நோ பயர் ஸோன் -சேனல் 4-ன் புதிய ஆவணப்படம் வெளியீடு

  thanks – http://puthiyathalaimurai.tv/no-fire-zone-documentary-film-released

சேனல் 4-ன் புதிய ஆவணப்படம் வெளியீடு

இலங்கையின் போர்க்குற்றங்களை அம்பலப்படுத்தும் சேனல் – 4 தொலைக்காட்சியின் நோ ஃபயர் ஸோன் என்கிற ஆவணப்படம் டெல்லியில் இன்று வெளியிடப்பட்டது.

டெல்லியில் உள்ள கான்ஸ்ட்யூசன் க்ளப்-ல் இன்று பிற்பகல் இந்த ஆவணப்படம் ஒளிபரப்பப்பானது. சர்வதேச மன்னிப்பு சபை என்று அழைக்கப்படும் அம்னெஸ்டி இன்டர்நேஷனல் இதற்கான ஏற்பாடுகளைச் செய்திருந்தது. இதில், பாதுகாப்பான பகுதியாக அறிவிக்கப்பட்ட இடங்களிலும் இலங்கை ராணுவம் கொத்து, கொத்தாக குண்டுவீசிய கொடூரத்தை வெளிப்படுத்தும் காட்சிகள், ஊரெங்கும் மக்கள் உயிரிழந்து சடலங்களாக கிடக்கும் காட்சிகளும் இடம்பெற்றுள்ளன.

தாயும் குழந்தையும் ஒன்றாக வீழ்ந்து கிடப்பது, மருத்துவமனைகளில் நூற்றுக்கணக்கானோர் உடல் சிதைந்த நிலையில் சிகிச்சை பெறுவது போன்ற நெஞ்சை உறைய வைக்கும் காட்சிகளும் இடம்பெற்றுள்ளன. பெண்கள் ஆடைகள் களையப்பட்டு நிர்வாணமாக சுட்டுக் கொல்லப்பட்டிருக்கும் காட்சி இலங்கை ராணுவத்தின் உச்சகட்ட கொடூரத்தை வெளிப்படுத்துவாக இருக்கிறது.

மேலும், விடுதலைப் புலிகள் என்ற சந்தேகத்தின் பேரில் பல பெண்களை ஒரு டிரக்கில் ஏற்றி ராணுவத்தினர் அழைத்துச் செல்கின்றனர். அவர்கள் என்ன ஆனார்கள் என்பது தெரியவில்லை. இலங்கை ராணுவத்தால் சிறைபிடிக்கப்பட்ட விடுதலைப்புலிகளின் தளபதிகளில் ஒருவரான கர்னல் ரமேஷ், மன்றாடும் காட்சிகளும் இடம்பெற்றுள்ளன.

உலக நாடுகளால் தடை செய்யப்பட்ட கொத்துக் குண்டுகளை இலங்கை ராணுவத்தினர் பயன்படுத்தியிருப்பதும், இதனால் தமிழர்களின் உயிர் கொத்துக் கொத்தாக பறிக்கப்பட்டதாகவும் நோ பயர் ஸோன் ஆவணப் படத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. 20 நிமிடக் காட்சிகளை கொண்ட இந்த ஆவணப் படம் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

காணொளி:

 டி.ராஜா வலியுறுத்தல்

இலங்கையின் போர்க்குற்றம் தொடர்பான புதிய ஆவணப்படம் வெளியிடப்பட்ட நிலையில், அந் நாட்டிற்கு எதிராக, ஐநா மனித உரிமைகள் ஆணையத்தில் கொண்டு வரப்படும் தீர்மானத்திற்கு இந்திய அரசு ஆதரவு தெரிவிக்க வேண்டும் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மீண்டும் வலியுறுத்தியுள்ளது. சேனல் 4 ஆவணப்படத்தைப் பார்த்த பிறகு செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்த அக்கட்சியின் தேசியச் செயலர் டி.ராஜா இதைத் தெரிவித்தார்.

அம்னெஸ்டி இன்டர்நேஷனல் அமைப்பு டெல்லியில் வெளியிட்ட இலங்கை இனப் படுகொலை தொடர்பான ஆவணப் படத்தை பார்த்த பிறகு செய்தியாளர்களிடம் பேசுகையில் கண்ணீர் விட்ட இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசியச் செயலர் டி.ராஜா. (படம்: புதிய தலைமுறை)

அம்னெஸ்டி அமைப்பு வலியுறுத்தல்

இலங்கையின் போர்க்குற்றம் தொடர்பான சேனல் 4-ன் புதிய ஆவணப்படம் வெளியாகியுள்ள நிலையில், இலங்கை அரசுக்கு எதிராக நடவடிக்கைக்கு இந்திய அரசு முன் முயற்சி எடுக்க வேண்டும் என்று அம்னெஸ்டி இன்டர்நேஷனல் அமைப்பின் இந்திய பிரிவு தலைவர் அனந்த பத்மநாபன் வலியுறுத்தியுள்ளார்.

“மிகவும் நம்பகத்தன்மை கொண்ட குற்றச்சாட்டுகளின் மீது விசாரணை நடத்த இலங்கை அரசுக்கு ஏராளமான வாய்ப்புகள் இருந்தன. தாக்குதல் நடத்தப்பட்ட காட்சிகள், குற்றச்சாட்டுகள் எந்தளவு நம்பகத்தன்மை வாய்ந்தவை என்பதை காட்டுகின்றன. இதற்கு முந்தைய ஆவணப் படமும், தற்போதைய ஆவணப்படமும் ஆதாரங்களை வெளிச்சம் போடுகின்றன. வாய்ப்புகளை இலங்கை அரசு பயன்படுத்திக் கொள்ளவில்லை. இந்த நிலையில் சர்வதேச சமுகம் தலையிடுவதற்கு இதுவே சரியான தருணம். குறிப்பாக, இந்திய அரசு முக்கிய பங்கு வகித்து, குற்றங்களுக்கு இலங்கையை பொறுப்பாக்கி, நீதியை நிலைநாட்ட வேண்டும்” என்று அவர் கூறினார்.

ஜெனிவா தீர்மானத்துக்கு ஆதரவு

இலங்கைக்கு எதிராக ஜெனிவாவில் கொண்டு வரப்படும் தீர்மானத்திற்கு இந்தியா ஆதரவு அளிக்கும் என தமிழக காங்கிரஸ் எம்பி.,க்களிடம் பிரதமர் உறுதியளித்துள்ளார்.

நாடாளுமன்ற வளாகத்தில் பிரதமரை இன்று சந்தித்த தமிழக காங்கிரஸ் எம்பிக்களிடம் இந்த உறுதிமொழி அளிக்கப்பட்டதாக காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் சுதர்சன நாச்சியப்பன் தெரிவித்தார். இந்த சந்திப்பின்போது, காவிரி நடுவர் மன்ற தீர்ப்பை அரசிதழில் வெளியிட நடவடிக்கை எடுத்ததற்காக நன்றி தெரிவித்ததாகவும் அவர் கூறினார். மேலும், காவிரி நீர் மேலாண்மை வாரியத்தை அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என பிரதமர் உறுதியளித்துள்ளதாகவும் சுதர்சன நாச்சியப்பன் தெரிவித்தார்.

“நடந்தது இனப்படுகொலையே”

இலங்கை போர்க்குற்றம் தொடர்பான புதிய ஆவணப்படத்தை ஓய்வு பெற்ற நீதிபதி சச்சாரும் இன்று பார்த்தார். இந்த ஆவணப் படம் மனதை உலுக்குவதாக இருப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.

இலங்கையின் போர்க்குற்றம் குறித்து தென் ஆப்பிரிக்காவின் டர்பன் நகரில் இயங்கிய சுதந்திர விசாரணைக் குழுவின் தலைவராக நீதிபதி சச்சார் இருந்துள்ளார். “இந்த ஆவணப் படம் கொடூரமான காட்சிகளைக் கொண்டதாக உள்ளது. இது நிச்சயமாக இனப்படுகொலைக்கு ஒப்பானதே. எனவே, இதுகுறித்து விசாரணை நடத்த ஐ.நா. ஒரு குழுவை அமைக்க வேண்டும் என்று ஏற்கனவே பரிந்துரை செய்துள்ளோம்” என்று அவர் கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *