வேட்டிக் கலாச்சாரத்தை காப்பாற்ற முனையும் ஆணதிகாரம்

 ஊடறு ஆர் குழு

அண்மையில ஆனந்தவிகடனில் அருளினியனால் எழுதப்பட்ட கட்டுரை அல்லது நேர்காணல் ஒன்றை ஊடறுவும் மறுபிரசுரம் செய்திருந்தது.  நேற்று நான் விடுதலைப் போராளி! இன்று பாலியல் தொழிலாளி இக்கட்டுரைக்கு எதிராக  வந்த பல விமர்சனங்களை எமது வாசகர்கள், தோழிகள்  எமக்கு அனுப்பியிருந்தார்கள்.  இந்த எதிர் விமர்சனங்கள்  குறித்து ஊடறுவின் கருத்தென்ன? என்ற கேள்வியும் எம்மிடம் எழுப்பபட்டது. அவர்களால் எழுப்பட்ட கேள்வி நியாயமானதே  ஆனாலும் இப்படி பல கட்டுரைகளை நாம் ஊடறுவில் பிரசுரித்துள்ளோம் அதன் சுட்டிகளில் சிலவற்றை கீழே தருகின்றோம்.

ஆனந்த விடகனில் வெளிவந்த  ஆக்கம் புனையப்பட்டதாக கூட இருக்கலாம்.  ஆனாலும் பல  பெண் போராளிகளின் வாழ்வில் இது  தானே நிஜம். பெண் போராளிகளுக்கு தங்களையும் தமது குழந்தைகளையும் காப்பாற்றிக் கொள்ள அவர்களுக்கு கொடுக்கப்பட்டுள்ள உத்தரவாதம் தான் என்ன?. ஒரு பெண்போராளி தனது வாழ்வாதாரத்திற்காக பாலியல் தொழில் செய்வது தமிழ்க் கலாச்சாரத்தைக் கட்டிக்காப்பவர்களுக்கும் புலித் தேசியவாதிகளுக்கும் தமிழ்க் (வேட்டிக்) கலாச்சாரத்தின் புனிதம்  உடைந்துவிட்டதே என  அவமானமாக உள்ளதா?. இதை விமர்சித்து எதிர்வினை  எழுதி தங்களுடைய வேட்டிக் கலாச்சாரத்தை காப்பாற்ற முனைகிறார்கள்.

சமுகத்தாலும் சொந்தங்களாலும் கைவிடப்பட்ட  முன்னாள்  பெண் போராளிகளின் இன்றைய நிலை மிகவும் அவலமானது இவர்கள் அநாதரவாக விடப்பட்டு சமுகத்தாலும் ஒதுக்கப்பட்ட பின்  இவர்களுக்கு ஆதரவு அற்ற நிலையில் தமது வாழ்வாதாரத்தை ,வேறு எந்த வழியும் இன்றி இயலாமையால் .பாலியல் தொழில் செய்கிறார்கள் என்பது உண்மையாக இருந்தால…; தமிழர்களுக்கு அவமானம் அவமானம்  என ஓலமிடுவதில் பயனேதும் இல்லை. அப்பெண்களுக்கு இந்நிலையை ஏற்படுத்திய ஒவ்வொரு தமிழருமாகிய நாம் அனைவருமே காரணமானவர்கள் என்பதை பொறுப்பேற்றே ஆக வேண்டும்.   வெட்கித் தலைகுனிய வேண்டியவர்கள் இத்தொழிலில் ஈடுபடும் பெண்போராளிகள் அல்ல அவர்களை இந்நிலைக்குத் தள்ளிய தமிழ்ச்சமூகம் தான்.

ஒரு சமூகமே பெண் போராளிகளை ஒதுக்கி வைத்தால் அது  பெண் போராளிகளின் தவறல்ல அந்த சமூகத்தின் தவறாகும். எல்லா யுத்தங்களைப் போலவே இலங்கையிலும் யுத்தத்தின் செயல்பாடும் வெற்றியும் தோல்வியும் பெண்களையும் சார்ந்திருந்தது.  ஆணதிகாரம் வகுத்த மரபுகளையும் கலாச்சார எல்லைகளையும் தாண்டி வந்து இன்று இந்த யுத்தத்தில் போராடிய பெண்களின் சுதந்திரத்தையும் சுய உரிமைகளையும்; சுயசிந்தனைகளையும் புலிகள் என்ற பெயர்ப்பலகையின் கீழ் குறுக்கிவிட்டிருக்கிறது ஆணதிகார அரசியல். தமிழ் சமூகம் அன்றும் இன்றும் கலச்சாரம், சாதி, யாழ் மேலாதிக்கம் போன்ற வற்றை கட்டிக்காத்து வரும் சமூகமாகவே உள்ளது. இக் காரணங்களே இன்று போராட்டத்தில் ஈடுபட்ட பெண்கள்  தங்கள் வாழ்க்கையை கையில் எடுக்க முடியாமல் போய்விட்டது
அண்மைக்காலங்களில் யுத்தத்தின் பின்னர் வன்னிப் பகுதியில் பாலியல்த் தொழிலாளர்கள் அதிகரித்துள்ளமை பலரும் சுட்டிக்காட்டிய ஒன்றுதான்

இலங்கை இராணுவத்தால் கைதிகளாகப் பிடிக்கபட்ட பெண் போராளிகளின் நிலமை நினைத்துப் பார்க்க முடியாதளவு கொடுமையானது என்பதை நாம் மறுக்க முடியாது. உயிர்விடும் தறுவாயில் பிடிக்கப்பட்ட பெண் போராளிகளை நிர்வாணப்படுத்தி பாலுறுப்புகளில் போத்தல்களாலும், கம்பிகளாலும் சித்திரைவதைப்படுத்திக் கொல்லப்பட்ட காட்சிகள் எல்லாவற்றையும் மறுக்க முடியாது. ..

சுமார் ஆறு அல்லது ஏழு சிறிலங்காப் படையினரால் தான் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்ட சம்பவம் குறித்து இக் காணொளியில் குறிப்பிட்டுள்ள பெண், அக்கணத்தில் தான் எப்படி உணர்ந்தேன் என்பதை என்னால் எப்படி  விபரிக்க முடியும் என கேள்வி எழுப்புகின்றார். அத்துடன், இவ்வாறு கடவுள் ஏன் தங்களைத் தண்டிக்கிறார் என இப் பெண்மனி தனது சாட்சியத்தில் கவலை தெரிவிக்கின்றார்.

இலங்கை யுத்தத்தின் இறுதியில் தமிழ்ப்பெண்கள் பாலியல் வன்முறைக் கொடுமைக்காளானார்கள், கொல்லப்பட்டார்கள், தற்கொலை செய்து கொண்டார்கள் என்பதெல்லாம் உண்மையே. ஆனால் சரணடைந்த பின்னரும் யுத்தகளத்திற்கு வெளியில் கொண்டவரப்பட்ட பின்னரும் கூட இப்படியான கூட்டான வன்கொடுமைகள்  நடைபெற்றிருக்க வாய்ப்புகள் இல்லையென யாராவது மறுத்தார்கள் ஆனால் அவர்கள் ஆணதிகாரத்தையும் இராணுவத்தையும் அரசதிகாரத்தையும்; காப்பாற்றுவதற்காகவே மறுக்கிறார்கள் என நாம் சுட்டிக்காட்ட விரும்புகிறோம். 

அதற்கான வாய்ப்புக்கள் அதிகமாகவே இருக்கும் என்பதை  யாராலும் மறுக்க முடியாது. சிறையில் அடைக்கப்பட்ட பல பெண் போராளிகள் பாலியல் சித்திரைவதைகளை சிறைக்குள்ளும்  அனுபவிப்பதாக பல பத்திரிகைச் செய்திகள்  சுட்டிக்காட்டியிருந்தன. இது ஒரு நல்ல உதாரணமாகும். அதே போல்  யாழ்ப்பாணத்தில் சமூகச் சீரழிவு, கருக்கலைப்புக்கள் சிறுவர் சிறுமியர்களை பாலியல் துஸ்பிரயோகம் என  வன்முறைக்கலாச்சாரம்  மேலோங்கியுள்ளது.   ஆகவே  இப் பெண் போராளிகளை இந்நிலைக்கு தள்ளிய ஒட்டு மொத்த தமிழ் சமூகமும் பொறுப்பு கூறியே ஆகவேண்டும். பல மில்லியன் ரூபாய்களை கோயில்களுக்கு செலவழித்து திரு விழாக் கொண்டாடுவதை விடுத்து நிராதராவாக நிற்கும் இப் பெண் போராளிகளுக்கு ஒரு வழியை திறவு கோலாக்க முனையுங்கள் அதுவே அவர்களுக்கு நாம் செய்யும் கடமையாகும்.

1 Comment on “வேட்டிக் கலாச்சாரத்தை காப்பாற்ற முனையும் ஆணதிகாரம்”

  1. கசப்பான நிஜத்தைத் தோலுரித்துக் காட்டிய ஊடறுவுக்கு நன்றி. உண்மையை எதிர்கொள்வதில் நம்மில் பலர் ஏன் இப்படித் தயங்குகிறார்கள்? ஏன் இந்தளவு பதட்டமடைகிறார்கள்?

    இதுதான் களநிலைவரம் என்பதைப் புரிந்துகொண்டால்தானே, அடுத்தகட்ட புனர்வாழ்வுத் திட்டங்களில் ஈடுபட வழி பிறக்கும்? யதார்த்தமான பிரச்சினைகளை மூடி மறைத்துவிட்டு, “எல்லாம் நலமே நிகழ்கிறது, ஒரு பிரச்சினை இல்லை” என்று ஏ.ஸீ. அறைகளுக்குள் இருந்தபடி அறிக்கைவிட்டு இவர்கள் ஏன், குறைந்தபட்ச உதவியேனும் கிடைக்கக்கூடிய அந்தப் பாதிக்கப்பட்ட மக்களின் பாதையை அடைக்க முனைகிறார்கள்? இது வடிகட்டிய அயோக்கியத்தனம் அல்லவா? தாம்தான் உதவவில்லை, அடுத்தவரையாவது உதவிசெய்ய விடலாம் இல்லையா? இவர்களை நினைக்கும் போது, வைக்கோல் போரும் “அந்த விலங்கும்”தான் என் நினைவில் எழுகின்றன. அடச்சே! 🙁

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *