-உம்மு ராஷித்-
ஓர் அப்பாவிப் பெண்ணின் மரணத்தின் பின்னணியில்…
—“ஓர் அரசு என்ற வகையில், இலங்கை தன்னுடைய கடமையைச் சரியாகச் செய்யவில்லை; ரிஸானாவின் மரணத்துக்கு இலங்கை அரசாங்கமே முழுப்பொறுப்பு ஏற்க வேண்டும்” என்ற ஆசிய மனித உரிமைகள் ஆணையகத்தின் குற்றச்சாட்டு
—இறந்த குழந்தையின் தாய் மன்னிக்காத படியால் தண்டனையை நிறைவேற்றுவதைத் தவிர வேறு வழியில்லை என்று சப்பைக்கட்டுக் கட்டும் சவூதி அரசு, எந்தக் கட்டத்தில் அதுசெல்லுபடியாகும் என்பதை கவனிக்கத்தவறிவிட்டது. அதாவது, நடந்தது கொலையாக இருக்கும் பட்சத்திலேயே, உரியவர்களின் மன்னிப்பு பற்றிய பேச்சுக்கே இடமிருக்கும். மாறாக, கொலை என்றே உறுதி செய்யப்படாத நிலையில் விதிக்கப்பட்ட மரணதண்டனை முற்றிலும் அநீதியானது என்பதோடு, சவூதி அரசு நடைமுறைப்படுத்துவதாகச் சொல்லும் ஷரீஆ சட்டத்தின் அடிப்படை விழுமியமான “நீதி நிலைநிறுத்தப்படுதல்” என்பதற்கு முற்றிலும் மாறானதும்கூட!
ரிஸானா நஃபீக். 2005 ஆம் ஆண்டு முதல் இந்தப் பெயர் ஊடகங்களில் அடிக்கடி தலைப்புச் செய்திகளில் இடம்பெற்று வருகிறது. அந்தப் பரபரப்பான பெயருக்குரிய இலங்கையைச் சேர்ந்த இளம் யுவதிக்கு கடந்த புதன்கிழமை (09/01/2013) காலை இலங்கை நேரம் 11.40 மணிக்கு சவூதி அரேபியாவில் மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது.
அதே தினத்தில் அவரது மரணத்தின் பொருட்டு இலங்கை நாடாளுமன்றத்தில் ஒரு நிமிட நேர மெளன அஞ்சலி செலுத்தப்பட்டது.
யார் இந்த ரிஸானா?
ரிஸானா இலங்கையின் மூதூர் பிரதேசத்தின் சாபி நகரைச் சேர்ந்தவர். 1988 ஆம் ஆண்டு பெப்ரவரி 02 இல் பிறந்த ரிஸானாவுக்கு, 1983 ஆம் ஆண்டு பிறந்ததாக உறுதிப்படுத்தும் போலி ஆவணங்கள் அவரது பயண முகவரால் தயாரிக்கப்பட்டு வழங்கப்பட்டிருந்தன. 2005 ஆம் ஆண்டு ஏப்ரல் முதலாம் திகதி குடும்ப வறுமை காரணமாக சவூதிக்குப் பணிப்பெண்ணாக வேலைக்குச் சென்றார். வேலையில் சேரும்போது அவரது உண்மையான வயது 17 மட்டுமே. பணிப்பெண்ணாய் சுமார் ஒன்றரை மாதங்கள் எந்தப் பிரச்சினையும் இன்றிக் கழிந்தன.
மே மாதம் 22 ஆம் திகதி, நான்கு மாதப் பச்சிளங் குழந்தையைக் கொலைசெய்தார் என்ற குற்றச்சாட்டின் பேரில் சவூதி காவல்துறையினரால் கைதுசெய்யப்பட்டார். குழந்தைக்குப் புட்டிப் பால் புகட்டும்போது, ஏற்பட்ட மூச்சுத் திணறலால் குழந்தை இறந்துள்ளது. எனினும், விசாரணைகளின்போது ரிஸானாவின் வாக்குமூலத்தை மொழிபெயர்த்த மொழிபெயர்ப்பாளரின் தவறால் நடந்த விபத்து, ஒரு கொலையாகக் காட்டப்பட்டுவிட்டது.
இந்நிலையில், 16ம் திகதி ஜூன் மாதம் 2007 இல் தவாதமி (Dawadami High Court) உயர் நீதிமன்றம் அவருக்கு மரண தண்டனை விதித்தது.அத் தீர்ப்புக் கெதிராக ரிஸானா நஃபீக் மேன்முறையீடு செய்தார். குழந்தையைக் கொலை செய்தார் என்றும், அவர் மனநிலை பிறழ்ந்தவர் என்றும் கூறப்பட்ட குற்றச்சாட்டுக்களுக்கு மத்தியில், உண்மையில் நடந்தது என்ன என்பதைக் குறிப்பிட்டு அல்- தவாதிமி சிறைச்சாலையில் இருந்து கடந்த 2007.01.30ஆம் திகதி ரிஸானா கைப்பட எழுதிய வாக்குமூலம் இணைக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, அவரின் மேன்முறையீட்டை ரியாத்தில் உள்ள உச்ச நீதிமன்றம் நிராகரித்தது. தவாதமி மேல் நீதிமன்றத்தினால் வழங்கப்பட்ட மரண தண்டனைத் தீர்ப்பினையும் அந்நீதிமன்றம் உறுதி செய்து தீர்ப்பளித்தது. அதையடுத்து, கடந்த புதன்கிழமை அவருக்கான மரணதண்டனை நிறைவேற்றப்பட்டு, அவரது உடல் சவூதியிலேயே நல்லடக்கம் செய்யப்பட்டது.
ரிஸானாவின் விடுதலைக்கான முயற்சிகள்
ரிஸானாவை விடுதலை செய்யுமாகப் பல்வேறு முயற்சிகளை இலங்கை அரசாங்கம் முன்னெடுத்து வருவதாக ஊடகங்களின் வழியாகப் பல செய்திகள் வெளியாயின. இலங்கை அதிபர் சவூதி மன்னரிடம் ரிஸானாவின் விடுதலை தொடர்பில் கோரிக்கை விடுத்ததாகவும், இலங்கை அமைச்சர்கள் இடைக்கிடை சவூதிக்குச் சென்று வந்ததாகவும், இலங்கை ஜம்மியதுல் உலமா உரியவர்களைத் தொடர்புகொண்டதாகவும் பல்வேறு செய்திகள் வெளியாயின.
எனினும், இலங்கை அரசு இவ்விடயத்தில் எந்தளவுக்கு மெத்தனமாகவும் மனிதாபிமானமின்றியும் நடந்துகொண்டது என்றால், மேன்முறையீட்டுக்கான வழக்கறிஞர் கட்டணத்தை வழங்கக்கூட அது முன்வரவில்லை. மாறாக, இதற்கான செலவைப் பொறுப்பேற்றுக்கொண்ட ஆசிய மனித உரிமைகள் ஆணையகம் (Asian Human Rights Commission) அல்ஷமரி ( Al-Shammary) எனும் சவூதியிலுள்ள சட்ட நிறுவனத்துக்கு அதற்கான கட்டணத்தை வழங்கி உதவியது. அதுமட்டுமல்ல, 2007 ஆம் ஆண்டு முதல் இந்த வழக்கில் உலகத்தின் கவன ஈர்ப்பைப் பெறும் முயற்சிகளில் ஈடுபட்டு வந்தது.
வெளிநாட்டுக்குப் போய்ப் பணியாற்றும் பணிப்பெண்கள் மூலம் மிகப் பெருந்தொகைப் பணத்தை அந்நிய செலாவணியாகப் பெற்றுக்கொள்ளும் ஒரு நாடு, தன்னுடைய குடிமகள் ஒருத்திக்கு ஏற்பட்ட கையறு நிலையின்போது இவ்வாறு மனிதநேயமற்றுச் செயற்பட்டமை வெட்கக்கேடானதாகும். அவ்வாறே, இந்த விடயமாகப் பேசுவதற்கென அடிக்கடி சவூதிக்குப் பறந்த அமைச்சர்களில் யாரும் பாதிக்கப்பட்ட குடும்பத்தை, குறிப்பாக குழந்தையின் பெற்றோரை நேரில் சந்தித்து அவர்களுக்கு நிலைமையைத் தெளிவுபடுத்த முனையவில்லை. வெறுமனே அறிக்கை விடுவதன் மூலமே “எல்லாம்” நடந்துவிடும் என்று மனப்பால் குடித்துவந்த இலங்கை அரசும் சரி, அதன் அமைச்சர்களும் சரி வெறுமனே ஒரு நிமிட நேர நாடாளுமன்ற மௌன அஞ்சலி மூலம், தம்முடைய முகத்தில் படிந்துள்ள கரியைத் துடைத்துக்கொள்ளலாம் என்று கருதிவிட்டார்கள் போலும்!
இத்தகைய பின்புலத்திலேயே, சவூதியில் உள்ள டாக்டர் கிஃபாயா இஃப்திகாரின் அயராத முயற்சி விதந்துரைக்கத் தக்கதாகிறது. அவரது முயற்சிகள் ரிஸானாவின் வழக்கில் ஒரு திருப்புமுனையை ஏற்படுத்தும் என்ற நம்பிக்கையை விதைத்தது. உலகெங்கிலும் வாழும் பலரும் இவ்விடயத்தில் தமது அக்கறையை வெளிப்படுத்தினர். மனித உரிமைகள் அமைப்பினரும் குறிப்பாக, பெண்கள் அமைப்புக்களும் இதில் அதிகக் கரிசனையோடு செயற்பட்டன. தனிநபர்களும் மனிதாபிமான அடிப்படையில் ஒன்றிணைந்து மரண தண்டனையை ரத்துச்செய்யக்கோரும் மனுவில் கையொப்பம் சேகரித்தும், பேரணிகளை நடாத்தியும் களத்தில் இறங்கினர். சமூக வலைதளங்களும் இதில் பிரதான பங்காற்றின.
ரிஸானாவின் வழக்கில் சவூதி அரசாங்கத்துக்குப் போதிய அழுத்தம் கொடுக்குமாறு இலங்கை அரசுக்குப் பல்வேறு வேண்டுகோள்கள் விடுக்கப்பட்டன. எனினும், மிக அண்மையிலேயே அது தன்னுடைய ஆழ்ந்த உறக்கத்தில் இருந்து விழித்துக்கொண்டது.
ஆசிய மனித உரிமைகள் ஆணையகத்துக்கு ஆகஸ்ட் 20, 2012 தேதியிட்டு இலங்கை அதிபரின் செயலர் லலித் வீரதுங்க அனுப்பியுள்ள கடிதத்தில், உயிரிழந்த குழந்தையின் பெற்றோருக்கு இரத்தப்பணம் எனப்படும் இழப்பீட்டுப் பணத்தை வழங்க இலங்கையின் வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் உடன்பட்டிருப்பதாகத் தெரிவித்திருந்தார். கடந்த வருடம் மார்ச் 12 ஆம் திகதி அமைச்சர் ஜீ.எல். பீரிஸ் இதுவிடயமாக ரியாத் ஆளுநர் இளவரசர் ஸதாம் பின் அப்துல் அஸீஸிடம் பேசியுள்ளார் எனவும் அவர் அக்கடிதத்தில் குறிப்பிட்டிருந்தார்.
வருடக் கணக்காக நீண்ட ரிஸானாவின் வழக்கு தொடர்பில் இலங்கை அரசின் மெத்தனப் போக்கு குறித்துப் பலவிதமான விமர்சங்கள் எழுந்தன. குறிப்பாக, ஆசிய மனித உரிமைகள் ஆணையகம் குறிப்பிடும்போது,
“இலங்கை ஒரு சின்னஞ்சிறிய நாடாக இருப்பினும்கூட, உலகெங்கிலும் உள்ள ஏனைய நாடுகளுக்கு இருக்கும் அதேயளவு இறையாண்மையை அந்நாடும் கொண்டிருக்கிறது. எனவே, ஏனைய நாடுகள் தன்னுடைய குடிமக்களின் வாழ்வுக்கும் சாவுக்கும் இடையிலமைந்த இக்கட்டான நிலையில் எவ்வாறான நடைமுறைகளைக் கைக்கொள்ளுமோ, அத்தகைய நடைமுறைகளைக் கையாண்டு அவர்களை அத்தகைய இக்கட்டில் இருந்து விடுவிப்பதன் மூலமே அந்த இறையாண்மைக்குரிய கௌரவத்தைப் பெற்றுக்கொள்ள முடியும். ஆகவே, இத்தகையதொரு நெருக்கடியான சூழலில், எந்த ஒரு நாடும் மற்ற நாட்டுடனான வர்த்தகத் தொடர்புகள் பாதிக்கப்படும் என்றோ, வேறு நலன்கள் பாதிக்கப்படும் என்றோ தயங்கிப் பின்வாங்காது” என்று குறிப்பிட்டுள்ளது.
மேற்படி ஆணையகம் இலங்கை அதிபரின் செயலர் லலித் வீரதுங்கவுக்கு எழுதிய மடலில் பின்வருமாறு சுட்டிக்காட்டியுள்ளது:
“ஆயிரக்கணக்கான தனிநபர்களும் நூற்றுக்கணக்கான அமைப்புக்களும் ரிஸானாவின் விடுதலைக்காக தம்மாலான அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டதோடு, அவை குறித்து இலங்கையரசுக்கு அறிவிக்கவும் தவறவில்லை. ஆனால், இலங்கை அரசின் சார்பில் பெறப்பட்ட முதலாவது மறுமொழியாக தாங்கள் அனுப்பிய (20.08. 2012) கடிதம் அமைந்துள்ளது. அதற்கு நன்றி. இடம்பெற்ற சம்பவம் ஒரு கொலையல்ல. அது ஒரு கொலை என்பதற்கான எந்த ஒரு சான்றும் சவூதி நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவில்லை. குழந்தையின் இறப்பு தொடர்பில் பிரேத பரிசோதனை செய்யப்படவுமில்லை. ஸ்வீடிஷ் டாக்டரிடம் இருந்து பெறப்பட்டதாகக் கூறி வெளியிடப்பட்ட மருத்துவ அறிக்கையில் குழந்தையின் மரணம் ஒரு கொலையே என நிறுவத்தக்க எத்தகைய ஆதாரமும் இடம்பெறவில்லை.”
இதன்மூலம், இலங்கை அரசைத்தவிர ஆயிரக்கணக்கானோர் இவ்விடயமாகக் கரிசனையோடு குரல் எழுப்பி வந்தனர் என்பது தெளிவாகின்றது. எனினும், மனித நேயமிக்க நல்லுள்ளங்கள் அத்தனை பேரின் முயற்சிகளும் பலனற்றுப்போன நிலையில், ரிஸானவுக்கு மரணதண்டனை நிறைவேற்றப்பட்டு விட்டது.
ஓர் அப்பாவிப் பெண்ணின் மரணத்தின் பின்னணியில்…
வெளிநாட்டில் பணிப்பெண்களாய்ப் பணிபுரிவதற்கென நாடு கடந்து செல்லும் ஏழைப் பெண்கள் அனுபவிக்கும் அல்லல்களும் கொடுமைகளும் நாம் அறியாத ஒன்றல்ல. ரிஸானாவின் மரணம் அரிதான ஒன்றாக இருப்பினும், அந்த மரணம் பல்வேறு செய்திகளை நம்முன் விட்டுச் சென்றுள்ளது.
இது போன்றதொரு துர்ப்பாக்கியமான நிகழ்வின் பின்னணியில் பொறுப்புச் சொல்ல வேண்டிய பலர் உள்ளனர். முதலாவது, தரகுப் பணத்துக்கு ஆசைப்பட்டு, பொய்யும் பசப்பு மொழிகளும் சொல்லி, போலி வாக்குறுதிகள் வழங்கி அப்பாவி ஏழைப் பெண்களை வெளிநாட்டுக்கு “ஏற்றுமதி” செய்யும் பயண முகவர்கள். ரிஸானாவின் வயதை மறைத்துப் போலி ஆவணங்கள் வழங்கிய பயண முகவர்களுக்கு சில வருடங்கள் சிறைத் தண்டனையும், சில ஆயிரம் ரூபாய்கள் தண்டப் பணமும் விதித்துத் தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமன்றி, இத்தகைய மோசடிக்காரர்களின் முகவர்நிலைய அனுமதிப்பத்திரம் நிரந்தரமாக ரத்துச் செய்யப்பட வேண்டும்.
பணத்துக்கு ஆசைப்பட்டு யாரும் எதையும் சொல்லலாம். கேட்பார் பேச்சைக் கேட்டு சொந்தப் புத்தியை அடகுவைத்துவிட்டு தமது பெண்களை வெளிநாட்டுக்கு அனுப்ப முன்வரும் தந்தைமாரும், கணவர்மாரும் இனியாவது திருந்த வேண்டும். வறுமையை நீக்கக் கூடிய மாற்று வழிமுறைகளாக, அரச உதவியுடனோ தனிப்பட்ட உதவிகள் மூலமோ சுய கைத்தொழில்கள் செய்வது குறித்துச் சிந்தித்துப் பார்க்கலாம். உள்நாட்டிலேயே கௌரவமான தொழில் வாய்ப்பொன்றைப் பெறுவதற்கு முன்னுரிமை வழங்கலாம்.
சமூகம் என்ற வகையில், ஊர் முன்னேற்றத்தில் பங்குகொள்ளத்தக்க இளைஞர் அமைப்புக்கள் உருவாக்கப்பட வேண்டும். சமய அமைப்புக்கள் கூட்டங்கள் போடுவதற்கும் விழாக்கள் கொண்டாடுவதற்கும் லட்சக்கணக்கில் வாரியிறைக்கும் பணத்தை, சமூகத்தில் உள்ள வறுமையை ஒழிப்பதற்கான ஆக்கபூர்வ பணிகளில் ஈடுபடுத்த இனியாவது முன்வரவேண்டும். இஸ்லாமியர்கள் மத்தியில் காணப்படும் ஸக்காத் எனும் ஏழைவரி முறையாக அறவிடப்பட்டு, சரியாக வினியோகிக்கப்படுமாக இருந்தால், ஆயிரக்கணக்கான ரிஸானாக்களின் அல்லல்கள் தீர்க்கப்பட முடியும்.
“ஓர் அரசு என்ற வகையில், இலங்கை தன்னுடைய கடமையைச் சரியாகச் செய்யவில்லை; ரிஸானாவின் மரணத்துக்கு இலங்கை அரசாங்கமே முழுப்பொறுப்பு ஏற்க வேண்டும்” என்ற ஆசிய மனித உரிமைகள் ஆணையகத்தின் குற்றச்சாட்டு இங்கு கவனிக்கத்தக்கது.
வெளிநாட்டுச் செலாவணி மூலம் பெருந்தொகை வருமானத்தை ஈட்டும் ஓர் அரசு, தனது நாட்டுக்கு அந்த வளத்தைக் கொண்டு சேர்க்கும் ஊழியர் படையின் நலனையும் பாதுகாப்பையும் உறுதிப்படுத்த வேண்டும். தன்னுடைய தூதுவராலயம் உள்ள நாடுகளில் எல்லாம், தரமும் தகுதியும் திறமையும் வாய்ந்த மொழிபெயர்ப்பாளர்கள் பலரை அது பணியில் அமர்த்துதல் அத்தகைய முன்னெடுப்புக்களில் ஒன்றாகும்.
காவல்துறையினரின் விசாரணையின் போது, ரிஸானாவின் வாக்குமூலத்தை மொழிபெயர்த்த இந்திய மொழிபெயர்ப்பாளரின் தவறு, நடந்த விபத்தை ஒரு கொலையாக உருவகித்துவிட்டதும், அதன் விளைவாக அவர் பணிநீக்கம் செய்யப்பட்டதும் நாம் அறிந்ததே. “இது தன்னால் செய்ய முடியாத பணி” என்று நேர்மையாக ஒப்புக்கொள்வதை விட்டு, “பூசி மழுப்பி ஒப்பேற்ற” முனையும் அயோக்கியத்தனத்தின் விலை ஓர் அப்பாவிப் பெண்ணின் உயிர் என்பதை இதுபோன்ற மொழிபெயர்ப்பாளர்கள் இனியாவது உணரக்கூடுமா?
அடுத்து, இதுபோன்ற நெருக்கடியான நிலைமைகளில் ஓர் அரசாங்கம் தன்னுடைய நாட்டுப் பிரஜையைக் காப்பாற்றும் முனைப்பில் உச்சபட்ச முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும். ரிஸானாவின் விடயத்தில், ஐ.நா. போன்ற அமைப்புக்கள் தனது கரிசனையை வெளிப்படுத்தி இருந்த போதிலும், இலங்கை அரசு அதை வலுவாகப் பற்றிக்கொண்டு தீவிரமாகக் களத்தில் இறங்க முனையவில்லை. குறைந்த பட்சம் இறந்த குழந்தையின் பெற்றோரை நேரில் சந்தித்து அவர்களைச் சமாதானப்படுத்தி மன்னிப்பைப் பெறும் பொறுப்பை அங்குள்ளவர்களிடம் வேண்டுகோளாக முன்வைக்கப்பட்டதே தவிர, நேரடியாக இலங்கை அரசு சார்பில் யாரும் அப்பெற்றோரைச் சந்தித்திருக்கவில்லை.
இறுதியாக, சவூதி அரசாங்கம் ஷரீஆ சட்டத்தை நடைமுறைப்படுத்துவது இறையாண்மை உடைய ஒரு நாடு என்ற வகையில் அதன் உரிமையாகும். என்றாலும், அதனை நடைமுறைப்படுத்தும் போது எந்த அநீதியும் இழைக்கப்படவில்லை என்பதை 100% உறுதிப்படுத்த வேண்டியது அதன் கடமையாகும். கொலைக்கு மரண தண்டனை வழங்கப்படுவது அங்குள்ள தண்டனை முறை. எனினும், நடந்தது கொலைதானா என்பதை சந்தேகத்துக்கிடமின்றி உறுதிப்படுத்திய பின்பே அது தண்டனையை அமுல்நடாத்தி இருக்க வேண்டும்.
உதாரணமாக, நடந்தது கொலைதானா என்பதை உறுதிப்படுத்தும் வகையில் இறந்த குழந்தையை பிரேத பரிசோதனைக்கு உட்படுத்துமாறு அது உத்தரவிட்டிருக்க வேண்டும். (இதனை இலங்கை அரசும் அழுத்தம் திருத்தமாக வலியுறுத்தி இருக்க வேண்டும். அதைக் கோட்டைவிட்டு விட்டு, எல்லாம் நடந்து முடிந்தபின் தனது தூதுவரைத் திரும்ப அழைத்துக்கொள்வது தலையை விட்டுவிட்டு வாலைப் பிடிக்கும் செயலாகும்).
இறந்த குழந்தையின் தாய் மன்னிக்காத படியால் தண்டனையை நிறைவேற்றுவதைத் தவிர வேறு வழியில்லை என்று சப்பைக்கட்டுக் கட்டும் சவூதி அரசு, எந்தக் கட்டத்தில் அதுசெல்லுபடியாகும் என்பதை கவனிக்கத்தவறிவிட்டது. அதாவது, நடந்தது கொலையாக இருக்கும் பட்சத்திலேயே, உரியவர்களின் மன்னிப்பு பற்றிய பேச்சுக்கே இடமிருக்கும். மாறாக, கொலை என்றே உறுதி செய்யப்படாத நிலையில் விதிக்கப்பட்ட மரணதண்டனை முற்றிலும் அநீதியானது என்பதோடு, சவூதி அரசு நடைமுறைப்படுத்துவதாகச் சொல்லும் ஷரீஆ சட்டத்தின் அடிப்படை விழுமியமான “நீதி நிலைநிறுத்தப்படுதல்” என்பதற்கு முற்றிலும் மாறானதும்கூட!
பெற்ற பிள்ளைக்கு முலைப்பால் ஊட்டும்போது மூச்சுத்திணறி குழந்தை இறந்த சம்பவங்கள் நிகழவே செய்கின்றன. அப்படி ஒரு சந்தர்ப்பத்தில் “தாய் குழந்தையை கொலை செய்துவிட்டாள்” என்று மரணதண்டனை விதிப்பது எவ்வளவு அநீதியானதோ, அதுபோலவே ரிஸானாவுக்கு வழங்கப்பட்ட தீர்ப்பும் அநீதியானதே. ஷரீஆ சட்டம் உட்பட உலகில் நடைமுறையில் உள்ள எந்த ஒரு சட்டமும் நீதியையும் தர்மத்தையும் நிலைநிறுத்தும் பொருட்டே வகுக்கப்பட்டுள்ளன. அவை, அநீதிக்குத் துணைபோகின்ற நிகழ்வுகள் வேதனை அளிப்பதே.
ரிஸானாவுக்கு ஏற்பட்ட நிலைமை இனி எவருக்கும் ஏற்படாதிருக்க வேண்டுமெனில், நாடுகள் குறிப்பாக மூன்றாம் உலக நாடுகள் ஏனைய நாடுகள் எது சொன்னாலும் கைக்கட்டி வாய்பொத்தி நிற்கும் அடிமை மனப்பான்மையைக் கைவிட்டு, தமது நாட்டுப் பிரஜைகளின் நலன்களையும் பாதுகாப்பையும் உறுதிப்படுத்தும் கடுமையான சட்டதிட்டங்களைத் தமது வெளியுறவுக் கொள்கைகளில் இணைத்துக்கொள்ளவும், அவற்றைத் துணிவாகக் கைக்கொள்ளவும் முன்வர வேண்டும்.