-சிங்களத்தில்: நதீ கம்மெல்லவீர– தமிழாக்கம்: லறீனா அப்துல் ஹக்
எந்தன் சின்ன மகன்
இருட்டுக்குப் பயம் என்று
ஓடி வந்து என்னருகில்
அணைந்து கொண்டான்
பேயெவையும் இங்கு வரா
அம்மா அருகிருக்க
என்ன பயம் என்று சொல்லி
மார்போடணைத்தவனை
மீண்டும் மீண்டும் முத்தமிட்டேன்
இதயத்தின் எங்கோ ஓர்
மூலையிலே தொடங்கி
கிளர்ந்தெழும் வேதனையில் – எந்தன்
உடல் முழுதும் வலிக்கிறது
நிமலரூபனின் சடலத்தை முத்தமிட்டு
ஒப்பாரி வைத்தழுத வயோதிகத் தாய்
தூரத்தில் இருந்து எனைப்
பார்த்திருந்தாள்
முந்தானைத் தலைப்பினாலே
கண்ணீரைத் துடைத்தவளாய்
திரும்பித் திரும்பிப் பார்த்தபடி
மெல்ல மெல்ல நடக்கின்றாள்…
என்னிரு கரங்களாலும்
முரட்டுத்தனமாய் (மகனை)
இன்னுமின்னும் இழுத்திறுக்கி
அரவணைத்துக் கொள்கின்றேன்
“இந்த மண்ணில் உன்னை நான்
ஈன்றெடுத்து விட்டதற்காய்
மன்னித்துவிடு என்னை”
அதே முகம் கொண்டிருக்கும்
(மகன்) விழிகள் பார்த்தபடி
ஆயிரமாவது தடவையாய்
முணுமுணுக்கின்றேன், நான்…
“பிறந்துவிட்டவர்களை எல்லாம்
வாரிச் சுருட்டியெடுத்து
மீண்டும் கருவறைக்குள்
செலுத்திவிட முடியாததால்,
இன்னுமே பிறக்காதவர்கள்
ஒருபோதுமே பிறவாதிருக்கக் கடவதாக!”
என்றே வேண்டுகிறேன்!
-சிங்களத்தில்: நதீ கம்மெல்லவீர-
தமிழாக்கம்: லறீனா அப்துல் ஹக்
குறிப்பு: வவுனியா சிறைச்சாலையில் (03.07.2012) படுகொலை
செய்யப்பட்ட தமிழ் அரசியல் கைதி நிமலராஜனுக்கு அஞ்சலி
செலுத்துமுகமாக எழுதப்பட்ட சிங்களக் கவிதை.
நன்றி: ‘விகல்ப’ இணைய தளம்/’மனமோகி’ இதழ்:01.
மன்னிக்கவும், நிமலராஜனுக்கான அல்ல; நிமலரூபனுக்கான அஞ்சலிக் கவிதை. தவறுக்கு அகமிக வருந்துகின்றேன்.