சமீலா யூசுப் அலி
2013.01.12
கைகளும் கால்களும் செயலற்று உறைந்தேன்.
உன் வீட்டின் நாளைக்காய் உன் நிகழ்காலத்தை,கனவுகளை,உம்மாவின்
உன் வலிக்கும் ஞாபகங்களை மட்டும் எங்களுக்காய் மீதம் வைத்து நீ சென்று விட்டாய்… இல்லை உன்னை பலவந்தமாய் அனுப்பி வைத்தது அநீதியின் கொடிய கரங்கள்.
உன்னைக் காப்பாற்றி விடலாம் என்ற நம்பிக்கை கடைசியில் வெற்றுக் கனவாய் போனது.
ஆயிரம் குற்றவாளிகள் தப்பித்தாலும் ஒரு நிரபராதி தண்டிக்கப்படக் கூடாது என்பது நீதியின் கொள்கை.குற்றம் செய்யாத சூழலை உருவாக்காமல் குற்றவாளிக்குக் கூட தண்டனை வழங்கக் கூடாதென்ற உத்தமமான இறைவனின் நீதியே ஷரீஆ சட்டம். அல்லாஹ்வின் கட்டளையை விட ஆதிக்கத்தின் கட்டளைக்கு அடிபணிந்த சவூதியின் நீதிமன்று.உன் உள் நெஞ்சின் ஏக்கங்களோ, உன் உம்மாவின் அழுகுரலோ சவூதியின் காதுகளில் கடைசி வரை விழவேயில்லை சகோதரி…
கடைசி கடைசியாய் நீ உன் உம்மாவோடு,தம்பி தங்கைகளோடு கொஞ்சம் பேச ஆசைப்பட்டிருப்பாய்…
வாப்பாவின் உடல் நலத்தை விசாரிக்க நினைத்திருப்பாய்…
ஏழெட்டு வருடங்கள் காணா உன் தாய் மண்ணை நினைத்திருப்பாய்
உன் குடிலின் ஒரப் பாயில் உட்கார்ந்து ஒன்றாய் சோறுண்ட ஞாபகங்கள் வந்திருக்கும்…
இறைவனைத்தவிர யாருமே துணையில்லா ஒரு பாலைவெளியில் உனக்கான தண்டனைக்காய் மண்டியிட்டிருந்திருப்பாய்…
மென்மையான உன் இதயம் புறாக்குஞ்சு போல படபடத்திருக்கும்.
நீ பயந்திருப்பாய், உன் கடைசி ஆசை கூட நிறைவேறாமலே உன் உயிர் பிரிந்திருக்கும். இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்.
கொடுமணல் பாலையாய் காய்ந்து போன அந்த அரபிகளின் உள்ளத்தில் இன்னுமே ஜாஹிலிய்யத் முளைத்துக் கிடக்கிறது.
கருத்த அடிமையாய் இருந்த பிலாலோடு உயர்குலங்களின் சிகரமாய் விளங்கிய குறைசிக் கோத்திரத்தின் வாரிசான இறுதித் தூதரவர்கள் தோளோடு தோள் சேர்ந்து நின்றார்களே, அந்தப் பாடத்தை இன்றைய சவூதியின் வரட்டு கெளரவங்கள் படித்ததில்லையா?
தோலின் நிறம்,,இனம்,குலம் ,கோத்திரம்,அந்தஸ்த்து அதிகாரம் இவற்றுக்கெல்லாம் அப்பால் முகிழ்த்த இஸ்லாமிய நிலவை எண்ணெய்த் திமிருக்குள் அடக்க நினைக்கும் அநீதிக்கு முடிவேது?
சகோதரியே, மூன்றாம் உலக நாடொன்றில் பிறந்தது நீ செய்த முதல் குற்றம்..
உண்டது செரிக்க அரைமைல் நடக்கும் செல்வந்தராய் உன் தந்தை இல்லாமல் போனது இன்னொரு குற்றம்.
உனக்கான கனவுகளை விற்று உன் குடும்பத்தின் துயர் துடைக்க நினைத்த உன் பாலைவனப்பயணம் மற்றொரு குற்றம்.
இதோ குற்றமற்றவர்கள் அமைதியியாய் இருக்க குற்றம் செய்த உன்னைத் தண்டிக்கிறார்கள், பார் நீதியின் கண்களை என்றைக்குமாய் மூடியிருக்கின்றன.
சவூதியின் நீதி ஷரீஆ நீதியாம். இங்கும் சிலர் அநீதிக்கு ஆடை கட்டிப்பார்க்கத் தவிக்கின்றனர்.
தன் தலை சீவப்படும் வரை உன் வலி அவர்களுக்குப் புரியாது சகோதரி…
மேற்கு நாடுகளின் முன் சுஜூதில் கிடக்கும் சவூதி அரேபியாவின் கோத்திர வெறியும் இன உணர்வும் இவர்களுக்குத் தெரியாது.
பூமான் நபியின் பிறந்த மண் மெளனமாய் இன்று அழுது கொண்டிருக்கும் ஒர் ஏழையின் கழுத்தில் அநீதியின் வாள் விழுந்த நிகழ்வை நினைத்து….
உனக்காய் இன்று நாம் ஒன்றுமே செய்ய முடியவில்லை சகோதரி…
உனக்காய் கடைசியாய் கொண்டு வந்த புதிய உடைகளும் சொக்லேட்டும் சீந்துவாரற்றுக் கிடக்கின்றன.
உள்ளத்திற்குப் பதில் கல் முளைத்த மனிதர்கள் இருக்கும் வரை சகோதரியே நீ இன்னும் பலமுறை குரூரமாய் கொல்லப்படுவாய்…
இனியவளே, உனக்கான நந்தவனம் மேலான சுவனத்தில் எழுப்பப்பட என் பிரார்த்தனைகள்…
அங்காவது நீ நிம்மதியாய் அதிகாரத்தின் குரல் அழிந்த பெருவெளியில் கண்ணுறங்கு…
20.01.2011 ஞாயிறு தினக்குரல் இன் ‘மறுபக்கம்’சவூதி யின் உண்மையான அரசியல் முகத்தை சிறப்பாக காட்டியுள்ளது.ரிசானாவின் கொலை
யை இரக்கத்தோடு மட்டும் பார்க்கும் மனிதாபிமானிகள் கட்டுரையை வாசிக்க வேண்டும்.