சிங்களத்தில்: மஞ்சுள வெடிவர்தன
தமிழில்: லறீனா அப்துல் ஹக் (இலங்கை)
குறிப்பு: அங்குலிமாலன்- தன்னுடைய குருவின் துர்ப் போதனையால் ஆயிரத்துக்கும் அதிகமானோரைக் கொலைசெய்து, அவர்களின் கட்டைவிரல்களை வெட்டியெடுத்து மாலையாகக் கோத்துக் கழுத்தில் அணிந்துதிரிந்து, பின்பு புத்தரின் போதனையால் திருந்தி துறவியாய் மாறி அஹிம்சைவழி சென்றவன்.
வெசாக் முழுநிலவு
தலையில் கைவைத்துப்
புலம்பி அழுகிறது
சாளரம் வழியே அதன்
மூக்குச்சளி வழிகிறது
அயல் வீடொன்றில்
புத்தரின்
பிறப்பை, துறவை
பரிநிர்வாணத்தை
நினைந்து பூசித்த
ஏழு தாமரைகளும்
இன்னுமே வாடவில்லை
தொலைவிலோர் ‘தொரண்’
பந்தலின் அருகே
போதி மாதவனின்
550 பிறவிக்கதைகளின்
சாராம்சத்தை நவீனப்படுத்தி
‘புதுக்கதை’ புனைந்து
இயற்றிய ‘விரிது’க்
கவிகளின் இன்னிசை
இடைக்கிடை கேட்கிறது
என் முன்னே
கவிதைத் தவமிருக்கும் – ஒரு
வெற்று வெள்ளைத் தாள்
அந்தக் கணத்தினில்
எங்கிருந்தோ ஒரு தசைத் துண்டு
பறந்து வந்து – அந்தத்
தாளில் அழுந்தியோர்
யோனியாய் உருமாறிற்று
நிச்சயம் அது
கோணேஸ்வரியுடையதாய்
இருத்தல் வேண்டும்.
அம்பாறையில் இருந்து
கொழும்புக்குப் பறந்துவர
இத்தனைக் காலமாயிற்றோ?
அவ்வளவுதூரம் நாம்
தொலைவினில் உள்ளோம்!
என்னிரு விழியிலும்
கண்ணீரின் குளம்.
விழிநீர் மத்தியில் நான்
அங்குலிமாலன் அல்ல,
லிங்கமாலன் ஆனேன்
விரல்கள் வேண்டாம் எனக்கு
ஆண்குறிகளே தேவை
பக்தி சிரத்தையாய் – அத்
தசைத் துண்டத்தை
இடக்கரம் எடுத்து
கூரிய வாளினை
வலக்கரம் ஏந்திப்
புறப்பட்டுப் போனேன்
வழியெங்கும் எதிர்ப்பட்ட
வீடுகளைத் தட்டினேன்
சிங்கள ஆண்குறிகள்
அனைத்தையும் வெட்டியோர்
நூலினில் கோத்தேன்,
இறுதியில் என்னதும்…
ஆ!!
வேதனை சகித்து
ஸ்ரீபாத மலைக் கழுத்தில்
குறிமாலை சாத்தினேன்
எனைத் தடுத்தாட்கொள்ள – ஒரு
புத்தரிங்கு இல்லாததால்
நிச்சயம் இதனைச்
செய்திடல் சாத்தியம்
சகோதரத்துவமற்ற
உணர்ச்சிகள் ஏதுமற்ற
ஓரினம்தான் எதற்கு?
என்னெதிரில்
ஒரு வெற்றுத்தாள்
அதில் இரத்தக் கறை
அது ஒரு கவிதை
தமிழ்க் கவிதை.
அதனால்தான் – அது
சிங்களவருக்குப் புரியவேயில்லை.’