கச்சாப்பொருளாகட்டும் பெண் வாழ்க்கை

ச.விசயலட்சுமி

உலக மகளிர்தினம் உழைக்கும் பெண்களின் எழுச்சியைக் கண்முன் கொண்டுவந்து நிறுத்துகிறது. பெண்கள் ஆர்த்தெழுந்த வரலாறை முன்னெடுத்த போராட்டங்களை, திரட்சியை, உறுதியை அடையாளப்படுத்தும் நாள் – மார்ச்-8.
               

நாள்தோறும் செய்தித்தாளிலும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிலும் பாலியல் வன்முறைகுறித்த செய்திகளைப் பார்த்தபடி கடந்து கொண்டிருக்கிறோம்.மிக எளிதாக வன்முறைக்கு உட்படுத்தப்படுவதும் கொலைசெய்யப்படுவதுமான விடயங்கள் நடந்துவருகின்றன.வல்லுறவுக்கு ஆளாக்கப்படும் பெண்கள் ஒராண்டு குழந்தை முதல் உடல் தளர்ந்த மூதாட்டி என எல்லா வயதினர்மீதும் நிகழ்த்தப் பட்டு வருகிறது.இந்நிலையில் இதோ இந்த ஆண்டும் மார்ச் 8  வந்துவிட்டது.

உலக மகளிர்தினம் உழைக்கும் பெண்களின் எழுச்சியைக் கண்முன் கொண்டுவந்து நிறுத்துகிறது. பெண்கள் ஆர்த்தெழுந்த வரலாறை முன்னெடுத்த போராட்டங்களை, திரட்சியை, உறுதியை அடையாளப்படுத்தும் நாள் மார்ச்-8.

இன்றைய நுகர்பொருள் உலகு பெண்களின் போர்க்குணத்தைத் திசைதிருப்பிவருவது போலவே மகளிர்தினமும் தொலைக்காட்சியின் சிறப்பு நிகழ்ச்சியில் சமூக ஈடுபாட்டிற்கு தொடர்பற்ற பொழுதுபோக்குகளில் கழிவதாக இருக்கிறது. நடத்தப்படும் ஊர்வலங்களும், கூட்டங்களும் மனஎழுச்சியை ஏற்படுத்தி விடக்கூடாது என்பதற்காக திட்டமிட்டு ஊடகங்கள் பார்வையாளர்களிடம் வரலாற்றை கொண்டுசெல்லாமல் மறைக்கின்றன. மகளிர்தினத்தன்றும் பெண்கள் தினசரி வேலைகளை செய்த வண்ணம் இருக்கின்றனர். குறைந்த பட்சம் காதலர் தினத்தன்று வாழ்த்துகளைப் பரிமாறிக் கொள்வது போன்ற பரிமாறுதல்கள்கூட இல்லாமல் போகின்றன.

கல்விக்கூடம் போகும் பணிபுரியும் பெண்களில் எத்தனைப்பேருக்கு மகளிர்தினம் கொண்டாடப்படுவதன் வரலாறு தெரியும்? குறைந்த பட்சம் இத்தகு விவாதங்கள்கூட இன்றி கழிவதும் நன்றாக உடுத்துவது அழகுபடுத்திக் கொள்வது என்ற பிறந்தநாள், புத்தாண்டு கொண்டாட்டத்தைப்போல வரலாற்று முக்கியத்துவத்தை உணராமல் உணர்த்தாமல் கொண்டாடுவதுமாக இருக்கின்றனர்.

ஒடுக்கப்பட்டுவரும் பாலினமான பெண்கள் சமூக பொருளாதார அரசியல் கட்டமைப்பில் தொடர்ந்து போராட வேண்டிய நிலையில் இருக்கின்றனர். உழைப்புச் சுரண்டலை வறுமையை பண்பாட்டு ரீதியான ஒடுக்குமுறையைப் பாலியல் ரீதியான ஒடுக்குமுறையை தொடர்ந்து எதிர்கொள்கிறாள்.

பெண்குழந்தையை வரவேற்க ஏற்றுக்கொள்ளத் தயங்கும் சமூகத்தில் பெண்களுக்கான இடம் குறித்து யோசிக்க வேண்டியுள்ளது. பெண்குழந்தை என கண்டுபிடிக்கத் தடைவிதித்தாலும் கருக்கலைப்பு செய்வதைத் தடுக்க விதியை மீறத் துடிக்கும் பொருள்மய உலகுஇது. பொருளுக்குக் கொடுக்கப்படும் முக்கியத்துவத்தில் ஒருசிறிதும் பெண்ணுக்கு வழங்கத் தயாராயில்லை. உரிமை என்பது பிறர் கொடுப்பதல்ல தானே எடுத்துக்கொள்வது. உரிமையைப் பெற போராட வேண்டிய பெண்கள் அதற்குரிய உணர்விலிருந்து விலக்கப்படுகின்றனர், விலகிப்போகின்றனர். சுதந்திரத்தைக் கட்டுப்படுத்தும் நிலவுடமைச் சமூக அமைப்பில் பெண்குழந்தைகள் வளர்க்கப்படும் விதம் மிக மோசமானது. தன்னறிவு இன்றி உணவு ஊட்டச்சத்து இன்றி இளம் பிராயம் முதல் வீட்டுவேலை கூலிவேலை தனியார் நிறுவனங்களின் உழைப்புச் சுரண்டல் இதன் தொடர்ச்சியாக உடல்நசிவு மற்றும் உழைப்பிற்கேற்ற ஊதியமின்மை, கிடைத்த ஊதியத்தையும் தனக்காக பயன்படுத்திக் கொள்வதைத் தடுக்கும் குடும்ப நிறுவனம் என்ற படிநிலைகளில் பெண்களுக்கான இடம் எப்படிப்பட்டது என்ற கேள்வியே எஞ்சுகிறது.

கல்வி, வேலை வாய்ப்பு இவற்றில் பெண்கள் கணிசமாக முன்னேறியுள்ளனர் எனக் கருதும் நிலையில் பள்ளிக்கல்வியின் இடைநிற்றலில் பெண்குழந்தைகளின் விகிதம் அதிகமாக இருக்கிறது. படித்த பெண்களிடம் விழிப்புணர்வு இருக்கிறதா? படித்த பெண்களிடம் முன்னேற்றம் காணப்படுகிறதா? பொருளாதார சுதந்திரத்தினால் தான் நினைத்தப்படி சுதந்திரமாக வாழ்ந்து கொண்டிருக்கும் பெண்ணும் திருமண சந்தையில் விலைப்பேசப் படுகின்றாள். படித்த பெண்கள் வரதட்சணை கொடுக்க மறுத்து திருமணம் செய்து கொள்கிறார்களா? படிப்பிற்கு ஏற்ப வரதட்சணையும் தானே அதிகரிக்கிறது. அதிகம் படிக்கவைத்தால் வரதட்சணை அதிகம் கொடுக்க வேண்டும் என்று பயப்படும் பெற்றோர் பெண் குழந்தைகளை உயர்கல்விக்கு அனுப்பத் தயங்குகின்றனர். அசையும் அசையா சொத்துகளில் பெண்களுக்கும் சமஉரிமையுண்டு என்ற சட்டம்வந்த பின்னாலும் பெண்கள் தன் ஊதியத்தை வீட்டிற்குக் கொடுத்துவிட்டு அன்றாடத் தேவைக்கு பிறர்கையை எதிர்பார்க்கும் நிலைதான் உள்ளது. திருமணமான பெண் தன் வருமானத்தையேனும் தன் விருப்பப்படி பெற்றோருக்கு கொடுத்து உதவ முடிகிறதா? அப்படிக் கொடுத்தால் அவள் விசாரிக்கப்படும் விதம் எப்படியிருக்கும்? சுயதேவைகளை நிறைவேற்றிக் கொள்ள உதவாத, சுயசிந்தனையை செயல்படுத்த முடியாத நிலையில் பெண்ணிற்கு சுயம் என்ற ஒன்று இருக்கிறதா? என்ற கேள்வி எழுகிறது.

பெண்களை மெல்லியலார் என மென்மையும் நளினமும் கூடியவர்களாக வருணிக்கும் ஆணாதிக்க மனநிலை கற்பிக்கப் பட்டிருந்தாலும் உழைக்கும் வர்க்கப் பெண்ணுக்கு இது பொருந்தக்கூடியதா? களைப்பறித்தல், மண்வெட்டியைப் பயன்படுத்துதல், கரும்புசுமையைத் தூக்குதல், செங்கல் தூக்குதல், சித்தாள் வேலை, சாலை போடும் பணிகளில் என கடினமான பணிகளை செய்யும் பெண்களுக்கு இது பொருந்துமா? சிம்மாடு வைத்து இரண்டு குடம் நீரை தலையிலும் இடுப்பிலுமாக பல மைல்களுக்கு சுமக்கும் பெண், பலமணி நேரம் நீருக்காக அலைவதும் அடுப்பெரிய விறகுக்காக அலைவதுமான வாழ்க்கை முறையில் அடித்தட்டுப் பெண்களின் வாழ்க்கையில் மெல்லியலார் என்பது பொய்த்துப் போகக்கூடிய கற்பிதமாகவே உள்ளது. நடைமுறைக்கும் கற்பிதத்திற்கும் இடையிலான இவ்விடை வெளிக்குக் காரணம் எது? பெண்கள் மென்மையானவராக சொல்வது அவர்களின் வலிமையைக் கட்டுப்படுத்துவதற்குத்தானே. விசுவாசம் என்ற சொல் ஆண்டைகளுக்குரிய பயனீட்டுச் சொல்லாக இருப்பதுபோல மென்மை என்ற சொல்லும் பெண்ணுக்கான ஒழுக்கங்களாக கற்பிக்கப்பட்ட அனைத்து சொற்களும் வர்க்க, சாதி உறவுகளை வரையறுக்க ஆணாதிக்கத்தின் துணையோடு உருவான பயனீட்டுச் சொற்களேயாம்.

சற்றுப்புறச்சூழல் கேடடைவதால் பெரிதும் பாதிக்கப்படுபவள் பெண். புவி வெப்பமாதலால் ஏற்படும் தட்ப வெட்பமாறுதலால் பாதிக்கப்படும் இயற்கையினால் பெண்ணின் உடலிலும் பாதிப்பு ஏற்படுகிறது. மருத்துவ பரிசோதனை, ஆபாச பண்பாடு, நுகர்பொருள் பண்பாடு என அனைத்துமே பல்வேறு நிலைகளில் பெண்களின் உடலை பரிசோதனைக்கு உள்ளாக்குகிறது. வணிகயுத்திகளுக்கு பெண்ணின் உடல் பயன்படுத்தப்பட்டு வருகிறது. எல்லா நிலைகளிலும் பரவியுள்ள கேளிக்கைமிகுந்த வாழ்க்கை முறையில் பெண்உடல் மையம் பெறுகிறது. உடலை உடைமையாகப் பார்க்கும் நிலையிலிருந்து ஒருசிறிதேனும் மாற்றம் வந்தபாடில்லை. இவ்வுலகின் தேவைகளுக்கு ஏற்ப பெண்களின் உடலைப் பயன்படுத்திக் கொள்ள முயல்கின்றனர். இருப்பினும் பெண்ணெனும் மாயப் பேயின் உடலை சமயம் இழித்துரைக்கிறது. பயன்படுத்திக் கொள்ளுகிற சமூகம் அவளது உடல்மீது விதிக்கிற கட்டுப்பாடுகளுக்கு அளவே இல்லை. பால்யமணம், கற்பு போன்றவை உடலைப் பெண்களே கட்டுப்படுத்திக் கொள்ள உருவானவை. பெண் உடலைப் பெண்ணே உணராதவாரு அவளிடமிருந்தே அந்நியப்படுத்த ஆணாதிக்கம் தொடர்ந்து முயன்று வருவதன் விளைவாகவே கட்டுப்படுத்தப்படும் அதே உடலை நுகர்பொருள் கலாச்சாரம் நிர்வாணப்படுத்தி இரசிக்கிறது. (இதை எழுதுவதன்மூலம் கட்டற்ற பாலியல் சுதந்திரத்தைக் கூறவருகிறேன் என நினைத்துக் கொள்வீர்களானால் உங்கள் அறியாமையை உணர முயலுங்கள்.) பெண்ணின் உடலின் அனைத்து உணர்வுகளையும் பெண் உணரக்கூடாது ஆனால் பெண் ஆணுக்கு நல்ல தாயாக, மனைவியாக, தோழியாக, வேசியாக இருக்க வேண்டும் எனக் கூறிக்கொண்டே போகும் ஆதிக்கக்கூறு பெண்ணுக்கு ஆண் எப்படியிருக்க வேண்டுமெனக் கூறவில்லை. ஆதிக்கம் மிகுந்த தந்தையாக, அதிகாரம் செலுத்தும் கணவனாக, அடங்க மறுக்கும் உடன்பிறப்பாக, எதிர்த்தே பழகும் பிள்ளையாக பெரும்பான்மை இருப்பதாக சொல்லலாமல்லவா?

உணர்வுகளைக் கட்டுப்படுத்தப் பழக்கப்படும் பெண் உணவுக் கட்டுப்பாட்டையும் கடைபிடிக்கிறாள். உங்களுக்குப் பிடித்த உணவு, உடை, நிறம், புத்தகம், சினிமா எது? என கருத்துக் கணிப்பு பெண்களிடம் நடத்தப்பட்டால் கணிசமான எண்ணிக்கையுள்ள பெண்கள் தெரியாது என்ற பதிலுடையவர்களாகவே இருப்பார்கள். நன்கு சமைக்கத் தெரிந்த பெண்களிடம் கேட்டுப் பாருங்கள் “இதுதான் பிடிக்கும்னு இல்லை எதுவேணா சாப்பிடுவேன்” என்ற மனநிலையிலேயே பேசிக் கொண்டிருப்பார்கள் அந்த அளவிற்கு உறுகாய் போல பதப்படுத்தப்பட்டவர்களாக உருவாக்கப்படுவதை ஏற்றுக் கொள்கிற பெரும்பான்மை பெண்களும் அதை ஏற்காமல் திமிறி கலக்குரலாக வெளிப்படுகிற சொற்ப அளவிலான பெண்களும் தான் இங்கு இருக்கின்றனர்.

இன்னும் 33சதவிதம் இடஒதுக்கீட்டிற்காக பேசிக் கொண்டேயிருக்கிறோம். போர்ச்சூழலில் போர்க்களத்தில் பெரிதும் பாதிக்கப்படுபவர்களாக, உணவுப் பற்றாக்குறை நிலவும் நாடுகளில் தாய்மையை சுமந்துகொண்டு அல்லாடுபவர்களாக, உழைப்புச் சுரண்டலில் பொருளாதார மதிப்பற்று மலினப் பட்டவர்களாக, பண்பாட்டு ரீதியில் மிகமிக ஒடுக்கப்பட்டு வருபவர்களாக, என முன்னேற்றத்தை நோக்கிய தப்படிகளை வைக்கமுடியாமல் இளம்பிள்ளை வாதத்திற்கு ஆட்பட்ட குழந்தையைப்போல இருக்கிறது பெண் உரிமை.

பெண்குழந்தைகளைப் பாதுகாப்பது பேரச்சம் தரக்கூடிய விஷயமாக கருதபடுகிறது. பாலியல் அச்சுறுத்தல்களுக்கு தொடர்ந்து ஆளாகக் கூடியவர்களாக பெண்கள் இருக்கின்றனர். பாலியல் அச்சுறுத்தல்களை எதிர்க்கவோ கடக்கவோ முயலாத நிலையில் பெண்குழந்தைகள் மீதான அச்சம் தீராது. உடைமையாக பெண்குழந்தைகள் நடத்தப்படுவதால் எந்த நிலையிலும் முன்னேற முடியாதவர்களாக இருக்கின்றனர்.

உலக மகளிர்தினம் குறிக்கப்பட்ட இத்தனையாண்டுகளுக்குப் பின்னும் மத்தியதர வர்க்கத்தின் கட்டுப்படுத்தப்பட்ட சிந்தனை, நச்சுக் கொடியென படர்ந்திருக்கும் சாதிவெறி, போராடிவிடக் கூடாது என்பதற்காக மடைமாற்றம் செய்யப்படும் சிந்தனை. ஆகியவை முன்னேற்றத்தைச் சாத்தியப்படுத்த வினையாற்றாமல் இருக்கின்றன. உலக அளவில் அரசு சார்ந்த இயந்திரங்கள் மக்கள் நலனை கவனத்தில் கொள்ளாமல் பொருளாதாரத்திற்கும் வல்லரசு மாயைக்கும் முக்கியத்துவம் தருகின்றன.

பல ஆண்டுகளாகப் பேசப்பட்டும் பெண் உரிமைக்கான சாத்தியங்கள் வறண்டு போவதற்குக் காரணம் எதுவாக இருக்கும்? முன்னேற்றம் என்பது எதனை நோக்கிச் செல்கிறது? விழிப்புணர்வு பெற்றோம் எனில் எவ்வகை விழிப்புணர்வு? முன்னேற்றத்தை நோக்கியவை பேச்சளவில் மட்டும் நிற்பதற்குக் காரணம் என்ன? அரசியல் விழிப்புணர்வுடன் எங்கே இருக்கிறோம் என்ற நிதர்சனத்தை உணர்கிறோமா? அரசியலை உற்று நோக்காத, அரசியலுக்கும் எனக்கும் ரொம்ப தூரம் என்ற நல்லபெயர் வாங்கும் சிந்தனையும் அரசியல் படுத்த இன்னும் மேற்கொள்ள வேண்டிய பணிகளுக்கான சிந்தனையும் இதற்கான விடையைக் கண்டடைந்து கூறட்டும்.

கூடங்குளம் பெண்கள் முன்னெடுக்கும் போராட்டமும் டெல்லி பாலியல் போராட்டமும் இன்று நம்பிக்கை அளிப்பதாக இருக்கின்றன.தொடரட்டும் பெண்களின் உரிமை முழக்கம்.அனைவருக்கும் உழைக்கும் மகளிர் தின வாழ்த்துகள்

 

2 Comments on “கச்சாப்பொருளாகட்டும் பெண் வாழ்க்கை”

  1. பெண்களின் சுயத்தை சுட்டும் அனுபவத்தின் புதுமொழியாக வந்திருக்கிறது கட்டுரை;வாழ்த்துகள்.களத்தை இன்னும் நோக்கி பெண்கள் முன்னெடுத்த சமீப இயக்கத்தையும் சொல்லி இருக்கலாம்.படித்தப் பெண்கள் மத்தியில் போராட்ட போதம் மேம்படைந்திருக்கிறது.உழைக்கும் பெண்கள் சுரண்டலிற்கு எதிரான போராட்டத்தை பதிவு செய்தே வருகின்றனர்.இயங்கா நிலையில் இருக்கின்றனர் என்று தள்ளி விட்டு விட இயலாது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *