– றஞ்சி
காலச்சுவடு- இதழ்161 இல் என் சம்பந்தமாக அனார் எழுதியது பொய் என நான் மறுப்பு எழுதியிருந்தேன். அனாரின் தொகுப்பை ஊடறு வெளியிடக் கேட்டது என்பதும், சேரன் முகவுரை எழுதினால் நாம் வெளியிட மாட்டோம் என சொன்னோம் என்பதும், இதை மீறினால் ஊடறுவிலிருந்து தள்ளிவைப்பதாக(?) நான் அன்பாக மிரட்டியதாகவும்(?) சொல்லும் விடயங்கள் ஒரு கட்டுக்கதை என்பதே நான் சொல்லவந்த மையமான விடயம்.
” ‘எனக்குக் கவிதை முகம்’ தொகுப்பை ஊடறுவிற்கு கொடுக்கவில்லையென்பதால் பலமுறை தொலைபேசியில் அவர் பிடித்த சண்டைகளை …”
என அவர் இப்போ மீண்டும் பொய்யை மெருகூட்டிச் சொல்கிறார். அனார் இழுக்கும் சாட்சிகள் அவர் தம்மிடம் முன்னர் சொன்னதை உறுதிப்படுத்தி சொல்லலாம். அதற்கு அப்பால் எதைச் சொல்ல முடியும். சேரன் அந்த எல்லைக்குள் தனது சாட்சியத்தை முன்வைத்துள்ளார். (அனார் குறிப்பிடும் சாட்சிகளில் எவராவது அனார் தம்முடன் இதுபற்றி கதைத்தது சம்பந்தமாக என்னோடு பேசியதில்லை.)
என்னை அறியாத என்னோடு எந்தத் தொடர்புமற்ற அறபாத் இதுக்கு மேலே போய் சாட்சி சொல்லியிருக்கிறார்.
“சரியான ஆளிடம்தான் சரியை எதிர்பார்க்கலாம். ஒருவேளை அனாரின் மீது இன்னும் சில அபாண்டங்களை கட்டவிழ்த்து விடலாம் “
என்றும்
“உண்மையை சொல்வதற்குப் பயப்பட்டாலும் ஒருவர் உண்மையை சொல்லும் போது மௌனமாக இருப்பதும் வன்முறையே. அதனால்தான் அனார் சொல்லும் வார்த்தைகள் அத்தனையையும் உண்மை.“
என்றும் சாட்சி சொல்லியிருக்கிறார்.
இதுபற்றி வாசகர்கள் முடிவுக்கு வரட்டும்.
இனி காழ்ப்புணர்வு எங்கிருந்து தொடங்கியிருக்கலாம் என முன்னர் நான் குறிப்பிட்ட கவிதைப் பிரச்சினைக்கு வருவோம்.
மலையகப் பெண்களின் கவிதைத் தொகுப்பான “இசை பிழியப்பட்ட வீணை“ தொகுப்பை நாம் அனாருக்கும் (விடியல் மூலமாக) அனுப்பி வைத்தோம். அனார் வாசித்துவிட்டு தனது கவிதை வரிகள் இத் தொகுப்பிலுள்ள கவிதையொன்றில் வேறொருவரின் பெயரில் இருப்பதாக எம்மிடம் சொல்லியது உண்மை. அதன்பிறகே இந்தப் பிரச்சினை எமக்கு தெரியும். அதாவது கவிதைகளை தொகுக்கும்போது இது எமக்குத் தெரிந்திருக்கவில்லை. தெரிந்திருந்தால் இக் கவிதையை நாம் தொகுப்பில் சேர்ப்பதை நிச்சயம் தவிர்த்திருப்போம். அதுதான் உடனடிச் சாத்தியமான தீர்வாக எமக்கு இருந்திருக்க முடியும்.
அனார் இப்போ முன்வைத்திருக்கும் (2002 இல் எழுதப்பட்ட) ஆதாரத்தை முன்வைத்துப் பார்க்கும்போது, அனாரின் கவிதையை அன்னால் குளோரி பிரதிபண்ணியிருக்கிற வாய்ப்புத்தான் அதிகம் தெரிகிறது. வரிகள் என்றில்லாது முழுக் கவிதையே பிரதிபண்ணப்பட்டிருப்பது தெரிகிறது. அது இத் தொகுப்புக்குள் வரநேர்ந்த தவறை நாம் ஏற்றுக்கொள்கிறோம். தொகுப்பை வெளியிட்டவர்கள் என்ற அடிப்படையில் இது எமக்கான தார்மீகக் கடமை.
ஆனால் இத் தவறை வேண்டுமென்று செய்ததாக எடுத்துக்கொண்டு கருத்துச் சொல்பவர்களுடன் எம்மால் உடன்பட முடியாது. இவ்வாறான பிரச்சினைகள் தொகுப்புகளை வெளியிடும்போது சில சந்தர்ப்பங்களில் நடந்துவிடுகின்றன. இது ஒன்றும் புதிதில்லை. இது ஒரு நடைமுறை சார்ந்த பிரச்சினை. அந்தக் கவிதைவரிகளின் சொந்தக்காரராயிருக்கும் படைப்பாளருக்கு மன உளைச்சலை இது ஏற்படுத்தக்கூடியது என்பதையும் நாம் ஏற்றுக் கொள்கிறோம்.
“இசை பிழியப்பட்ட வீணை“ தொகுப்பு வரமுன்னரே அனார் இதை எப்படி பார்த்திருக்க முடியும் என்று யோசிக்காமல், பிரச்சினைக்குள்ளான இக் கவிதையை தொகுப்பில் சேர்த்தது பிழை என தீர்ப்பு வழங்குபவர்களுக்கு எம்மிடம் பதில் இல்லை.
“இந்த விடயம் தொடர்பாக “இசை பிழியப்பட்ட வீணை“ தொகுப்பு அச்சாக்கத்துக்கு உதவி புரிந்த ஆத்மாவிடம் 6 வருடங்களுக்கு முன்பே முறையிட்டேன். எக்ஸில் விஜியிடமும் இது பற்றிப் பேசியிருக்கிறேன். இதை பெரிதுபடுத்த வேண்டாம். சில பிழைகள் தொகுப்பில் நேர்ந்துவிட்டன என ஆத்மா குறிப்பிட்டார்.“
என்கிறார் அனார். ஆத்மா மலையகத் தொடர்புகளை (தினகரனினதும் இன்னும் ஒருசிலரினதும் தொலைபேசி இலக்கங்களை) பெற்றுத் தந்தது மட்டும்தான். இது கவிதைத் தொகுப்பின் இறுதிப் பக்கத்தில் (நன்றி தெரிவித்து) குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால் ஆத்மா அச்சாக்கத்துக்கு உதவிபுரிந்ததாக அனார் சொல்வதில் எந்த உண்மையும் இல்லை. இத் தொகுப்பின் அச்சாக்கத்திலோ ஆலோசனை வழங்குவதிலோகூட ஆத்மா சம்பந்தப்பட்டில்லை. “இதை பெரிதுபடுத்த வேண்டாம்“ என அவர் சொல்லியிருந்தால் அது அவரது கருத்தே. அதை எமது தரப்புக் கருத்தாக எடுத்துக்கொள்வதில் ஒரு நியாயமும் இல்லை. ஊடறு எப்போதுமே விடியல் பதிப்பகத்தின் உதவியோடுதான் அச்சாக்கத்தை (பிறின்ரிங்) செய்வது வழமை. இசைபிழியப்பட்ட வீணை தொகுப்பும் விடியல் சிவாவின் உதவியுடன் சென்னையில் அச்சிடப்பட்ட நூலாகும். விநியோகத்தையும் விடியலினூடாகவே நாம் செய்வது வழமை.
“என்னை இலக்கு வைத்து ஊடறுவில் றஞ்சி அவ்வப்போது எடுக்கின்ற வாந்திகளை நான் கண்டுகொள்வதில்லை. அவற்றை நக்கிச் செல்ல அவர் வளர்த்த நாய்கள் இருக்கின்றன“
என்கிறார் அனார். ஊடறுவில் அவரை இலக்குவைத்து நான் எடுக்கிற வாந்திகளை ஆதாரமாக ஊடறுவிலிருந்து அவர் எடுத்துக் காட்டலாமே. “நான் வளர்த்த நாய்கள்“ என அவர் யாரை சொல்கிறார். ஊடறு வாசகர்களையா அல்லது புதிய பெண் படைப்பாளிகளையா.. யாரை?. இந்த மோசமான சொற்பிரயோகங்கள் புதிய படைப்பாளி என்ற நிலையைக் கடந்தவர்களுக்கு தெரியாமல் போய்விடலாம். ஆனால் எம்மால் இதை ஒரு மோசமான சொற்பிரயோகமாகத்தான் எடுத்துக்கொள்ள முடிகிறது. அவரது பதிலில் இப்படியான சொற்பிரயோகங்கள் பல உள்ளன.
“உண்மையில் 2008 இல் அனாரின் ‘எனக்குக் கவிதை முகம்’ கவிதைத் தொகுப்பு வெளிவந்த பிறகே அதற்கான முகவுரையை சேரன் எழுதியிருந்தது எமக்குத் தெரியும்.“
என நான் குறிப்பிட்டிருந்தேன். திரும்பவும் சொல்வதெனில், அனாரின் தொகுப்பு எமது கைக்கு வந்தபின்னர்தான் அதன் முகவுரையை சேரன் எழுதியிருந்தது எமக்குத் தெரியும் என்பதுதான் அது. இதை தொகுப்பு வெளிவந்தபின்னரே சேரன் முகவுரை எழுதியதாக நான் சொல்கிறேன் என அனார் சொல்வது சிரிப்புக்கிடமானது. தொகுப்பை வெளியிட்டபின் முகவுரையை நூலினுள் சொருகவா முடியும். புத்தகத்தை வெளியிட்டபின் முகவுரை எழுதப்பட்டதாக யாராவது சொல்வார்களா என்று யோசித்திருந்தால், மீண்டும் நிதானமாக வாசித்துப் பார்த்திருக்கலாம். அதற்கு அனாரின் பொறுமையின்மை விடவில்லை.
“ஆழியாள் எப்போதும் என் மதிப்பிற்குரிய தோழி. எனவே றஞ்சி அவரை இவ்விடயத்தில் சேர்த்திழுப்பதில்…“
என எழுதுகிறார் அனார். ஆழியாளை சேர்த்திழுக்க என்ன வேண்டியிருக்கிறது. 2009 இலிருந்து ஊடறுவின் இணை ஆசிரியராக உள்ளார் ஆழியாள். அதை ஊடறு இணையத்தளத்துக்குள் இனியாவது சென்று பார்த்துத் தெரிந்துகொள்ளட்டும் அனார்.
அன்னால் குளோரி என்பது றஞ்சியின் அவதாரமா என்று ஓரிடத்தில் அனார் சந்தேகமாகக் குறிப்பிட்டுள்ளார்.
அப்படியான மோசமான வேலையை நாம் செய்யும் நிலையில் இல்லை. இந்தக் குற்றச்சாட்டு சம்பந்தமாக தினகரன் ஊடறு பின்னூட்டத்தில் தெளிவுபடுத்தி உள்ளார். அந்தப் பெயரில் வந்த கவிதையை தான் எடுத்து அனுப்பியதாக அதில் அவர் தெளிவாகக் குறிப்பிட்டுள்ளார். 6 வருடம் கடந்துவிட்ட நிலையில் அதை ஞாபகப்படுத்தி உடனடியாக தேடியெடுத்துக் கொள்ள முடியாத நிலை எமக்கு ஏற்பட்டுள்ளது. இயன்றளவுக்கு மலையக இலக்கிய நண்பர்களினூடாகத் தேடிக்கொண்டிருக்கிறோம். அதை எடுத்தபின் எனது பதிலை எழுதலாமென இருந்தேன். இன்னமும் அது கைகூடவில்லை. எனவே இனியும் இழுத்தடியாமல் எனது பதிலை இங்கு தந்திருக்கிறேன்.
குறிப்பு: அக் கவிதை அன்னால் குளோரி என்ற பெயரில் வந்த இதழ் கிடைக்கும்பேர்து அதுபற்றிய விபரத்தை பின்னர் தருகிறோம்.
Feminist writers are in need of more and more people as activists in order to engage in activism but women writers like their counter parts are in need of petty things to fight.
S.Jeyasankar
நஞ்சி இப்போது செய்வது போல இத்தவறை தவறு சுட்டிக்காட்டப்பட்ட போதே சரி செய்திருந்தால் தேவையற்ற வாதங்களைத் தவிர்த்திருக்கலாம்.
அனார் பக்கத்தில் நியாயமிருந்தாலும் அனார் பாவித்த வார்த்தைகள் முதிர்ந்த ஒரு படைப்பாளிக்குரியனவல்ல.
தவிரவும் இவ்வாறான தொகுப்புகளில் தொடர்ந்து தவறுகள் ஏற்படுவதற்கான காரணமாக நானுணர்வது பதிப்புத்துறை தொழில்முறையானதாக வளர்த்தெடுக்கப்படாமையே. தினகரன் தொகுத்துத் தந்தார் நாங்கள் பதிப்பித்தோம் என்றில்லாமல், தொகுப்புக்கான கவிதைகளைத் தேர்வு செய்தவுடன் அக்கவிதைக்கான கவிஞர்களுடன் தொடர்பு கொள்ளுதல், பதிப்பிப்பதற்கான அனுமதியைப் பெறுதல், கவிதை குறித்து அதிகம் பரிச்சயமுள்ள இருவரோ மூவரிடமோ கொடுத்து தொகுப்பைச் சரிபார்த்தல் என்று பதிப்புச் செயற்பாடு இருந்திருக்குமாயின் இவ்வாறான தவறுகள் நிகழும் வாய்ப்புக் குறைவாயிருந்திருக்கும்.
ஒரு வரும் இது பற்றி உரையாடாதிருப்பதே தவறுகள் நிகழாதென்பதற்கான உத்தரவாதம் இனியும் இல்லை என்றே எண்ண வைக்கின்றன.
எஸ்.ஜெயசங்கர் என்பவர் சொல்கிற கூற்று கவனிக்கத்தக்கது. பெண்படைப்பாளர்கள் செயற்பாட்டுத் தளத்தில் பணியாற்ற வேண்டிய காலமிது. படைப்பாளர்கள் என்கிற கொம்பைத் தலையில் சுமந்து திரிகிறதல்ல அவர்களுடைய வேலை இப்போ.