ஓவியா – சென்னை ,இந்தியா
இன்றைய தினம் உரத்து ஒலித்துக் கொண்டிருக்கும் பெண்ணியக் குரலின் முதல் ஒலி கேட்கத் துவங்கிய நூற்றாண்டு பதினெட்டாம் நூற்றாண்டு எனக் கொள்ளலாம். பெண்களுக்கான வேலை நேரம் நிர்ணயம் வாக்குரிமை கர்ப்பத் தடை உரிமை என்று பெண்கள் இயக்கத்தின் பயணம் நீண்டு வருகிறது. தமிழ்ச் சமூகத்தில் பெண்ணடிமையும், சாதியடிமைத்தனமும் இணைந்து கிடக்கும் சூழலில் சாதி ஒடுக்குமுறைக்கு எதிரான போராட்டங்களே பெண்ணுரிமைக்கான குரலை தோற்றுவித்தன.
தோள்சீலை போராட்டம் சுகாதாரத்துக்கும் மருத்துவ உரிமைகளுக்குமான போராட்டம் கல்வி கற்கவும்
செல்லவும் நடத்தப் பட்ட போராட்டங்கள் தேவதாசி ஒழிப்பு போராட்டம் சுயமரியாதை திருமணத்திற்கான போராட்டம் சாதி மாறி காதல் திருமணம் முடிப்பதற்கான போராட்டம் சதியை எதிர்த்த போராட்டம் திருமண வயதை உயர்த்தியது விதவை என்று பட்டம் சூ ட்டப்பட்டு முக்காடிட்டு அமர்ந்திருந்த பெண்களை வெளிக் கொணர்ந்தது என்று கடந்த காலத்தின் சாதனைகள் இன்று திரும்பிப் பார்க்கும் போது பிரமிப்பை ஏற்படுத்தத்தான் செய்கின்றன.
ஆனால் இத்தனைக்கும் பிறகு நாம் அடைய வேண்டிய இலக்கில் ஒரு பத்து பதினைந்து சதவீதம்தான் நாம் அடைந்திருக்கிறோம் என்ற உண்மை அதைவிட பூதாகரமாக நம்முன் நிற்கிறது. ஒரு நூற்றாண்டுக்கும் மேலாக இந்த மகளிர் தினம் உலகமெங்கும் கடைப் பிடிக்கப் பட்டு வருகிறது. அதன்படி ஒவ்வொரு வருடமும் மார்ச் மாதத்திலிருந்து அடுத்த பிப்ரவரி வரை மகளிர் ஆண்டு என வரையறுக்கலாம். இந்த அடிப்படையில் சென்ற ஆண்டு பெண்களுக்கு எவ்வாறு சென்றடைந்திருக்கிறது என்பதை தமிழ்ச் சூழலில் வைத்து சிந்திப்போம். தமிழகத்தைப் பொறுத்தவரையில் கடந்து சென்றிருக்கும் ஆண்டின் இறுதிப் பகுதி பெண்கள் மீது நடத்தப் படும் பாலியல் வன்முறைகளைப் பற்றி மிகப் பெரிய அச்சத்தை ஏற்படுத்தி விட்டு சென்றிருக்கிறது. பெண்கள் மீதான வன்முறை பெருகியிருக்கிறதா பெண்கள் உடல் மற்றும் அவர்களின் கற்பு மீதான கவனம் பெருகியிருக்கிறதா என்ற கேள்விக்கிடையில் மெல்லிய திரைதான் ஊடாடிக் கொண்டிருக்கிறது.
ஓடும் பேருந்தொன்றில் பாலியல் வன்முறைக்குட்படுத்தப் பட்ட நிருபமா (இது அந்தப் பெண்ணின் பெயரல்ல அந்தப் பெண்ணுக்கு டைம்ஸ் ஆஃப் இண்டியா பத்திரிகை வைத்த பெயராம். பெண்ணின் கற்பு மானத்தைக் காப்பாற்ற இந்திய சமூகம் எடுத்துக் கொள்ளும் பேராண்மை பொருந்திய நடவடிக்கைகள் நம்மை புல்லரிக்க வைக்கின்றன. இல்லையா ) திராவக வீச்சுக்கு ஆளான காரைக்கால் விநோதினி இவர்களின் உருவங்கள் கறுப்புத் துணி போர்த்தப் பட்டு பிரம்மாண்டமான பிம்பங்களாக இந்திய அல்லது தமிழ் பொது வெளியில் நிறுத்தப்பட்டு காற்றலைகளில் அல்லாடிக் கொண்டிருக்கின்றன. இவற்றின் பின்னணியில் மரண தண்டனை உள்ளிட்ட தண்டனை சட்டங்கள் தேவை என்று இந்த ஆண் சமூகத்தின் பொதுப் புத்தி அவசர தீர்ப்பு எழுதுகிறது. பெண்களை சுற்றி நிற்கும் கட்டுப் பாட்டு வளையங்கள் எச்சரிக்கை உணர்வு என்ற பெயரில் இறுக்கப் படுகின்றன. பாண்டிச் சேரியில் ஒரு கல்லூரி பெண்கள் கோட் போன்ற உடலை மறைக்கும் உடைகளையணிந்து வர வேண்டும் என்று விதி இயற்ற முயன்றதாகக் கேள்வி. பர்தா அணிந்து வர வேண்டும் என்று சொல்லி விட இவர்களது இந்து மனோநிலை அனு மதிக்காத வரையில் நாம் தப்பித்தோம்.
இரவு 9 மணிக்கு மேல் வேலைக்கு செல்கின்ற பெண்கள் தவிர பிற காரணங்களுக்காக பெண்கள் வெளியில் வர வேண்டாம் என்று சிந்தனையாளர்களாக இருக்கின்ற பெண்களே பேசுவதைக் கேட்க வேண்டியிருக்கிறது. அப்படியென்றால் இரவு நேரம் பணிக்கு செல்லும் பெண்கள் மீது பாலியல் வன்முறை நடக்காதென்பதற்கு என்ன உத்தரவாதம் அல்லது அவர்களுக்கு நடந்தால் பரவாயில்லையா இன்னொரு புறம் இந்த வாதத்தின் பொருள் என்ன பாலியல் வன்முறைக்குள்ளாக்கப் படும் பெண்கள் ஏதோ ஒரு வகையில் இந்த சமூக வெளியில் வரம்பு மீறி நடந்து கொண்டதால்தான் இந்த வன்முறைகள் நடந்ததா உதாரணமாக நிருபமா ஆண் நண்பரோடு திரைப்படத்துக்கு சென்று விட்டு திரும்பியது காரைக்கால் விநோதினி ஓர் ஆணின் உதவியை எடுத்துக் கொண்டு அவனது காதலை நிராகரித்தது இன்னும் இப்படி இதன் தொடர்ச்சியாக பயணிக்கின்ற சராசரியான பொது மனம் இப்படி கற்பனையாக ஏதோ ஒரு காரணத்தை ஒவ்வொரு பாலியல் வன்முறைக்கும் கற்பித்துக் கொள்ள முடியும். ஏன் ஒவ்வொரு வன்முறைக்குமே இப்படியாக ஒரு காரணத்தைக் கூறி விட முடியு ம். ஒரு கணவன் மனைவியின் நாக்கை அறுத்து விட்டானாம். இதனைக் கேட்ட மருத்துவர் கேட்டாராம், ‘ஏ அப்பா! அப்படியென்றால் நீ எவ்வளவு பெரிய வாயாடியாக இருந்திருப்பாய் என்று’ பெண்களின் உடல் மீது நடத்தப் படும் வன்முறையை காலங்காலமாய் இந்த சமூகம் இப்படித்தான் எதிர் கொண்டு வருகிறது.
தொடர்ச்சியாக ஊடகங்களில் வெளி வந்த பாலியல் வன்முறை சம்பவங்களுக்கு சற்று பின்னோக்கி நகர்ந்தால் பெண்களின் சுதந்திர வெளி மீது இந்த மதவாதிகள் நேரடியாக தாக்குதல் தொடர்ந்து வந்ததைக் காண முடியும். மங்களூரில் தங்களது வீட்டில் பிறந்த நாள் கொண்டாடிய பெண்கள் இந்து இயக்கத்தவரால் அவர்கள் வீடுகளுக்குள் புகுந்து தண்டிக்கப் பட்டார்கள். தமிழகத்தில் இனி நாங்கள் இந்த வகையான தாக்குதலை பொது வெளியில் பெண்கள் மீது நிகழ்த்துவோம் என்று அவர்கள் வெளிப் படையாக அறிவித்தனர். இஸ்லாமிய மவுலானாக்கள் அவர்களது பெண்கள் மேலைநாட்டு இசையுடன் பாடல்கள் பாடுவதற்குக் கூட பஃட்வா விதிக்கிறார்கள். காதலர் தினத்தன்று நாய்கள் கழுதைகள் இவற்றிற்கு திருமணம் செய்வித்தல் என்ற பெயரில் அந்த வாயில்லா ஜீவன்களைக் கொடுமைப் படுத்தினர். தமிழக அரசியலில் அதிர்ச்சி தரத் தக்க அளவில் சாதி மறுப்பு திருமணங்களை எதிர்த்து ஓர் இயக்கத்தைக் கட்ட பிற்போக்காளர்கள் முயற்சி செய்தனர். அவர்களால் வெற்றி பெற முடியாமல் போனது நல்ல விசயம்.
இது போன்ற, ‘சமூக வெளியில் பெண்ணுக்கு எதிரான கருத்தியல்கள் தங்களை நிலை நிறுத்திக் கொள்ள முயன்றதையும்’ இந்த தொடர்ச்சியான பாலியல் வன்முறைகளையும் நன்கு சிந்தித்துப் பார்த்தால் ஒரு நேர்கோட்டில் ஒன்றுக் கொன்று தொடர்புள்ள விசயங்களாக நிறுத்த முடியும். இவற்றை தவிர்த்து விட்டு பாலியல் வன்முறைகளை ஆண்களின் ரவிடியிசத்தின் அல்லது சட்டத்தை மீறிய குற்றச் செயலாக மட்டுமே பார்ப்பது என்பது அப்போதைய உணர்ச்சிக்கு வடிகாலாக அமையலாமே தவிர சமூகத்தில் உண்மையாகவே இந்த வன்முறைகள் நடப்பதை தடுப்பதற்கான செயலாக அமையாது. மதுரா பாலியல் வன்முறை வழக்குதான் இந்தியாவில் பெண்கள் இயக்கத்தின் பரவலான செயற்பாட்டிற்கு ஒரு துவக்கமாக அமைந்தது. இன்றும் கூட பெண்கள் மீதான பல்வேறு வடிவங்களில் பாலியல் வன்முறை மட்டுமே இந்திய சமூகத்தை உசுப்பக் கூடியதாக இருக்கிறது என்பதும் கூட கவனிக்க வேண்டிய ஓர் அம்சம்தான். அதே நேரத்தில் இதே பாலியல் வன்முறைகள் சாதியின் பேரால் நடத்தப்படும்போது இவர்களிடம் நிலவும் அதிசயத்தக்க மவுனம் சொல்கின்ற செய்திகளை நாம் எப்படி புரிந்து கொள்வது? டில்லி பாலியல் வன்முறையை விட பலமடங்கு கொடுமையான ‘கயர்லாஞ்சி சம்பவம்’ எந்த போராட்டத்தையும் இந்த மண்ணில் தூண்டவில்லை. பெண்ணின் கற்பு மீதான தனது கீரிடத்தை இழக்க விரும்பாத இந்தத் தமிழ்ச் சமூகம் வாச்சாத்தியில் நடந்த பாலியல் வன்முறைக்கு எந்த ஊரையும் எரித்து விடவில்லை.
இந்தியாவின் வட கிழக்கு மாகாணங்களில் இராணு வத்தினரால் நடத்தப் படும் பாலியல் வன்முறைகளும் ஈழத்தில் நடந்து முடிந்த நடந்து கொண்டிருக்கும் பாலியல் வன்முறைகளும் இவர்களது பொதுப் புத்தியில் எந்த அச்சுறுத்தலையோ இவர்கள் பண்பாடு குறித்த கவலையையோ ஏற்படுத்துவதாக இல்லை. அதாவது இந்த விதமான வன்முறைகளில் பாலியல் வன்முறை ஆதிக்க சக்திகளின் வலிமையை நிலைநாட்டுவதற்காக நடத்தப் படும்போது இவர்கள் ஓர் செயலற்ற மவுனத்துக்குள் சென்று விடுகிறார்கள். மாறாக இந்த அடையாளங்கள் இன்றி ஒரு பெண் தனித்துத் தாக்கப் படும்போது அந்த தாக்குதல் ஒரு பெண்ணின் மீதான வன்முறையாக மட்டுமல்ல, மாறாக இதுபோன்ற வன்முறைகள் கற்பு கோட்பாட்டின் மீதான புனிதத் தன்மையையும் பாதித்து விடுவதாக இந்த சமூகம் உணர்கிறது. அந்த உணர்வுதான் பெண்கள் மீதான அடிப்படை வன்முறை மீது எந்த உணர்வுகளுமில்லாதவர்களை போராட்டத்துக்கு இழுத்து வருகிறது.
எப்படியிருந்த போதிலும் இதன் விளைவாக போடப்பட்ட வர்மா கமிசன் இது ஒரு பாலின சமத்துவமற்ற சமுதாயம் என்று பதிவு செய்திருப்பதையும் பாலின சமத்துவத்திற்கான பயிற்சியை அதிகார வர்க்கம் பெற வேண்டும் என்று அறிவுறுத்தியிருப்பதையும் ஆறுதலான அம்சங்களாகப் பார்க்கலாம். ஆனால் அதன் அடிப்படையில் கொண்டுவரப்பட்ட அவசர சட்டம் மிகக் கவனமாக மனைவி மீது கணவன் நடத்தும் வன்முறையை குற்றப் பட்டியலில் கொண்டு வர மறுத்து விட்டது. நாம் மேலே குறிப்பிட்டிருப்பது போல இவர்கள் காப்பாற்ற விரும்புவது பெண்ணின் உடல் மீது உரிமை கோருவதில் இவர்கள் உருவாக்கி வைத்திருக்கும் ஒழுங்கைத்தானே தவிர பெண்ணையல்ல என்பது மீண்டும் உறுதி செய்யப் படுகிறது.
இதனையெல்லாம் தாண்டி இன்னும் கூட இது போன்ற நிகழ்வுகளைக் கேள்விப் படும்போது பெண்கள் தாங்களாக முன்வந்து சமூக அமைப்புகளைக் கட்டுவதான நிகழ்வுகள் நடைபெறவேயில்லை. மாறாக ஊடகங்களின் வழி வரும் இச் செய்திகள் படித்த வேலைக்குப் போகும் பெண்ணின் மன வலிமையைக் குறைக்கக் கூ டியவையாக அவர்களுக்கு விதிக்கப் பட்டிருக்கும் கட்டுப்பாடுகளை நியாயப் படுத்துகின்றனவாகவே முடிந்து போகின்றன. பெரியார் சொன்னது போல் பெண்களால் இந்த ஆண்மை என்ற பதம் அழித்தொழிக்கப் படாமல் பெண் விடுதலை என்பது சாத்தியமில்லை என்ற கூ ற்று மேலும் மேலும் பன்முக அர்த்தங்களுடன் நம்முள் ஒலிக்கிறது.
இதற்கடுத்தபடியாக இப்போது தமிழ்நாட்டில் மதுவிலக்கு என்ற கோரிக்கை அரசியல்வாதிகளாலும் காந்தியவாதிகளாலும் எழுப்பட்டுக் கொண்டிருக்கிறது. இதிலும் பெண்கள் நலனே முகாமையாகப் பேசப் படுகிறது. இரண்டு கோணங்களிலிருந்து, ஒன்று குடியினால்தான் ஆண்கள் தங்கள் வருமானத்தை பெண்களிடம் தருவதில்லை. இரண்டு இப்போது பெண்களே குடிக்க ஆரம்பித்து விட்டார்கள். எனவே இந்த மது உடனே தடை செய்யப் பட வேண்டும் என்று சொல்கிறார்கள். மீண்டும் இந்த வாதமும் ஆண்கள் குடியை நிறுத்தி விட்டால் இந்த குடும்ப அமைப்பு இந்தப் பூ வுலகில் சொர்க்கத்தை படைத்து விடும் என்ற முழுக்க பொய்யான ஒன்றை நம்ப வைக்கவே வழி சமைக்கிறது. மனைவியை அடிக்க நினைப்பவன் குடித்து விட்டு போய் அடிக்கிறானே தவிர குடிப்பதனால்தான் அடிக்கிறேன் என்று சொல்வது குடிகாரன் சொல்கின்ற பொய். அதனை இவர்கள் வழி மொழிவது என்பது இவர்கள் நடத்துகின்ற ஏமாற்றே தவிர வேறல்ல.
குடியை எதிர்த்து இவர்கள் போராடட்டும். குடி ஒரு தீமை என்பதில் மாற்றுக் கருத்தில்லை. ஆனால் பெண்ணடிமைத்தனத்தின் உண்மையான ஊற்றுக் கண்களை இது போன்ற திசை திருப்பும் போராட்டங்கள் மறைத்து விடுகின்றன. ஒரு முறை நான் நேரில் கண்ட ஒரு நிகழ்வை நான் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். ஒரு வீட்டின் வாசலில் ஒரு கணவன் மனைவியை சராமாரியாக அடித்துக் கொண்டிருந்தார். அந்த வீட்டின் எதிர்புறத்தில் சாலையை அடுத்து பேருந்து நிறுத்தத்தில் மக்கள் நின்று கொண்டிருந்தார்கள். அவர்கள் அந்த ஆண் குடித்து விட்டு மனைவியை அடிப்பதாக கருதி தங்களுக்குள் பேசிக் கொண்டிருந்தனர். அந்த ஊரைச் சேர்ந்த பெரியவர் இறுதியாக அந்த பேருந்து நிறுத்தத்திலிருந்து எதிர்புறத்திலிருந்த அந்த வீட்டு வாசலுக்கு சென்றார். பின்னர் சில நிமிடங்களிலியே திரும்பி வந்து சாவகாசமாகச் சொன்னார் அவன் குடிக்கலை. அவ்வளவுதான் அந்த கூ ட்டம் இப்போது அந்த பெண்ணுக்கு எதிராகப் பேசத் துவங்கி விட்டது. ஒரு போராட்டம் அது நடத்தப் படுவதற்கான நியாயங்களை மட்டும் கொண்டிருந்தால் போதாது. அதனால் ஏற்படும் விளைவுகளின் நியாயங்களையும் சேர்த்துதான் நாம் பேச வேண்டும். அது மறைக்கின்ற நியாயங்களையும் சேர்த்துதான்.
இந்தியாவின் பட்ஜெட் பெண்களுக்கான தனி வங்கிகள் தொடங்கப் படப் போவதாக அறிவித்திருக்கிறது. இதில் என்னென்ன திட்டங்கள் அடங்கும் என்பது நடப்பில்தான் தெரிய வரும். இந்தியக் கார்ப்பரேட்டுகளில் கண்டிப்பாக ஒரு பெண் இயக்குனர் நியமிக்கப் பட வேண்டும் என்ற ஆலோசனை கிடப்பில் இருக்கிறது. 14 வருடங்களாக இந்திய நாடாளுமன்றம் பெண்களுக்கான 33 சதவீத இட ஒதுக்கீட்டை கிடப்பில் போட்டிருப்பது மூலமாக மறுத்து வருகிறது. குடும்ப வன்முறைக்கெதி ரான தடுப்பு சட்டம் பெண்களில் பயன்பாட்டெல்லைக்குள் வரவில்லை. நீதித் துறை கட்டமைப்பில் இருக்கும் ஆண்களின் மேலாதிக்கமும் புரையோடிப் போயிருக்கும் ஆணாதிக்க கருத்தியலும் எந்த நிலையில் பாதிக்கப் பட்டாலும் பெண்ணுக்கு நீதி என்பதை எட்டாக் கனியாகவே வைத்திருக்கின்றன. இவையெல்லாம் பெண் பயணிக்க வேண்டிய தூரம் அதிகம் என்பதையே உணர்த்தி நிற்கின்றன.
தமிழகத்தின் நிலை இதுவெனில் ஈழத்து மண்ணின் சோகம் இன்னும் தொடர்கதையாகவே நீள்கிறது. சர்வதேச சமூகத்தில் தமிழர் குரல் ஒலிக்க தேவையான அரசியல் கட்டமைப்பு இன்றி தவித்து நிற்கும் அவல நிலை தொடர்கிறது. சொந்த நாட்டிலேயே அகதிகளாக வாழும் சோகத்தில் பெண்ணாக இருப்பது கூடுதல் துன்பங்களை தருகிறது. புலம் பெயர்ந்த தேசத்தில் வாழும் பெண்களும் தமிழ் கலாச்சாரம் என்ற திரையை கடப்பதற்கு இன்னும் போராடிக் கொணடுதான் இருக்கிறார்கள் என்பதை அவர்களிடமிருந்து வெளிவரும் எழுத்துக்கள் சொல்லிக் கொண்டிருக்கின்றன.
இந்தக் கட்டுரையின் துவக்கத்திலேயே கூறியபடி கடந்து வந்த பாதையில் பெருமைப்பட நிறையவே இருந்தாலும் தமிழ்ப் பெண் சமூகம் இன்னும் போராட வேண்டிய வெளி நிறைய இருக்கிறது. அதிலும் ஈழப் போர் தமிழ்ப் பெண்களுக்கு விட்டுச் சென்றிருக்கும் காயங்களை ஒட்டு மொத்த பெண் சமூகம் தனது பொதுப் பொறுப்பாக நினைக்க வேண்டியதும் அந்தப் பொறுப்புகளை நிறைவேற்ற ஓர் அரசியல் சக்தியாக திரள வேண்டியதும் அவசியமாகும்.
இந்தக் கடமைகளை நிறைவேற்றுவதற்கான பெண்களுக்கான அரசியல் வெளியைக் கட்டமைப்பதை இந்த மார்ச் 8 உறுதிமொழியாகக் கொள்வோம். மகளிர் தின வாழ்த்துக்கள்.