப்பட்டதாக எனக்குத் தோன்றுகின்றது. 
தூரத்து வளைவில்
புதர் மண்டிய சந்தில்
தன் ஒளிரும் பிரகாச இதழ்களை 
தன்னில் வீழ்ந்த இலையொன்றுக்குள்
ஒளித்துக் கொண்டபடி சிறு பூ…
காலத்தை விஞ்சிய அதன் தனிமையை 
என் வழிப் பயணத்தின் 
கணநேர அண்மையால்
தவிர்த்திட இயலாதுதான்…
மெல்லிய காதல் உணர்வுகள் இழையோடும் கவிதையாக இனியும் மொழியேன்… (பக்கம் 42) என்ற கவிதை காணப்படுகின்றது. ஆழ் மனக் காயங்களுக்கு மருந்தாவதும், அந்த காதலே வாழ்க்கையில் தழும்பாவதும் அவரவர் விதியைப் பொறுத்தது. புறக்கணிப்புக்களால் புண்பட்டுப்போன ஒரு ஆன்மாவின் சோகம்.. விரக்தி இந்த வரிகளினூடே வெளிக்காட்டப்பட்டிருக்கின்றது.
கத்தி முனையில் நடப்பதாகவும்
நொறுங்கும் மெலிதான 
கண்ணாடி இருக்கையில் அமர்வதுமான
நுண்ணிதானங்களோடும்
எச்சரிக்கையோடும்
அலுவலகத்தில் வேணுமென்றால்
தொடர்பாடலாம்.
ஆனாலும் உன்னோடுமா?
 
பகலவன் வெம்மையில் 
படியிறக்கங் காணுமொரு பொலித்தீனாய்
தினந்தினம் வெம்பி வெளுக்கிறதென் மென்மனசு
உன் தொடர் புறக்கணிப்புகளால்..
மிக மிக முக்கியமானதொரு அம்சத்தை உனக்கே உனக்காய்… (பக்கம் 65) என்ற கவிதை சொல்லி நிற்கின்றது. கல்விப் பெறுபேறுகள் போதாமையால் மனமுடைந்து தம் வாழ்க்கையை அழித்த எத்தனை மாணவர்களை பற்றி அறிந்திருக்கிறோம். பத்திரிகைகளில் படித்திருக்கிறோம்.  பெற்றோரின் வசை பாடல், நண்பர்களின் கேலிப்பேச்சு, உறவினர்களின் ஏளனப் பார்வை போன்றவற்றை எல்லாம் தாங்க முடியாத பிஞ்சு மனங்களுக்கு ஒரு ஒத்தடமாக, காயத்தை போக்கும் மூலிகையாக இந்தக் கவிதை இருக்கின்றது. சமுதாயப் பிரச்சனை பற்றி பேசி விளிப்பூட்டியிருக்கின்றது.
இந்தப் பெறுNறும் பொய்த்துப் போனதற்காய் வருத்திக் கொள்ளாதே உன்னுணர்வுகளை. கல்வித்தரம் வேண்டுமென்றால் உறுதிப்படுத்தப்படலாம் பெறுபேறுகளால் ஆனாலும் ஒருபோதும் தீர்மானித்து விடுவதில்லை. பெறுபேறு மட்டுமே ஒருவரின் வாழ்க்கைத் தரத்தை. வடிந்து போகா வெள்ளமொன்றை வரலாறு சொல்லவில்லை. இந்தப் பாதை முடிந்தாலென்ன திரும்பிப் பார்
இன்னமும் ஆயிரம் பாதைகள் வாசல் கதவு திறந்து வைத்தே வழிபார்த்துக் காத்திருக்கு மாலைகளோடு உனக்கே உனக்காய்..
ஒரு ஆசிரியராகவிருந்து எப்படி தலைமைத்துவமிக்க சமுதாயத்தை உருவாக்குகின்றாரோ அதே போல் கவிதை வழி நின்றும் நிறைய சாதித்து நல்ல புத்திஜீவிகளை உலகுக்குத்தர வேண்டுமென்று பாயிஸா அலி அவர்களை வாழ்த்துகிறேன்!!!
நூலின் பெயர் – எஸ். பாயிஸா அலி கவிதைகள் 
நூலாசிரியர் – எஸ். பாயிஸா அலி 
முகவரி – முனைச்சேனை வீதி, குரிஞ்சாகேணி – 03, கிண்ணியா.
ஈமெயில் – sfmali@kinniyans.net , www.faiza.kinniya.net
வெளியீடு – கிண்ணியா நெட்
விலை – 250 ரூபாய்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *