நிலஞ்சனாவின் இந்தக்கட்டுரை நேற்றைய இந்து நாளிதழில் வெளியாகியிருந்தது.
பெண்கள் மீதான பாலியல் வன்முறைகளுக்கு மட்டும் கொதித்துக் கொந்தளித்து ஆர்ப்பாட்டங்கள் நடத்தும் இந்தச்சமூகம், பெண்கள் மீது அன்றாடம் நிகழ்த்தப்படும் குடும்ப வன்முறைகளை – கணவன்மார்களின் பாலியல் திணிப்புகளை, வரதட்சணைக் கொடுமைகளை, படுகொலைகளைக் கண்டுகொள்ளாமல் நகர்ந்து செல்வதின் பின்னுள்ள ஆணாதிக்கக் – கலாச்சாரக் கருத்தியலில் ஒரு மாற்றத்தை ஏற்படுத்தாமல், ‘மரணதண்டனை’ ‘காயடிப்பு’ ‘சட்ட இறுக்கம்’ போன்ற சாத்தியங்களைப் பரிந்துரைப்பதால் எந்த மாற்றத்தையும் நிகழ்த்திவிட முடியாது என்பதை நிலஞ்சனா துல்லியமாக விளக்கியிருக்கிறார் .சமுகத்தில் எல்லாவிதக் குற்றங்களும் குறையும்போது தான் பாலியல் வன்முறைக் குற்றங்களும் குறையும் என்பதை, பொருளாதார அறிஞர் ஸ்டீவன் லெவிட் மற்றும் பின்கெர் போன்றோரின் ஆய்வுகளை முன்னிறுத்திச் சுட்டிக்காட்டுகிறார். ஆக, ஒட்டுமொத்தமாக சமூகத்தில் நிலவும் வன்முறைச் சூழலை ஒழிக்காமல், ஆணாதிக்கக் கருத்துகளையும் அதன் விளைவான அன்றாட வன்முறைகளையும் முடிவிற்குக் கொண்டுவராமல் பாலியல் வன்முறைகளை மட்டும் ஒழித்துக்கட்டிவிட முடியாது என்று வலியுறுத்தும் நிலஞ்சனா, இந்தியாவில் “ரேப்” என்னும் வன்முறையை ஒழிக்கவோ அல்லது குறைக்கவோ விரும்பினால் முதலில் நமது குடும்பத்திற்குள்ளும் நமது சமூகத்திலும் நிலவும் பெண் பற்றிய ‘கலாச்சார’ மதிப்பீட்டில் மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும் என்கிறார்.
பெண்கள் மீதான் பாலியல் வன்முறைகளுக்கு அவர்களே (அவர்களது உடைகளும் ஒழுக்கமின்மையும்) காரணம் எனச் சொல்கிறவர்களின் ஆழ்மனத்தில், (இத்தகைய) பெண்கள் பாலியல் வன்முறைக்குள்ளாக்கப் பட வேண்டியவர்கள்; பாலியல் வன்முறை புரிவது ஆண்களின் உரிமை என்கிற கருத்துக்கள் புரையோடிக் கிடக்கின்றன. இவற்றின் மீது கல் எறியாமல் வெறும் தண்டனைகளால் பாலியல் வன்முறைகளை எவ்வாறு முடிவுக்குக் கொண்டு வர இயலும்?
பெண்கள் மீது மட்டுமல்ல, பெண்/ஆண் குழந்தைகள் மீது நடத்தப்படும் பாலியல் வன்முறைகள் குறித்தும் “ரேப்” என்பது வன்முறையின் தனித்த வடிவமல்ல, அது பெண்களுக்கு எதிரான பிரச்சினையின் ஒரு பகுதி மட்டுமே என்பது குறித்தும் ஆணாதிக்கம் என்பது எப்படி தலைமுறைகளினூடாய் கடத்தப்படுகிறது என்பது குறித்தும் விரிவாக விவாதிக்கும் இந்தக் கட்டுரை
http://www.thehindu.com/todays-paper/tp-opinion/the-crisis-in-our-community/article4641730.ece