கவிஞர் சல்மா நேர்காணல்
திருச்சி மாவட்டம் துவரங்குறிச்சியில் பிறந்த சல்மா எட்டாம் வகுப்புக்கு மேல் கல்வி மறுக்கப்பட்டவர். இடைவிடாத தன்னம்பிக்கையையும் கடின உழைப்பையும் உரமாகப்போட்டு இன்று தமிழகத்தின் முக்கியமான கவிஞர் மற்றும் எழுத்தாளராக உயர்ந்து நிற்கிறார். பல்வேறு இலக்கிய நிகழ்வுகளில் பங்கேற்க அமெரிக்கா உள்ளிட்ட அயல்நாடுகளுக்குப் பயணித்திருக்கிறார். முற்போக்கு சிந்தனையாளராகவும் பெண்ணியவாதியாகவும் அறியப்படும் சல்மா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் சட்டமன்ற உறுப்பினர் பதவிக்குப் போட்டியிட்டவர். தேர்தலில் நூலிழையில் தோற்றதை அடுத்து சமூக நல வாரியத் தலைவர் பதவியை 2011வரை வகித்துவந்தார். தற்போது எழுத்தாளராகவும் களப்பணியாளராகவும் செயற்பட்டு வருகிறார்.
பெண்கள் மீதான வன்முறை பல்வேறு வடிவங்களில் அதிகரித்து வருவதன் பின்னணியில் சென்னை கீழ்ப்பாக்கத்தில் உள்ள அவரது இல்லத்தில் சந்தித்தோம். உடல் நிலை சரியில்லாமல் இருந்ததைப் பொருட்படுத்தாமல் நம் கேள்விகளுக்கு பொறுமையுடன் விரிவான பதில்களை அளித்தார்.
*********
இந்தியாவில் குறிப்பாகத் தமிழகத்தில் பெண்களுக்கெதிரான பாலியல் வல்லுறவுச் சம்பவங்களும் அமிலவீச்சு மரணங்களும் அதிகரித்திருக்கின்றன. அல்லது அதிகரித்திருப்பதாகத் தெரிகின்றன. இதற்குக் காரணம் என்ன?
இந்தியாவில் பெண்களுக்கெதிரான வன்முறை மற்றும் பாலியல் வல்லுறவுச் சம்பவங்கள் தொடர்ந்து அதிக அளவில் நடைபெற்றுக்கொண்டுதான் இருக்கின்றன. 2000ம் ஆண்டில் மனிதவள அமைப்பு ஒன்று வெளியிட்ட அறிக்கை ஒவ்வொரு 20 நிமிடங்களுக்கு ஒரு பெண் பாலியல் வன்புணர்ச்சிக்கு ஆளாகிறார் என்று தெரிவிக்கிறது.
தில்லி மாணவி உயிரிழந்த பாலியல் வன்முறை சம்பவத்துக்குப் பின் அதற்கெதிரான போராட்டங்களில் இளைஞர்கள் அதிக அளவில் பங்கேற்றதால் ஊடகங்களின் கவனம் இதுபோன்ற சம்பவங்கள் மீது குவியத் தொடங்கியிருக்கிறது. அந்தப் போராட்டங்களில் இளைஞர்கள் அதிகமாகப் பங்கேற்றதன் பின்னணியில் எதிர்கட்சிகளான பா.ஜ.க மற்றும் பஜ்ரங் தள் உள்ளிட்ட அமைப்புகளின் பங்கு இருக்கிறது. அந்தக் கட்சிகள் மற்றும் அமைப்புகளின் இளைஞரணியினர் இந்தப் போராட்டத்தில் பெருமளவில் பங்கேற்றார்கள்.
இந்தப் போராட்டங்களில் ஜெ.என்.யூ (துNரு) பல்கலைக்கழக மாணவர்களும் பெருமளவில் பங்கேற்றார்கள். அவர்கள் தில்லியிலேயே வசிக்கிறார்கள். அவர்களின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் இருப்பது உண்மைதான். எனவே இந்தப் போராட்டத்தை அவர்களின் பாதுகாப்பை உறுதிசெய்துகொள்வதற்குமாக பயன்படுத்தியிருக்கிறார்கள். அதில் நியாயமும் இருக்கிறது.
ஆனால் பாலியல் வல்லுறவுகளும் பாலியல் கொலைகளும் என்றுமே குறைந்ததில்லை. இவற்றால் அதிகமாக பலியாவது அடித்தட்டு வர்க்கம் மற்றும் தாழ்த்தப்பட்ட சமூகங்களைச் சேர்ந்த பெண்கள்தான். இந்தப் பெண்கள் மீதான பாலியல் வன்முறைகள் ஊடகங்களில் பதிவாவதில்லை.
சமூக பொருளாதார அரசியல் பலம்மிக்கவர்கள் நடத்தும் பாலியல் வன்முறைச் சம்பவங்கள் பெரும்பாலும் மறைக்கப்படுகின்றன. ஆனால் பாதிக்கப்பட்ட பெண்கள் இந்த குடும்பங்களைச் சேர்ந்தவர்களாக இருந்தால் அது அதிக கவனம் பெறுகிறது.
பாலியல் வல்லுறவு மற்றும் கொலைகள் ஒரு புறம். அவற்றின் பின்னணியில் பாலியல் இச்சை இருப்பது தெரிகிறது. ஆனால் அமில வீச்சு போன்ற சம்பவங்களில் பாலியல் சம்பந்தப்படவில்லை. ஆனால் இவையும் இப்போது அதிகரித்துவிட்டதாகத் தோன்றுகிறதே?
வங்காள தேசம் பாகிஸ்தான் உள்ளிட்ட நாடுகளில் பெண்கள் மீது அமிலம் வீசும் சம்பவங்கள் அதிகமாக நடைபெற்றுவந்தன. இப்போது இந்தியாவிலும் இது அதிகரித்திருக்கிறது. குறிப்பாகத் தமிழகத்தில் அடுத்தடுத்து இரண்டு பெண்கள் ஆசிட் வீச்சால் உயிரிழந்திருக்கிறார்கள்.
பெண் என்பவள் ஒரு பொருள் என்ற சிந்தனை கொண்ட ஆண்கள்தான் இதுபோன்ற செயல்களைச் செய்வார்கள். பெண் என்பவளுக்கு எந்த உணர்வும் இருக்கக் கூடாதுஇ அவள் நான் சொல்வதைக் கேட்க வேண்டும் என்று இப்படிப்பட்ட ஆண்கள் நினைக்கிறார்கள்.
இதற்கு சினிமாவும் காரணம். தன் காதலை ஏற்காத பெண்ணை வலுக்கட்டாயமாகத் தாலி கட்டி மனைவியாக்கிக்கொள்ளும் காட்சிகளைக் கொண்ட படங்கள் ஏராளமாக வந்துவிட்டன. பெண் என்பவள் நாம் சொல்வதைக் கேட்பவளாக இருக்க வேண்டும் என்ற ரீதியில் ஆண் மனதைக் கட்டமைக்கவே இவை பயன்படுகின்றன.
ஆசிட் ஊற்றுவதற்குப் பின்னும் இதே மனநிலைதான் இருக்கிறது
இதுபோன்ற சிக்கல்களை எப்படிக் கையாள்வது?
அனைத்து ஆண்களும் அமில வீச்சு மனோநிலை கொண்டவர்களாக இருப்பதில்லைஇ எனவே பெண்கள் நாம் யாருடன் பழகுகிறோம் என்பதில் கவனமாக இருக்க வேண்டும். தன்னுடன் பழகும் ஆண்கள் எப்படிப்பட்டவர்கள்இ அவர்களுக்கு எந்த அளவு இடம் கொடுக்கலாம் என்பதைப் புரிந்துகொண்டு செயல்படும் விழிப்புணர்வையும் பொறுப்புணர்ச்சியையும் வளர்த்துக்கொள்ள வேண்டும்.
ஆசிட் விற்பனையைக் கட்டுப்படுத்த வேண்டும். ஒரு தூக்க மாத்திரையைக் கூட நம்மால் மருத்துவர் பரிந்துரைச் சீட்டு இல்லாமல் வாங்க முடியாது. அப்படியிருக்கும்போது ஒருவரின் உயிரையே பறிக்குமளவுக்கு தாக்குவதற்கு ஆசிட் பயன்படுகிறது என்பதைத் தெரிந்துகொண்ட பின்னும் அது எல்லோருக்கும் எளிதாகக் கிடைத்துவிடும் நிலை இருப்பதை அனுமதிக்க முடியாது.
அமில வீச்சு உள்ளிட்ட கடுமையான வன்முறைச் சம்பவங்கள் பெண்களை மீண்டும் வீட்டுக்குள் பூட்டிவைக்கத் தோதாகத்தானே அமைகின்றன. தங்கள் மகள்களை சகஜமாக ஆண்களுடன் பழகவிடும் பெற்றோர்கூட அமில வீச்சு மரணங்களால் அச்சமுற்று பெண்களுக்கு கட்டுப்பாடுகளை விதிக்கும் நிலை ஏற்பட்டுள்ளதே?
ஆம். இந்த சமூகத்தில் நடக்கும் எல்லா விஷயங்களுமே பெண்களுக்கு எதிரானவையாகவே அமைகின்றன. பெற்றோரின் பயத்திலும் நியாயமிருக்கிறது. ஆண் பெண் உறவையே இதுபோன்ற சம்பவங்கள் கேள்விக்குறியாக்கி விடுகின்றன. ஆணும் பெண்ணும் சகஜமாகப் பழகும் நிலை இல்லாமல் போய்விடுமோ என்று பயமாக இருக்கிறது.
பெண்கள் மட்டுமல்லாமல் பெண் குழந்தைகள் மீதும் பாலியல் வன்முறை அதிகரித்திருக்கிறதேஇ அண்மையில்கூட சென்னையில் ஐந்தாம் வகுப்பு மாணவியை நடுத்தர வயது ஆண் ஒருவர் மிரட்டி பாலியல் வல்லுறவுக்கு ஆட்படுத்தியிருக்கிறார்…
இது ஒரு மன வக்கிரம்தான். ஆரோக்கியமான மனநிலையில் இருப்பவர்கள் சிறாரைப் பாலியல் நோக்குடன் பார்க்க மாட்டார்கள். பாலியல் வன்முறைக்கு ஆளாவது நீங்கள் கூறுவதுபோல் பெண் குழந்தைகள் மட்டுமல்ல. ஆண் குழந்தைகளும் சமமான அளவில் பாதிக்கப்படுகிறார்கள். பெண் குழந்தைகள் பாதிக்கப்படுவதாவது ஓரளவு பதிவாகிறது. ஆண் குழந்தைகள் பாதிக்கப்படுவது அரிதிலும் அரிதாகவே பதிவாகிறது.
ஐந்தில் மூன்று குழந்தைகள் ஏதேனும் ஒரு வகையில் பாலியல் வக்கிரங்களால் பாதிக்கப்படுவதாகப் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. பெற்றோர் இவ்விஷயத்தில் அதிக கவனத்துடன் இருக்க வேண்டும்.
தொடரும் பாலியல் மற்றும் மற்ற வன்முறைச் சம்பவங்களால் பெண்களுக்கு ஆண்கள் மீதும் ஒட்டுமொத்த சமுதாயத்தின் மீதும் இருக்கும் அச்ச உணர்வும் வெறுப்புணர்வும் அதிகரித்துவிடும் அபாயம் இருக்கிறது. இதை எப்படி மாற்றுவது?
ஆண்களும் பெண்களும் ஒருவரை ஒருவர் எதிரியாகப் பார்க்கும் மனோநிலை ஆரோக்கியமானதல்ல. தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் பேசும் பெண்கள்இ ஆண்களைப் பார்த்தாலே பயமாக இருக்கிறது என்கிறார்கள். அது தேவையற்றது. அனைத்து ஆண்களும் தவறானவர்கள் இல்லை என்ற புரிதல் வேண்டும். அதே வேளையில் ஆண்களும் பொறுப்புணர்வுடன் செயல்பட வேண்டும். ஆண்களும் பெண்களும் இணைந்து சிந்தித்துஇ பேசி செயல்பட வேண்டிய தருணமிது.
பெண்களுக்கெதிரான வன்முறைகளைத் தடுக்க இயற்றப்படும் சட்டங்களும் அரசு நடவடிக்கைகளும் நம்பிக்கை அளிப்பவையாக இருக்கின்றனவா?
பெண்களைப் பாதுகாப்பதற்கான சட்டங்கள் போதுமான அளவு இருக்கின்றன. அவற்றைச் செயல்படுத்துவதில்தான் சிக்கல் இருக்கிறது.
காவல் துறையில் எஃப்.ஐ.ஆர். (குஐசு) போடுவதிலிருந்து இது தொடங்குகிறது. நீதிமன்றங்களில் விசாரணை நடப்பதுஇ பல வருடங்களுக்கு வாய்தாக்கள் இழுத்தடிப்பது போன்ற பிரச்சினைகள் இருக்கின்றன. எளிதாக விலைபோகக்கூடிய வகையில்தான் காவல்துறையும் சட்ட அமைப்புகளும் இருக்கின்றன என்பதற்கு இதுவே எடுத்துக்காட்டு
சூரியநெல்லி ராஜஸ்தானின் பனவாரிலால் போன்ற வழக்குகள் 20-25 ஆண்டுகளுக்கு இழுத்தடிக்கப்படுகின்றன. இவற்றால் தவறு செய்பவர்களுக்கு சட்டத்தின் மீதான பயமே இல்லாமல்போகிறது.
எந்தச் சட்டமாக இருந்தாலும் அதனால் உடனடித் தீர்வு கிடைக்கும் வகையில் செயல்படுத்த வைக்கும் நடவடிக்கைகள் வேண்டும். பாலியல் வல்லுறவு வழக்குகளில் 3 அல்லது 4 மாதங்களில் தீர்ப்பு கிடைக்கும் வகையில் தனி நீதிமன்றங்கள் அமைத்து விசாரிக்க வேண்டும். அப்போதுதான் மக்களுக்கு சட்டத்தின் மீது நம்பிக்கை வரும்.
பெண்களுக்கெதிரான வன்முறையைத் தடுக்க ஊடகங்கள்இ கல்வி நிலையங்கள் குடும்ப அமைப்புகள் ஆகியவற்றின் பங்கு என்ன?
குற்றவாளியை யாரோ ஒரு தனி நபராகக் கைகாட்டும் மனநிலையை ஊடகங்கள் கொண்டிருக்கின்றன. குற்றத்திற்கான சூழல் என்ன ஒருவரை இத்தனை வக்கிரமாகச் செயல்படவைக்கும் காரணிகள் என்ன என்பதைப் பற்றிய அலசல்கள் அதிக அளவில் இல்லை. வினோதினி தன் மீது ஆசிட் ஊற்றியவன் மீது ஆசிட் ஊற்றப்பட வேண்டும் என்று கூறியதை ஊடகங்கள் பெரிதுபடுத்தியதன் பின்னணி இதுதான். இது ஆரோக்கியமானதல்ல. ஊடகங்கள் பொறுப்புணர்வுடன் செயல்பட வேண்டும்.
கல்வி நிலையங்களும் குடும்ப அமைப்புகளும் ஆண்களையும் பெண்களையும் வெவ்வேறு விதமாக அணுகச் சொல்லிக் கொடுக்கின்றன. நாம் நம் குழந்தைகளுக்கு என்ன சொல்லிக்கொடுக்கிறோம் என்பதைப் பரிசீலனைக்கு உட்படுத்த வேண்டிய நேரமிது. மாற்றம் நம் குடும்பங்களிலிருந்து தொடங்க வேண்டும்.
இன்றைய தலைமுறைப் பெண்களுக்கு நீங்கள் சொல்ல விரும்புவது என்ன?
பெண்கள் தன் வீடு தன் வேலை என்று முடங்கிவிடாமல் சமுதாயப் பிரச்சினைகளில் கவனம் செலுத்த வேண்டும். போராட்டங்களில் பங்கேற்க வேண்டும். நம்மைச் சுற்றி நடக்கும் விஷயங்களைப் பற்றிய புரிதலுடன் செயல்பட வேண்டும்.
கூடங்குளம் அணு உலைக்கெதிரான போராட்டத்தைப் பெண்கள்தான் முன்னெடுத்திருக்கிறார்கள். ஆனால் அது அந்தப் பெண்களின் நிலம் மற்றும் வாழ்வாதாரம் தொடர்பான பிரச்சினை. சமூக செயல்பாட்டாளராக அறியப்பட்ட சில பெண்களைத் தவிர மற்ற பெண்கள் அணு உலை ஏன் நிறுவப்பட்டிருக்கிறதுஇ அதனால் என்ன பிரச்சினை என்பது பற்றிய புரிதல் இல்லாமல்தான் இருக்கிறார்கள்.
இட ஒதுக்கீடு நீர்நிலைகளைப் பாதுகாப்பது உள்ளிட்ட பொதுப் பிரச்சினைகளில் பெண்களின் பங்கு அதிகரிக்க வேண்டும்.
ஆனால் இதுபோல் பொதுப் பிரச்சினைகளைப் பற்றி கருத்து சொல்லும் பெண்கள் சமூக வலைத்தளங்களில் கீழ்த்தரமான பாலியல் தாக்குதல்களுக்கு ஆளாகிறார்களே. அதற்காக பயந்துகூட பெண்கள் இந்தப் பிரச்சினைகளிலிருந்து விலகியிருக்கலாம் அல்லவா?
நீங்கள் சொல்வது சரிதான். ஆண்களைக் கருத்து ரீதியாக எதிர்கொள்பவர்கள் கூடப் பெண்களை பாலியல் ரீதியாகத் தாக்குவதையே வழக்கமாகக் கொண்டிருக்கிறார்கள். இவற்றை எதிர்கொள்வது பெண்களுக்குப் பெரிய சவால்தான்.
ஆனால் சமூக வலைதளங்களால் கருத்து சுதந்திரம் அதிகரித்திருபதையும் கவனிக்க வேண்டும். பெண்கள் தங்க பார்வையை முன்வைக்க முடிகிறது. இதுபோன்ற தாக்குதல்களை எதிர்கொள்வதால் பெண்களின் போராட்ட குணமும் மனோதிடமும் வளரும்.
மொத்ததில் பெண்களுக்கான் ஒரு அரசியல் வேண்டும். சமூகப் போராட்டங்களில் பெண்களில் பங்களிப்பு அதிகமாக இருக்க வேண்டும். அதற்கு இப்போதிருப்பதைவிட அதிக எண்ணிக்கையிலான பெண்கள் பங்கேற்க வேண்டும்.
நன்றி பொங்கு தமிழ்
http://www.ponguthamil.com/index.aspx