-சமீலா யூசுப் அலி (இலங்கை)
மரணத்தின் பின்னரானதொரு பெருவெளியில்
என் நாட்குறிப்பை
நீங்கள் வாசிக்கக் கூடும்…
இவளுக்குள் இத்தனை திமிரா
என நீங்கள் திகைத்தல் கூடும்.
பாடவியலாமலே வாழ்ந்திருந்ததென் பாடலொன்றினை
அதற்குள் நீங்கள் கேட்கலாம்.
வெளிக்காற்றைச் சுவாசிக்காமலே இறந்து போனெவென்
குழந்தையின் துள்ளலை நீங்கள் ரசிக்கலாம்.பச்சை என்று சிவப்பு என்றும்
நீங்களெல்லாம் பொதுமைப்படுத்தும் ஆறாயிரத்தொரு நிறங்களின்
தனிப்பெயர் வரிசைகளை நீங்கள் சந்திக்கலாம்.
எனக்குள் முளைத்துக் கிடந்த விருட்சத்தினளவை
தனக்குத்தானே தண்ணீர் தயாரிக்கும் வேர்களின் தினவை
நீங்கள் வியக்கக்கூடும் அல்லது வெறுக்கவும் கூடும்.
‘நான்’ என நீங்களறிவது நானன்று
நீங்கள் அறியாத ‘நான்’ என் நேசிப்புக்குரியவளெனினும்
உங்கள் ஜீரணத்துக்குரியவள் அன்று.
என்றேனும் ஒரு பொழுதில்
மரணத்தின் பின்னரானதொரு பெருவெளியில்
என் நாட்குறிப்பை
நீங்கள் வாசிக்கக் கூடும்…
அது வரை
உங்களுக்கான ‘நான்’ ஆக நான் வாழ்ந்தாக வேண்டியிருக்கிறது.
2011 September 22
வெளிக்காற்றைச் சுவாசிக்காமலே இறந்து போனெவென்
குழந்தையின் துள்ளலை… மனசைப் பிழியும் வரிகள்.
சமீலா யூசுப் அலியின் அண்மைய கவிதைகள் மிகுந்த கவனிப்புக்குரியவை.
வாழ்த்துகள் சகோதரி.
எஸ்.பாயிஸா அலி