விடியல் சிவா மரணம் – ஒரு நினைவுக் குறிப்பு. ரவி
http://www.facebook.com/ravindran.pa
சென்ற திங்கட்கிழமை இந் நேரம் நாம் கோவை சிறீ ராமகிருஷ்ண மருத்துவமனையில் தோழர் சிவாவை பார்த்துக்கொண்டிருந்தோம். மறுநாள் மீண்டும் கொழும்பு செல்வதற்கான கடைசி விடைபெறலுக்காக நாம் அவரை தழுவியபோது கண்ணீர் விட்டு அழுதார். நாம் கணங்களை கண்ணீரால் கரைத்துக்கொண்டிருந்தோம். ஒருசில வார்த்தைகளை எம்முடன் பரிமாறுதற்காய்; அவர் தனது உடல்நிலையுடன் போராடிக்கொண்டிருந்தார். நானும் றஞ்சியும் பிள்ளைகளும் அவரை மாறிமாறி தழுவினோம். கண்ணீரை கட்டுப்படுத்த முடியவில்லை.
சென்ற திங்கட்கிழமை இந் நேரம் நாம் கோவை சிறீ ராமகிருஷ்ண மருத்துவமனையில் தோழர் சிவாவை பார்த்துக்கொண்டிருந்தோம். மறுநாள் மீண்டும் கொழும்பு செல்வதற்கான கடைசி விடைபெறலுக்காக நாம் அவரை தழுவியபோது கண்ணீர் விட்டு அழுதார். நாம் கணங்களை கண்ணீரால் கரைத்துக்கொண்டிருந்தோம். ஒருசில வார்த்தைகளை எம்முடன் பரிமாறுதற்காய்; அவர் தனது உடல்நிலையுடன் போராடிக்கொண்டிருந்தார். நானும் றஞ்சியும் பிள்ளைகளும் அவரை மாறிமாறி தழுவினோம். கண்ணீரை கட்டுப்படுத்த முடியவில்லை.
இந்த வருடத்தின் மார்ச் மாதத்தில் சுமார் பத்து நாட்கள் கோவையிலுள்ள அவரது வீட்டில் முடிந்தளவு அதிக நேரம் செலவிட்டிருந்தேன். விட்டுவிட்டு சில நிமிடங்கள் எப்போதும் அவரால் பேச முடிந்திருந்தது அப்போது. சற்று எழுந்து நடக்கவும் சில நிமிடங்கள் பேசவுமாக முடிந்திருந்த அந்தக் கணங்கள் வலிதருகின்றன. பிள்ளைகளை சதா விசாரித்தபடி இருக்கும் அவர் அவர்களைப் பார்க்க ஆசைப்படுகிறேன் ரவி எனக் கேட்டார். நிச்சயமாக யூலைமாதம் மீண்டும் வருவேன்… அவர்களும் உங்களைப் பார்க்க வருவார்கள் என்றேன். அதன்படி இந்த யூலையில் 5 நாட்கள் அவருடன் தங்கியிருந்தோம். ஆனால் அவரை இம்முறை மருத்துவமனையிலேயே பேச முடியாத நிலையிலேயே பார்த்தோம். சென்றமுறை அவரிடம் இருந்த நம்பிக்கைகள் அவரைவிட்டுப் போயிருந்தது. என்னிடமும்கூட.
தான் இன்னமும் 5 அல்லது ஆறு வருடங்கள் உயிர்வாழ்வேன். அதற்குள் இன்னும் சில நல்ல நூல்களை கொண்டுவந்துவிடுவேன் என்றார். தனது சுவாசப்பையைத் தாக்கிய புற்றுநோயை ஒரு அசாதாரண துணிச்சலுடன் அவர் எதிர்கொள்ள எப்படி முடிந்தது என நான் வியந்ததுண்டு. அந்த மனோபலம் எல்லாம் இப்போ அவரிடம் ஒட்டமுடியாதவாறு சிதறிப்போய்க் கிடந்தது. காரணம் புற்றுநோய் அவரது குடற் பகுதியையும் தாக்கி அவரை புழுவாய்த் துடிக்க விட்டுக்கொண்டிருந்தது.
அந்த நோயின் அறிகுறிகள் ஏற்பட்டு ஒரு வருடம். ஈழத் தமிழ் மக்களுக்கான ஒரு மாபெரும் பேரணியை அப்போது அவர் ஒழுங்குபடுத்திக் கொண்டிருந்த காலம். மிக மோசமான இருமல் தொடர்ச்சியாக இருந்தபோதும் இப் பேரணியை நடத்தி முடிக்கும்வரை அவர் மருத்துவப் பரிசோதனையைத் தள்ளிப் போட்டிருந்தார். அதன்பின்னரான மருத்துவப் பரிசோதனை, மருத்துவ உறுதிப்படுத்தலுக்கான இழுபாடுகள் என இறுதியில் அவரது உடலை தாக்கியிருப்பது புற்றுநோய்தான் என உறுதிப்படுத்தப்பட்டபோது அது நிலை நான்கை (ஸ்ரேஜ்-4) எட்டிவிட்டிருந்தது.
எப்போதும் கனவுகளுடன் இயங்கும் மனிதர் அவர். அதற்காய் ஓய்வின்றி உழைப்பவர். எப்போதும் இயங்கியபடி இருப்பவர். பதிப்புலகத்தில் தனிமனிதனாய் விடியலை உயர்த்துவதில் அவரின் உழைப்பு அதிசயிக்கத்தக்கது. அவரின் பதிப்புலகக் கனவு ஒன்று நிறைவேறியதை அவர் கொண்டாட முடியாமல் போய்விட்டது. மாவோவின் தேர்ந்தெடுக்கப்பட்ட படைப்புகளை ஒன்பது பெருந்தொகுதிகளாக கொண்டுவந்ததுதான் அது. அலைகள் பதிப்பகத்துடன் இணைந்து இந்தத் தொகுதி முடிக்கப்பட்டிருக்கிறது.
இதன் வெளியீடு ஆகஸ்ட் மாதம் ஒழுங்குசெய்யப்பட்டிருந்தது. ஆகஸ்ட் 15. இப்போ அரது நினைவு அஞ்சலிக் கூட்டத்துடன் அத் தினம் இத் தொகுதியின் வெளியீட்டு நாளாகவும் மாற்றப்பட்டிருக்கிறது. அவரது நண்பர்கள் அவருடன் எல்லாவகையிலும் ஒத்தாசையாய் இறுதிநேரத்தில் செயற்பட்டது அவரது நேர்மைக்கும் விடாமுயற்சிக்கும் சக மனிதர்களை அரவணைக்கும் போக்குக்கும் நல்ல சாட்சிகளாய் எனக்குத் தோன்றின. சிவாவைத் தாக்கியது புற்றுநோய்தான் என உறுதிப்படுத்தப்பட்ட பின்னர் இந்த ஒரு வருட காலப்பகுதியில் ஒருமுறை தன்னும் அவரை போய்ப் பார்க்காத (அ.மார்க்ஸ் போன்ற) அறியப்பட்ட மனித உரிமைச் செயற்பாட்டாளர்களும் தமிழகத்தில் இருக்கிறார்கள் என்பதுதான் வேடிக்கை. இதுபற்றி தோழர் சிவாவிடம் நான் கேட்டபோது அவர் புன்சிரிப்பையே பதிலாய்த் தந்தார்.
இதேபோலவே ஜெயமோகன் எஸ்விஆர் க்கு மேல் சுமத்திய குற்றச்சாட்டை -தோழர் சிவாவுக்குத் தெரியாமலே- அவரது பெயரில் பதில் எழுதினார் எஸ்விஆர். இரண்டாவது முறையும் எஸ்விஆர் எழுதிய பதில் கடிதத்தில் சிவாவின் மரணப்படுக்கையை சென்ரிமென்ற் பாணியில் பாவித்திருந்தார். இந்த முறைகேடு சிவாவின் கவனத்துக்குக் கொண்டுவரப்பட்டபோது சிவா வருத்தமடைந்தார். தன்மீதான இரக்கத்தை அவர் கோரியவரல்ல. தான் இவ்வாறு கடுமையான சுகவீனமுற்றிருந்த விடயத்தை அவர் தொடர்பூடகங்களில் வெளிக்கொண்டு வருவதை ஒருபோதும் விரும்பியவரல்ல. தலித் போராளியாக இருந்து இன்று அசல் அரசியல்வாதியாய் புரளும் ரவிக்குமார், சிவாவை தொலைபேசியில் அப்போலோ மருத்துவமனையில் வைத்து வைத்தியம் பார்க்க அழைத்தபோது, அவர் „உன்னுடைய பணத்தில் வைத்தியம் பார்ப்பதைவிட நான் செத்துப்போகத் தயாராக இருக்கிறேன்“ என்றார்.
தனது எஞ்சிய சிறு சொத்துகளை ஏற்கனவே மக்கள் சொத்தாக எழுதிக்கொடுத்திருக்கிறார். தனது உடலை மருத்துவக் கல்லூரிக்குத் தானமாய்க் கொடுத்திருக்கிறார். எந்தவித விளம்பரமுமன்றி பொதுத்தளத்தில் எப்போதும் இயங்கியபடி இருந்த அவரின் நடைமுறைப் போராட்ட வாழ்வு மசிர்புடுங்கும் விவாதங்களுக்குள் அலைக்கழியாதது. தனது சக்திகளை அவர் ஒருபோதும் இவ்வாறு வீணாக்கியது கிடையாது. ஒரு உண்மை மனிதனின் கதை அவரது. சொந்த வாழ்க்கையில் திருமணம் முடித்தால் தான் இந்தளவு வேலைகளை செய்து முடித்திருக்க முடியாது என்று ஒருமுறை என்னிடம் சொன்னார். ஈழத் தமிழ் மக்களின் அவலத்தில், போராட்டத்தில் எப்போதும் ஈடுபாடு கொண்டவரவாகவே இருந்தார்.
தனது அரசியல் அனுபவங்களையும் தலித் போராட்டம் சம்பந்தமான அவரது அறிதல்களையும் அவர் உள்ளடக்கி எழுதிக்கொண்டிருந்த அவரது குறிப்புகள் முக்கால்வாசியை எட்டியிருந்தது. அதை எழுதிமுடிப்பதும் அவரது இன்னொரு கனவு என கூறியிருந்தார். இந்தக் கனவு அரைகுறையில் முடிந்திருக்கிறது. அதேபோல் கோவையில் ஒரு மிகப்பெரும் பொதுநூலகத்தை பன்மொழி நூலகமாக நிறுவும் கனவும் அவரிடம் இருந்தது. அதற்கு உறுதுணையாக புதுச்சேரி பிரெஞ்சு இன்ஸ்ரிரியூற்றின் விரிவுரையாளர் இருக்கிறார். இந்தக் கட்டடத்துக்கான நிலமும் வாங்கப்பட்டுவிட்டது. தனது நண்பர்களுடனான கூட்டுவேலையாக அதை வரித்துக்கொண்டார். அதன் கட்டட வேலைகள் ஆரம்பிப்பது பற்றிய பேச்சில் அவர்கள் ஈடுபட்டது என்னளவில் பிரமிப்பாகவே இருந்தது. தனது மரணத்தை எதிர்பார்த்த அவர் விடியல் பதிப்பகத்தை ஒரு ரஸ்ற் ஆகப் பதிவுசெய்துள்ளார். அவரது நண்பர்கள் அவரது பணியை எடுத்துச் செல்ல உறுதிபூண்டுள்னர்.
1996 இல் முதன்முதலில் நான் அவரை புதுச்சேரியில் சந்தித்து அறிமுகமாகியதிலிருந்து தொடர்ச்சியாக உறவில் இருந்தேன். நூல் வெளியீட்டில் எமக்கு எப்போதும் உறுதுணையாக மட்டுமல்ல ஒரு ஊக்கியாகவும் இருந்தார். இலாபநோக்கை குறியாகக் கொண்டு செயற்பட்டவரல்ல அவர். அவசியமான பல மொழிபெயர்ப்பு நூல்களை விடியல் தமிழுக்குக் கொண்டுவந்துள்ளதன் மூலம் பேசப்படும் முக்கிய பதிப்பகமாக தன்னை நிலைநிறுத்தியுள்ளது. தொடர்ந்து ஒழுங்கமைக்கப்பட்ட செயன்முறையில் இந்நூல்கள் காலம் தாழ்த்தாமல் செய்துமுடிக்கப்படுவதில் அவரது செயற்திறனை அருகில் இருந்து பார்த்திருக்கிறேன். மொழிபெயர்ப்புக்கான ஆட்கள் தெரிவு, அவர்களது மொழிபெயர்ப்பு வேலைநேரம், சொற்தேர்வு, தட்டச்சுக்கான ஆட்கள், நூல்களை பக்குவமாகவும் ஒரு முறைமையுடனும் சேகரித்து வைத்தல், தனது புறூப் பார்த்தலின்றி ஒருபோதும் வெளியிடாமை, நூல் அச்சாகும்போது அச்சகத்தில் அருகில் இருந்து லேஅவுட் உட்பட எல்லாவற்றிலும் கவனம் செலுத்ததல், தொலைபேசி மூலமான நூல் விற்பனை, அவற்றை காலதாமதமின்றிச் செய்துமுடித்தல்… என ஒரு முறைமை அவரிடம் இருந்தது. இந்த உழைப்புத்தான் விடியலை இந்த நிலைக்கு உயர்த்தியுள்ளது.
1996 இல் ஒரு சிறு கொட்டிலுக்குள் இருந்த விடியல் பதிப்பகம் இன்று தமிழ்ப்பரப்பின் திறந்த வெளிக்குள் பரவிப்போய் கிடக்கிறது. 1996 இல் பதிப்பகத்துக்கு பண உதவி செய்ய நான் முன்வந்தபோது அவர் சொன்னார், „ரவி, நான் ஒரு சதம்கூட யாரிடமும் சும்மா வாங்க மாட்டேன். நீங்கள் எனது நூல்களை விற்பனை செய்து உதவமுடியுமா எனப் பாருங்கள். அதுவும்கூட விற்பனை என்ற நோக்கில் வேண்டாம். இந்திய விலைக்கே விற்றுத்தாருங்கள். முக்கியமாக வாசிப்பவர்களிடத்தில் போய்ச சேருவதை கவனத்தில் எடுங்கள்“ என்றார். அந்த அறிமுகம் என்னை இன்றுவரை அவருடன் பயணிக்க வைத்திருக்கிறது. ஐம்பதுகளின் நடுப்பகுதியை மட்டுமே எட்டிப் பிடித்த அவரது வயதை இந்தக் கொடிய நோய் சிதைத்துப் போட்டுவிட்ட கொடுமையை என்னவென்பது! –
நீங்கள் “ஜெயமோகன் எஸ்விஆர் க்கு மேல் சுமத்திய குற்றச்சாட்டை – தோழர் சிவாவுக்குத் தெரியாமலே – அவரது பெயரில் பதில் எழுதினார் எஸ்விஆர். இரண்டாவது முறையும் எஸ்விஆர் எழுதிய பதில் கடிதத்தில் சிவாவின் மரணப்படுக்கையை சென்ரிமென்ற் பாணியில் பாவித்திருந்தார். இந்த முறைகேடு சிவாவின் கவனத்துக்குக் கொண்டுவரப்பட்டபோது சிவா வருத்தமடைந்தார்” கூறியிருப்பது சரியான தகவலில்லை.
தோழர் சிவாவின் மரணம் ஏற்படுத்தியிருக்கும் துயரத்தைவிடவும் உங்கள் சொற்கள் அதிக துயரத்தை தருகின்றன. தோழர் எஸ்.வி.ஆர் யாருடைய கருத்து சுதந்திரத்திலும் தலையிடுபவரல்ல என்பது அவரை நன்கு அறிந்தவர்கள் அறிவார்கள். ஜெயமோகனுடைய அவதூறு விசயத்தில் எதிர்வினையாற்றியது தோழர் சிவாதான். அவர் இறுதிவரையிலும் விழிப்புணர்வோடும் பேசும் நிலையிலும் வாசிக்கும் நிலையிலும்தான் இருந்தார். அவர் சொல்ல சொல்லதான் அது எழுதப்பட்டு தோழர் சிவாவின் மின்னஞ்சல் முகவரியிலிருந்து சக தோழர்களால் அனுப்பப்பட்டது.
தோழர் சிவாவின் இறுதி மூச்சு இருக்கும்வரை உடன் இருந்தவர் எஸ்.வி.ஆர். அவருடைய தலைமையில்தான் தோழர் சிவாவிற்கு இரங்கல் கூட்டம் கோவையில் நடத்தப்பட்டது. நீங்கள் கூறுவது உண்மையாக இருக்கும் பட்சத்தில் தோழர் சிவா உயிருடன் இருக்கும்போதே இதைச் சொல்லியிருக்க வேண்டும். தோழர் சிவா இன்று நம்மிடையே இல்லாத நிலையில் அவர் கூறியதாக ஒரு விசயத்தை நீங்கள் சொல்வது அறமற்ற செயல். கண்டனத்திற்குரியது. எஸ்.வி.ஆர் மீது நீங்கள் இப்படி குற்றம் சுமத்துவது அவர் மீது நீங்கள் கொண்டிருக்கும் காழ்ப்பையே உணர்த்துகிறது. உங்களுடைய இந்தச் செயல் எவ்விதத்திலும் தோழர் சிவாவுக்கு செலுத்தும் அஞ்சலி ஆகாது.
சுதீர் செந்தில்
31.07.2012
அதிர்ச்சி, கவலை, இழப்புணர்வு முதலான எத்தனையோ உணர்வுகள் முட்டி மோதுகின்றன உள்ளத்துக்குள்…
//ஜெயமோகன் எஸ்விஆர் க்கு மேல் சுமத்திய குற்றச்சாட்டை -தோழர் சிவாவுக்குத் தெரியாமலே- அவரது பெயரில் பதில் எழுதினார் எஸ்விஆர். இரண்டாவது முறையும் எஸ்விஆர் எழுதிய பதில் கடிதத்தில் சிவாவின் மரணப்படுக்கையை சென்ரிமென்ற் பாணியில் பாவித்திருந்தார்//
அப்படியானால், இதற்கு முன் சிவா பெயரில் ஊடறுவில் வெளியான ஜெயமோகனுக்கான பதில் மடலை (“உங்களைப் போன்றவர்கள் என் பிணத்தைக்கூடப் பார்க்கக்கூடாது”) சிவா எழுதவில்லையா? அவருடைய பெயரில் எஸ்.வீ. ராஜதுரைதான் எழுதினாரா? ஊடறு இந்தத் தகவலை எப்படி உறுதிப்படுத்தியது என அறிய விழைகின்றேன்.