பாலியல் வன்புணர்வுக்கு எதிரான கருத்தரங்கும் கலந்துரையாடலும்

 புதியமாதவி மும்பை

கடந்த ஞாயிறு 06/1/2013 மாலை மும்பை சயான் தமிழ்ச் சங்கத்தில் சிந்தனையாளர் சங்கமத்தின்26வது அமர்வு பாலியல் வன்புணர்வு குறித்த கருத்தரங்கமாகவும் கலந்துரையாடலாகவும் நடைபெற்றது. அக்கருத்தரங்கில் கலந்து கொண்ட பெண்கள் சிலரின் கேள்விகளும் அச்சமும் எதிர்காலம் குறித்த சில இனம்புரியாத பய உணர்வை ஏற்படுத்தி இருப்பதை என்னால் புரிந்து கொள்ள முடிந்தது.

ஈஸ்வரி தங்கபாண்டியன் அவர்கள் ” எனக்கு அச்சமாக இருக்கிறது, பத்து வயது கூட நிரம்பாத என் பெண் குழந்தை பள்ளிக்கூடத்திலிருந்து வீட்டுக்கு திரும்பும் வரை கடந்த இரண்டு வாரங்களாக நிம்மதியின்றி தவிக்கின்றேன். ஸ்கூல் பஸ்ஸில் என்ன நடக்குமோ? விளையாட அனுப்பினால் என்னவாகுமோ? ஏன் இப்போதெல்லாம் சுதந்திரமாகபேருந்தில் டிரெயினில் பக்கத்து ஸீட்டில் இருப்பவர் நம் பெண்குழந்தையை எடுத்து மடியில் வைத்துக் கொண்டால் இந்த மனம் பதைபதைத்து போகிறது, இவ்வுணர்வு ஒரு சித்திரவதை!” என்றார்.

இன்னொருவர் லட்சுமி , அவர் ரொம்பவும் சாதாரணமாக ஒரு கேள்வியைக் கேட்டுவிட்டு அமர்ந்தார்.. தெரியாதவன் பெண்ணை பலவந்தப்படுத்தினால் பாலியல் வன்புணர்வு? தெரிந்தவன், அதிலும் தாலி கட்டியதாலேயே எப்போதும் மனைவியை பாலியல் உறவுக்குத் தள்ளும் சர்வ வல்லமைமிக்க அதிகாரம் கொண்ட எத்தனைக் கணவன்மார்கள், தங்கள் அதிகாரத்தைக் கொண்டு காலமெல்லாம் ஆட்டம் போடுகிறார்கள் தெரியுமா? இதற்கு என்ன பெயர? இதைப் பாலியல் வன்புணர்வு என்று சொன்னால் எவன் ஒத்துக்கொள்வான்? காலமெல்லாம் மனைவி என்ற சமூக அந்தஸ்த்திற்காக எத்தனைக் கோடிப் பெண்கள் பாலியல் வன்புணர்வுக்குள்ளாகிரார்கள் தெரியுமா? என்று கேட்டார்.

அவருக்குப் பெண்ணியம் குறித்தெல்லாம் எதுவும் தெரியாது தான். ஆனால் அவர் சொன்ன இக்கருத்து இச்சமூகத்தின் முகத்தில் ஓங்கி அறைந்த மாதிரி இருந்தது. என் இனிய தோழி ஆழியாளின் கவிதை அப்போது நினைவுக்கு வந்தது.

காலப்பொழுதுகள் பலவற்றில்
வீதி வேலி ஓரங்களில்
நாற்சந்திச் சந்தைகளில்
பிரயாணங்கள் பலவற்றில்

தந்திக் கம்பத்தருகே
கால்தூக்கியபடிக்கு
என்னை உற்றுக் கிடக்கும்
அம்மிருகம் துயின்று
நாட்கள் பலவாகியிருக்கும்

அதன் கண்கள் நான் அறியாததோர்
மிருகத்தின் கண்களைப் பறைசாற்றிற்று.
அவற்றின் பாலைத் தாகம்
அறியாப் பாஷையை எனக்குள் உணர்த்திற்று.

அழகி மண்ணம்பேரிக்கும்
அவள் கோணேஸ்வரிக்கும்
புரிந்த வன்மொழியாகத்தான்
இது இருக்குமென
அவதியாய் எட்டிக் கடந்து போனேன்.
அன்றைய அலைச்சலும்
மனக்குமைச்சலும் கூடிய
தூக்கத்தின் இடையில் நானும்
அவள்களுக்குப் புரிந்த
அதே அதே ஆழத்திணிக்கப்பட்ட
பாஷையைப் புரிந்து கொண்டேன்

அருகே கணவன்
மூச்சு ஆறிக்கிடக்கிறான்”

தோழி துர்க்கா ராஜன் அவர்கள் ஒரு பேச்சாளராகவோ எழுத்தாளராகவோ நான் இக்கருத்தரங்கில் கலந்து கொள்ள வரவில்லை. ஒரு பெண் குழந்தைக்கு நானும் தாய், என் அச்சத்தை என் கருத்தை உங்களுடன் பகிர்ந்து கொள்ள வந்திருக்கிறேன் என்றார். என் பெண் குழந்தையிடம் இப்போதெல்லாம் அடிக்கடி அவள் உடல் குறித்த அடிப்படை அறிவியலைச் சொல்லிக்கொடுக்கிறேன். யாராக இருந்தாலும் உன் உடலைத் தொட்டுப் பேச அனுமதிக்காதே என்ன்று வேறு சொல்லி வைக்கிறேன். அவளோ குழந்தை, எந்தளவுக்கு நான் சொல்வதை உள்வாங்கிக் கொள்கிறாளோ தெரியவில்லை. அடிக்கடி குழந்தையிடம் இப்படி பேசுவது சரியா? என்று வேறு கவலையாக இருக்கிறது. ஆனால் நம் பெண் குழந்தையைப் பாதுகாப்பது நம் கடமைதானே என்றார். மேலும், தன் பேச்சில் டில்லி பாலியல் வன்புணர்வு சம்பவத்தில் யாருடைய தூண்டுதலுமின்றி பொதுமக்கள் சாலைகளில் இறங்கிப் போராடியதையும் பொதுமக்களின் போராட்டக்குணம் சரியான வழியில் வழி நடத்தப்பட்டால் எதையும் சாதிக்க முடியும் என்றும் பேசினார்.

இலெமுரியா அறக்கட்டளை மற்றும் இலெமுரியா பத்திரிகை சார்ந்த நங்கை குமணன் அவர்கள் ” குற்றவாளிக்குத் தூக்குத்தண்டனை விதிப்பது மட்டும் தீர்வாக முடியுமா? ஒவ்வொரு மனிதனின் வாழ்வியல் விழுமியங்கள்
அது குறித்த கல்வி, விழிப்புணர்வு இவை மட்டுமே இப்பிரச்சனை குறித்த தொலைநோக்குத் திட்டங்களாகவும் தீர்வாகவும் இருக்க முடியும் என்று ஆணித்தரமாக பேசினார்.

மலையாள எழுத்தாளர் மானசி அவர்கள் நிலவுடமை சமூகமும் அதன் சமூக நியதிகளும் ஒவ்வொரு ஆணுக்குள்ளும் ஆட்சி செய்து கொண்டு இருப்பதன் வெளிப்பாடு தான் இம்மாதிரி சம்பவங்கள் என்று சொன்னதுடன்
தங்கள் கேரள மண்ணில் மாலை 6 மணிக்குப் பின் தன்னால் சாலையில் தனியாக நடப்பதைக் குறித்து நினைத்துப் பார்க்க முடியவில்லை என்கிற இன்றைய நிலையையும் வருத்தத்துடன் பதிவு செய்தார்.

அதன் பின் கூட்டத்திற்கு வருகைத்தந்திருந்த வழக்கறிஞர் இராசாமணி, எழுத்தாளர் தமிழ்நேசன், சரவணன், தமிழ்ச் சங்கம் பரணி . தமிழ்த் தேசிய கூட்டமைப்பு பால்வண்ணன் ஆகியோர் விவாதத்தில் கலந்து கொண்டு தங்கள் கருத்துகளை முன்வைத்தனர்.

நாடாகொன்றோ காடாகொன்றோ
அவலாகொன்றோ மிசையாகொன்றோ
எவ்வழி நல்லவர் ஆடவர்
அவ்வழி நல்லை வாழிய நிலனே ( புறம் 187)

என்ற அவ்வையின் வரிகளை மேற்கோள் காட்டி பால்வண்ணன் அவர்கள்
பேசினார்.

மக்கள் நலம், பாதுகாப்பு, நாட்டின் நலம் எல்லாம் ஓர் ஆடவன் நல்லவனாக இருந்தால் மட்டுமே சாத்தியம் என்பது நடைமுறையாகக் கூட இருக்கலாம், ஆனால், வாழ்க்கையின் விழுமியங்கள், நியாயம் அநியாயம், நல்லது கெட்டது,
எல்லாவற்றையும் தீர்மானிப்பது  நம் சமூகத்தில் ஆண்களாக மட்டுமே இருப்பதால் தான் பெண் இரண்டாம் பால்நிலையாகத் தள்ளப்பட்டிருக்கிறாள்.

அதனால் தான், 5 வயது பெண் குழந்தையைக் கூட பாலியல்  வன்புணர்வுக்குள்ளாக்கும் ஆண்கள் சொல்கிறார்கள், பெண்களின்  மேற்கத்திய நாகரிக உடைகள் தான்  காரணம் என்று! பாலியல் வன்புணர்வுக்கு வந்தவனிடம் ” சகோதரனே!” என்றழைத்திருந்தால்
அவன் மனம் மாறி இருப்பானாம்! இப்படியும் உளறிக்கொட்டும் தலைவர்கள் இருக்கிறார்கள் எங்களைச் சுற்றி!

பாலியல் வன்புணர்வு இந்தியாவில் நடக்கிறது, பாரதத்தில் நடக்கவில்லை
என்று புதிதாக கண்டுபிடித்து அறிவிக்கிறது இன்னொரு அமைப்பு.

அதாவது நகரங்களில் நடக்கிறதாம், கிராமங்களில் நடப்பதில்லையாம்!
ஆமாம், அவர்களைப் பொறுத்தவரை கிராமங்களில் நடக்கும் வன்புணர்வுகள் எல்லாம் அவர்களின் சாதியச்சடங்குகள் தானே! வெட்க கேடு..

இவர்களை எல்லாம் தலைவர்களாகவும் இவர்களின் அமைப்புகளை எல்லாம்
வளரவிட்டும் பார்த்துக் கொண்டிருக்கும் இந்திய மக்களில் நானும் ஒருத்தியாக இருப்பது , எனக்கும் அவமானம்!

அதிகரித்து வரும் இம்மாதிரியான சமூக இழிவுகளுக்கு ஒருவகையில்
வர்க்க பேதமும் காரணம், உயர்தர வர்க்கம், நடுத்தரவர்க்கம், அடிநிலைவர்க்கம் என்ற மூன்று வர்க்க நிலைகளில் நடுத்தர வர்க்கத்திற்கும்
அடிநிலை வர்க்கத்திற்கும் இடையில் தீடீரென அண்மைக் காலங்களில் அதிகரித்து இருக்கும் இடைவெளி, உலகப் பணக்காரர்கள் வாழும் இந்தியாவில் தான் அதிகமாக வறுமைக்கோட்டுக்கு கீழிருக்கும் மனிதர்களும்
‘வாழ்கிறார்கள் என்பதையும் கவனிக்க வேண்டிய வலது இடது சாரிகள்உப்புச் சப்பில்லாத தீர்மானங்களை நிறைவேற்றி ஏதோ நாங்களும் இருக்கிறோம் என்று கடை நடத்திக் கொண்டு இருக்கிறார்கள்.

என்ன செய்யலாம்? சொல்லுங்கள்.

1 Comment on “பாலியல் வன்புணர்வுக்கு எதிரான கருத்தரங்கும் கலந்துரையாடலும்”

  1. மிக அண்மையில், இலங்கையில் ஒரு 10 வயதுப் பெண்குழந்தையை மூன்று வருடங்களாக ஒரு தந்தையும், அண்ணனும் சேர்ந்து வன்கொடுமைக்கு ஆளாக்கி இருக்கிறார்கள். ‘சித்தி’ இதற்கு சப்போர்ட் என்பது அதனிலும் கொடுமை!

    உண்மைதான் மாதவி. இந்த நிமிடம் வரை எனக்குள் நானும் இதே கேள்வியைத்தான் கேட்டுக்கொண்டிருக்கிறேன், “என்னதான் செய்யலாம்?”

    “எங்கிருந்து தொடங்குவது?”

    தொழிலாளர் படையை உருவாக்குவதே இறுதி அடைவு என்பதாகச் செயற்படும் நம்முடைய கல்வி முறைமையில் குளறுபடியா அல்லது நம்முடைய வாழ்வியல் முறைமையில் கோளாறா?”

    சிறுமி ஒருத்தியை வன்புணர்வுக்கு ஆளாக்கிய பின்பும் நாடாளுமன்றத்தில் அதிகார நாற்காலியில் அமர்க்களமாய் அமர்ந்திருக்கும் “நபர்கள்” வாழும் ஒரு நாட்டில் இருந்தபடி நானும் இதே கேள்வியைக் கேட்கிறேன்,

    “என்னதான் செய்யலாம் நாம், இந்த ஈனச் செயல்களைத் தடுத்து நிறுத்த?”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *