-மருத்துவர் ஜானகிராமன் – மருத்துவர் கபிலன்
பாதிக்கப்படும் பெண் பெரும்பாலும் கொல்லப்படுகின்றனர் அல்லது இறந்து விடுகின்றனர். மேலும் குழந்தைகள் பாதிக்கப்படும்பொழுது அவர்கள் குற்றநிகழ்வு குறித்த விழிப்புணர்வு அற்ற நிலையில் இருப்பர். ஒருவேளை உயிர் பிழைத்தாலும் சமூக பிரச்சனை (Social stigma) காரணமாக தண்டனை பெற்றுத்தரும் அளவிற்கு சாட்சி கூற இயலாத சூழல் உருவாகின்றது. |
1. இந்தியாவில் எவ்வளவு பாலியல் குற்றங்கள் நிகழ்கின்றன?
தேசிய குற்றப்பதிவு துறை ஆய்வின் படி முறையாக பதிவு செய்யப்பட்ட பாலியல் வன்முறைகள் 2011 ஆம் ஆண்டு மட்டும் 24,206 ஆகும். பதிவு செய்யப்படாத உண்மையான குற்ற அளவு இதனை விட பல மடங்காக இருக்கக்கூடும். மேலும் மகாராஷ்ட்ர மாநிலத்தில் 2011 ஆம் ஆண்டு நடந்த ஒரு ஆய்வின் படி 9% பாலியல் குற்றங்கள் மட்டுமே நீதி மன்றங்களில் நிரூபிக்கப்படுவதாக தெரியவந்துள்ளது.
கர்நாடக மாநிலத்தில் 2011ல் பதிவான 636 பாலியல் வன்முறைகளில் வெறும் 4 வழக்குகளில் மட்டும் நீதிமன்றத்தில் குற்றம் நிரூபிக்கப்பட்டு தண்டனை பெற்றுத் தரப்பட்டுள்ளது. மீதம் 632 வழக்குகளில் குற்றவாளிகள் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.
2. ஏன் இவ்வளவு குற்றங்கள்?
தனிமனித ஒழுக்கம், சமூக சூழல் ஆகியவற்றைத் தவிர்த்து பார்க்கும்பொழுது அதிகரிக்கும் குற்ற நிகழ்வுகளுக்குக் காரணம், பெரும்பான்மையான பாலியல் குற்றங்கள் நீதிமன்றத்தில் நிரூபிக்கப்படாமல் போய்விடுவதேயாகும். எடுத்துக்கட்டாக 20% பாலியல் குற்றங்கள் நிரூபிக்கப்படுவதாக கருதுவோமாயின், நீதிமன்றங்களில் குற்றம் நிரூபிக்கப்படாததானால் 80% குற்றவாளிகள் விடுதலை செயயப்படுகின்றனர். இவர்கள் மீண்டும் அடுத்த குற்றங்களை செய்யும் தொடர் குற்றவாளியாக(Habitual offender) மாறிவிடுகின்றனர்.
3. தொடர் குற்றவாளிகள் என்றல் என்ன?
மேற்கண்ட சுழற்சி ஒரு மோசமான சுழற்சியாகும் (vicious cycle). இந்த மோசமான சுழற்சியினால் தொடர் குற்றவாளிகள் (Habitual offender) உருவாகின்றனர்.
4. ஏன் குற்றம் நிரூபிக்கப்படுவதில்லை?
ஏனெனில் பாதிக்கப்படும் பெண் பெரும்பாலும் கொல்லப்படுகின்றனர் அல்லது இறந்து விடுகின்றனர். மேலும் குழந்தைகள் பாதிக்கப்படும்பொழுது அவர்கள் குற்றநிகழ்வு குறித்த விழிப்புணர்வு அற்ற நிலையில் இருப்பர். ஒருவேளை உயிர் பிழைத்தாலும் சமூக பிரச்சனை (Social stigma) காரணமாக தண்டனை பெற்றுத்தரும் அளவிற்கு சாட்சி கூற இயலாத சூழல் உருவாகின்றது.
Students hold candles as they pray during a candlelight vigil for a gang rape victim, who was assaulted in New Delhi, in Ahmedabad December 31, 2012. The number “12” painted on the face of the girl on left refers to the year 2012. REUTERS/Amit Dave
5. பாலியல் வன்முறை குறித்த சட்டப் பிரிவுகளை (375,376) மரண தண்டனை வழங்குமாறு திருத்துவதன் மூலம் குற்றங்களை குறைக்க இயலுமா?
முடியாது. ஏன் எனில் சட்டங்களை எவ்வளவு கடுமையாக்கினாலும் குற்றம் நீதிமன்றங்களில் நிரூபிக்கப்படாமல் போகும்பொழுது ஒரு தண்டனையும் கிடைக்காது. எனவே பாலியல் குற்றங்களை நீதிமன்றங்களில் நிரூபிப்பதற்கான அறிவியல் பூர்வ வழிமுறைகளை உருவாக்குவதே சரியான தீர்வாக இருக்கும்.
6. பாலியல் குற்றங்களை நீதிமன்றங்களில் நிரூபிப்பதில் என்ன சிக்கல்?
பாலியல் குற்றங்கள் CrPC 53இன் கீழ் உதவி ஆய்வாளர் (Sub Inspector) அல்லது அதற்கு மேல் உள்ள அதிகாரிகளால் விசாரணை செய்யப்படுகின்றன. இவ்வாறு காவல் துறையால் செய்யப்படும் விசாரணை அறிவியல் பூர்வமானதல்ல. காவல் துறையின் விசாரணை அதிகாரிகள், சட்ட மருத்துவம் (Forensic Medicine) குறித்த விழிப்புணர்வு அற்றவர்களாக உள்ளனர். காவல் துறை, அரசின் மற்றும் ஒரு படை பிரிவே(Force) அன்றி அறிவியல் சார்ந்த துறை(Scientific Investigators) அல்ல.
பாலியல் குற்றங்களை விசாரிக்கும் முழு பொறுப்பை காவல் துறையிடம் ஒப்படைப்பது சரியான வழி முறை அல்ல. பெரும்பாலும் காவல் துறையின் விசாரணை நேரில் கண்ட சாட்சியங்களைத் திரட்டுவது அல்லது சூழ்நிலை சாட்சியங்களைத் திரட்டுவதாகவே இருக்கும். பெரும்பாலும் பாதிக்கப்பட்ட பெண் இறந்துவிடுவதாலும் குழந்தையாக இருப்பதாலும் யாருமல்லாத இடங்களில் குற்றம் பெரும்பாலும் நிகழ்த்தப்படுவதாலும் குற்றம் நீதிமன்றங்களில் நிரூபிக்கப்படாமல் போகின்றது.
மேலும் அறிவியல் பூர்வமான சோதனைகளான பெண்ணுறுப்பின் எபிதிலியல் செல்களை ஆணுறுப்பில் கண்டுபிடிப்பது, நகங்களில் சிக்கிய தசைத் துணுக்குகளை ஆராய்வது, ஆடைகளில் உள்ள இரத்தம் மற்றும் விந்து மாதிரிகளைத் திரட்டுவது மற்றும் லோகர்ட் பரிமாற்ற விதியின்படி முடி மற்றும் மற்ற பொருட்களைத் திரட்டுவது போன்ற பல அறிவியல் பூர்வமான வழிமுறைகள் பெரும்பாலான வழக்குகளில் செய்யப்படுவதில்லை.
மேலும் இது தொடர்பான விழிப்புணர்வு மற்றும் முறையான வழிகாட்டுதல்கள் காவல் துறை அதிகாரிகளுக்கு இருப்பதில்லை. எனவே இவ்வகையான அறிவியல் பூர்வ ஆய்வுகள் (Forensic Investigations) உடனடியாக செய்யப்படாததினால் சாட்சியங்கள் திரட்ட இயலாமல் வழக்கில் குற்றவாளிகளுக்கு தண்டனை கிடைக்காமல் போய்விடுகிறது.
7. மருத்துவக் கல்லுரி / அரசு மருத்துவமனைகளில் சட்ட மருத்துவத் துறையின் பங்கு என்ன?
நீதிமன்ற ஆணையின் கீழ் குற்றவாளி அல்லது பாதிக்கப்பட்ட பெண் சட்ட மருத்துவக்குழுவால் ஆய்வுக்கு உட்படுத்தப்படுவார். மேற்ககூறிய பல அறிவியல் பூர்வமான சாட்சியங்களைத் திரட்டும் வேலையை இத்துறை செய்கிறது. ஆனால் குறைபாடு என்னவெனில் சட்ட மருத்துவத் துறையால் விசாரணையை தன்னிச்சையாக துவங்கவோ, நீதிமன்றங்களினால் ஆணையிடப்படும் பரிசோதனைகளைத் தவிர வேறு வகையான குற்ற விசாரணைகளில் (Forensic investigation) ஈடுபடவோ முடியாது.
எடுத்துக்காட்டாக பாதிக்கப்பட்ட பெண், நீதிமன்றத்தால் சட்ட மருத்துவத் துறைக்கு அனுப்பப்படும் சூழலில், சட்ட மருத்துவர் குற்றவாளியையும் ஆய்வுக்கு உட்படுத்த வேண்டும் என்று கருதினால் அதற்கான ஆணையை அவரால் பிறப்பிக்க இயலாது. இதனால் சட்ட மருத்துவத் துறை அவர்களுக்கு கொடுக்கப்படும் வேலையை மட்டும் செய்து மேற்கொண்டு தொடர இயலாமல் நின்று போகும் சூழல் உள்ளது.
8. தற்போதைய தேவை என்ன?
நீதிமன்றங்களில் பாலியல் குற்றங்களை நிரூபிக்கும் எண்ணிக்கையை அதிகப்படுத்தும் வழிமுறைகளை வகுக்காமல் குற்றங்களை குறைக்க இயலாது. எனவே பாலியல் குற்றங்களை தன்னிச்சையாக விசாரிக்கும் அதிகாரமுடைய, அறிவியல் பூர்வமான ஆதாரங்களைத் திரட்டும் அளவிற்கு பயிற்சி அளிக்கப்பட்ட ஓர் இடை நிலை அமைப்பை அரசு உருவாக்க வேண்டும்.
இக்குழுவில் இடம் பெறுவதற்கான இடைநிலை அதிகாரிகளாக அறிவியல் மற்றும் மருத்துவத் துறையில் பட்டம் பெற்ற மாணவர்களைத் தேர்ந்தெடுத்து அவர்களுக்கான புதிய முதுநிலை படிப்பினை உருவாக்கி பயிற்சி அளிப்பதன் மூலமும், மேலும் வளர்ந்த நாடுகளின் குற்ற விசாரணை முறைகளை அவர்களை அறிந்து வரச் செய்வதன் மூலமும் இக்குழுவை சிறப்பான விசாரணை குழுவாக மாற்ற இயலும். மேலும் இக்குழுவினை சட்ட மருத்துவர், சட்ட வல்லுநர் மற்றும் பயிற்சி அளிக்கப்பட்ட விசாரணை அதிகாரி கொண்ட குழுவாக அமைக்க வேண்டும்.
இக்குழு ஏதேனும் ஒரு பாலியல் குற்றம் நடைபெறுமாயின் தன்னிச்சையாக விசாரணையைத் தொடங்கி, அறிவியல் பூர்வமான சாட்சியங்களைத் திரட்டுவதன் மூலம் நீதிமன்றங்களில் குற்றம் நிரூபிக்கப்படும் எண்ணிக்கையை கூட்டலாம்.
– மருத்துவர் ஜானகிராமன்(கைப்பேசி: 9600296098; மின்னஞ்சல்:medico.raman@gmail.com)
– மருத்துவர் கபிலன் (கைப்பேசி: 9843508772; மின்னஞ்சல்: kabspaceway@yahoo.co.in)