நான்கு திசைகள் : கலாச்சார அரசியல் குறிப்பேடு

யமுனா ராஜேந்திரன்

நான்கு திசைகள் : கலாச்சார அரசியல் குறிப்பேடு யமுனா ராஜேந்திரன் - தமிழ்ப் பெண்களை பாலியல் வல்லுறவு புரிகிற இலங்கை ராணுவத்தினரின் பாலுறவு வறுமை அல்லது பாலுறவுத் துயரம், பாலுறவுத் தேவை பற்றி நாம் கவலைப்பட வேண்டுமாம்.***பெண்களாக இருந்தால் அவர்கள் உதிர்க்கிற எல்லாமும் பெண்நிலைவாதம் என்று ஒரு கண்டுபிடிப்பை மாற்றுக் கருத்து மாணிக்கங்கள் நமக்குச் சொல்லலாம்.

தினம் தினமும் நண்பர்களும் எதிரிகளும் தகவலுக்காகச் சில மின்னஞ்சல்கள் அனுப்புகிறார்கள். சிலரது மின்னஞ்சல்கள் சுவாரசியமாகவும், கொஞ்சம் யோசித்துப் பார்க்க, கடவுளே இப்படியெல்லாம் சிந்திக்கிற ‘மாற்றுக் கருத்து மாணிக்கங்கள்’ நமக்குள் இருக்கிறார்களே என்றும் இருக்கும்.  தமிழ் முகநூல், டிவிட்டர் பக்கம் நான் போவதேயில்லை. எந்தச் சமூகவலை ஊடகத்தையும் ‘தம்மையும் பிறரையும் சொரிந்து கொள்வதற்கு’ மட்டுமே பன்படுத்துவது தமிழனின் குணம்போல இருக்கிறது. அல்லது தமிழர்களில் அப்படியொரு வகை இரத்தம் இருக்கிறது போலிருக்கிறது. 

அரபுப் புரட்சியில் முகநூல், டுவிட்டர் செயல்பாட்டையும் தமிழர்களுக்கிடையில் அதன் பயன்பாட்டையும் ஒப்பிட்டாலே நான் சொல்வது விளங்கும். தமிழ் மனிதர்களில் எத்தனை கடவுளர்கள், எத்தனை ஏகபத்தினி விரதர்கள், எத்தனை அரசியல் புனிதர்கள், எத்தனை அப்பழுக்கநற்ற தூய புரட்சியாளர்கள்  இருக்கிறார்கள் எனும் புள்ளிவிவரம் தெரிய வேண்டுமானால் தமிழ் முகநூலில், டுவிட்டரில் ஒருவர் பிரவேசிக்கலாம்.  

இந்த ஜோரில் சிலர் முகநூலில் தீவிரத் தத்துவ வித்தக விவாதங்களையும் நடத்திக் கொண்டிருக்கிறார்கள்.

வாசிப்பு ஒரு மேய்ச்சல் நிலம்போன்றது. நின்று நிதானமான வாசிப்பைச் சில எழுத்துக்கள் கோருகின்றன. சில அடித்துவிட்டுப் போய்விடு என்கின்றன. சில ஐயோ என்கின்றன. சில இதனைப் பற்றி ஏதேனும் பேசு என்கின்றன. நேரம் காலம் கடந்து எல்லாவற்றைப் பற்றிப் பேசிவிடமுடிகிறதா? நிதானமான விரிவாகப் பேசவும் எழுதவும் நேரமில்லை. கருத்துக் கொண்டிருக்காமலும் இருக்க முடிவதில்லை என சில வாசிப்புத் தருணங்கள் அமைந்துவிடும். அவ்வாறு நான் கடந்து போனவை பற்றிய சிதறலான சில குறிப்புக்களை அவ்வப்போது எழுத விரும்புகிறேன். பிரான்சிலிருந்து நண்பர் மனோ கேட்டுக் கொண்டதற்கணங்க அவரது அம்மா சிற்றிதழில் இப்படியான அபிப்பிராயங்களை கலாச்சார அரசியல் குறிப்பேடு என எழுதிவந்தேன். அதனது தொடர்ச்சியாக அவ்வப்போது இப்பத்தியை குளோபல் தமிழில் எழுத முயல்கிறேன்.

***

கொஞ்சநாள் முன்பு புகலிடப் பெண்ணியவாதியொருவர் ஒரு ‘பொன்னான’ கருத்தை வைத்து விவாதம் புரிந்தார். அவர் மாற்றுக் கருத்துப் பெண்ணிலைவாதி. பன்முகம், விளிம்புநிலைக்கதையாடல் இலக்கியச் சந்திப்பு அழைப்பு எனவெல்லாம் எழுதக் கூடியவர். வெகுசீக்கிரமே அவர் கிராம்சியும் இத்தாலியின் தெற்கும் என ஆய்வுக் கட்டுரையும் எழுதக் கூடும். புகலிட மாற்றுக் கருத்துச் சூழலில் எதுவும் சாத்தியம். அவரது கருத்தைப் படித்தபோது இரண்டு உடனடி விளைவுகள் தோன்றின. பாலஸ்தீனப் பெண்ணிலைவாதியும் பாலஸ்தீன விடுதலை இயக்கத்தின் பேச்சாளராக இருந்தவரும், கனாபாணி போன்ற பாலஸ்தீனப் படைப்பாளி பற்றிப் பேசக் கூடியவருமான ஹனன் ஹஸ்ராவி எனது ஞாபகத்தினுள் வந்து  போனார்.  

இலங்கை ராணுவீரர்களின் உளவியல் பாதிப்புக்களை நிவர்த்தி செய்கிற ஒரு தமிழ் பெண் உளவியல் பகுப்பாய்வாளரின் சித்திரம் எவ்வாறு இருக்கும் எனும் எண்ணமும் வந்துபோனது. 

அஸ்ராவி இஸ்ரேலிய ஆக்கிரமிப்பாளர்கள் தமது ஆக்கிரமிப்பை நியாயப்படுத்துவதற்காகக் கையாளும் கருத்தாக்கங்களையும் சொல்லணிகளையும் பற்றி ஒரு கட்டுரை எழுதியிருக்கிறார். அதில் பாலஸ்தீனர்களைக் கொல்வதாலும் சித்திரவதை செய்வதாலும் ‘மனநிலை பாதிக்கப்படும்’ இஸ்ரேலிய ராணுவத்தினரைப் பற்றி மனமுருக இஸ்ரேலிய அறிவுஜீவிகள் எழுதுவது பற்றித் தனக்கு அக்கறையில்லை, சித்திரவதைக்கு உள்ளான படுகொலைக்கு உள்ளான எனது மக்கள் பற்றித்தான் எனக்கு அக்கறை என்றார் அவர்.

மாற்றுக் கருத்து, ஐரோப்பிய இலக்கியக் கூட்டமைப்பு தமிழ்ப் பெண்ணிலைவாதி என்ன சொல்கிறார்?  

நான்கு திசைகள் : கலாச்சார அரசியல் குறிப்பேடு யமுனா ராஜேந்திரன் -தமிழ்ப் பெண்களை பாலியல் வல்லுறவு புரிகிற இலங்கை ராணுவத்தினரின் பாலுறவு வறுமை அல்லது பாலுறவுத் துயரம், பாலுறவுத் தேவை  பற்றி நாம் கவலைப்பட வேண்டுமாம். பெண்களாக இருந்தால் அவர்கள் உதிர்க்கிற எல்லாமும் பெண்நிலைவாதம் என்று ஒரு கண்டுபிடிப்பை மாற்றுக் கருத்து மாணிக்கங்கள் நமக்குச் சொல்லலாம். கோல்டா மேயர், தாட்சர், சந்திரிகா, இந்திரா காந்தி வரிசையில் நமது தமிழ்ப் பெண்ணிலைவாதிக்கும் சேர்த்து ‘சலாம்’ போடுமாறு அடுத்த இலக்கிச் சந்திப்பில் தீர்மானம் போடவேண்டும் என்பது நமது தாழ்மையான வேண்டுகோள். 

*** 

சொற்கள், கருத்தாக்கங்கள், சொல்லணிகள் ஒரு விவாதக் கட்டமைப்பை உருவாக்குவதில் வகிக்கிற பாத்திரம் குறித்து எம்மை விட பின்நவீனத்துவப் பன்முகவாதிகள் அதிகமும் அறிவார்கள். அதனை அவர்கள் ரொம்ப அற்புதமாகப் பாவிக்கவும் தெரிந்தவர்கள் என்பதற்குச் சான்றாக ஒரு பன்முக அரசியல் கூட்ட அழைப்பு  மின்னஞ்சலில் கிடைத்தது. 

ஜெனிவாவில் மனித உரிமை அமர்வுகள் மார்ச் இறுதி வரை நடக்கிறது. அதே காலகட்டத்தில் லண்டன் மாநகரில் மாற்றுக் கருத்து  கூட்டமொன்றும் நடக்கிறது. தலைப்பு என்ன தெரியுமா? இலங்கையில் தொடரும் இந்தியா, சீனா மற்றும் மேற்கு நாடுகளின் தலையீடும் நலன்களும் : ஓரு பன்முக நோக்கு இலங்கை அரசு ஏற்பாடு செய்த கூட்டமல்ல இது. மாற்றுக் கருத்து  ஏற்பாடு செய்த கூட்டம் இது. 

இலங்கை மீதான சர்வதேச அழுத்தங்கள் தொடர்பில் விசேட கருத்தரங்கொன்றினை இலங்கை அரசு கடந்த மார்ச் 12 ஆம் திகதி கொழும்பில் நடத்தியது.  சர்வதேச ரீதியான அழுத்தங்கள் மற்றும் சவால்கள் என்ற தொனிப் பொருளில்  இந்த கருத்தரங்கு நடத்தப்பட்டது. இலங்கை அரசாங்கத் தகவல் திணைக்களத்தில் நடைபெற்ற இந்தக் கருத்தரங்கில் பதில் ஊடக அமைச்சர் லக்ஸ்மன் யாபா அபேவர்தன விசேட உரையாற்றி இருந்தார். இலங்கை ரூபவாஹினிக் கூட்டுத்தாபனத்தின் தலைவர் மொஹான் சமரநாயக்க, சிரேஸ்ட சட்டத்தரணி கொமின் தயாசிறி உள்ளிட்ட பலர் இந்தக் கருத்தரங்கில் உரையாற்றினர் என்பது இலங்கையில் இருந்து கிடைத்த தகவல்.  

இலங்கை அரசின் இந்தப் பன்முகப் பார்வை கருத்தரங்கினையடுத்து இலண்டனில் புகலிட மாற்றுக் கருத்து இதே பாணியில், கிட்டத்தட்ட இதே தொனிப்பொருளில் ஒரு கருத்தரங்கை நடத்துகிறது. இரண்டு கருத்தரங்களினதும் கருப்பொருள்தான் எவ்வாறு ஒத்துப் போகிறது பாருங்கள்.  

முன்னைய கருத்தரங்கு சிங்கள இனவாதிகள் உள்படக் கலந்து கொண்ட முழமையான சிங்களப் பன்மைத்துவக் கருத்தரங்கு. பின்னையது புகலிடத் தமிழ் மாற்றுக் கருத்துக்கள் சங்கமிக்கும் பன்மைத்துவக் கருத்தரங்கு. வாழ்க பன்மைத்துவம்! 

ஈராக்கில் அமெரிக்கத் தலையீடு, ஆப்கானில் ரஸ்ய, அமெரிக்கத் தலையீடு, திபெத்தில் சீன ஆக்கிரமிப்பு, லிபியாவில் அமெரிக்கத் தலையீடு எல்லாம் நமக்குத் தெரியும். இலங்கையில் இந்திய, சீன, அமெரிக்கத் தலையீடு? 

இலங்கை அரசுக்கு விருப்பமில்லாமல் இந்திய, சீன,  அமெரிக்க ராணுப் படையெடுப்பு ஏதேனும் ‘இரகசியமாக’ இலங்கைக்குள் நடந்தேறிவிட்டதா என்ன? இலங்கையின் அனுசரணையும் ஆதரவும் ஒப்பந்தங்களும் இல்லாமல் இந்திய, சீன, அமெரிக்க நிறுவனங்கள் இலங்கையில் ‘குடியேறிவிட்டதா’ என்ன?  

இந்திய அமைதிப்படையை ஒப்பந்தம் போட்டு இலங்கைக்குள் இலங்கை அரசுதான் அழைத்தது. தமிழர்களை அழிக்க, சீனாவிடம் ராணுவப் பொருளாதார அரசியல் உதவியை இலங்கை அரசுதான் கேட்டுப் பெற்றது. அமெரிக்காவின் பயங்கரவாத எதிர்ப்பு யுத்தத்தைத் தானும் நடத்துவதாகத்தான் இலங்கை அரசு அமெரிக்காவுக்குச் சொன்னது. விடுதலைப்புலிகளின் ஆயுதக் கப்பல்கள் குறித்த செய்மதித் தகவல்களை அமெரிக்காவிடமிருந்து பெற்றுதான் இலங்கை அரசு அவைகளை அழித்தது.  

இத்தனையையும் தமிழர்களுக்கு எதிராக இலங்கை ‘அரசுதான்’ செய்தது. பின் எங்கிருந்து அப்பனே வந்தது இந்திய, சீன, அமெரிக்கத் தலையீடு?  

யாருக்குக் காது குத்துகிறீர்கள்? யாருடைய ஒட்டுக் கூந்தலுக்குப் பூச்சூடுகிறீர்கள்? இந்தியாவும், சீனாவும், அதனோடு சேர்த்து ரஸ்யாவும் இலங்கையின் கொலைகார அரசைப் பாதுகாக்கிறது. இவர்கள் இலங்கையில் ‘தலையிடுகிறார்கள்’ என, ஐநா சபையில் இலங்கையை சர்வதேசியப் பொறிமுறைக்குள் கொணர பிரேரனை கொணர்கிற அமெரிக்காவோடு சேர்த்து வைத்து ஒரு தலைப்புக் கொடுத்து கண்ணாமூச்சிக் காட்டுகிறார்கள்.  

ஜாதிக ஹெல உறுமிய அல்லது  இலங்கை தேசபக்தார்களின் அமைப்பு அல்லது விமல் வீரவன்சபோன்ற இந்த மூவரில் ஒருவர்தான் இந்தத் தலைப்பை மாற்றுக் கருத்துக்குப் பரிந்துரை செய்திருப்பார்கள் என யூகிக்கிறோம். அல்லது இலங்கைத் தகவல்துறை அமைச்சகம் இந்தத் தலைப்புக்கு அடியெடுத்துக் கொடுத்திருக்க வேண்டும்.

இந்த இரண்டு பிரச்சினைகளிலும் சொற்களும் சொல்லணிகளும் கருத்தாக்கங்களும் எவ்வாறு பன்முகத்துவம் எனும் பெயரில், மாற்றுக் கருத்து எனும் பெயரில் இலங்கை அரசுக்குச் சேவகம் செய்ய முடியும் என்பதனை எடுத்துக் காட்டவே சுட்டிக்காட்டப்படுகிறது. 

பாலஸ்தீனப் பிரச்சினை பற்றி ‘மாற்றுக் கருத்துப் பாணி’யிலான பின்நவீனத்துவ, பன்மைத்துவ, பெண்ணிய வாசிப்புக்கான தலைப்பு என்னவாக இருக்கும்? 

மார்க்சீயப் பெண்ணிலைவாதி கோல்டா மேயர் பாலஸ்தீனக் குழந்தைகளுக்குக் கொடுத்த மென்முத்தம் : விளிம்பு நிலை, பன்முகநோக்கு 

தலைப்பு என்ன சமகால அரசியலுக்கும் உண்மைக்கும் சம்பந்தமே இல்லாமல் இருக்கிறது எனப் பார்க்கிறீர்களா?  

கண்டுக்காதீங்க பாஸ், இப்படித் தலைப்புக் கொடுத்தால் தானே பன்முகப் பார்வையில் வெட்டியும் ஒட்டியும் பேச முடியும். வாழ்க பன்மைத்துவம்! 

*** 

ஈழத்துப் படைப்பாளியான நிலாந்தன் சாம்பல் இலக்கியம், சாம்பல் அரசியல் குறித்து ஒரு கட்டுரை எழுதியிருக்கிறார். கட்டுரையின் இறுதியில் அவர் இவ்வாறு முடிக்கிறார் : 

நான் சாம்பல் என்று கூறுவது என்னுடைய தனிப்பட்ட விருப்பம் அல்ல. எனது தனிப்பட்ட கண்டுபிடிப்புமல்ல. அது ஒரு வாழும் யதார்த்தம். இன்ரர்நெற் உலகங்களை திறக்கிறது. நிதி மூலதனம் எல்லைகளைக் கரைக்கிறது. பூகோளக்கிராமம் எனப்படுவது ஒரு சாம்பல் நிறக்கிராமம் தான். எதுவும் அதன் ஓரத்தில் மற்றதோடு கரைந்தே காணப்படும். ஒன்று அதன் ஓரத்தில் மற்றதோடு கரையாத ஓர் உலகம் இனிக் கிடையாது. அதுதான் சாம்பல். அதாவது தன் மையத்தை விட்டுக் கொடுக்காமல் ஓரங்களில் மற்றவர்களோடு கரைந்து இணைந்து இருப்பது. இது ஒரு தொழினுட்ப யதார்த்தம். இது ஒரு பொருளாதார யதார்த்தம். இது ஒரு சமூகவியல் யதார்த்தம். இது ஓர் உளவியல் யதார்த்தம். இது ஓர் இலக்கிய யதார்த்தம். இது ஓர் அரசியல் யதார்த்தம். 

இது மிகப் பொதுமைப்படுத்தப்பட்ட கூற்று என நினைக்கிறேன். நந்திக் கடலுக்குப் பின் உருவான இலக்கிய – அரசியல் யதார்த்தங்கள் குறித்த குறிப்பான, சிக்கலான பிரச்சினைகளை மிக எளிமைப்படுததப்பட்ட சூத்திரத்திற்குள் இந்த வகுப்புமுறை கொணர்கிறது. 

கறுப்பு வெள்ளை என்பது மட்டும் ரிலேடிவ் ஆனது அல்ல, போலவே கறுப்பும் வெள்ளையும் கரைந்து தோன்றுகிற சாம்பல் என்பதும் முழுமையாக ரிலேடிவ் பண்புகளைத் தாண்டியதும் அல்ல. நிலாந்தன் பேசுகிற இந்தச் சாம்பல் பரப்பும், பன்மைத்துவம் கொண்டதாயினும் பற்பல நுண் அதிகார அலகுகளும் மேலாண்மைக்கான மோதுதல்களும் கொண்டது. பன்மைத்துவம் என்பதனை ஒரு இலட்சியப் பிரதேசமாக வரித்துக் கொள்வது மிக எளிமைப்படுத்தப்பட்டதொரு கருத்தாக்கம். 

எடுத்துக்காட்டாக உண்மை என்று ஒரு விஷயத்தை ஸ்டேடிக் ஆன அர்த்தத்தில் நிலாந்தன் எடுத்தாள்கிறார். உண்மை என்பதும் கூட ரிலேடிவ் ஆனதுதான். அதற்கு முழுமை என்பது ஏதும் இல்லை. 

உண்மைக்கு அதிகம் நெருக்கமாக வரும் ஒரு யுத்த சாட்சியம் உண்மையின் எல்லாப் பரிமாணங்களையும் வெளிக்கொண்டுவர முயற்சிக்கும். எனவே ஆகக்கூடிய பட்சம் அது சாம்பல் நிறமுடையதாகக் காணப்படும். எனவே ஒரு முழுமையான யுத்த சாட்சியம் எனப்படுவது நிச்சயமாக கறுப்பு வெள்ளை இருமைகளுக்கு அப்பாற்பட்டதாகக் காணப்படுகின்றது. இத்தகைய சாம்பல் நிற யுத்த சாட்சியங்களே அதியுச்ச படைப்பாக்க உன்னதங்களை அடையக் கூடிய ஆகக்கூடியபட்ச சத்தியங்களைக் கொண்டிருக்கின்றன. 

எனும் நிலாந்தன், நான் ஏற்கனவே குறிப்பிட்டுக் காட்டியபடியிலான, சாம்பல் பிரதேசத்தினுள் நுண்தளங்களில் செயல்படும் மோதுதலும் மேலாண்மை பெறுதலும் எனும் நுட்பமான பண்புகளை கன்டிஷன் அல்லது நிலை (like postmodern condion) எனும் இருப்பு சார்ந்த அர்த்தத்துக்குள் கொண்டுவருகிறார். 

நிலை எனும் இருப்பு சார்ந்த அர்த்தத்தை விளக்க முனைகிறேன். லியோதார்த் பின்நவீனத்துவ நிலை என்கிறார். விமோசனம் பேசிய நவீனத்துவத்தின் தோல்வி குறித்த காலத்தை வரையறை செய்ய லியோதார்த் இக்கருத்தாக்கத்தை முன்வைக்கிறார். மார்க்சியப் பார்வையில் நின்று இந்த புதிய சமூகப் பொருளியல் கலாச்சார யதார்த்தத்தை முதலாளித்துவத்திற்குப் பிந்திய தர்க்கநிலையாக இதனை ஒப்புகிறார் பிரெடரிக் ஜேம்சன். 

இவ்வாறாக, ஒரு சமூக, கால நிலையாக நாம் பின்நந்திக் கடல் யதார்த்தத்தை ஈழ நிலைமையில் சாம்பல் நிலை எனப்பார்ப்பதில் ஒருவருக்கு முரண்பாடுகள் வருவதற்கு அவசியமில்லை. ஆனால் இந்த சாம்பல் நிலை என்பது இலக்கியம், அரசியல் என அனைத்திற்கும் ஏகத்துவ அர்த்தத்தில் பொருத்திப் பார்க்க முடியாது. 

இலக்கியத்தில் அதியுச்ச படைப்பாக்க உன்னதங்கள் என்று கருதப்படுவது, அரசியல் தளத்தில் பிரவேசிக்கிறபோது அதியுச்ச அரசியல் உன்னதமாக ஆகவேண்டிய அவசியமும் இல்லை. ஏனெனில் இலக்கியத்துக்கும் அரசியலுக்குமான உறவு நேரடியிலானது இல்லை. இந்த நிலை நின்ற சாம்பல் நிலை அர்த்தம் என்பது அரசியலில் பல நுண் அவதானிப்புக்களைக் குழப்புவதாக இருக்கும். 

ஈழ இலக்கியத்தில் இந்தச் சாம்பல் நிறப் பிரதேசம் என ஒரு வகையை நிலாந்தன் சுட்டுகிறார் : 

.…போராட்டத்தை ஏற்றுகொள்ளும் அதேசமயம் போராட்ட இயக்கங்கள் செய்கின்ற எல்லாவற்றையும் ஏற்றுக்கொள்ளாத படைப்பாளிகள் இந்தப் போக்குக்குள் வருகிறார்கள். மேற்சொன்ன இரு போக்குகளின் விளிம்பில் இருப்பவர்களும் இந்தப்போக்கிற்குள் வருவதுண்டு. ஈழத்தமிழ் இலக்கியப் பரப்பில் சாம்பல் நிறப்பிரதேசம் இது . ஈழத்துப் போரிலக்கியத்தின் வெற்றி பெற்ற படைப்புக்களில் அநேகமானவை இந்தப் போக்குக்கு உரியவை தான். ஈழப்போரின் ஒப்பீட்டளவில் முழுமையான யுத்த சாட்சியம் இங்குதான் இருக்கிறது. மே-18 க்குப் பின் இப்போக்கினை துலக்கமாக அடையாளம் காணத்தக்க படைப்புக்கள் அடுத்தடுத்து வரக்காண்கிறோம். 

இப்படியான வரையறையைச் செய்துவிட்டு, படைப்பாளிகள் குறித்த ஒரு பட்டியலையும் நிலாந்தன் தருகிறார். சனாதனனின் ஓவியம், சாத்திரியின் பாலியல் மீறல் எழுத்துக்கள், சயந்தனின் ஆறாவடு நாவல் என விரிவாகப் பேசிவிட்டு, போகிற போக்கில் சில பெயர்களையும் அவர் உதிர்த்துவிட்டுச் செல்கிறார். நடராஜா குருபரன் கட்டுரை, யோ.கர்ணன், கருணாகரன், ஷோபா சக்தி, கணேசன் ஐயர், பா. அகிலன் என எந்தவிதத்திலும், போராட்டத்தை ஏற்றுகொள்ளும் அதேசமயம் போராட்ட இயக்கங்கள் செய்கின்ற எல்லாவற்றையும் ஏற்றுக்கொள்ளாத படைப்பாளிகள் இந்தப் போக்குக்குள் வருகிறார்கள் எனும் நோக்கில் உடன்பாடான பார்வைகளைக் கொண்டிராதவர்களது எழுத்துக்களை சாம்பல் தளத்தினுள் அடைக்க முயற்சி செய்கிறார்.  

இது மிக எளிமைப்படுத்தப்பட்ட ஒரு பார்வை என்பது கடந்த சில ஆண்டுகளில் நடந்தேறியிருக்கிற விவாதங்களைப் பார்க்கிறவர்களுக்கே சாதாரணமாகப் புரியும். 

எடுத்துக்காட்டாக சாம்பல் பரப்பினுள் வருகிற இருவரில் ஒருவரது நாவலை அரசியல் நீக்கப்பட்ட நாவல் என பிறிதொருவர் சொல்கிறார். நாவலை எழுதியவர் விடுதலைப் புலிகள் சார்பானவர் என அறிவித்துக் கொண்ட விடுதலைப்புலி எதிர்ப்பாளர்கள் சொல்ல, அறிவித்துக் கொண்ட விடுதலைப் புலி எதிர்ப்பு எழுத்தாளர் நாவல் அரசியல் நீக்க நாவல் என்கிறார். நிலாந்தன் பேசுகிற சாம்பல் நிலை என்பது ஈழ அரசியல் யதார்த்தம் என்பது இங்கே எங்கே பொருந்துகிறது?  

யோ.கர்ணனின் துவாராகவின் தந்தை பிபாகரன் எனும் சிறுகதை இந்திய மாரக்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி-மார்க்சிஸ்ட தொழிற்சங்கப் பிரமுகரான ஆதவன் தீட்சண்யா நடத்தும் புதுவிசையில் வெளியானது. ஈழத்தமிழர் பிரச்சினைக்குத் திட்டவட்டமாகத் தீர்வு சொல்லும் கட்சி அது. ஈழத் தமிழருக்குச் சுயநிர்ணய உரிமை என்பதே அக்கட்சிக்கு வேம்பு. வெகுஜன வாக்கெடுப்பை அவர்கள் நிராகரிக்கிறார்களாம். அசையில் யோ. கர்ணனின் இக்கதை சாம்பல் அரசியல் புரிதலுடனா வருகிறது? அக்கதையை நந்திக்கடல், பிரபாகரனின் மரணம் நேர்ந்த சூழல், அவரது குழந்தைகள் கொல்லப்பட்டமை எதுவும் ஞாபகம் வராமல் வாசிக்கப்படுவது சாத்தியம்தானா?  

குறிப்பிட்ட இக்கதையில் வரும் வாசிப்பனுபவம் சாம்பல் வெளிக்குள் வருவது என்று நிலாந்தன் சொல்கிறாரா? அல்லது யோ.கர்ணன் எழுதுவது எல்லாம் உண்மை என்று சொல்கிறாரே நிலாந்தன், அது நிலாந்தன் பேசுகிற சாம்பல் அரசியல் யதார்த்ததின் பன்முகத்தன்மைக்குச் சான்றாகவா இருக்கிறது? 

நிலாந்தன் பேசுகிற சாம்பல் இலக்கியமும் அரசியலும் நுண்தளத்திலான அதிகார மோதுகைகளையும் மேலாண்மைக்கான யத்தனங்களையும் திரையிட்டு மேவிச் செல்கிற, பொதுமைப்படுத்தப்பட்ட மிக எளிமையான சூத்திரமன்றி வேறில்லை.

*** 

மார்க்சியர், மனித உரிமையாளர், தமிழ் சொலிடாரிட்டிஅமைப்பின் நிறுவனர்களில் ஒருவரான சேனன் கொலை மறைக்கும் அரசியல் என ஒரு புத்தகம் எழுதியிருக்கிறார். கனடிய நண்பர் கிரிதரனின் பதிவுகள் வலைத்தளத்தில் நாவலாசிரியர் தேவகாந்தன் மிகப்பெரிய பீடிகையோடு ஆறாவடு நாவல் குறித்து ஒரு அரசியல்-அழகியல் விமர்சனம் எழுதியிருக்கிறார். அந்த விமர்சனத்தில் வெளிப்பட்டிருக்கும் தேவகாந்தனின் ‘அழகியலின் பின்னிருக்கும் அரசியல்’ பற்றியும், சேனனின் புத்தகம் பற்றியும் அடுத்த குறிப்பேட்டில் எழுதும் உத்தேசம் இருக்கிறது.

  நன்றி-http://globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/74803/language/ta-IN/article.aspx

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *