-ஸர்மிளா ஸெய்யித்-(இலங்கை)
தங்கத்தேரில் உலாவிக் கொண்டிருந்தேன்
அந்தப் புரத்தில் என் தோழிகளோடு
மேகங்களுக்குப் பின்னால் மறைந்து நின்று
கையசைத்து அழைத்தாய்
என்னைச் சுமந்துகொண்டிருந்த ஆபரணங்களை
புறந்தள்ளி உன்னை நெருங்கினேன்வீணையின் பானத்தை உள்ளங்கையில்
ஏந்திவந்திருந்தாய்
திராட்சையின் ரசங்களை மட்டுமே
அருந்திப் பழகிய நான்
உன் வேண்டுகோளுக்காக
வீணையின் பானத்தை உறிஞ்சி அருந்தி
மயங்கிக் கொண்டிருந்தேன்
செழித்து சரிந்துகிடந்த மரக்கிளையில் தாவி
கனிகளைக் கொய்வதிலும்
ருசிபார்ப்பதிலும் மும்முரமானாய்…
அதோ எம் கலவியை களவில் பார்த்த புரவிகள்
தேரை இழுத்துக்கொண்டு
வேகமாய் எம்மை நோக்கி வருகின்றன
மேகத்தின் யன்னல்களை உடைத்தெறி
புரவிகளென்ன, சிறு தேரைகள் நெருங்காத
இடந்தேடிச் செல்வோம்
நதிகளுக்கடியில் நமக்காக கூடமைப்போம்
கண்ணாடியில் படுக்கை சமைப்போம்
நம் கனிகளை அடைகாப்போம்
கலவி உலகம் செய்வோம்
வீணையின் பானத்தை தந்துகொண்டேயிரு
நிறுத்தாதே…