நான் இனி சந்தோசமாக மரணத்தை தழுவிக் கொள்வேன், றஞ்சிம்மா..!
20 ம் திகதி யூலை மாதம் சென்னை விமான நிலையத்தில் சிவாவை பார்ப்பதற்காக கோயம்பூத்தூர் விhமனத்திற்காக நானும் ரவியும் எமது பிள்ளைகள் ஆரதி,நிறமி,மற்றும் நண்பர் கண்ணதாசன் ஆகியோருடன் காத்திருந்த போது எனது மாமா இறந்துவிட்டதாக தொலைபேசி செய்தி வந்தது. அது எனக்கு மன வேதனையை தந்தது. அந்தக் கவலையுடன் கோயம்பூத்தூர் விமானநிலையத்தை அடைந்த போது ராஜாராம், மற்றும் சௌந்தர் ஆகியோர் எம்மை சிவாவிடம் (ராமகிருஸ்ணா ஆஸ்பத்திரிக்கு) அழைத்து வந்தனர்.
2001 யூலை எடுத்த படம்
எனது பிள்ளைகள் சிவாதாத்தா என்றவுடன் றஞ்சிம்மாவா, ஆரதியா, நிறமியா என்றவரின் கண்களிலிருந்து கண்ணீர் வழிந்தது. நாம் எல்லோரும் அவரைத் தழுவி கண்ணீர் விட்டு அழுதோம். என்னாலும் என் பிள்ளைகளாலும் அழுகையை கட்டுப்படுத்த முடியவில்லை. றஞ்சிம்மா நான் ரொம்ப சந்தோசமாக இருக்கேன்… உங்களை பார்த்த சந்தோசம்;… நான் இனி சந்தோசமாக மரணத்தை தழுவிக் கொள்வேன் என்று உணர்ச்சிவசப்பட்டார். சிவா சொன்ன அந்த வார்த்தைகள் இன்னமும் என் கண்களை பனிக்கச் செய்கின்றன. அதை விடவும் அவர் தனது உடலினை மருத்துவ ஆய்வுக்காக உடல் தானம் செய்து விட்டார் என்ற செய்தி என் பிள்ளைகளுக்கு ஆச்சரியமாக இருந்தது.
2001 யூலை எடுத்த படம்
நாங்கள் நின்ற அந்த ஐந்து நாட்களும் சிவாவை பார்ப்பதற்காக அடிக்கடி ராமகிருஸ்ணா ஆஸ்பத்திக்கு சென்றோம்.
கல்யாணி அக்கா பற்றி ஒரு சரித்திரமே எழுதலாம.; அந்தளவுக்கு அவர் சிவாவுக்கு ஒரு நல்ல தோழியாக இருந்தார். சிவா சுகயீனமுற்று இருந்த இந்த ஒரு வருடத்தில் மிகவும் உறுதுணையாகவும் அவரை ஒரு பிள்ளை போலவும் பராமரித்து வந்தார். அவரின் உழைப்பை நாம் நேரில் பார்த்த போது அதிர்ந்து விட்டோம். இப்படி யாருமே ஏன் பிள்ளைகள் மனைவி என யாருமே செய்யமுடியாத அந்த சேவையை அவர் செய்துள்ளார். சிவா பற்றி நாம் எழுதும் போது கல்யாணி அக்காவை தவிர்த்து எழுத முடியாது. அவரின் பாத்திரம் சிவாவின் வாழ்வில் மிக முக்கியமானது.
2001 யூலை எடுத்த படம்
கடந்த 20 வருடங்களுக்கு மேலாக எம்முடன் இணைந்து பல புத்தக வேலைகளை செய்துள்ள சிவா என்னை எப்போதும் றஞ்சிம்மா என்றே அழைப்பார் ஊடறுவின் வெளியீடுகள், மற்றும் பெண்கள் சந்திப்பு மலர்கள் என நான் கேட்டபோதெல்லாம் பல அச்சு உதவிகளை சளைக்காமல் செய்து தந்தவர். பிழைகள் இருந்தால் ஒரு தந்தையை போல் எடுத்துரைப்பார். அவைகளை நாம் விநியோகிக்க வேண்டிய முகவரிகளை மட்டும் கொடுத்தால் போதும். எல்லா வேலைகளையும் எந்தக் காலதாமதமுமின்றி செய்து முடித்துவிடும் பொறுப்புணர்வும் ஈடுபாடும் கொண்டவர் அவர்.
நாம் கடைசியாக விடியலுடன் இணைந்து வெளியிட்ட பெயரிடாத நட்சத்திரங்கள் என்ற பெண்போராளிகளின் கவிதைத் தொகுப்பை (எல்லா பிரதிகளும் தீர்ந்து விட்ட நிலையில்) மறு பதிப்பு செய்வோமா என்று ஏற்கனவே என்னிடம் கேட்டிருந்தார். அவரின் மரணம் ஈடு இணையற்றது. வியாபாரத்தை மையமாக வைத்து நூல்களை வெளியிடும் இன்றைய நிலைமையில் சமூக நோக்கத்தை மையமாக வைத்து நூல் வெளியீடுகளை கொண்டு வந்த ஒரு தந்தையின் மரணம், நிரப்பப்பட முடியாத இழப்பாகும்.
ஊடறு இணையத்தை நாம் தொடங்கிய காலத்திலிருந்து இன்று வரை பல உதவிகளை செய்து தந்த சிவாவுக்கு எமது ஊடறு சார்பில் ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக் கொள்கின்றோம்.
றஞ்சி 01.8.2012