-லறீனா அப்துல் ஹக் –
பொதுவாகவே கலை இலக்கியவாதிகளுக்கு இன, மத, மொழி, பிரதேச வேறுபாடற்ற மனிதநேயமும் அநீதிக்கு எதிரான தார்மீகக் கோபமும் இரத்தத்திலேயே கலந்திருக்கும் என்பார்கள். அந்த வகையில், இலங்கைவாழ் தமிழ் மக்கள் இனப் போரினால் அனுபவித்த துன்ப துயரங்கள் குறித்துப் பெரும்பான்மைச் சிங்கள இன ஊடகவியலாளரும் கலை இலக்கியவாதிகள் சிலரும் தொடர்ந்து குரல் எழுப்பி வந்துள்ளனர். அவர்களுள் 90களில் தென்னிலங்கையில் இடதுசாரிச் செயற்பாட்டாளராக தீவிரமாய்ச் செயற்பட்ட மஞ்சுள வெடிவர்தனவும் ஒருவ
|
சங்க காலத்தை வீரயுகம் என்று குறிப்பிடுவார், பேரா. க. கைலாசபதி. இலக்கியம் அகம் புறம் என இருவகைப்படுத்தப்பட்டு, போரும் அதனோடு தொடர்புடைய அம்சங்களும் புறத்திணைக்குள் அடக்கப்பட்டன. குறிஞ்சி, முல்லை, மருதம், பாலை, நெய்தல் எனும் ஐவகை நிலத்துக்கும் வெட்சி, வஞ்சி, உழிஞை, வாகை, தும்பை எனும் ஐவகைப் போர் ஒழுக்கங்கள் வழக்கில் இருந்தன.
சங்கத்துச் சான்றோர், போர் என்பதை இயல்பான ஒரு விடயமாகக் கருதினர். இதனையே, ‘ஒருவனை ஒருவன் அடுதலும் தொலைதலும் புதுவது அன்று இவ் உலகத்து இயற்கை’ (புறநானூறு: 70) என, ‘ஒருவனை ஒருவன் அழித்தலும் ஒருவனிடம் ஒருவன் தோற்பதும் புதியது அன்று, அது இவ்வுலகத்து இயற்கை’ எனப் புறநானூற்றுப் புலவர் இடைக் குன்றூர்க் கிழார் குறிப்பிடுகின்றார்.
எனவே, போரில் எதிரியை வெற்றிகொண்டு, எதிரி நாட்டை எரியூட்டி, அவர்தம் விளைநிலங்களை யானைப் படையைக் கொண்டு துவம்சம் செய்து வெற்றி வாகைசூடும் வீரச் செயல் குறித்து அரசருக்குப் புகழாரம் சூட்டும் சங்கப் பாடல்கள் பல உள்ளன. எடுத்துக்காட்டாக, பாண்டரங் கண்ணனார் எனும் புலவர், சோழன் இராசசூயம் வேட்ட பெருநற்கிள்ளியைப் பாடிய ஒரு பாடல் இப்படி அமைகிறது:
‘வினைமாட்சிய விரைபுரவியொடு
மழையுருவின தோல்பரப்பி
முனைமுருங்கத் தலைச்சென்றவர்
விளைவயல் கவர்புஊட்டி
மனைமரம் விறகுஆகக்
கடிதுறைநீர்க் களிறுபடீஇ
எல்லுப்பட இட்ட சுடுதீ விளக்கம்
செல்சுடர் ஞாயிற்றுச் செக்கரின் தோன்றப்
புலம்கெட இறுக்கும் வரம்பில் தானைத்
துணைவேண்டாச் செருவென்றிப்
புலவுவாள் புலர்சாந்தின்
முருகன் சீற்றத்து உருகெழு குருசில்!
மயங்குவள்ளை மலர்ஆம்பல்,
பனிப்பகன்றைக் கனிப்பாகல்
கரும்புஅல்லது காடுஅறியாப்
பெருந்தண்பணை பாழ்ஆக
ஏமநன் னாடு ஒள்எரி ஊட்டினை;
நாம நல்லமர் செய்ய
ஓராங்கு மலைந்தன பெரும! நின் களிறே.’
இதன் பொருள்: ‘போரில் தேர்ச்சி பெற்ற, விரைந்து செல்லும் குதிரைப் படையுடனும், மேகம் போல் பரப்பிய கேடயங்களுடனும், போர்க்களம் கலங்குமாறு மேற்சென்று பகைவர்களின் நெல்விளையும் வயல்களைக் கொள்ளையிட்டாய். அவர்களின் வீட்டிலுள்ள கதவு, தூண் போன்ற மரத்தால் செய்த பொருட்களை விறகாக்கி அவற்றை தீயில் எரித்தாய். யானையைப் படியச் செய்து காவல் உள்ள நீர்த்துறைகளைப் பாழ் செய்தாய். பகைவர்களின் நாட்டில் நீ மூட்டிய தீயிலிருந்து எழுந்த ஒளி, சுடருடன் கூடிய ஞாயிற்றின் சிவந்த நிறம் போலத் தோன்றியது. பெருமளவில் படையைப் பரப்பி, துணைப்படை தேவையில்லாமல் போரில் வெற்றிபெற்றாய். புலவு நாற்றத்தையுடைய வாளும், பூசிய சந்தனம் உலர்ந்த மார்பும், முருகன் போன்ற சினமும், அச்சமும் பொருந்திய தலைவ! ஒன்றோடு ஒன்று சேர்ந்த வள்ளையும், மலர்ந்த ஆம்பலும், குளிர்ந்த பகன்றையும், பழுத்த பாகலையும் உடைய, கரும்பு அல்லாத பிற பயிர்கள் விளையாத புன்செய் நிலமும், பெரிய குளிர்ந்த மருத நிலமும் பாழாகுமாறு பகைவர்களின் காவலுடைய நல்ல நாட்டிற்குத் தீ மூட்டினாய். அரசே! அஞ்சத்தக்க நல்ல போரை நீ எண்ணியவாறு உன் யானைகள் செய்தன.’
அவ்வாறே, பகைவரின் ஊர்களைத் தீயிட்டுக் கொளுத்தி (புறம்.7), எதிரி நாட்டின் வளமிக்க வயல்களை அழித்த (பட்டினப்பாலை: 240-245) கரிகாலனைப் பற்றியும், பகைவருடைய தேரோடும் வீதிகளில் கழுதைகளை ஏரில் பூட்டி உழுது, விளை வயல்களில் தேர்களை ஓட்டி அழித்து, நீர்நிலைகளில் யானைப் படையை விட்டுக் கலக்கிச் சேறாக்கிய முதுகுடுமிப் பெருவழுதி (புறம்.15) குறித்தும், இதுபோன்ற மேலும் பல அரசர்கள் குறித்தும் சங்க இலக்கியங்கள் வாயிலாக அறிகின்றோம்.
போரில் பங்குகொண்டு வீர மரணம் எய்தும் தந்தையை, கணவனை, மகனைப் பற்றிப் பெருமிதங் கொள்ளும் வீரத் தமிழ் மகளிர் பற்றிய பாடல்களையும் நாம் சங்கச் செய்யுள்களில் கண்டுகொள்ளலாம். வகைமாதிரிக்கு,
‘கெடுக சிந்தைக் கடிதுஇவள் துணிவே
மூதின் மகளிர் ஆதல் தகுமே
மேல்நாள் உற்ற செருவிற்கு இவள்தன்னை,
யானை எறிந்து களத்துஒழிந் தனனே
நெருநல் உற்ற செருவிற்கு இவள்கொழுநன்,
பெருநிரை விலங்கி ஆண்டுப்பட் டனனே
இன்றும், செருப்பறை கேட்டு விருப்புற்று மயங்கி
வேல்கைக் கொடுத்து வெளிதுவிரித்து உடீஇப்
பாறுமயிர்க் குடுமி எண்ணெய் நீவி
ஒருமகன் அல்லது இல்லோள்
செருமுக நோக்கிச் செல்கஎன விடுமே.’ (புறநானூறு : 279)
என்ற புறநானூற்றுப் பாடலில், நேற்றும் நேற்று முன்தினமும் நடந்த போரிலே தன் தந்தையையும் கணவனையும் பறிகொடுத்துவிட்டும் கலங்காமல், இன்று போர்ப் பறை முழக்கம் கேட்டதுமே சின்னஞ் சிறுவனான மகனிடம் வேலைக் கையில் கொடுத்து, வீரத் திலகமிட்டுப் ‘போர்க்களம் செல்க’ என்று வழியனுப்பிய தமிழ்ப் பெண்ணைப் பற்றிப் பெருமிதம் பொங்க நாம்கூடப் பேசியதுண்டு.
என்றாலும், இத்தகைய வீரப் பெருமிதங்களுக்கெல்லாம் அப்பால், போர் என்பது எப்போதுமே அழிவோடு தொடர்புடையதுதான்; துன்பம் தருவதுதான். போரின் கொடுமையை வலியுறுத்தி, அமைதிவழி அரசரை ஆற்றுப்படுத்திய புலவர்களையும் நாம் சங்க இலக்கியத்தில் காண்கின்றோம் என்பதையும் மறுப்பதற்கில்லை. நிழலின் அருமை வெயிலில் தெரியும் என்பது போல, சுமார் மூன்று தசாப்த காலம் கொடுமையான ஒரு யுத்தத்தை எதிர்கொண்டு, யுத்தத்தின் பின்பும் அதன் மோசமான விளைவுகளால் துன்புற்றுக் கொண்டிருக்கும் இலங்கையரான நமக்கு, அமைதியின், சமாதானத்தின் அருமையும் பெருமையும் மிக நன்றாகத் தெரியும். நம்முடைய கலை இலக்கியங்கள் போரின் போதும் போருக்குப் பின்னரும் நம் மக்கள் அனுபவித்துவரும் சொல்லொணா அவலங்கள் பற்றிப் பேசிவந்துள்ளன; பதிவுசெய்துள்ளன. போரினால் நேரடியாகப் பாதிக்கப்படாத ஆக்க இலக்கிய கர்த்தாக்கள்கூட தம் சக மனிதர்களின் துன்பங்களைக் கண்டு கலங்கி, அவர்களுக்காகக் குரல்கொடுக்கத் தயங்கவில்லை.
இந்நிலையில், ஈழப் போரினாலும் அதையொட்டிய காரணங்களாலும் தமிழ் மக்கள் அனுபவித்துவந்த துன்ப துயரங்கள் குறித்துப் பெரும்பான்மைச் சிங்கள இனத்துச் சகோதர சகோதரிகள் சிலர் தொடர்ந்து பதிவுசெய்து வந்துள்ளமை குறிப்பிடத்தக்கது. அப்படியானவர்களில் அனேகர் தமிழ் மக்களுக்கு எதிரான அடக்குமுறைகளுக்கும் அநீதிகளுக்கும் எதிராய் உரத்துக் குரல்கொடுத்த காரணத்தினால் தம் இன்னுயிரை இழந்துள்ளனர் அல்லது உயிர் அச்சுறுத்தல் காரணமாக நாட்டைவிட்டுத் தப்பிச் சென்று பிற நாடுகளில் தஞ்சம் பெற்று வாழ்கின்றனர். அத்தகைய மனிதநேயமிக்க இலக்கிய கர்த்தாக்களில் மஞ்சுள வெடிவர்தனவும் ஒருவர்.
மஞ்சுள வெடிவர்தனவின் மனிதாபிமானக் குரல்
தேவலோக அமிழ்தமே கிடைத்தாலும் தனியே உண்ண விரும்பாதவன் சான்றோன் என்கிறது, சங்கப் பாடல் ஒன்று. வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம் வாடினேன் என்றார், வள்ளலார். தனியொருவனுக்கு உணவில்லையேல் ஜகத்தினை எரித்திடுவோம் என்றான், பாரதி. இவ்வாறு பிற உயிர்களின், சக மனிதனின் துன்பத்தையும் தன்னுடையதாகக் கருதும் உள்ளம் வாய்க்கப்பெறுதல் பெறற்கரிய பேறுதான் என்பதில் சந்தேகமில்லை.
பொதுவாகவே கலை இலக்கியவாதிகளுக்கு இன, மத, மொழி, பிரதேச வேறுபாடற்ற மனிதநேயமும் அநீதிக்கு எதிரான தார்மீகக் கோபமும் இரத்தத்திலேயே கலந்திருக்கும் என்பார்கள். அந்த வகையில், இலங்கைவாழ் தமிழ் மக்கள் இனப் போரினால் அனுபவித்த துன்ப துயரங்கள் குறித்துப் பெரும்பான்மைச் சிங்கள இன ஊடகவியலாளரும் கலை இலக்கியவாதிகள் சிலரும் தொடர்ந்து குரல் எழுப்பி வந்துள்ளனர். அவர்களுள் 90களில் தென்னிலங்கையில் இடதுசாரிச் செயற்பாட்டாளராக தீவிரமாய்ச் செயற்பட்ட மஞ்சுள வெடிவர்தனவும் ஒருவர்.
மாற்றுப் பத்திரிகையாளராக ‘ராவய’ ஆசிரியர் குழுவிலும் அங்கம் வகித்த இவர், சிறந்த நாவலாசிரியர், சிறந்த கவிஞர், சிறந்த நாடகாசிரியர் என பல்வேறு தேசிய விருதுகளைப் பெற்றவர். ‘மரியா எனப்பட்ட மேரி’ என்பது இவரது சிறுகதைத் தொகுதி. தலைப்புச் சிறுகதை தீவிர சர்ச்சைக்குரியதாய்க் கருதப்பட்டதால், இத்தொகுதி இலங்கையில் தடைசெய்யப்பட்டது. ‘நான் லிங்கமாலன் ஆனேன்’, ‘நிமலராஜனின் அம்மாவுக்கு’, ‘அவனொரு புதிய தமிழன்’ எனும் கவிதைகள் ஏற்கெனவே தமிழில் மொழியாக்கம் செய்யப்பட்டு பிரசித்தி பெற்றுள்ளன. பஹீமா ஜஹான், ரிஷhன் nஷரீஃப் ஆகிய இருவராலும் தமிழில் மொழியாக்கம் செய்யப்பட்டுள்ள இவரது கவிதைகளின் தொகுதி வெகுவிரைவில் பிரான்ஸ் நாட்டில் வெளிவரவுள்ளது. இவரது சில கவிதைகளை இப்னு அஸுமத், செல்வர், சரவணன் ஆகியோரும் மொழிபெயர்த்துள்ளனர்.
மஞ்சுள வெடிவர்தன தன்னுடைய கவிதைகளில் தான் சார்ந்த சமூகத்தின் ஒரு தரப்பினரால் தமிழ்மக்கள் மீது கட்டவிழ்த்துவிடப்பட்ட வன்கொடுமைகள் குறித்துத் தனது கடுமையான கண்டனத்தைப் பதிவுசெய்துள்ளார். நான் லிங்கமாலன் ஆனேன், நிமலராஜனின் அம்மாவுக்கு, அவன் ஒரு புதிய தமிழன், மட்டக்களப்பில் இருந்து, தலைப்பிலித் தாய்மண், த்வாரகா, செம்மணி என்பன இவரது தீவிர அரசியல் கவிதைகளில் சிலவாகும். தமிழ் மக்களுக்கு எதிரான அடக்குமுறைகள், வன்கொடுமைகள் குறித்துத் தன்னுடைய கவிதைகள் வாயிலாகக் காரசாரமாகக் குரல்கொடுத்த காரணத்தினால் விடுதலைப் புலிகளுக்குச் சார்பானவர் என்று இவர் முத்திரை குத்தப்பட்டார். உயிர் அச்சுறுத்தல் விடுக்கப்பட்ட நிலையில் நாட்டிலிருந்து தப்பிச் சென்று தற்போது ஐரோப்பிய நாடொன்றில் தஞ்சம் புகுந்துள்ள மஞ்சுள வெடிவர்தனவின் வலைப்பூ http://monsoonmn.wordpress.com/ வலைப்பூவின் முகப்பில்,
“பின்தொடர்
என்னைப் பின்தொடர்
ஆயுதமுனைக்கு முடியாது
நினைவுகளை அழிப்பதற்கு” என்ற வரிகள் பளிச்சிடுகின்றன.
மஞ்சுளவின் கவிதைகள் பலதரப்பட்டவை. அவற்றின் பேசுபொருள் பன்முகப்பட்டவை. அவற்றில் பெரும்பாலான கவிதைகள் அநீதிக்கும் அதர்மத்துக்கும் எதிரான கலகக் குரலாய் ஒலிக்கின்றன. தமிழ் மக்களின் இருப்புக்கும் அவர்களின் நியாயமான கனவுகளுக்கும் உள்ள உரிமையை அழுத்தம் திருத்தமாக வலியுறுத்துகின்றன. அற்பக் காரணங்களைத் தூக்கிப்பிடித்து இனத்துவ முரண்பாடுகளை வளர்த்துப் பிழைப்பு நடத்தப்படுவதை வன்மையாய்க் கண்டிக்கின்றன. இனிநாம் அவரது சில கவிதைகளையும் அவற்றின் பாடுபொருளையும் நோக்குவோம்.
‘தனிமையின் குரல்’ என்ற கவிதை இப்படி ஆரம்பிக்கின்றது:
கனவுக்கும் சிரிப்பூட்ட – ஒரு
துப்பாக்கியால் முடியும்
ஒரு கனவினால்
துப்பாக்கிச் சன்னத்தையும்
தடுத்து நிறுத்த முடியும்’. இவ்வாறு கனவில் சஞ்சரிக்கும் மஞ்சுள,
‘தலைகுனிந்து நடக்கும் – ஒரு
மனிதனைக் கேளுங்கள்,
‘நிலத்தில் வீழ்ந்து கிடப்பதென்ன’வென
‘வாழ்க்கை’ என்று
அவன் கூறுவான்’ என்கிறார். உண்மைதான். வாழ்க்கை எங்கோ வீழ்ந்துதான் கிடக்கின்றது. மனிதன் அதனைத் தேடிக் கண்டடைய வேண்டிய நிலையில் இருக்கின்றான்.
இனங்களுக்கு மத்தியில் பரஸ்பர நல்லெண்ணமும் மதிப்புணர்வும் இருந்தால் அமைதியும் சமாதானமும் சாத்தியமாகும். சக இனத்தவரையும் மனிதப் பிறவிகளாய்க் கருதி, அவர்தம் அபிலாiஷகளையும் மதிக்கும் உயர் பண்பாடு வாய்க்கப்பெற்றால், குரோதமும் விரோதமும் காணாமல் போய்விடும் என்பதில் ஐயமில்லை. மஞ்சுளவின் மற்றொரு கவிதை ஒரு தமிழனைப் பற்றிப் பேசுகின்றது.
அவனொரு புதிய தமிழன்
உண்மைதான்! நான் ஒரு சிங்களவன்
ஆம், சிங்களவன்
நான் ஒரு சிங்களவன்
சுத்த சிங்களவன்
தமிழ்க் கனவெனில்
தமிழிலேயே காணுதல்
வேண்டுமென விழைந்ததால்
தாய்த் திருநாட்டில்
வாழ்தல் மறுக்கப்பட்டேன்
நான் சிங்களத்திலேயே சிந்திக்கிறேன்
ஈழத் திருநாட்டிலிருந்து
துடைத்தெறியப்படும்
கடைசித் தமிழனைப் பற்றியும்
கவி வரைவேன் சிங்களத்தில்
சிங்களவனாய் இருப்பதாலேயே
கவிதை எழுதும் – என்
கரங்களிலும் இரத்தம்
எழுதுகோலின் வழியே
ஊறுவதும் இரத்தம்தான்!
சிங்களத்தில் சிரிக்கத்தான்
விருப்பம் எனக்கு
அதனாலேயேதான் அது எனக்கு
சாத்தியப்படவே இல்லை
சைவக் கடையில் சாப்பிட்டபடி
முல்லைத்தீவைக் கைப்பற்றுவது பற்றி
சிந்தித்துக் கொண்டிருக்கும்
என்னுடைய நண்பன்
மின்னஞ்சல் வழியே
உழுந்து வடையொன்றை
அனுப்பி வைத்திருந்தான்
தோழனே,
சொந்த நாட்டுக்குள்ளே
துரத்தப்பட்டோராய் வாழ்வதிலும்
வாழ்வை வேற்றிடத்தில்
கழிப்பது பரவாயில்லைதான்!
புதியதொரு கவிதை – என்
இதயத்துள் ஜனிக்கிறது;
அதுவும்கூட ஒரு
தமிழனைப் பற்றியதே!
அவனோர் ‘புதிய தமிழன்’
சிங்களத்தைப் பார்த்துச்
சிரிக்கின்ற தமிழன்
அவனை நான்
சிங்களத்தில் வாழ்த்துகின்றேன்.’
இவரது இக்கவிதை மிக முக்கியமானது. தமிழரின் உரிமைக்காய் குரல் கொடுத்த காரணத்தாலேயே தான் தாய்நாட்டை விட்டு வெளியேற நேர்ந்தது என்பதை அவர் இக்கவிதையில் தெளிவாக உணர்த்துகின்றார். சிங்கள இனத்தவராய் இருப்பதையிட்டுக் கவிஞர் கொண்டுள்ள ஆதங்கம், யுத்தத்தை முழு முனைப்போடு தடுத்து நிறுத்தும் வகையில் அரசுக்கு அழுத்தம் கொடுக்க முன்வராத காரணத்தால் அப்பாவித் தமிழ் மக்கள் சிந்திய இரத்தத்தின் கறை, முழு சிங்கள இனத்தின் மீதும் படிந்துள்ளதாய்க் கருதுதல், அதனால் மனம்விட்டுச் சிரிக்கக்கூட இலாயக்கற்றவர்களாய் சிங்களவர்கள் மாறிவிட்டார்கள் என்ற கழிவிரக்கம் என இக்கவிதை பல முக்கிய விடயங்கள் குறித்துப் பேசுகின்றது. குறிப்பாக,
“தமிழ்க் கனவெனில்
தமிழிலேயே காணுதல்
வேண்டுமென விழைந்ததால்
தாய்த் திருநாட்டில்
வாழ்தல் மறுக்கப்பட்டேன்”
என்ற அடிகள் உணர்த்தும் பொருள் மிகவும் ஆழமானது. கனவுகாணும் உரிமை யாருக்கும் பொதுவானது. தமிழருக்கான கனவு தமிழரால் காணப்படுதலே நியாயம். மாறாக, அதனைச் சிங்களத்தில் காணுவது என்பது நடைமுறைச் சாத்தியமில்லை என்பதோடு, அது நியாயமும் இல்லை, என்கின்றார். அவரவருக்குரிய தேவை என்ன என்பது இயல்பாக அவரவராலேயே தீர்மானிக்கப்படுதல் வேண்டுமே ஒழிய, மற்றவரால் திணிக்கப்பட முடியாது, திணிக்கப்படவும் கூடாது என்ற கருத்து இவ் வரிகளில் ஓங்கி ஒலிக்கின்றது. தமிழரின் நியாயமான உரிமைகள் மறுக்கப்படக் கூடாது. தமிழரின் இயல்பான தேவைகளை நிர்ணயிக்கும் உரிமை தமிழர் வசமே இருத்தல் வேண்டும் என்ற தொனி இவ் வரிகளினூடே அழுத்தமாக வெளிப்படுத்தப்பட்டிருப்பதைக் காணலாம்.
திஸ்ஸநாயகம் பற்றிய கவிதை வரிகள் மனிதநேயமிக்க இவரது உள்ளத்தைப் படம்பிடித்துக் காட்டுகின்றன.
“கைகளுக்கோ விலங்காம் – நாளை
கடூழியத் தண்டனையாம்
உனைப் பற்றி நான்
எதை நினைப்பேன், நண்ப?
முடிவற்ற காரிருளில்
அமிழ்ந்தனையோ வதைபட்டு?
உள்ளத்துள் முழுநிலவின்
நேச ஒளி விழைந்தனையோ?
திஸ்ஸ எனும் என் தோழனே!
சத்தியத்தினால் உனக்கிந்த
சிறை இருப்பு!’
என்ற வரிகள் உண்மையை உரத்துச் சொன்னதால் சிறைவாசம் அனுபவிக்குமாறு நிர்ப்பந்திக்கப்பட்ட திஸ்ஸநாயம் மீதான இரங்கலுணர்வை அழகாக வெளிப்படுத்துகின்றன.
‘சிவா’ என்ற தலைப்பில் அமைந்த மற்றொரு கவிதையில்,
“சிவா என்றாலும் நீயொன்றும் கடவுளல்ல
கடவுளர் அற்ற மண்ணில் மனிதமும் இல்லை
இதயமற்ற படையினர் கொடும் வெறியரானார்
தடிகளால் சிதைத்துனை கடலெறிந்தார்”
என்று தொடங்குகின்றது. அற்பக் காரணங்களுக்காகப் படையினராலும் காவல்துறையினராலும் படுகொலை செய்யப்பட்டு கடலுக்குள்ளும் புதைகுழிகளுக்குள்ளும் எறியப்பட்ட எத்தனையோ ‘சிவா’க்கள் பற்றி இக்கவிதை பூடகமாய்ப் பேசிச் செல்கின்றது.
சிங்களப் பௌத்த சமயத்தைப் பொறுத்தவரையில் புத்தரின் முற்பிறப்புக்களைப் பற்றி விபரிக்கும் ஐந்நூற்றி ஐம்பது பிறவிக் கதைகள் (பன்சிய பனஸ் ஜாதக கதா) மிக முக்கியமானவை. அதில் அங்குலிமாலனின் கதையும் ஒன்று. தன்னுடைய குருவின் துர்ப் போதனையால் ஆயிரத்துக்கும் அதிகமானோரைக் கொலைசெய்து, அவர்களின் கட்டைவிரல்களை வெட்டியெடுத்து மாலையாகக் கோத்துக் கழுத்தில் அணிந்துதிரிந்த அங்குலிமாலன், பின்பு புத்தரின் போதனையால் திருந்தி துறவியாய் மாறி அஹிம்சைவழி சென்றான் என்பதே அங்குலிமாலனின் கதை. அகலிகை பற்றிய புராணகதையை மறுவாசிப்புச் செய்து புனைகதை யாத்த புதுமைப்பித்தனைப் போல, மஞ்சுள வெடிவர்தனவும் அங்குலிமாலனின் கதையை மாற்றி, “நான் லிங்கமாலன் ஆனேன்” என்ற கவிதையை எழுதியுள்ளார்.
மூன்று குழந்தைகளின் தாயான கோணேஸ்வரி அம்பாறையைச் சேர்ந்தவர். 1996 ஜூன் மாதம் காவல்துறை மிருகங்கள் பத்துப் பேரால் கொடூரமாகப் பாலியல் வல்லுறவு கொள்ளப்பட்ட பின்னர் யோனியில் கிரனைட் செருகப்பட்டுப் படுகொலை செய்யப்பட்டார். மனித நாகரிகம் வெட்கித் தலைகுனியத்தக்க இத்தகைய கொடூரமான இழிசெயலைக் கேள்வியுற்ற மனசாட்சியுள்ள இதயங்கள் அதிர்ந்தன; குமுறிக் கொந்தளித்தன. அத்தகைய மனிதநேயமிக்க இதயங்களுள் மஞ்சுள வெடிவர்தனவின் கவிதை நெஞ்சமும் ஒன்று.
கோணேஸ்வரிக்கு இழைக்கப்பட்ட கொடுமையால் மனம் வெதும்பி அவர் எழுதிய கவிதை “நான் லிங்கமாலன் ஆனேன்”. இவர் தன்னுடைய இக்கவிதையில், சகோதரத்துவம், மனித நேயம் முதலான எத்தகைய உணர்ச்சிகளுமற்ற ஓர் இனம் வாழவே தகுதியற்றது என்று சாடுகிறார். வடக்கிலும் கிழக்கிலும் நடக்கும் கொடுமைகள் மிகத் தாமதமாகவே தெற்குக்குத் தெரியவருகின்றது என்ற உண்மையைக் குறிப்பால் உணர்த்துகின்றார். புத்தரின் புனிதப் பாதத்தடம் பதிந்திருக்கும் ஸ்ரீபாத மலையில் சிங்கள ஆண்குறி மாலை சாத்துவதாய்க் கூறுகின்றார். அங்குலிமாலனைத் தடுத்தாட்கொண்டு அஹிம்சா தர்மத்தைப் போதித்ததைப் போலத் தன்னையும் தன்னுடைய குரூரச் செயலையும் தடுத்துநிறுத்த இன்று போதிமாதவன் இல்லைÉ எனவே, எத்தகைய மாபாதகச் செயலைச் செய்வதும் சாத்தியம்தான் என்று கூறுவதன் மூலம் இன்று புத்தரின் போதனைகள் நடைமுறையில் இல்லாத காரணத்தாலேயே பௌத்த நாடாகிய இலங்கையில் அஹிம்சைத் தத்துவத்துக்கு எதிரான பல்வேறு கொடுஞ்செயல்கள் தலைவிரித்து ஆடுகின்றன என்ற கருத்தை வலியுறுத்த முனைகின்றார். அவலச் சுவை மிகுந்த, இனத்துவ ரீதியில் சுயவிமர்சனமாய் அமைந்த அக்கவிதை வருமாறு:
“நான் லிங்கமாலன் ஆனேன்”
வெசாக் முழுநிலவு
தலையில் கைவைத்துப்
புலம்பி அழுகிறது
சாளரம் வழியே அதன்
மூக்குச்சளி வழிகிறது
அயல் வீடொன்றில்
புத்தரின்
பிறப்பை, துறவை
பரிநிர்வாணத்தை
நினைந்து பூசித்த
ஏழு தாமரைகளும்
இன்னுமே வாடவில்லை
தொலைவிலோர் ‘தொரண்’
பந்தலின் அருகே
போதி மாதவனின்
550 பிறவிக்கதைகளின்
சாராம்சத்தை நவீனப்படுத்தி
‘புதுக்கதை’ புனைந்து
இயற்றிய ‘விரிது’க்
கவிகளின் இன்னிசை
இடைக்கிடை கேட்கிறது
என் முன்னே
கவிதைத் தவமிருக்கும் – ஒரு
வெற்று வெள்ளைத் தாள்
அந்தக் கணத்தினில்
எங்கிருந்தோ ஒரு தசைத் துண்டு
பறந்து வந்து – அந்தத்
தாளில் அழுந்தியோர்
யோனியாய் உருமாறிற்று
நிச்சயம் அது
கோணேஸ்வரியுடையதாய்
இருத்தல் வேண்டும்.
அம்பாறையில் இருந்து
கொழும்புக்குப் பறந்துவர
இத்தனைக் காலமாயிற்றோ?
அவ்வளவுதூரம் நாம்
தொலைவினில் உள்ளோம்!
என்னிரு விழியிலும்
கண்ணீரின் குளம்.
விழிநீர் மத்தியில் நான்
அங்குலிமாலன் அல்ல,
லிங்கமாலன் ஆனேன்
விரல்கள் வேண்டாம் எனக்கு
ஆண்குறிகளே தேவை
பக்தி சிரத்தையாய் – அத்
தசைத் துண்டத்தை
இடக்கரம் எடுத்து
கூரிய வாளினை
வலக்கரம் ஏந்திப்
புறப்பட்டுப் போனேன்
வழியெங்கும் எதிர்ப்பட்ட
வீடுகளைத் தட்டினேன்
சிங்கள ஆண்குறிகள்
அனைத்தையும் வெட்டியோர்
நூலினில் கோத்தேன்,
இறுதியில் என்னதும்…
ஆ!!
வேதனை சகித்து
ஸ்ரீபாத மலைக் கழுத்தில்
குறிமாலை சாத்தினேன்
எனைத் தடுத்தாட்கொள்ள – ஒரு
புத்தரிங்கு இல்லாததால்
நிச்சயம் இதனைச்
செய்திடல் சாத்தியம்
சகோதரத்துவமற்ற
உணர்ச்சிகள் ஏதுமற்ற
ஓரினம்தான் எதற்கு?
என்னெதிரில்
ஒரு வெற்றுத்தாள்
அதில் இரத்தக் கறை
அது ஒரு கவிதை
தமிழ்க் கவிதை.
அதனால்தான் – அது
சிங்களவருக்குப் புரியவேயில்லை.”
இக்கவிதையின் இறுதியில் கவிஞர் ஒரு முக்கியமான குறிப்பை வாசகர்களுக்கு விட்டுச் செல்கின்றார். தமிழரின் பிரச்சினைகள் – அது தமிழருடைய பிரச்சினையாய் இருக்கின்ற ஒரே காரணத்தினால்- சிங்களவருக்குப் புரியவில்லை. பெரும்பாலான சிங்களவர்கள் அதனைப் புரிந்துகொள்ள முயற்சிக்கவும் இல்லை என்பதே அந்தக் குறிப்பு.
‘நிமலராஜன்’, ‘ஒக்டோபர் கவிதை’, ‘நிமலராஜனின் அம்மாவுக்கு’ எனும் கவிதைகள் நிமலராஜனைப் பற்றி இவர் எழுதியவை. இக்கவிதைகள் படுகொலை செய்யப்பட்ட நிமலராஜன் மீதான இரங்கலுணர்வை கவிஞர் மிக அற்புதமாக வெளிப்படுத்தியுள்ளார். நிமலராஜன் எனும் கவிதையில்,
“என்னுடைய எழுதுகோலுக்குக்
குரலொன்று இல்லை
நிமலராஜனின் குரலுக்குச்
சிறகுகள் இல்லை” என்று எழுதும் கவிஞர் “ஒக்டோபர் கவிதை”யில்,
“எமக்கொரு தோழனுள்ளான்
பற்களால் புன்னகைத்துக்
கண்களால் கதைகள் பேசி
ஒக்டோபர் தினமொன்றில்
உயிர்த்தெழுந்து மரணித்துப்போவான்
துப்பாக்கிச் சன்னத்துக்கும்
நொடிப்பொழுதோர் உயிர்ப்பிருக்கும் – ஒரு
தோழனுக்காய் எமக்கிருப்பது
ஒக்டோபரில் ஒருதினம் மட்டுமா?”
என்று கேள்வியெழுப்புவதன் மூலம், எல்லோரும் நலம்வாழத் தம் இன்னுயிரை அர்ப்பணித்த தியாகிகளை வெறுமனே ஒரு தினத்தில் மட்டும் நினைவுகூர்ந்து அஞ்சிலி செலுத்துவதோடு முற்றாக மறந்துபோய்விடும் சமூகத்தின் நன்றிகெட்டத்தனத்தைச் சாடுகின்றார். ‘நிமலராஜனின் அம்மாவுக்கு’ என்ற கவிதை முழுக்க முழுக்க மனிதர்களும் அவர்தம் உணர்வுகளும் சமமே என்ற கருத்தை ஆழமாக வலியுறுத்துகின்றது. ‘எல்லா மனிதரின் உதிரமும் சிவப்பு நிறமேÉ எல்லா மனிதரின் கண்ணீரும் உவர்ப்புச் சுவையே!’ என்ற ‘ஆசிய ஜோதி’யின் கருத்தை நினைவூட்டும் வகையில் இக்கவிதை அமைந்திருக்கின்றதுÉ சோகத்தின் தவிப்பை மிக அற்புதமாக வெளிப்படுத்துகின்றது.
இவ்வாறே, படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் சுகீதராஜன் பற்றிய, ‘திருகோணமலை நிலவு’ என்ற கவிதையிலும், தர்மராஜன் சிவராம் பற்றிய ‘தராகி’ என்ற கவிதையிலும் அவலச்சுவை மேலோங்கியுள்ளது.
“தெற்கிலுள்ள உறவினருக்கு” எனும் தலைப்பில் இவர் எழுதியுள்ள கவிதை இப்படி ஆரம்பிக்கின்றது:
“தஞ்சம் கோரிய
தமிழ்மக்கள் திரளுக்கு
சுவையான சாதத்தை
பரிவோடு பார்சலாய்க்
கட்டித் தருகின்ற
எனது சொந்தங்களே!
நீட்டுக கரங்களை
நான்
முத்தமிட வேண்டும்.”
துன்பத்தில் உழல்பவர்களுக்குத் தோள்கொடுக்க அனைவரும் இன, மத, பிரதேச வேறுபாடுகளை மறந்து முன்வருதல் வேண்டும் என்ற கவிஞரின் மன உத்வேகத்தை இக்கவிதையில் காணக்கூடியதாய் உள்ளது.
அவ்வாறே, “வன்னியிலுள்ள கவிஞனுக்கு ஒரு மடல்” என்ற கவிதையில்,
“ஆணியறையப்பட்ட கையினால்
துயர் களைவதெப்படி?
ஆணியறையப்பட்ட கையினால்
கண்ணீர் துடைப்பதெப்படி?
ஆணியறையப்பட்ட கையினால்
கையசைப்பதெப்படி?
ஆணியறையப்பட்ட கையினால்
கவியெழுதுவதெப்படி?”
என்று தன்னுடைய கையறு நிலையினை ஆற்றாமையோடு சுட்டிக்காட்டுகின்றார். நடப்பவை எவையுமே சரியில்லை என்று மனசாட்சி உறுத்தியபோதும், அரச அதிகார யந்திரத்தின் முன்னால் பல்வேறு அடக்குமுறைகளை எதிர்கொண்டவாறு, சுயாதீனமாய் இயங்க முடியாமல் ஒருவகை முடமான நிலையில் இருக்கும் ஊடகத்தின் நிலையை இவ்வரிகள் குறிப்பாய் உணர்த்துவதாகவும் கொள்ளலாம். அதே கவிதையில்,
“முறிக்கப்பட்ட கால்களால்
எழுந்து நிற்பதெப்படி?
சுடப்பட்ட இதயமொன்று
துடிதுடிப்பதெப்படி?
சிறகு முறிந்த உள்ளமொன்று
பறந்து திரிவதெப்படி?
பெயர் பொறித்த நிலமிருந்து
பெயர்ந்து போவதெப்படி?” என்று கேள்வியெழுப்புகின்றார்.
இவ்வாறு இவரது பல்வேறு கவிதைகள் தமிழ் மக்களின் பன்முகப்பட்ட துயரங்களைப் பேசுகின்றன; அதிகாரத் தரப்பின் அடக்குமுறைக்கும் அநீதிகளுக்கும் எதிரான கண்டனத்தை வீரியத்தோடு பதிவுசெய்கின்றன.
முடிவுரை
எழுத்தாளருக்கும் கலை இலக்கியவாதிகளுக்கும் ஒரு சமூகப் பொறுப்பு உண்டு. தம்முடைய திறன்களைப் பயன்படுத்தி இலக்கியத்தைக் காலத்தின் கண்ணாடியாய்க் காட்டிச் செல்வதோடு மட்டும் நின்றுவிடாமல், சமூகப் புன்மைகளைக் காரசாரமாகச் சாடுவதோடும் விமர்சிப்பதோடும் மட்டும் நின்றுவிடாமல், தான் வாழும் சமுதாயத்தையும் எதிர்காலச் சந்ததியையும் கருத்திற்கொண்டு, சமூகத்தைப் புதிதாய்க் கட்டியெழுப்பப் பாடுபட வேண்டும். தன்னுடைய கலை இலக்கிய ஆற்றலின் வழியே உறங்கிக் கிடக்கும் சமுதாயத்தைத் தட்டியெழுப்பி, அதன் உணர்வையும் சிந்தனையையும் காத்திரமான முறையில் தூண்டி வழிநடத்த வேண்டும். பாரதி செய்ததும் இக்பால் செய்ததும் அதைத்தான். அந்த வழியில், மஞ்சுள வெடிவர்தனவும் இலங்கை மண்ணில் நிலவிவந்த அவலச் சூழலுக்கு வெறுமனே மௌன சாட்சியாய் இருக்க விரும்பவில்லை. மாறாக, அநீதிகளுக்கும் அசமத்துவத்துக்கும் எதிரான கலகக் குரலை எழுப்பினார்.
கவிதையில் மட்டுமல்ல, தன்னுடைய பிற படைப்புக்களின் மூலமும் இவர் மாற்றீடுகளுக்கான தன்னுடைய தேடலைக் கைவிடவில்லை. இவரது நாவலான பத்தலங்குண்டுவ’வில் இவர் காணும் சமூக தரிசனம் அற்புதமானது. ‘சமூக அமைப்பை மாற்றுவதாயின் எழுத்தின் மூலம் அதனை மறுவாசிப்புக்கு உட்படுத்த வேண்டும்’ என்ற டெரிடாவின் கோட்பாடு மஞ்சுள வெடிவர்தனவைப் பெரிதும் ஆகர்ஷpத்துள்ளது எனலாம். இவர் தனது நாவலில், தன்னைச் சுற்றியுள்ள சமூகச் சூழலில் நிலவும் எண்ணக்கருக்களைக் கட்டவிழ்ப்புச் செய்து கலைத்துவப் படிமங்களாய் அவற்றை மீள்கட்டமைப்புச் செய்வதைக் காணலாம். தனது படைப்பின் மூலம் தான் எழுப்பும் கேள்விகளாலும் சர்ச்சைகளாலும் வாசகரின் சிந்தனையைத் தட்டியெழுப்புகின்றார். இலங்கையின் இன முரண்பாட்டு நிலை குறித்த மஞ்சுள வெடிவர்தனவின் கருத்தோட்டம் எத்தகையது என்பதை அவரது மேற்படி நாவலில் இடம்பெறும் பின்வரும் வரிகள் உணர்த்துகின்றன:
“…ஆண்டனி அந்தத் தேசத்தை நேசிக்கத் தொடங்கினான். அது ஒரு புதிய வானம். புதிய நிலம். புதிய உலகம். புதிய ஆரம்பம். புதியதோர் கனவு. பத்தலங்குண்டுவ என்பது ஒரு பல் கலாசார தேசம். அங்கே தமிழ் பேசும் சிங்களவர்கள் வாழ்கிறார்கள். அரசகரும மொழியோ அரசகருமமற்ற மொழியோ அங்கில்லை. முதல்தரப் பிரஜைகள், இரண்டாந்தரப் பிரஜைகள் எனும் இரு தரப்புப் பிரிவுகள் அங்கில்லை. இனத்துவத்துக்கு ‘பத்தலங்குண்டுவ’வுக்குள் எந்தவொரு முக்கியத்துவமும் இல்லை. மொழியை வைத்துச் செல்லுபடியாகும் நிலை அங்கில்லை. வாழ்க்கை என்பது அதன் நீள அகலத்தினால் தவிர, மொழியொன்றினால் நிர்ணயிக்கப்படாதது அவர்கள் பெற்ற பாக்கியம். வலையில் சிக்கும் மீன்களே அவர்களின் வாழ்வாதார வழியாக உள்ளன. மாறாக, ‘இன அரசியல்’ அவர்களுடைய பிழைப்புக்குரிய வழியாய் இருக்கவில்லை. மொழி என்பது கருத்துப் பரிமாறலுக்கான ஒரு கருவியாக அல்லாமல், தலையில் தூக்கிவைத்துக் கொண்டு வெறியாட்டம் போடுவதற்கான ஒன்று என அவர்கள் தெரிந்துகொள்ளாமல் இருந்ததும் அவர்கள் செய்த பாக்கியமே.”
இவ்வாறு, எழுத்து மூலமான அரசியல் சாசனத்துக்குப் பதிலாக இதயங்களின் பரஸ்பரப் புரிந்துணர்வினால் கட்டியெழுப்பப்பட்ட ஒரு கனவுத்தேசம் பற்றி எழுதிச் செல்லும் மஞ்சுள வெடிவர்தனவின் மனிதத்துவத்துக்கான மகத்தான குரல், அவரது படைப்புக்களில் மிக அழுத்தமாகக் கேட்கின்றது எனலாம்.
குறிப்பு: இக்கட்டுரையில் எடுத்தாளப்பட்டுள்ள கவிதை வரிகள் அனைத்தும் கட்டுரையாளரால் மொழிபெயர்க்கப்பட்டவை ஆகும். இக்கட்டுரையின் சுருக்கப்பட்ட வடிவம், ஞானம் 150 வது “ஈழத்துப் போர் இலக்கியச் சிறப்பிதழில்” (2012) பிரசுரமானது.
உசாத்துணைகள்: