புதியமாதவி (மும்பை)
என்னால் எழுத முடியவில்லை
அடுக்களையில்
ஆத்தங்கரையில்
வயக்காட்டில்
வாய்க்காலில்
குளக்கரையில்
கொள்ளைப்புறத்தில்
ஒதுங்கும்போதெல்லாம்
ஓசையின்றி வளர்த்த என் மொழி
உயிரூட்டி வளர்த்த என் மொழி
குறிகளைக் கொண்டு கடித்துக்குதறி
துடிக்க துடிக்க சிதைத்து போட்டாய்
என்னால் எழுத முடியவில்லை.
உன் வாரிசுகளைப் பாலூட்டி வளர்க்கும் முலை
உன் பாலியல் வறட்சியைத் தீர்க்க
அணைகட்டி அழுகுப்பார்த்தப்போதே
இயல்பான என் உடல்மொழி
உன் காமத்தீயில் கருகிப்போனது
என்னால் எழுத முடியவில்லை.
களவும் கற்பும்
நீ எழுதிவைத்த இலக்கணம்தான்.
இரண்டும் இருவருக்கும்
பொதுவாக இருக்கும்வரை
காதலிருந்தது.
முன்னது உனக்கும்
பின்னது எனக்கே எனக்குமாய்
உன் ஆயுதங்கள் வென்ற எல்லைக்கோடுகள்
இதில் காணமால் போனது காதல்மட்டுமல்ல
என் கவிதைமொழியும் தான்.
உன் படுக்கையறையின் வயகராவாய்
என் ஆடைகளைத் தயாரித்து
உன் சந்தையில் பரப்பினாய்
எதைக்காட்ட வேண்டும்
எதை மறைக்க வேண்டும்
எதைத் திறக்கவேண்டும்
என் உடலின் எல்லா கதவுகளையும்
திறக்கவும் பூட்டவும்
உடைக்கவுமான சாவிகளும்
கடப்பாறைகளும் உன் வசம்.
உன் பசித்தீர்க்கும் அமுதசுரபி என
உன் வர்ணனையில்
மணிமேகலைகளும் மயங்கிப்போனார்கள்.
பனிக்குடம் சுமக்க்கும் பை ஆகிப்போனது
என் உடல்
பசியும் ருசியும் மறந்துப்போனது
இதுவே பழகிப்போனதால்
எப்போதாவது கனவுகளில்
எட்டிப்பார்க்கும் என் முகம்
எனக்கே அந்நியமாகிப் போனது.
அலறிக்கொண்டே விழித்துக் கொள்கிறேன்
கனவில் கண்ட முகம் பற்றி
எங்காவது
யாரிடமாவது
எப்போதாவது
உரையாடல் நடத்தும் தருணத்தில்
உணர்ந்தேன் என் மொழி ஊமையாகிப்போனதை.
என்னால் எழுத முடியவில்லை
என்னால் பேச முடியவில்லை.